Agriculture
மானாவாரி நில சாகுபடி முறை
மானாவரிய பயிர்களுக்கான உயரிய சாகுபடி தொழில்நுட்பங்கள் :: கம்பு

கம்பு வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய குறுகிய கால உணவு தானியப் பயிராகும். கம்பு பெரும்பாலும் சத்து குறைந்த நீர் வசதி இல்லாத நிலங்களிலேயே பயிரிட்டு வருகின்றது. இருப்பினும், இதன் உற்பத்தித் திறன், தமிழ்நாட்டில் ஒரு ஏக்கருக்கு 600 கிலோவாக உள்ளது.
இத்தானியத்தில், புரதம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, வைட்டமின் ‘ஏ’ ஆகிய சத்துகள் அதிக அளவில் உள்ளன. மேலும் மாவுச்சத்து, கார்போஹைட்ரேட் சத்துகளையும் அதிக அளவில் கொண்டுள்ளது. கம்பு தானியம், பல வகையான மதிப்பூட்டப்பட்ட பொருள்கள் செய்வதற்கும் ஏற்ற வகையில் அமைந்துள்ளது.

சாகுபடி நுட்பங்கள்:

  • பருவம் : ஆடிப்பட்டம், புரட்டாசிப் பட்டத்திலும் பயிரிடலாம்.
  • இரகங்கள் : கோ(கம்பு) 7, கோ(கம்பு)9, வீரிய ஒட்டு கம்பு கோ 9
  • வயது : 80- 95 நாட்கள்
  • பயிர் இடைவெளி: வரிசைக்கு வரிசை 45 செ.மீ. வரிசையில் செடிக்கு செடி 15 செ.மீ. இடைவெளி அவசியம்.
  • விதையளவு: ஏக்கருக்கு 2 கிலோ விதை தேவைப்படும். விதைப்பதற்கு சற்று முன்பு 3 பாக்கெட் அஸோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போபாக்டீரியா கலந்த பின்பு விதைக்க வேண்டும்.
  • பின்செய் நேர்த்தி: விதைத்த 20 ஆம் நாள் பயிர்க்கலப்பு செய்து கை களையெடுக்க வேண்டும். விதைத்த 30 ஆம் நாளில் தழைச்சத்து மேலுரமாக இடுதல் வேண்டும்.

ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து (ஏக்கருக்கு)

அடியுரம் இறவை மானாவாரி மேலுரம்
தொழுஉரம் 5 டன் 5 டன் -
தழைச்சத்து 16 கிலோ 16 கிலோ 16 கிலோ
மணிச்சத்து 16 கிலோ 12 கிலோ -
சாம்பல் சத்து 16 கிலோ 8 கிலோ -
அசோஸ் பைரில்லம் 4 பாக்கெட் 4 பாக்கெட் -

பயிர்ப்பாதுகாப்பு:

குருத்து ஈ மற்றும் கதிர் நாவாய்ப் பூச்சி:
குருத்து ஈக்களைக் கட்டுப்படுத்த 5 சத வேப்பங்கொட்டைச் சாறு (அ) ஒரு சத நீம் அசால் தெளிக்க வேண்டும். கதிர் நாவாய்ப்பூச்சிகளின் தாக்குதலில் இருந்து பாதுகாக்க 25 கிலோ கார்பரில் 10 சத தூள் அல்லது மாலத்தியான் 5 சத தூள் 50 சதம் பூவெடுக்கும் சமயத்தில் தூவ வேண்டும்.

அடிச்சாம்பல் மற்றும் துரு நோய்:
அடிச்சாம்பல் நோயைக் கட்டுப்படுத்த ஏக்கருக்கு 200 கிராம் மெட்டாலாக்ஸில் அல்லது 400 கிராம் மேன்கோசெப் தெளிக்க வேண்டும். துரு நோயைக் கட்டுப்படுத்த ஏக்கருக்கு நனையும் கந்தகம் 1 கிலோ அல்லது மேன்கோசெப் 400 கிராம் தெளிக்க வேண்டும். தேவையெனில் பத்து நாள்கள் இடைவெளியில் மற்றொரு முறை தெளிக்க வேண்டும். வேளாண் பெருமக்கள் மேற்கண்ட தொழில்நுட்பங்களைக் கடைப்பிடித்து அதிக விளைச்சலைப் பெறலாம்.


மேலும் தொடர்புக்கு:
பேராசிரியர் மற்றும் தலைவர்,
மானாவாரி வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், செட்டிநாடு – 630 102
தொலைபேசி எண்: 04565 – 283080
 
Fodder Cholam