Agriculture
மானாவாரி நில சாகுபடி முறை
மானாவரிய பயிர்களுக்கான உயரிய சாகுபடி தொழில்நுட்பங்கள் :: கேழ்வரகு

உணவே மருந்து என்பது நம் முன்னோர்களின் வாக்கு". ஆனால் "மருந்தே உணவு" என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். " நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்" என்ற வள்ளுவரின் கூற்றுக்கிணங்க நாம் நோயின் தன்மையை அறிந்து வாழ்வது சிறந்ததாகும். நாம் நோய்களில் இருந்து விடுபட கேழ்வரகு என்ற சிறுதானியப்பயிர் நமக்கு உகந்ததாகும். நமது முன்னோர்கள் கேழ்வரகினை மிகவும் முக்கிய உணவாக உட்கொண்டு வந்தனர். அன்றைய காலத்தில் நோயின் பாதிப்பு மிகவும் குறைவாகவே இருந்தது. ஆனால், தற்போது உணவின் பழக்கம் முழுவதும் மாறுபட்டுள்ளதால் பல வகையான நோய் தாக்குதலுக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். இதிலிருந்து விடுபட கேழ்வரகினை நாள்தோறும் உணவில் சேர்த்துக் கொண்டால் சர்க்கரை நோய், இருதய நோய், சுண்ணாம்புச் சத்து பற்றாக்குறை நோய்களில் இருந்து விடுபடலாம். மருத்துவர்களும் மக்களுக்கு கேழ்வரகு போன்ற தானியங்களையே பரிந்துரை செய்கின்றனர். கேழ்வரகில் மற்ற தானியங்களைக் காட்டிலும் சுண்ணாம்புச்சத்து (கால்சியம்), இரும்புச்சத்து, புரதச்சத்து, நார்ச்சத்து ஆகியவை அதிகமாக உள்ளதால் வேளாண் விஞ்ஞானிகளும் இதனையே பரிந்துரை செய்கின்றனர். நல்ல பருவமழை இருந்தால் கேழ்வரகு மானாவாரியில் அதிக லாபம் தரவல்லது.

இரகங்கள் :
கோ (ரா) 14, கோ (ரா) 15 மற்றும் பையூர்(ரா) 2

பருவம் :
ஆடி மற்றும் புரட்டாசி பட்டங்களில் கேழ்வரகை மானாவாரிப் பயிராகப் பயிரிடலாம்.

நிலம் தயாரித்தல் :
செம்மண், இருமண் கலந்த நிலங்கள் பயிரிட உகந்தவையாகும். நிலத்தை இரண்டு முறை நன்கு உழவு செய்த பின்பு மூன்றாவது உழவில் தொழு உரம் பயன்படுத்தி பயிரிட்டால் கேழ்வரகு அதிக லாபத்தைத் தரும். இது போன்ற இயற்கை உரங்களைப் பயன்படுத்தும் பொழுது நிலத்தின் ஈரப்பதம் அதிக நாள்களுக்குப் பாதுகாக்கப்படுகிறது.

நாற்றங்கால் விதைப்பு :
கேழ்வரகில் விளைச்சலை அதிகரிக்க தூர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். சரியான பயிர் இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும். எனவே நாற்றங்கால் விதைப்பு இறவைக்கு மட்டுமின்றி மானாவாரிக்கும் ஏற்றதாகும்.நாற்றங்கால் முறையில் பயிரிட எக்டருக்கு ஐந்து கிலோ விதையளவும், நேரடி விதைப்பிற்கு பத்து முதல் பதினைந்து கிலோ விதையளவும் தேவைப்படுகிறது. ஒரு எக்டர் பயிரிட 12.5 சென்ட் நாற்றங்கால் தேவைப்படுகிறது. பாசனத்திற்கு ஏற்ப பாத்திகளை அமைத்துக்கொள்ள வேண்டும். பாத்திகளின் அளவு 10 முதல் 20 அடி வரையும், பாத்திகளின் இடைவெளி 30 செ.மீ. வரையும் இருக்கலாம்.

நடவு :
ஒரு குத்துக்கு 17 முதல் 20 நாள்கள் வயதுடைய நாற்றுகளை இரண்டு அல்லது மூன்று நாற்றுகளை 7.5 செ.மீ. இடைவெளியில் நடவு செய்யலாம். ஈரப்பதத்தை அதிகரிக்க நுண்ணுயிர் உரங்களைப் பயன்படுத்தலாம்.

உர நிர்வாகம் :
ஒரு ஏக்கர் நிலத்தில் 5 டன் மக்கிய தொழு உரத்தைக் கடைசி உழவின் போது பரப்பி பின்னர் உழ வேண்டும். பொதுவாக மண் பரிசோதனை முடிவுக்கு ஏற்ப உரமிட வேண்டும்.மண் பரிசோதனை செய்யாவிட்டால், பரிந்துரைக்கப்பட்ட உர அளவான தழை, மணி சாம்பல் சத்துகளை ஏக்கருக்கு முறையே 25:16:16 கிலோ இட வேண்டும். விதைக்கும் போதே அடியுரமாக மணி, சாம்பல் சத்துகளை முழுவதுமாக இட வேண்டும். தழைச்சத்தை மட்டும் பாதி அளவு இட்டு, மீதமுள்ளதை சரிபாதியாகப் பிரித்து மேலுரமாக இருமுறை விதைத்த 25-30 மற்றும் 40-45 வது நாள்களில் இட வேண்டும். பருவ மழை சரியாக இல்லாத காலங்களில் மீதமுள்ள தழைச்சத்து 50 விழுக்காட்டையும் ஒரே தடவை மண் ஈரத்தன்மைக்கேற்ப மேலுரமாக இடலாம்.

