தோட்டக்கலை :: நிழ எழிலூட்டுதல் :: மலர் அமைப்பு முறை

     மலர்கள் விரைவில் கெடும் பொருளாக இருப்பதால், இவற்றை நீண்ட நாட்கள் சாதாரண நிலையில் வைத்திருக்க இயலாது. இதனைக் கருத்தில் கொண்டு, தற்போது உலர் மலர்கள் உற்பத்தியும் பெருமளவில் செய்யப்பட்டு வருகின்றது. மலர்கள் நன்கு உலர்த்தி பின்னர் அவற்றிற்குத் தேவையான வண்ணங்கள் கொடுத்து அலங்கார மலர்களாக்கி, நீண்ட காலத்திற்கு அழகு குறையாமல் சேமித்து வைக்க இயலும். நம் நாட்டிலிருந்து ஏற்றுமதியாகும் வணிக மலர்களில் 60 சதவிகிதம் உலர் மலர்களாகும். இவை உலர்த்தப்பட்ட செடி அல்லது மலர் பாகங்களாகவோ, அவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்ட பொருட்களாகவோ ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இராஜஸ்தான் மாநிலத்திலிருந்து பெருமளவில் உலர்ந்த ரோஜா இதழ்கள் ஏற்றுமதியாகின்றன. இந்திய உலர்மலர் தொழிலின் மொத்த மதிப்பு ரூ.150 கோடியாகும். இத்தொழில் உலர்த்தப்பட்ட மலர்கள் இலைகள், தண்டுகள், காய்கள் போன்றவற்றை கொண்டு சென்டு, வளையம் வாழ்த்து மடல், அலங்காரப் பொருட்கள் போன்ற பல்வேறு மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதனை சிறிய அளவில் குடிசைத் தொழிலாகவோ அல்லது தொழிற்சாலை தொழிலாகவோ செய்யலாம். உலர் மலர்களுக்கு உள்நாட்டிலும் தேவை அதிகரித்து வருகிறது.

     நவீன யுகத்தில், கொய்மலர்களால் ஆன பூங்கொத்து பாசத்திற்கும் பரஸ்பர நட்பிற்கும் இணைப்பு பாலமாகத் திகழ்கிறது. கொய்மலர்களின் தேவையானது நாளுக்கு நாள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மலர் உற்பத்தியில் தட்பவெப்பநிலை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இவற்றிலுள்ள வேறுபாடு காரணமாக மலர் உற்பத்தி விலை நிர்ணயம், விற்பனை ஆகியவற்றில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுகின்றன. பறித்தவுடன் விற்பனைக்கு வரும் கொய்மலர்களின் அளவும், விற்பனையும் நிலையற்றதாக இருக்கின்றது. மேலும் அவை போதுமான சேமிப்பு வசதிகள் இன்றி வாடியும் விடுகின்றன. இவற்றை ஈடு செய்யவும், மலர் உற்பத்தி தொழிலை நிலைப்படுத்தவும் விற்பனை நிலையை நிர்ணயிக்கவும் உலர் மலர்கள் உற்பத்தி பெருமளவில் உதவுகிறது.

     தமிழ்நாட்டின் காலநிலை, ஆண்டு முழுவதும் எல்லாவித மலர்கள் உற்பத்தி செய்வதற்கும் அதன் மூலம் உலர்மலர்கள் ஏற்றுமதியை பெருக்கவும் உதவுகிறது. தமிழ்நாட்டில் 8,300 எக்டர் பரப்பளவில் மலர் செடிகள் வளர்க்கப்படுகின்றன.
ஐரோப்பிய வகை மலர்கள் மட்டுமல்லாது தமிழ்நாட்டில் வளரும் சில உள்நாட்டு வகைகளும் உலர்மலர்கள் உற்பத்தியில் உபயோகப்படுத்தப்படுகின்றன. உலர்மலர்கள் உற்பத்தி முன்னதாக வேளாண் சார் குடிசைத் தொழிலாகப் பின்தங்கிய மாவட்டங்களிலும், மண், நீர்வளம் குறைந்த பகுதிகளிலும் வேலைவாய்ப்பு குறைந்த இடங்களிலும் செயல்படுத்தப்பட்டது. இத்தகைய இடங்களில் உலர்மலருக்கு ஏற்ற தாவர வகைகள் வளர்ப்பதன் மூலம் தொழில் நிறுவனங்கள் வளரவும், அதன் பயன்கள் மக்களின் வாழ்க்கைத்தரம் உயரவும் வழி ஏற்படுகிறது.

      உலர் மலர்கள் அலங்காரத்திற்கு தாவரத்தின் தண்டு இலை, காய், பூங்கொத்து, காய், கனி, விதைகள் மற்றும் புற்கள் கூட பயன்படுத்தப்படுகின்றன. இதற்காகப் பயன்படுத்தப்படும் மலர்கள் அதிகாலையில் அல்லது மாலை நேரங்களில் அறுவடை செய்யப்படுவதன் மூலம் பூக்கள் எளிதில் வாடுவதைத் தடுக்கலாம். மேலும் உலர்மலர் அலங்காரத்திற்கு மலர்களைத் தேர்வு செய்யும்பொழுது அம்மலர்கள் குறைந்த ஈரத்தன்மையுடனும், நார்த்தன்மையுடனும் இருத்தல் வேண்டும்.

