தொழிற்சாலை சார்ந்த வேளாண் காடுகள்
மூங்கில் சாகுபடி (Bambusa bamboo)
ஏழைகளின் மரம், பச்சை தங்கம் என்று அழைக்கப்படும் மூங்கில் வேகமாக வளரக்கூடிய புல் இனத்தை சேர்ந்த மரமாகும். நாள் ஒன்றுக்கு குறைந்தது 1 அடி முதல் 3 அடி வரை உயரம் வளரக்கூடிய மூங்கில் மற்ற மர வகைகளிலிருந்து வேறுபட்ட ஒரு தொடர் பயிராகும். முள், முள்ளில்லா மூங்கில்கள் என இருவகை மூங்கில் வகைகள் உள்ளன. மூங்கில் கூடை, ஏணி, தட்டி போன்ற பொருட்கள் செய்வதற்கு பயன்பட்டாலும் இன்றைய காலல கட்டத்தில் இவை பல மதிப்பூட்டப்பட்ட பொருளாக மாற்றி அதிக லாபம் ஈட்டும் பயிராக விளங்குகிறது. இன்றைய கால கட்டத்தில் மூங்கில் காகிதங்கள் செய்யும் தொழிற்சாலைகளுக்கும், மின் சக்தி தயாரிக்கவும் பயன்படுகிறது. மேலும் மூங்கில் கரி பல பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது.
மூங்கில் ரகங்கள்:
தமிழ்நாட்டில் இரண்டு மூங்கில் வகைகள் மிக அதிக அளவு பரப்பளவில் சாகுபடிச் செய்யப்படுகின்றன. அவை மிதமான வறண்ட பகுதிகளில் வளரும் கல் மூங்கில், ஈர செழிப்புள்ள பகுதியில் வளரும் முள்மூங்கில் (அல்லது) பொந்து மூங்கில் ஆகும். இவை தவிர இன்றைய கால கட்டத்தில் குறுகிய காலத்தில் வேகமாக வளர்ந்து, அதிக லாபம் தரக்கூடிய புதிய முள்ளில்லா மூங்கில் ரகங்களாகிய பாம்பூசா வல்காரிஸ் மற்றும் பாம்பூசா பல்கோவா போன்ற மூங்கில் அதிக அளவில் பயிரிடப்பட்டு வருகிறது.
மூங்கில் வளர்ப்புக்கு ஏற்ற மண் மற்றும் தட்பவெப்ப சூழ்நிலைகள்:
கார அமிலத்தன்மை 5.5 லிலிருந்து 8 வரையுள்ள உள்ள மண் வகைகளில் மூங்கில் வளர்க்கலாம். வடிகால் வசதி உள்ள மண் வகைகளில் மூங்கில் வளர்க்கலாம். வண்டல் மண், படுகை நிலங்கள், சரளைமண், கண்மாய் கரைமண், ஓடை மண், வண்டல் மண் கலந்த களிமண், மணற்பாங்கான நிலங்களில் மூங்கில் வளரும். காற்றோட்டம் இல்லாத நீண்ட நாள் நீர் தேங்கும் பகுதிகளில் மூங்கிலின் வளர்ச்சி பாதிக்கப்படும். மழை அளவு 800 மி.மீ முதல் 2500 மி.மீ வரை, வெப்ப அளவு 80 சென்டிகிரேடு முதல் 450 சென்டிகிரேடு வரை உள்ள பகுதிகள் மூங்கில் சாகுபடிக்கு ஏற்றவை. சூரிய ஒளி அதிகமாகவும் மற்றும் மழை நன்கு பெய்யும் இடங்களில் மூங்கிலின் வளர்ச்சி அதிகமாக இருக்கும். மழை குறைவாக இருக்கும் பகுதிகளில் நீர் பாசனவசதிகளைச் செய்வதன் மூலம் மூங்கில் வளர்க்கலாம். மூங்கில் மேட்டுப் பகுதிகளிலும், மழைச்சரிவுகளிலும் நன்கு வளரக்கூடியது.
மூங்கில் நாற்றுகள் வளர்க்கும் முறை:
மூங்கில் பூக்கும் மூங்கில், பூக்கா மூங்கில் என இரு வகைப்படும். பூக்கும் மூங்கில் வகைகளை விதை மூலம் நாற்றுக்கள் உருவாக்கி தரமான கன்றுகளைத் தேர்வு செய்து நடுதல் அவசியம். இவ்வகை மூங்கில் முள், கல் மூங்கில் இரகங்களாகும். முள்ளில்லா மூங்கில் இரகங்களாகிய பாம்பூசா பல்கோவா, பாம்பூசா வல்கரிஸ் ஆகிய வகைகள் பூக்காத் தன்மையுடையவை. இவற்றை விதையில்லா இனபெருக்கம் மூலம் பின்வரும் முறைகளைப் பின்பற்றி நாற்றுக்கள் உருவாக்கலாம்.
