|
செம்மறியாடு மற்றும் வெள்ளாடுகளைத் தாக்கும் பொதுவான நோய்கள்
நீல நாக்கு நோய்
இந்நோயினைப் பற்றி
- நீல நாக்கு நோய் செம்மறியாடுகளைப் பாதிக்கக்கூடிய ஒரு நுண்ணுயிரி நோயாக்கும். ஆனால் இந்த நோய் ஒரு தொற்று நோய் அல்ல. இந்நோயினால் பாதிக்கப்பட்ட ஆடுகளில் காய்ச்சல், வாய் மற்றும் நாக்கில் புண்களும் ஏற்படும்
- இந்நோய் குறிப்பாக செம்மறியாடுகள், வெள்ளாடுகளைப் பாதிக்கிறது. மாடுகள் இந்நோயினால் மிக அரிதாகவே பாதிக்கப்படுகின்றன
- இந்நோய் இந்தியாவில் பொதுவாகக் காணப்படுகிறது
- இந்நோய் அடிப்படையில் செம்மறியாடுகளைத் தாக்கும் நோயாகும்.ஒரு வயதிற்குள்ளாக இருக்கும் இளம் செம்மறியாடுகள் இந்நோயினால் அதிகம் பாதிக்கப்படுகின்றன
- தாய் ஆட்டிடம் பால் குடிக்கும் குட்டிகள், பால் மூலம் இந்நோய்க்கான எதிர்ப்பு சக்தியினைப் பெறுவதால் இந்நோயினால் அதிகம் பாதிக்கப்படுவதில்லை
- மழைக் காலங்களில் குறிப்பாக அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் இந்நோயின் தாக்கம் பொதுவாக அதிகமாகக் காணப்படுகின்றது
நோய்க்கான காரணங்கள்
- ரியோ விரிடே எனும் குடும்பத்தைச் சார்ந்த பூச்சிகளின் மூலம் பரவக்கூடிய ஆர்பி வைரஸ், நீல நாக்கு நோயினை ஏற்படுத்துகிறது
- குயூலிகாய்டஸ் இனத்தைச் சேர்ந்த கொசுக்கள் மழைக்காலத்தில் ஆடுகளைக் கடிக்கும் போது நீல நாக்கு நோய் இக்கொசுக்களால் பரவுகின்றது
- வெயில் காலத்தின் பிற்பகுதியிலும், வேனில் காலத்தின் முற்பகுதியிலும் இந்நோயினைப் பரப்பும் கொசுக்களின் உற்பத்தி அதிகமாக இருப்பதால் நோய் அதிகமாகப் பரவி ஆடுகளைத் தாக்குகிறது
- விந்துவின் மூலமாகவும், நஞ்சுக் கொடி மூலமாகவும் இந்நோய் பரவும்
- அழுகுதல், உலர வைத்தல், மற்றும் எதிர்க்கிருமி மருந்துகளுக்கு நீல நாக்கு நோய் ஏற்படுத்தும் வைரஸ் எதிர்ப்புத்தன்மை வாய்ந்தது
நோயின் அறிகுறிகள்
- காய்ச்சல்
- பாதிக்கப்பட்ட ஆடுகள் சோர்ந்து, தீவனம் எடுக்காமல் காணப்படுதல்
- மூக்கு மற்றும் வாய்ப்பகுதியிலுள்ள சவ்வு சிவந்து காணப்படுதல்
- மூக்கு மற்றும் கண்ணிலிருந்து திரவம் வடிதல்
- உதடுகள், ஈறுகள், வாய்ச்சவ்வு, நாக்கு ஆகியவை சிவந்து, புண்கள் தோன்றுதல்
- நாக்கு நீல நிறமாக மாறுதல்
- கழுத்தினை ஒரு பக்கமாக சாய்த்துக் கொள்ளுதல்
- குளம்பின் மேல்பகுதி சிவந்து வீங்கிக் காணப்படுதல். ஆடுகள் நொண்டி நடத்தல்
- கண்ணின் உட்சவ்வு சிவந்து கண்களின் இமை ஒட்டிக்கொண்டு இருத்தல்
- விரும்பத்தகாத வாடையுடன் ஏற்படும் கழிச்சல்
- மூச்சு விட சிரமம், குறட்டை விடுதல், நுரையீரல் அழற்சி
- மூச்சு விட சிரமப்பட்டு இறப்பு ஏற்படுதல்
பரிந்துரைக்கப்பட்ட முதலுதவி
- நோயினால் பாதிக்கப்பட்ட ஆடுகளை மற்ற ஆடுகளிலிருந்து தனியாகப் பிரித்து பராமரித்தல்
- பாதிக்கப்பட்ட ஆடுகள் நேரடி சூரிய ஒளியில் படாமல் வைத்துப் பராமரித்தல்
- பாதிக்கப்பட்ட ஆடுகளுக்கு போதுமான ஓய்வு அளித்தல்
- அரிசி, ராகி மற்றும் கம்புக் கூழ் தயாரித்து பாதிக்கப்பட்ட ஆடுகளுக்குக் கொடுத்தல்
- விலங்குக் கொழுப்பு அல்லது கிளிசரினை புண்களின் மீது தடவுதல்
- அருகிலுள்ள தகுதி வாய்ந்த கால்நடை மருத்துவரின் உடனடி ஆலோசனை பெற்று சிகிச்சை அளித்தல்
- பாதிக்கப்பட்ட ஆடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பாதிருத்தல்
- ஒரு கிராம் பொட்டாசியம் பர்மாங்கனேட்டை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து நோயினால் பாதிக்கப்பட்ட ஆடுகளின் வாயினை ஒரு நாளைக்கு 2-3 முறை கழுவுதல்
- பாதிக்கப்பட்ட ஆடுகளுக்கு எதிர்உயிரி மருந்துகள் அல்லது இதர சிகிச்சையை அளிக்க அருகிலுள்ள தகுதி வாய்ந்த கால்நடை உதவி மருத்துவரை அணுகுதல்
- நோய்க்கிளர்ச்சி ஏற்பட்டிருக்கும் போது அருகிலுள்ள கால்நடை உதவி மருத்துவரை அணுகி அந்தப் பகுதியில் வட்ட தடுப்பூசி முறையினை அமல்படுத்துதல்
பொதுவான நோய்த்தடுப்பு மற்றும் கட்டுப்படுத்தும் முறைகள்
- குறிப்பிட்ட கால இடைவெளிகளில் ஆடுகளுக்கு தடுப்பூசி அளித்தல்
- குயூலிகாய்டஸ் கொசுக்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்
- புற ஒட்டுண்ணிகளுக்கான ஊணிகளை அதிக அளவு இந்நோய் பரப்பும் பூச்சிகள் உள்ள இடத்தில் ஆடுகளுக்குப் போட வேண்டும்.