நுண்ணுயிர் உரங்கள் :
நான்கு பாக்கெட்(200 கிராம்) அஸோஸ்பைரில்லத்தை மற்றும் பாஸ்போபாக்டீரியா 25 கிலோ மண், மக்கிய தொழு உரத்துடன் கலந்து ஒரு ஏக்கர் நிலத்தில் பரப்பலாம். இறவையில் 2 பாக்கெட் அஸோஸ்பைரில்லத்தை 40 லிட்டர் தண்ணீரில் கலந்து ஒரு ஏக்கருக்கு தேவையான நாற்றுகளை 15-30 நிமிடம் வேர் மூழ்கும்படி நனைத்து நடவு செய்யலாம்.

களை நிர்வாகம் :
விதைத்த அல்லது நாத்து நட்ட 18 ஆம் நாள் ஓர களையும், 45 ஆம் நாள் மற்றொரு களையும் எடுக்க வேண்டும் (அல்லது) ஒரு ஏக்கருக்கு 800 மில்லி லிட்டர் புளுகுளோரலின் அல்லது 1.2 லிட்டர் பென்டிமெத்தலின் களைக்கொல்லியை 200 லிட்டர் தண்ணீருடன் கலந்து நாற்று நட்ட மூன்றாம் நாள் கைத்தெளிப்பான் (தட்டை நாசில்) கொண்டு தெளிக்க வேண்டும்.

பயிர்ப் பாதுகாப்பு :

பூச்சிகள் :
கேழ்வரகைப் பொதுவாக பூச்சிகள் அதிகமாகத் தாக்குவதில்லை. எனினும் பருவ மாற்றத்திற்கு ஏற்ப வெட்டுப் புழுக்கள், தண்டுத் துளைப்பான்கள் சாறு உறிஞ்சிகள், இலைப்பேன், வேர், அசுவினி முதலிய பூச்சிகள் தென்படலாம். வெட்டுப் புழுக்களைக் கட்டுப்படுத்த மாலத்தியான் (50 ஈசி) 200 மில்லி தண்ணீரில் கலந்து தெளிக்கவும். தண்டுத் துளைப்பான்களைக் கட்டுப்படுத்த தூர் கட்டும் பருவத்திலும் பூக்கும் பருவத்திலும் இப்பூச்சிக்கொல்லியைப் பயன்படுத்தலாம்.

நோய்கள் :
கேழ்வரகினை குலை நோய், தேமல் நோய் தாக்கக் கூடியது. குலை நோயினைக் கட்டுப்படுத்த ட்ரைசைக்லோசோல் அல்லது பெவிஸ்டின் 120 கிராம் ஒரு ஏக்கருக்கு 200 லிட்டரில் கலந்து நோயின் அறிகுறி தென்பட்டவுடன் 15 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை தெளிக்க வேண்டும்.தேமல் நோயினைக் கட்டுப்படுத்த நோய் தாக்கிய செடிகளை முதலில் அகற்றவும். இந்தத் தத்துப் பூச்சிகளால் பரவுவதால் அதைக் கட்டுப்படுத்த மீத்தேல் டெமட்டன் 0.05 சதம்(200 மில்லி / ஏக்கருக்கு) நோய் தோன்றியவுடன் மற்றும் 20 நாள் கழித்து தெளிக்க வேண்டும்.

அறுவடையும் சேமிப்பும் :

கதிர்கள் நன்கு காய்ந்து முற்றிய பிறகு குறைந்தது இருமுறையாவது அறுவடை செய்யவும். பின் கதிர்களைக் களத்தில் காய வைத்து, சுத்தம் செய்து சேமித்து வைக்க வேண்டும். மேற்கூறிய முறைகளில் உயர் விளைச்சல் ரகங்களைப் பயன்படுத்தி, சீரிய சாகுபடிக் குறிப்புகளைக் கடைப்பிடித்தால் அதிக விளைச்சல் பெறுவதோடு அதிக லாபத்தையும் அடையலாம்.

கேழ்வரகில் தவறாமல் செய்ய வேண்டியவை :

  • அசோபாஸ் உயிர் உர விதை நேர்த்தி
  • சூடோமோனாஸ் உயிர் பூஞ்சாணக்கொல்லி விதை நேர்த்தி
  • பயிர் எண்ணிக்கை பராமரித்தல்
  • நாற்று நட்ட 18-25 நாள்களில் ஒரு களையெடுப்பு
  • குலை நோய் தாக்கா வண்ணம் சூடோமோனாஸ் தெளிப்பு
  • 70 முதல் 80 விழுக்காடு கதிர்கள்
  • முற்றிய நிலையில் தாமதிக்காத அறுவடை
  • சுத்தம் செய்யப்பட்ட களத்தில் கல் மண் கலக்காத வகையில் தானியத்தைப் பிரித்தெடுத்தல்
  • பூஞ்சாணம் தாக்காத தீவனத்திற்கு ஏற்ற வகையில் தாள்களை நன்கு காய வைத்து முறையாக சேமித்தல்

மேலும் தொடர்புக்கு:
பேராசிரியர் மற்றும் தலைவர்,
மானாவாரி வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், செட்டிநாடு – 630 102
தொலைபேசி எண்: 04565 – 283080

 
Fodder Cholam