Agriculture
மானாவாரி நில சாகுபடி முறை
மானாவரிய பயிர்களுக்கான உயரிய சாகுபடி தொழில்நுட்பங்கள் :: தீவனப்பயிர்கள்

தீவனப்பயிர்கள் மனித குலத்தின் நலமான வளமான வாழ்விற்கு துணை நிற்பவை என்பதில் ஐயமில்லை. தமிழ்நாட்டில் சென்ற ஆண்டு மொத்த பால் உற்பத்தி 5.78 மில்லியன் டன்கள். மேலும் தமிழ்நாட்டின் மொத்த விளைநிலத்தில் 1.72 லட்சம் எக்டர் பரப்பளவில் தீவனப்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. நிரந்தர மேய்ச்சல் நிலம், புல்வெளி 1.14 லட்சம் எக்டர் மட்டுமே உள்ளதால், பசுந்தீவன தேவையில் 20 சதம் குறைபாடு உள்ளது. தற்போது பால் உற்பத்தி வளர்ச்சி எதிர்பார்க்கப் படுகின்றது. இந்த இலக்கை அடைய அதிக பசுந்தீவன விளைச்சல் தரும் தீவனப்பயிர்களை சாகுபடி செய்வது அவசியம். கம்பு நேப்பியர் ஒட்டுப்புல், மறுதாம்பு சோளம், தீவன தட்டைப்பயிறு ஆகிய தீவனப்பயிர்கள் கரிப் பருவத்திற்கு ஏற்றவை.

கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் :

சிறப்பியல்புகள் :
அதிக தூர்கள் (30-40 தூர்கள் / குத்து), சாயாத தன்மை, மிக மிருதுவான, இனிப்பான சாறு நிறைந்த தண்டுகள், அதிக இலை தண்டு விகிதம்(0.71), அதிக பசுந்தீவன விளைச்சல் (400 டன் / எக்டர் / வருடம்), அதிக உலர் தீவன விளைச்சல் (81.4 டன் / எக்டர் / வருடம்), அதிக புரதச்சத்து (10.71 சதவீதம்), அதிக சுவையானது, கணுக்களைச் சுற்றி உருவாகும் வேர்கள் விரைவாக முளைக்க உதவும். பூச்சி, நோய் தாக்குதல் அற்றது, வருடத்திற்கு ஏழு மறுதாம்பு பயிர்களை அறுவடை செய்யலாம்.

சாகுபடி குறிப்புகள் :

  • இரண்டு அல்லது மூன்று முறை உழவு செய்து நிலத்தைப் பண்படுத்தி 60 செ.மீ. இடைவெளியில் பார்கள் அமைக்க வேண்டும்.
  • இரு பரு கொண்டு விதைக்கரணைகள் ஏக்கருக்கு 13500 போதுமானது. இதன் விலை ரூ.6075 அதாவது 1000 விதைக்கரணைகள் ரூ.450 மட்டும். 60 செமீ. இடைவெளியில் பார் அமைத்து செடிக்கு செடி 50 செ.மீ. இடைவெளியில் விதைக்கரணைகளை ஒரு பரு மண்ணுக்குள் இருக்கும்படி பாரின் ஒரு பக்கத்தில் நேராக நட வேண்டும். நடும்பொழுது தண்ணீர் பாய்ச்சுதல் அவசியம்.
  • ஏக்கருக்கு கடைசி உழவின் போது 10 டன்கள் நன்கு மக்கிய தொழு உரம் இட வேண்டும். அடியுமாக 30 கிலோ தழைச்சத்து, 20 கிலோ மணிச்சத்து, 16 கிலோ சாம்பல் சத்து இட வேண்டும். நட்ட 30 நாள்கள் கழித்து மேலுரமாக 30 கிலோ தழைச்சத்தினை இட்டு தண்ணீர் கட்ட வேண்டும். மேலும், ஒவ்வொரு அறுவடைக்குப் பின் 30 கிலோ தழைச்சத்து இடுவது நல்லது.
  • கரணைகளை நட்ட மூன்றாவது நாள் உயிர் நீர் பாய்ச்ச வேண்டும். பின்பு மண், தட்ப வெப்பநிலைக்கு ஏற்ப நீர் பாய்ச்சுதல் பரிந்துரைக்கப் படுகிறது.
  • நட்ட 30 நாள்களுக்குள் கை களை எடுக்க வேண்டும். அதன்பின் கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் அடர்த்தியாக வளர்வதால் களைகள் முளைப்பதில்லை.
  • நட்ட 80 நாள்களில் முதல் அறுவடை செய்யலாம். அதன்பின் 45-50 நாள்கள் இடைவெளியில் அறுவடை செய்து மிருதுவான பசுந்தீவனத்தைப் பெறலாம்.
  • ஒரு டன் பசுந்தீவனத்தின் விலை ரூ.1000 ஆகும்.

தீவனச்சோளம் கோ(எஃப்.எஸ்) 29 :

சிறப்பியல்புகள் :
மறுதாம்பு சாகுபடிக்கு மிகவும் உகந்தது. இதன் மூலம் ஆண்டுக்கு 6-7 அறுவடைகள். சத்து (24 சதவீதம்), அதிக சீரணிக்கும் திறன்(88.4 சதவீதம்) கொண்டது. அதிக சுவை கொண்டதால் கால்நடைகள் விரும்பி உண்ணக்கூடிய தீவனப்பயிராகும்.