- மாடுகள் இந்நோய் ஏற்படுத்தும் வைரஸின் நோய் தாங்கிகளாகச் செயல்படுகின்றன. மாடுகளின் இரத்தத்தில் இந்த வைரஸ் 5 வாரம் வரையிலும் உயிரோடு இருக்கும். எனவே மாடுகளின் நடமாட்டத்தைக் குறைக்க வேண்டும்
- நோய்த் தாக்குதல் அதிகமுள்ள பகுதிகளிலிருந்து ஆடுகள் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும்
- நோய்க்கிளர்ச்சி அடிக்கடி ஏற்படும் பகுதிகளிலிருந்து ஆடுகள் பண்ணைக்குள் நுழைவதைக் கட்டாயமாகத் தவிர்க்க வேண்டும்.
- ஆடுகளின் மீது பூச்சிகள் அமர்வதைத் தடுக்கும் இரசாயனக் கலவை மருந்துகளான பியூட்டாக்ஸ் (ஒரு மிலி/ஒரு லிட்டர் தண்ணீர்) மருந்தினை ஆடுகள் மீது தடவுதல். மேலும் இம்மருந்தினை கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களில் தெளித்தல்.
- பூச்சிகள் மற்றும் கொசுக்கள் உள்ளே நுழைய முடியாத கொட்டகைகளில் ஆடுகளை வளர்த்தல்.
- காய்ந்த இலைகள் அல்லது மரங்களைப் பயன்படுத்தி மாலை 6-8 மணி அளவில் புகை மூட்டுவதால் குயூலிகாய்டஸ் கொசுக்களை செம்மறியாட்டுக் கொட்டகைகளிலிருந்து விரட்டி விடலாம்.
ஆர்ஃப்
இந்நோயினைப்பற்றி
- இளம் ஆடுகளின் உதடுகளை இந்நோய் அதிகம் பாதிக்கின்றது
- இந்நோய் பொதுவாக செம்மறியாடுகளை விட வெள்ளாடுகளை அதிகம் பாதிக்கின்றது
- வெயில் காலத்தின் பிற்பகுதி, இலையுதிர் காலம், குளிர்காலத்தில் இந்நோயின் தாக்கம் அதிகமாகக் காணப்படுகின்றது
இந்நோய்க்கான காரணங்கள்
- பாக்ஸ் விரிடே குடும்பத்தைச் சார்ந்த வைரஸ் இந்நோய் ஏற்படக் காரணமாக இருக்கின்றது
- இந்த வைரஸ் 60˚c வெப்பநிலையில் 30 நிமிடம் இருக்கும் போது செயலிழந்து விடுகிறது
- ஈதர், குளோரோபார்ம், பென்சீன், டொலுவீன் போன்ற இரசாயனங்களால் கொல்லப்பட்டு விடும். மேலும் கிளசரால் இந்நோய் ஏற்படுத்தும் வைரஸைக் கொல்லாது
- தொடர்பின் மூலமே இந்த வைரஸ் ஆடுகளுக்கிடையே பரவுகின்றது
- உலர்வதால் இந்த வைரஸ் இறக்காது. நோயினால் பாதிக்கப்பட்ட ஆடுகளின் புண்களில் இருந்து விழும் பக்குகளில் இந்த வைரஸ் 10 ஆண்டுகள் கழித்து பிரித்தெடுக்கப்பட்டிருக்கிறது
- ஆர்ப் நோயினால் பாதிக்கப்பட்ட ஆடுகளில் பாலூட்டும் குட்டிகள் இந்நோயினால் பாதிக்கப்படுகின்றன
- பாதிக்கப்பட்ட ஆடுகளின் புண்களிலிருந்து விழும் பக்குகளில் நீண்ட நாட்கள் இந்த வைரஸ் உயிரோடு இருப்பதால், சுற்றுப்புறத்தில் நீண்ட நாட்கள் இந்த வைரஸ் உயிரோடு இருக்கும். எனவே புண்களிலிருந்து விழும் பக்குகள் இந்நோயினைப் பரப்புவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன
நோயின் அறிகுறிகள்