- மூங்கில் கழிகள் (Culm cuttings) மற்றும் பக்கக் (Branch cuttings) கிளைகளை வேர் ஊக்கிகள் மூலம் முளைக்க வைத்து நடுதல்.
- ஓராண்டு / இரண்டாண்டு வயதுடைய (Off sets) கழிகளை இரண்டு கணுக்கள் விட்டு வேருடன் வெட்டி எடுத்த நடுதல்.
- மூங்கிலில் முளைக்கும் கோமாளிகள் (Rhizome)
- திசு வளர்ப்பு முறையில் நாற்றுக்களை உருவாக்குதல்
மூங்கில் ஒரு நீண்ட கால பயிர் என்பதால் தரமான கன்றுகள் தேர்ந்தெடுத்து நடுதல் மூங்கில் தோப்பு அமைப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
மூங்கில் நடவு முறை:
நிலத்தை நன்கு உழுது, பருவ மழைக்கு முன் 1மீ x 1மீ x 1மீ அளவுள்ள குழிகளைத் தோண்டி அதனுள் மக்கியத் தொழு உரம் 10 கிலோ, டி.ஏ.பி. 50 கிராம், பொட்டாஷ் 25 கிராம், பாஸ்போபாக்டீரியா 25 கிராம், வாம் 25 கிராம் ஆகியவற்றை இட்டு கன்றுகளை நட வேண்டும். பிறகு கன்றுகளைச் சுற்றி முதலாண்டில் 1 மீ விட்டத்துக்கும், இரண்டாம் ஆண்டிலிருந்து கன்றுகளின் வளர்ச்சிக்கு ஏற்ப 2மீ – 3மீ விட்டத்துக்கும் பாத்திகள் அமைத்து நீர் பாய்ச்ச வேண்டும்.
|
இடைவெளி |
ஒரு ஏக்கருக்கு கன்றுகள் |
கல்மூங்கில் |
5மீ x 5மீ |
160 |
பொந்து மூங்கில் |
6மீ x 6மீ |
111 |
வல்காரிஸ் |
5மீ x 5மீ |
160 |
பல்கோவா |
5மீ x 5மீ |
160 |
நீர் மேலாண்மை:
நீர் பாய்ச்சும் இடங்களில் கோடைக்காலங்களில் குறைந்தது 10 நாட்களுக்கு ஒரு முறை 25 – 50 லி, நீர் ஒரு தூருக்குகொடுப்பின் நல்ல பயன் கிடைக்கும். அதிகமாக நீர் பாய்ச்சி தண்ணீர் தேங்கி நின்றால் புதிய கழிகளின் உற்பத்தி பாதிப்படையும், மழைக்காலங்களில் மூங்கில் தோப்பினுள் நீர் தேங்கா வண்ணம் வடிகால் செய்ய வேண்டும். இதனால் அதிக கழிகள் உற்பத்தியும் கழிகள் நல்ல வளர்ச்சியும் பெறும். சொட்டு நீர்பாசனம் மூலமாகவும் மூங்கில் வளர்க்கலாம். முதலாம் ஆண்டில் சொட்டு நீர் பாசனம் மூலமாகவும், இரண்டாம் ஆண்டிலிருந்து குழாய் மூலமாகவும் நீர் பாய்ச்ச வேண்டும்.
உரமேலாண்மை:
இரண்டாம் ஆண்டிலிருந்து கழிகளின் எண்ணிக்கை மற்றும் வளர்ச்சியைப் பொறுத்து தூர் ஒன்றுக்கு 15லிருந்து 20 கிலோ மக்கிய தொழு உரம் 100 லிருந்து 200 கிராம் டி.ஏ.பி, 50 லிருந்து 100 கிராம் பொட்டாஷ் ஆகியவற்றை துரைச்சுற்றி குழிகள் கடப்பாரையினால் இட்டு அதனுள் உரக்கலவையை இட்டு மூடி விடவேண்டும். இதனால் கழிகளின் எண்ணிக்கை மற்றும் பருமன் பெருகும். இதைத்தவிர மூங்கில் இலைகளை மக்க வைத்து துரைச் சுற்றி இடலாம். இதனால் நீர் சேமிப்பு மற்றும் மக்கிய இலைகளிலிருந்து பயிருக்கு ஊட்டச்சத்தும் கிடைக்கும்.