சாகுபடிக் குறிப்புகள் :

  • இரண்டு முதல் மூன்று முறை உழவு செய்து நிலத்தைப்பண்படுத்தி 60 செ.மீ. இடைவெளியில் பார்கள் அமைக்க வேண்டும்.
  • இரண்டு கிலோ/ ஏக்கர் என்ற அளவில் பார்களில் இருபக்கமும் செடிக்கு செடி 10 செ.மீ. இடைவெளியில் விதைகளை விதைக்க வேண்டும். அஸோஸ்பைரில்லம் மூன்று பாக்கெட் (600 கிராம்) எடுத்து விதை நேர்த்தி செய்து விதைப்பது நல்லது.
  • ஏக்கருக்கு 5 டன் தொழு உரம் கடைசி உழவின் போது இட வேண்டும். பின்பு அடியுரமாக 18 கிலோ தழைச்சத்து, 16 கிலோ மணிச்சத்து, 16 கிலோ சாம்பல் சத்தை இட வேண்டும். விதைத்த 30 நாள்கள் கழித்து ஏக்கருக்கு 18 கிலோ தழைச்சத்தும் ஒவ்வொரு அறுவடைக்குப் பின்பு 18 கிலோ தழைச்சத்தும் இட வேண்டும்.
  • விதைத்த 20 நாட்கள் கழித்து களை எடுக்க வேண்டும். தேவைப்பட்டால் 35-40 நாளில் அடுத்த களை எடுக்க வேண்டும்.
  • விதைத்தவுடன் நீர் பாய்ச்ச வேண்டும். மூன்றாவது நாளில் உயிர் நீர் பாய்ச்ச வேண்டும். பின்பு மண், தட்ப வெப்ப நிலைக்கேற்ப நீர் பாய்ச்சுதல் பரிந்துரைக்கப்படுகிறது.
  • முதல் அறுவடை விதைத்த 70 நாள்களில் செய்யலாம். பிறகு ஒவ்வொரு மறுதாம்பு பயிரும் 45 நாள்கள் இடைவெளியில் அறுவடை செய்யலாம். வளர்ச்சிப் பருவத்தில் ஹைட்ரஜன் சயனைடு என்ற நச்சப்பொருள் அதிகம் இருப்பதால் பூ வந்த பின் அறுவடை செய்து, கால்நடைகளுக்குக் கொடுப்பது முக்கியமாகும்.
  • ஏக்கருக்கு 68 டன் / ஆண்டு (6-7 அறுவடைகள்), ஒரு டன் பசுந்தீவனத்தின் விலை ரூ.1000 ஆகும்.

தீவன தட்டைப் பயறு கோ(எப்.சி) 8 :

சிறப்பியல்புகள் :
விதைத்த 60 நாள்களுக்குள் அறுவடைக்கு தயாராகி விடும். இதில் 20 சதம் புரதம் உள்ளது. இதனை சோளம், மக்காச்சோளம், கம்பு போன்ற தீவனப்பயிர்களுடன் ஊடுபயிராக சாகுபடி செய்தால் சத்தான சமச்சீரான தீவனத்தைப் பெறலாம்.

சாகுபடிக் குறிப்புகள் :

  • இரண்டு முதல் மூன்று முறை உழவு செய்து நிலத்தைப் பண்படுத்தி 30 செ.மீ. இடைவெளியில் பார்கள் அமைக்க வேண்டும்.
  • ஏக்கருக்கு 5 டன் தொழு உரம் கடைசி உழவின் போது இட வேண்டும். பின்பு அடியுரமாக 10 கிலோ தழைச்சத்து, 16 கிலோ மணிச்சத்து, 8 கிலோ சாம்பல் சத்து இட வேண்டும்.
  • ஏக்கருக்கு 10 கிலோ விதையுடன் 3 பாக்கெட் (600 கிராம்) ரைசோபியம் உயிர் உரத்தை விதை நேர்த்தி செய்து 30 x15 செ.மீ. இடைவெளியில் விதைகளை விதைக்க வேண்டும்.
  • விதைத்தவுடன் மூன்றாவது நாளில் உயிர் நீர் பாய்ச்ச வேண்டும். பின்பு மண், தட்ப வெப்ப நிலைக்கேற்ப நீர் பாய்ச்சுதல் பரிந்துரைக்கப்படுகிறது.
  • விதைத்த 20 நாள்கள் கழித்து கை களை பறிக்க வேண்டும்.
  • விதைத்த 50-55 நாள்களில் 50 சதம் பூக்கும் தருவாயில் அறுவடை செய்ய வேண்டும்.
  • ஏக்கருக்கு 12 டன் பசுந்தீவன விளைச்சல் கிடைக்கும். ஒரு டன் பசுந்தீவனத்தின் விலை ரூ.1500 ஆகும்.

மேலும் தொடர்புக்கு:
பேராசிரியர் மற்றும் தலைவர்,
மானாவாரி வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், செட்டிநாடு – 630 102
தொலைபேசி எண்: 04565 – 283080

 

 
Fodder Cholam