- நோயினால் பாதிக்கப்பட்ட ஆடுகள் சோர்வாக, தீவனம் எடுக்காமல், காய்ச்சலுடன் காணப்படுதல்
- மூக்கும் மற்றும் வாயின் உட்சவ்வு, உதடுகள், போன்ற உடல் பாகங்களில் கொப்புளங்கள் தோன்றுதல். பிறகு அவை சீழ்க் கொப்புளங்களாக மாறிக் கடைசியில் புண்களாக மாறுதல்
- ஒரு வாரம் கழித்து புண்கள் மீது பக்குகள் தோன்றுதல். பிறகு நான்கு வாரங்களுக்குள் பக்குகள் விழுந்து விடுதல்
- நோயின் தீவிர நிலையில் பாதிக்கப்பட்ட ஆட்டுக்குட்டிகள் நொண்டிக்கொண்டு நடத்தல், மேலும் தீவனம் எடுக்காமல், உடல் மெலிந்து காணப்படுதல்
- வாயிலிருந்து அதிகப்படியாக உமிழ்நீர் சுரத்தல், கண்களில் நீர் வடிதல், மூக்கிலிருந்து சளி வடிதல்
- குளம்புகளுக்கு இடையிலும், குளம்பின் மேல் பகுதியிலும் கொப்புளங்கள் தோன்றுதல்
- பாதிக்கப்பட்ட பெட்டை ஆடுகளின் மடியில் புண்கள் ஏற்பட்டு, பிறகு மடி நோய் ஏற்படுதல்
- நோயினால் பாலூட்டும் ஆடுகளின் மடியில் கொப்புளங்கள் தோன்றுதல்
- பாதிக்கப்பட்ட ஆடுகளில் பால் குடிக்கும் குட்டிகள் நோயினால் பாதிக்கப்படுதல். குறிப்பாகக் குட்டிகளின் வாயில் கொப்புளங்கள் தோன்றுதல்
பொதுவான நோய்த்தடுப்பு மற்றும் நோய்க் கட்டுப்படுத்தும் முறைகள்
- செம்மறியாட்டுக் குட்டிகளின் ஒரு மாத வயதில் ஆர்ப் நோய்க்கான தடுப்பூசியினை அளித்தல்
- நோய் எதிர்ப்பு சக்தி நன்றாக ஏற்படுவதற்கு, முதல் தடுப்பூசி அளித்து 2-3 மாதங்கள் கழித்து இரண்டாம் தடுப்பூசி அளித்தல்
- தடுப்பூசி அளிக்கும் போது, தடுப்பூசியினால் கொட்டகை அசுத்தமடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்ட ஆடுகளில் புண்கள் ஏற்பட்டு, பக்குகள் கீழே விழும் வரை அவற்றைத் தடுப்பூசி போடாத ஆடுகளிடமிருந்து தனியாகப் பிரித்து வைக்க வேண்டும்
- தடுப்பூசி போடாத ஆடுகளுக்கு,நோய் பாதிக்கப்படும் பகுதிகளுக்கு ஓட்டிச் செல்லும் போது தடுப்பூசி போட வேண்டும்
- பண்ணையில் கண்டிப்பான சுகாதார முறைகளைப் பின்பற்ற வேண்டும்
- பாதிக்கப்பட்ட ஆடுகளை நோயற்ற ஆடுகளிடமிருந்து தனியாகப் பிரித்து வைத்துப் பராமரிக்க வேண்டும்
- ஆர்ப் நோய் ஏற்படுத்தும் வைரஸ் மனிதர்களையும் தாக்கி நோயினை ஏற்படுத்தும். பாதிக்கப்பட்ட மனிதர்களின் கைகளை, முகம் போன்ற பகுதிகளில் புண்கள் ஏற்படும்
- கால்நடை மருத்துவர்களும், ஆடுகளைக் கையாள்பவர்களும் முறையான பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றி ஆர்ப் நோயின் வைரஸால் பாதிக்கப்படுவதைத் தடுக்கலாம்
- மேலும் பாதிக்கப்பட்ட ஆடுகளுக்கு எதிர் உயிரி மருந்துகளைக் கொண்டு சிகிச்சை அளிக்க அருகிலுள்ள கால்நடை மருத்துவரை அணுக வேண்டும்.