மூங்கில் தூர் பராமரிப்பு:
மூங்கில் தூர்களை சரிவர பராமரிக்க வேண்டும். மூள் உள்ள தட்டை மூங்கில் இரகங்களுக்கு இது ஒரு முக்கியப் பணியாகும். கழிகள் ஒன்று முதல் இரண்டாண்டு வளர்ந்த பிறகு பக்கக்கிளைகள், நேராக வளராத கழிகள் மற்றும் நல்ல வளர்ச்சியில்லாத கழிகளை அகற்றி விடவேண்டும். தூருக்கு உள்ளேயும் களைகள் வராமல் பாதுகாக்க வேண்டும். மண்ணரிப்பு ஏற்படும் பகுதிகளில் மூங்கில் தூர்களுக்கு அரை அடிக்கு மண்ணை அணைப்பது அதிக கழிகள் உருவாவதற்கு ஏதுவாக இருக்கும். முதலாம் ஆண்டில் ஒரு முறை அல்லது இருமுறை இடை உழவு செய்வதாலும் ஊடு பயிர்கள் பயிரிடுவதாலும் அதிக வளர்ச்சியும் கூடுதல் லாபத்தையும் பெறலாம்.
பூச்சி நோய் மேலாண்மை:
மூங்கிலைப் பெரும்பாலும் பூச்சிகளும் நோய்களும் தாக்குவதில்லை. ஒரு சில பகுதிகளில் கரையான், வெள்ளை புழுக்கள் தாக்கும் வாய்ப்புகள் உண்டு. இதற்கு தின்மென்ட் குருணை பூச்சிக் கொல்லி அல்லது குளோர்பைரிமாஸ் தெளித்தும் கட்டுப்படுத்தலாம். பூஞ்சான நோய்களாகிய நாற்று, கிழங்கு அழுகல் ஆகிய நோய்களுக்கு காப்பர் ஆக்சிகுளோரைடு 2.5 கிராம் அல்லது கார்பெண்டாசிம் 1 கிராம் 1 லிட்டர் நீரில் கலந்து வேர்கள் நனையும் படி ஊற்ற வேண்டும்.
அறுவடை:
நடவு செய்த நான்கு அல்லது ஐந்தாண்டுகளில் மூங்கில் பயிர் அறுவடைக்குத் தயாராகிவிடும். மூங்கில் தூர்களில் முதிர்ந்த கழிகள் தூருக்கு உள்ளேயும். முதிர்ச்சியடையாத கழிகள் தூருக்கு வெளியேயும் இருப்பதால், குதிரைக் குளம்பு வடிவிலோ அல்லது தலைகீழான ஆங்கில எழுத்து ^ வடிவிலோ வெட்டி எடுப்பதால் குறைந்த சேதாரம் மற்றும் குறைந்த செலவில் தூர்களிலிருந்து கழிகளை வெட்டி எடுக்கலாம். மூங்கில் அறுவடையை நான்காம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் அல்லது இரண்டாண்டுகளுக்கு ஒரு முறையும் மேற்கொள்ளலாம். ஒவ்வொரு அறுவடையின் போதும் முதிர்ந்த கழிகள் (3 ஆண்டுகள்) மூன்றில் ஒரு பங்குதான் வெட்டி எடுத்தல் வேண்டும்.
மகசூல்:
மூங்கில் இரகங்களைப் பராமரிப்புக்கு ஏற்ப ஒரு தூரிலிருந்து பத்து முதல் இருபத்தைந்து கழிகள் வெட்டலாம். சராசரியாக இரண்டாயிரத்திலிருந்து மூவாயிரம் கழிகள் ஓராண்டுக்கு கிடைக்கும்.
செலவு:
ஒரு ஏக்கருக்கு ரூபாய் 20,000 (ஐந்து வருடங்களுக்கு).
நிகர லாபம்:
கல் மூங்கில் : 40,000 – 50,000 (நான்காம் ஆண்டு முதல்)
பொந்து மூங்கில் : 35,000 – 40,000 (நான்காம் ஆண்டு முதல்)
பல்கோவா/வல்காரிஸ் : 60,000 – 75,000 (நான்காம் ஆண்டு முதல்)
தமிழ்நாட்டில் இயங்கும் தேசிய மூங்கில் இயக்கத்தில் சான்றிதழ் பெற்ற அரசு மற்றும் தனியார் நாற்றங்காலிலிருந்து தரமான நாற்றுகளைப் பெறலாம். இத்திட்டத்தில் ஹெக்டேர் ஒன்றுக்கு ரூபாய் 8,000, சொட்டு நீர் பாசனத்திற்கு ரூ. 20,000 மானியமாக வழங்கப்படுவதால் இந்த அரிய வாய்ப்பை உழவர்கள் பயன்படுத்திக் கொண்டு மூங்கில் சாகுபடியில் அதிக லாபம் பெறுவதுடன் உங்கள் பகுதிகளையும், நாட்டையும், உங்கள் வாழ்வையும் பசுமையாக்குங்கள்.
|