ஆட்டுக்கொள்ளை நோய்
இந்நோயினைப் பற்றி
- இந்நோய் வைரஸால் ஏற்படும் ஆடுகளைத் தாக்கும் ஒரு கொடிய தொற்று நோயாகும். இந்நோயினால் பாதிக்கப்பட்ட ஆடுகளில் காய்ச்சல்,பசியின்மை, வாயில் புண்கள் ஏற்படுதல், கழிச்சல், நுரையீரல் பாதிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படும்
- வெள்ளாடுகளில் இந்நோயின் பாதிப்பு அதிகம். செம்மறியாடுகள் இந்நோயினால் அதிகம் பாதிக்கப்படுவதில்லை
நோய்க்கான காரணங்கள்
- பாராமிக்சோவிரிடே வைரஸ் குடும்பத்தைச் சார்ந்த மார்பிலி வைரஸ் இந்நோயினை ஏற்படுத்துகிறது
- இந்நோய் பாதிக்கப்பட்ட ஆடுகளிலிருந்து, மற்ற ஆடுகளுக்கு நேரடித் தொடர்பின் மூலம் இந்நோய் பரவுகின்றது
- இந்நோய் ஏற்படுத்தும் வைரஸால் அசுத்தமடைந்த தீவனம், தண்ணீர், படுக்கைப் பொருட்கள், மற்றும் இதர பொருட்கள், உபகரணங்கள் மூலம் இந்நோய் பரப்பப்படுகின்றது
- பாதிக்கப்பட்ட ஆடுகளின் மூக்கு,வாய், சீரண மண்டலத்திலிருந்து வெளியேறும் திரவம், சாணம் போன்றவற்றில் வைரஸ் அதிகமாகக் காணப்படும். முக்கியமாக சாணம் இந்த நோய் ஏற்படுத்தும் வைரஸைப் பரப்புவதில் முக்கியபங்கு வகிக்கின்றது
- புதிதாக வாங்கப்பட்ட நோய் பாதிக்கப்பட்ட ஆட்டின் மூலம் பண்ணைக்குள் இந்த நோய் எளிதில் பரவும்
- இந்த நோய்க்கு பொதுவாக நோய் தாங்கி விலங்குகள் இல்லை. நோய் அறிகுறிகளை வெளிப்படுத்தாத ஆடுகளால் இந்நோய் ஏற்படுத்தும் வைரஸ் பரவும்
- நோய்க்கிருமியால் அசுத்தமடைந்த தீவனத்தை உண்ணுதல் நோய் ஏற்படுவதற்கு முக்கியமான காரணமாகும். எனினும் மூச்சுக்காற்று மூலமாக வைரஸ் ஆடுகளின் உடலினுள் சென்றும், கண்களிலிருந்து வெளிவரும் திரவத்துடன் ஏற்படும் நேரடித் தொடர்பு மூலமாகவும் நோய்க்கிருமி பரவி நோய் ஏற்படுகிறது
- பூச்சிகள் மூலம் இந்த வைரஸ் பரவுவதில்லை
- காட்டில் வாழும் அசை போடும் பிராணிகளும் இந்நோயினைப் பரப்புவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன
நோய் அறிகுறிகள்
- அதிகக் காய்ச்சல்.
- பாதிக்கப்பட்ட ஆடுகளின் தோல் உலர்ந்து, மூக்குக்கு மேலிருக்கும் தடித்த பகுதி வறண்டு, பசியின்றிக் காணப்படுதல்.
- பாதிக்கப்பட்ட ஆடுகளின் மூக்கிலிருந்து திரவம் வடிவதுடன், தும்மல், இருமல் காணப்படுதல்
- கண்கள் மற்றும் மூக்கிலிருந்து வடியும் திரவம் வறண்டு, கெட்டியாக கண்கள் மற்றும் மூக்கில் ஒட்டிக் காணப்படுதல்
- உதடுகள், வாய் உட்சவ்வு, ஈறுகள், தாடையின் உட்பகுதி, நாக்கு போன்றவற்றில் ஏற்படும் புண்கள் அழுகி, கெட்ட வாசனை வீசுதல்
- கண்களின் உட்சவ்வு மிகவும் சிவந்து, கண்களின் இமை காணப்படுதல்
- நுரையீரல் அழற்சி ஏற்பட்டு, ஆடுகள் மூச்சு விட சிரமப்படுதல்
- பாதிக்கப்பட்ட ஆடுகளில் கழிச்சல் ஏற்படுதல். சாணத்தில் சளி மற்றும் இரத்தம் கலந்து காணப்படுதல்
- சினையுற்றிருக்கும் வெள்ளாடுகளில் குட்டிகள் வீசுதல்
- இந்நோயினால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான ஆடுகள் நோயின் தாக்குதலிலிருந்து மீண்டு விடும். ஆனால் சில ஆடுகள் இறந்து விடும்
பரிந்துரைக்கப்பட்ட முதலுதவி
- நோயினால் பாதிக்கப்பட்ட ஆடுகளை மற்ற நோயுற்ற ஆடுகளிலிருந்து தனியாகப் பிரித்து வைத்துப் பராமரித்தல்
- பாதிக்கப்பட்ட ஆடுகளுக்கு போதுமான அளவு ஓய்வு அளித்தல்
- அரிசி, ராகி மற்றும் கம்புக் கூழ் தயாரித்து பாதிக்கப்பட்ட ஆடுகளுக்குக் கொடுத்தல்
- விலங்குக் கொழுப்பு அல்லது கிளிசரினை புண்களின் மீது தடவுதல்
- அருகிலுள்ள தகுதி வாய்ந்த கால்நடை மருத்துவரின் உடனடி ஆலோசனை பெற்று சிகிச்சை அளித்தல்
- பாதிக்கப்பட்ட ஆடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பாதிருத்தல்
- ஒரு கிராம் பொட்டாசியம் பர்மாங்கனேட்டை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து நோயினால் பாதிக்கப்பட்ட ஆடுகளின் வாயினை ஒரு நாளைக்கு 2-3 முறை கழுவுதல்
- பாதிக்கப்பட்ட ஆடுகளுக்கு எதிர்உயிரி மருந்துகள் அல்லது இதர சிகிச்சையை அளிக்க அருகிலுள்ள தகுதி வாய்ந்த கால்நடை உதவி மருத்துவரை அணுகுதல்
- நோய்க்கிளர்ச்சி ஏற்பட்டிருக்கும் போது அருகிலுள்ள கால்நடை உதவி மருத்துவரை அணுகி அந்தப் பகுதியில் வட்ட தடுப்பூசி முறையினை அமல்படுத்துதல்
பொதுவான நோய் கட்டுப்படுத்தும் மற்றும் நோய்த்தடுப்பு முறைகள்
- ஆடுகளுக்கு முறையான இடைவெளியில் சரியாகத் தடுப்பூசி அளித்தல்
- நோய் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுகாதார நடவடிக்கைகளை மேற்க்கொள்ளுதல். ஆட்டுக்கொள்ளை நோயினை ஏற்படுத்தும் வைரஸ் பெரும்பாலான கிருமி நாசினிகளால் கொல்லப்பட்டு விடும். உதாரணம் . பீனால், சோடியம் ஹைட்ராக்சைடு (2%)
- புதிதாக வாங்கப்பட்ட ஆடுகளை பண்ணையிலுள்ள மற்ற ஆடுகளுடன் உடனடியாக சேர்க்காமல், தனியாகப் பிரித்து வைத்துப் பராமரிக்க வேண்டும்
- சந்தையில் வாங்கபட்ட நோயுற்ற ஆடுகளை, பண்ணையிலுள்ள மற்ற ஆடுகளுடன் சேர்க்காமல் தனியாகப் பிரித்து வைத்துப் பராமரிக்க வேண்டும்
- நோயினால் பாதிக்கப்பட்ட ஆடுகளுக்கு நோய் எதிர்ப்புரதங்கள் கொண்ட ஊநீரை சிகிச்சைக்காக அளிக்கலாம். இதனுடன் முறையான மேலாண்மை முறைகளைப் பின்பற்ற வேண்டும் வெளிநாடுகளிகளில் இருந்து வாங்கப்பட்ட செம்மறியாடுகள் மற்றும் வெள்ளாடுகளை குறிப்பிட்ட நாட்களுக்குத் தனியாகப் பிரித்து வைத்துப் பராமரிக்க வேண்டும்
செம்மறியாட்டு அம்மை நோய்
இந்நோயினைப் பற்றி
- இந்நோய் செம்மறியாடுகள் மற்றும் வெள்ளாடுகளைத் தாக்கும் ஒரு தீவிர மற்றும் நீண்ட நாள் நோயாகும். இந்நோயினால் பாதிக்கப்பட்ட செம்மறியாடுகளின் தோலிலும், அவற்றின் கண், மூக்கு, வாய் ஆகியவற்றின் உட்சவ்வுகளிலும் அம்மைக் கொப்புளங்கள் தோன்றும்
- வயது மற்றும் பாலின வித்தியாசமின்றி எல்லா செம்மறியாட்டு மற்றும் வெள்ளாட்டு இனங்களும் இந்நோயினால் பாதிக்கப்படுகின்றன
- வெள்ளாட்டு அம்மை நோயினை ஏற்படுத்தும் வைரஸ் செம்மறியாடுகளையும், செம்மறியாட்டு அம்மை நோயினை ஏற்படுத்தும் வைரஸ் வெள்ளாடுகளையும் தாக்கி நோயினை ஏற்படுத்தும்
- இயற்கையாக செம்மறியாடுகள், செம்மறியாட்டு அம்மை நோயினால் பாதிக்கப்படுகின்றன. இளம் செம்மறியாடுகள் இந்நோயினால் அதிகம் பாதிக்கப்படுகின்றன
- இந்நோய் பொதுவாக ஏப்ரல்- ஜூன் மாதங்களில் செம்மறியாடுகளைத் தாக்கும்
நோய்க்கான காரணங்கள்
- கேம்ரிபாக்ஸ் எனும் பாக்ஸ் விரிடே குடும்பத்தைச் சார்ந்த வைரஸ் இந்நோயினை ஏற்படுத்துகிறது
- இந்நோயினால் பாதிக்கப்பட்ட ஆடுகளின் தோலில் ஏற்படும் புண்களிலிருந்து உதிரும் பக்குகள், எச்சில், பிழுக்கைகள், மூக்கிலிருந்து வடியும் திரவம் (1-2 மாதத்திற்கு) போன்றவை இந்நோயினைப் பரப்பும் முக்கிய காரணிகளாகும்
- இந்த வைரஸ் அதிக காரத்தன்மை மற்றும் அமிலத்தன்மையில் நீண்ட நாள் உயிரோடு இருக்காது. ஆனால் சுற்றுப்புறத்தில் 6 மாதம் வரை உயிரோடு இருக்கும்
- 56 டிகிரி சென்டிகிரேட் வெப்பநிலையில் 2 மணி நேரமும், 65 டிகிரி சென்டிகிரேட் வெப்பநிலையில் 30 நிமிடமும் இந்த வைரஸ் உயிரோடு இருக்கும்
- பொதுவாக நோயினால் பாதிக்கப்பட்ட ஆடுகளுக்கும், நோயற்ற ஆடுகளுக்கும் இடையே உள்ள நேரடித் தொடர்பு மூலமாக இந்நோய் பரவுகின்றது
- அசுத்தமடைந்த படுக்கைப் பொருட்கள், தீவனம், தண்ணீர் மற்றும் பணியாளர்கள் மூலமாகவும் இந்நோய் பரவுகின்றது
- புண்கள் மற்றும் சிராய்ப்புகள் மூலம் வைரஸ் ஆடுகளின் உடலினுள் சென்று பாதிப்பினை ஏற்படுத்துகிறது
- பாதிக்கப்பட்ட ஆடுகளின் தோல் புண்களில் உள்ள பக்குகளில் இந்த வைரஸ் உயிரோடு இருக்கும். எனவே இந்த ஆடுகள் தங்களது உடலை மற்ற ஆடுகளின் மீது தேய்க்கும் போது நேரடியாக இந்நோய் பரவுகின்றது
- காற்றின் மூலமாவும் இந்நோய் பரவும்
- நாய்கள், பூனைகள் போன்ற விலங்குகளும் இந்நோயினைப் பரப்புவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன
- நோயினால் பாதிக்கப்பட்ட தாய் ஆடுகளிலிருந்து குட்டிகளுக்கு நஞ்சு கொடி மூலமாக இந்த வைரஸ் பரவும்
நோய் அறிகுறிகள்
- பாதிக்கப்பட்ட ஆடுகளில் முதலில் காய்ச்சல் ஏற்பட்ட 2-5 நாள் கழித்து, முடிகளற்ற உடல் பாகங்களில் கொப்புளங்கள் தோன்றும்
- கொப்புளங்கள் தோன்றியவுடன், மூக்கின் உட் சவ்வு அழற்சி, கண் உட் சவ்வு அழற்சி ஏற்படும்
- பாதிக்கப்பட்ட ஆடுகளின் உதடுகள், கன்னங்கள், மூக்குப் பகுதி, முகம்ர காதுகள், தொடைப்பகுதிர அடிவயிற்றுப் பகுதி, கண் இமை, கழுத்து, மடி மற்றும் மடிக்காம்புகளில் அம்மைக் கொப்புளங்கள் தோன்றுதல்
- கண் இமைகள் வீங்கி, கண்கள் முழுவதும் மூடிக் காணப்படுதல்
- கண்கள் மற்றும் மூக்கிலிருந்து சீழ் வடிதல்
- பாதிக்கப்பட்ட ஆடுகள் நோஞ்சானாக, நிற்க முடியாமல் இருத்தல்
- கண்கள், மூக்கு, உதடுகள்,பிறப்புறுப்பு, ஆணுறுப்பின் முன் பகுதி போன்றவற்றின் உட்சவ்வுகள் பாதிக்கப்பட்டு அழுகி விடுதல்
- பாதிக்கப்பட்ட ஆடுகள் நுரையீரல் அழற்சியினால் மூச்சு விட முடியாமல் இறந்து விடுதல்
பரிந்துரைக்கப்படும் முதலுதவி
- பாதிக்கப்பட்ட பண்ணையிலுள்ள ஆடுகளை நோய் முற்றிலும் குணமாகி 45 நாட்கள் வரை தனியாகப் பிரித்து வைத்துப் பராமரிக்க வேண்டும்
- ஈதர் (20%), குளோரோபாரம் மற்றும் பார்மலின் (1%), பீனால் (2%) போன்ற கிருமி நாசினிகளைப் பயன்படுத்தி வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தி நோய் பரவுவதைத் தடுத்தல்
- மேலும் சிகிச்சை அளிக்க அருகிலுள்ள கால்நடை மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்
பொதுவான நோய்த்தடுப்பு மற்றும் கட்டுப்படுத்தும் முறைகள்
- முறையாக ஆடுகளுக்கு தடுப்பூசி அளித்தல்
- ஐவிபிஎம், ராணிபேட்டை, வேலூர் மாவட்டம், தமிழ்நாடு – இங்கு செம்மறியாட்டு அம்மை நோய்க்கான தடுப்பூசி கிடைக்கிறது. இது 50 மிலி மற்றும் 100 மிலி புட்டிகளில் கிடைக்கும். ஒரு ஆட்டிற்கு அளிக்கப்படும் தடுப்பூசிக்கு 60 பைசா செலவாகும். இந்தத் தடுப்பூசியினை தோலுக்கடியில் கீழ்க்கண்ட தடுப்பூசி அட்டவணைப்படி அளிக்க வேண்டும்
- பரிந்துரைக்கப்படும் தடுப்பூசி அட்டவணை
முதல் தடுப்பூசி அளிக்கும் வயது |
அடுத்த தடுப்பூசி அளிப்பது |
தடுப்பூசி போடும் மாதம் |
அளவு |
மூன்று மாத வயதில் |
வருடம் ஒரு முறை |
பிப்ரவரி –மார்ச் |
வயது முதிர்ந்த ஆடுகளுக்கு – 5 மிலி – தோலுக்கடியில்
குட்டிகளுக்கு 2.5 மிலி- தோலுக்கடியில் |
- பாதிக்கப்பட்ட பண்ணையிலுள்ள ஆடுகளை நோய் முற்றிலும் குணமாகி 45 நாட்கள் வரை தனியாகப் பிரித்து வைத்துப் பராமரிக்க வேண்டும்
- புதிதாக வாங்கப்பட்ட ஆடுகளை பண்ணையிலுள்ள மற்ற ஆடுகளுடன் சேர்ப்பதற்கு முன்பாக குறிப்பிட்ட நாட்களுக்குத் தனியாகப் பிரித்து பராமரிக்க வேண்டும்
- ஈதர் (20%), குளோரோபாரம் மற்றும் பார்மலின் (1%), பீனால் (2%) போன்ற கிருமி நாசினிகளைப் பயன்படுத்தி வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தி நோய் பரவுவதைத் தடுத்தல்
- பாதிக்கப்பட்ட பகுதிகளில் விலங்குகளின் நடமாட்டத்தைக் குறைத்தல்
- இறந்த கால்நடைகளின் உடல்கள் மற்றும் பாகங்களை முறையாக அப்புறப்படுத்துதல்
- கண்டிப்பான சுகாதார முறைகளைப் பின்பற்றுதல்
வாய்ப்பூட்டு நோய் அல்லது டெட்டனஸ்
இந்நோயினைப் பற்றி
- பாலூட்டிகளைப் பாதிக்கும் வாய்ப்பூட்டு நோய் பாக்டீரிய நச்சினால் ஏற்படுத்தப்படுகிறது. இந்நோயினால் பாதிக்கப்பட்ட கால்நடைகளில் தசைகளில் வலிப்பு ஏற்படும்
- மாடுகளை விட செம்மறியாடுகள் மற்றும் வெள்ளாடுகள், இந்த நோயினால் மிகவும் பாதிக்கப்படுகின்றன
நோய்க்கான காரணங்கள
- கிளாஸ்டிரிடியம் டெட்டனை எனும் பாக்டீரியா தாவர உண்ணிகளின் குடலில் சாதாரணமாக இருக்கும். இப்பாக்டீரியாக்களின் நச்சு வாய்ப்பூட்டு நோய் ஏற்படக் காரணமாகும்
- இந்த பாக்டீரியா முற்றிலும் ஆக்சிஜன் இல்லாத சூழ்நிலையில் மட்டுமே வளரும்
- இந்த பாக்டீரியாக்களின் ஸ்போர்கள் மிகவும் கடினமானவை. மண்ணில் நீண்ட நாட்கள் உயிரோடு இருக்கும். இந்த ஸ்போர்கள் 115 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் 30-60 நிமிடங்கள் வைத்திருந்தால் மட்டுமே கொல்லப்படும்
- இந்த பாக்டீரியாக்கள் வெப்பம் மற்றும் கிருமி நாசினிகளால் எளிதில் கொல்லப்பட்டு விடும். ஆனால் இதன் ஸ்போர்கள் பல்வேறு விதமான இயற்பியல், வேதியியல் பொருட்களால் சேதாரமடையாது
- கிளாஸ்டிரிடியம் டெட்டனை பாக்டீரியா கால்நடைகளின் உடலில் உள்ள காற்றுப் புகாத புண்களில் பல்கிப் பெருகி அவற்றின் நச்சினை உண்டாக்குகின்றன
- இந்த பாக்டீரியாக்கள் சுற்றுப்புறக் காரணிகளுக்கு மிகுந்த எதிர்ப்புத்திறன் வாய்ந்தவை. எனவே இவை தெருவிலிருக்கும் குப்பைகள், தோட்டத்திலிருக்கும் மண், விலங்குகளின் சாணம் போன்றவற்றில் நீண்டகாலம் உயிரோடு இருக்கும்
- கால்நடைகளின் சாணத்தில் இந்த பாக்டீரியாக்கள் நீண்ட நாள் உயிரோடு இருக்கும். எனவே இவை மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் நோய் பரப்புவதில் ஆதாரமாக இருக்கின்றன
- ஆடுகளில் உள்ள ஆழமான புண்களில் இந்த பாக்டீரியாக்களின் ஸ்போர்கள் உள்ளே நுழைந்து பல்கிப்பெருகி நச்சினை உற்பத்தி செய்கின்றன. ஊசி போடுவதால் ஏற்படும் புண்கள், நாய்க்கடியால் ஏற்படும் புண்கள், தடுப்பூசி போடுவதால் ஏற்படும் புண்கள், இரசாயன உப்புகளான கால்சியம் உப்புகள், லேக்டிக் அமிலம் போன்றவற்றால் உடலில் ஏற்படும் புண்களில் டெட்டனஸ் நோய் உண்டாக்கும் பாக்டீரியாக்கள் பல்கிப் பெருகி இந்நோய் ஏற்படுகின்றது
- புதிதாகப் பிறந்த கால்நடைகளின் தொப்புள் கொடி வழியாக இந்த பாக்டீரியா உள்ளே சென்று நோயினை ஏற்படுத்துகிறது
- மேய்ச்சலின் போதும், நிலத்தினை உழும் போதும், கால்நடைகளை ஓரிடத்திலிருந்து மற்றோரு இடத்திற்கு ஓட்டிச் செல்லும் போது ஏற்படும் புண்கள், பல் சொத்தை, அறுவை சிகிச்சையின் காரணமாக ஏற்படும் புண்கள், கூர்மையான பொருட்களால் கால்நடைகளின் மேல் ஏற்படும் புண்கள் நோய்க்கிருமியால் அசுத்தமடையும் போது டெட்டனஸ் நோய் எளிதில் பரவுகின்றது
நோய் அறிகுறிகள்
- ஆடுகள் தீவனம் எடுக்காமல், உடல் விரைப்பாகக் காணப்படுதல்
- முதலில் ஆடுகளின் நடமாட்டம் குறைவாக இருக்கும். பிறகு தசைகள் இறுக்கமாகி, ஆடுகள் நடப்பது கடினமாகும். தவிரவும் எப்போதும் போல் நடக்கமால், அசாதாரணமாக ஆடுகள் நடக்கும்
- கால்களில் விரைப்புத்தன்மை ஏற்பட்டு, கழுத்து மற்றும் முதுகுப்பகுதி நீண்டு, வளைந்தும் காணப்படுதல். இறுதியில் இறப்பு ஏற்படுதல்
- தசைகள் இறுக்கமாவதால், ஆடுகள் வாயினைத் திறக்க முடியாமல் இருத்தல். இந்த நிலைக்கு வாய்ப்பூட்டு என்று பெயர்
- மூன்றாம் கண்இமை சவ்வு கண்ணின் உட்பகுதியிலிருந்து வெளியே துருத்திக்கொண்டு காணப்படுதல், தலை ஒரு பக்கமாகத் திரும்பிக் காணப்படுதல், காதுகள் நேராகக் தூக்கிக்கொண்டு இருத்தல், காதுகளை அசைக்க முடியாமை, போன்ற அறிகுறிகளால் பாதிக்கப்பட்ட ஆடுகள் மரக்குதிரை போன்று காணப்படும்
- முகத்திலுள்ள தசைகள் இறுக்கமடைவதால், ஆடுகள் எப்போதும் அமைதியின்றி இருப்பது போன்று தோன்றுதல்
- அசை போடுவது பாதிக்கப்பட்டு, வாயிலிருந்து உமிழ்நீர் ஒழுது கொண்டு இருத்தல்
- அசையூண் வயிற்றில் தீவனத்தின் செரிமானத்திறன் பாதிக்கப்படுவதால், வயிறு உப்புசம் எற்படுதல்
- டெட்டனஸ் நோயினால் பாதிக்கப்பட்ட கால்நடைகள் சிறிய தூண்டுதலுக்கு அதிகமான உணர்ச்சிகளை வெளிப்படுத்தும். திடீரென சத்தம் ஏற்பட்டாலோ அல்லது நேரடியாகத் தொடர்பு ஏற்பட்டாலோ பாதிக்கப்பட்ட கால்நடைகளில் உடனடியாக வலிப்பு ஏற்படும்
பொதுவான நோய்த்தடுப்பு மற்றும் கட்டுப்படுத்தும் முறைகள்
- ஆடுகளின் முதல் நாள் வயதில் வாய்ப்பூட்டு நோய்க்கான தடுப்பூசி போட வேண்டும். இரண்டு தடுப்பூசிகளை நான்கு வார கால இடைவெளியில் ஆடுகளுக்குப் போட வேண்டும். பிறகு வருடம் ஒரு முறை தவறாமல் தடுப்பூசியினைப் போட்டுக் கொள்ளவேண்டும்
- டெட்டனஸ் பாக்டீரியாவின் செயலிழக்கப்பட்ட நச்சினை கால்நடைகளுக்கு ஊசி மூலம் செலுத்துவதால், நோய் ஏற்படாமல் தடுக்கலாம்
- சினையுற்றிருக்கும் செம்மறியாடுகளுக்கு குட்டி ஈனுவதற்கு சில வாரங்களுக்கு முன்பாக தடுப்பூசியினை அளிப்பதால், சீம்பால் வழியாக நோய் எதிர்ப்புத் திறன் குட்டிகளுக்கு சென்றடையும்
- சாதாரணமாக ஆடுகளின் உடல் மேல் ஏற்பட்டிருக்கும் புண்களை முறையாக சுத்தம் செய்து, அது வெளிப்புறக் காரணிகளால் அசுத்தமடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்
- ஆடுகள் குட்டிகள் ஈனும் போதும், குட்டிகள் ஈன்ற பிறகும் முறையான சுகாதார மேலாண்மை முறைகளைப் பின்பற்றுவதால் குட்டிகளுக்கு இந்நோய் வருவதைத் தடுக்கலாம்
- முள் வேலிகளுக்கு அருகில் கால்நடைகள் மேய்வதைத் தடுக்க வேண்டும்
- கொட்டகைகளில் தண்ணீரைத் தெளித்து தூசுகள் பறக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும்
- கருப்பை வெளித்தள்ளும், மற்றும் நஞ்சுக்கொடி உள்ளே தங்கிய ஆடுகளுக்கான முறையான மேலாண்மை முறைகள செயல்படுத்த வேண்டும்
- அறுவை சிகிச்சைக்கு முன்பாக அறுவை சிகிச்சை செய்யப் பயன்படும் பொருட்களை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவேண்டும்
- ஆடுகளின் உடலிலுள்ள ஆழமான புண்களைக் கிழித்து விட்டு, அவற்றில் சேர்ந்திருக்கும் திரவத்தை வடியுமாறு செய்யவேண்டும். மேலும் ஆடுகளை கூர்மையான பொருட்களுக்கு அருகில் செல்ல அனுமதிக்கக்கூடாது
- எந்த ஒரு பண்ணை மேலாண்மை முறைகளைப் பின்பற்றும் போதும், அறுவை சிகிச்சையின் போதும் முறையான சுகாதார முறைகளைப் பின்பற்ற வேண்டும்
- கிடாக்களுக்கு ஆண்மை நீக்கம் செய்யும் போது டெட்டனஸ் நோய் வராமல் இருக்க முறையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்
மேலே செல்க |