உலர்மலர் உற்பத்திக்கேற்ற மலர்கள்:

 
வ.எண் தாவத்தின் பெயர் உலர வைக்கப்படும் பாகம் உலர வைக்கும் முறை
1. ஆஸ்பாரகஸ் இலை நுண் அரும்பு
2. கார்னேசன் மலர் உலர்தலை
3. கோழிக்கொண்டை மலர் காற்று
4. செவ்வந்தி மலர் உலர்த்தி
5. டேலியா மலர் உலர்த்தி
6. யூகலிப்டஸ் இலை கிளிசரின்
7. சோம்பு இலை கிளிசரின்
8. அத்தி இலை கிளிசரின்
9. கொய்லார்ழயா விதைக்கொத்து காற்று
10. கோல்டன் ராடு மலர் காற்று, நுண் அடுப்பு
காற்றில் உலர வைத்தல் :

மலர் கொத்துக்களை சிறு சிறு கொத்துக்களாகக் கட்டித் தொங்கவிட வேண்டும். பூக்களின் தன்மை, அறுவடை மற்றும் உலர வைக்கும் இடத்தின் ஈரப்பதம் இவற்றைப் பொறுத்து மலர்கள் உலர ஒரு வாரத்தில் இருந்து பல மாதங்கள் பிடிக்கும்.

நீரில் உலர வைத்தல்:

பூங்கொத்தின் தண்டினை 4-5 செ.மீ அளவு நீரில் நிறுத்தி வைப்பதன் மூலம் நீரானது உறிஞ்சப்பட்டடு பின்னர் ஆவியாக்கப்படுகிறது. இந்த முறையில் உலர வைக்க ஒரு வாரத்தில் இருந்து பத்து நாட்கள் தேவைப்படும். ஹட்ரான்ஜியா, ஜிப்சோபில்லா, கார்ஸ் பிளவர்ஸ், பைமூசா போன்றவை இந்த முறையைப் பின்பற்றலாம்.

உலர்த்திகள் மூலம் உலர வைத்தல்:

மலர்களின் ஈரப்பத அளவை குறைப்பதற்காக சிலிகாஜெல், போதாகஸ், ஆலம் மற்றும் மணல் ஆகியவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் ஜினியா, டெல்பீணியம், டேபோடில், டோலியா, கார்தேசன் மற்றும் செண்டுமல்லி போன்ற மலர்கள் எளிதில் உலர வைக்கலாம்.

நுண் அடுப்பு மூலம் உலர வைத்தல்:

கோல்டன்ராடு, மார்ஜோராம் மற்றும் சீடம் எளிதில் உலர வைத்து பயன்படுத்தலாம். சீடம் – 6 நிமிடம், கோல்டன் நாடு – 5 நிமிடம், ஜிப்சோமில்லா – 3 நிமிடம், கார்ன்பிளவர் – 5 நிமிடம், ரோஸ் – 2 நிமிடம் கால அளவு பயன்படுத்த வேண்டும்.

கிளிசரின் மூலம் உலர வைத்தல்:

பெரும்பாலும் இந்த முறையில் மலர்களைத் தவிர்த்து இலைகள் மற்றும் செடியின் மற்ற பாகங்கள் உலர வைக்கப்படுகின்றன.

அழுத்த முறையில் உலர வைத்தல்:

இது மிக சுலபமான முறையாகும். தாவரவியல் மாணவர்கள் பெரும்பாலும் இந்த முறையையே கையாளுகின்றனர். செய்தித்தாள், பழைய நோட்டும், புத்தகங்கள், நீர் உறிஞ்சும் தாள்கள் மற்றும் வடிகட்டும் பேப்பர் கொண்டு மலர்களை உலர வைக்கலாம்.

வர்ணம் பூசுதல்:

மேற்ச்சொன்ன முறைகளின் மூலம் உலர வைக்கப்பட்ட மலர்களுக்கு ஏற்ப நிறப்பொருத்தம் பார்த்து, மெல்லிய பிரஷ் மூலம் எனாமல், சுவரொட்டு வர்ணம், குழாய் வர்ணம் மற்றும் உள்துளை வர்ணம் கொண்டு பூச்சு கொடுக்கும் பொழுது உலர்மலர்கள் புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கிறது. இந்த உலர் மலர்கள் வெவ்வேறு அலங்காரப் பூச்செடிகளில் வைத்து அழகுபடுத்தி மலர் வியாபார மையங்களுக்கு அனுப்பி நல்ல விலை பெறலாம்.

உலர் மலர் வணிகத்திற்கான வழிகாட்டுதல்கள்:

உலர் மலர் தயாரித்தல் என்பது சிறந்ததோர் சுயதொழில் ஆகும். இத்தொழில் மூலம் தனிநபர் அதிக இலாபத்தை ஈட்ட இயலும். துவக்கத்தில் வீட்டுத் தோட்டத்தில் இருக்கும் உலர் மலர் தயாரிப்பிற்கான பொருட்களைப் பயன்படுத்தி வியாபாரத்தை ஆரம்பத்தில் சாலச் சிறந்தது. பின்னர் படிப்படியாக குத்தகை நிலத்தில் மலர்கள் பயிரிடுவதன் மூலமாகவோ அல்லது வெளிச் சந்தையில் இருந்து மலர்களை கொணர்ந்து உலர் மலர் தயாரித்து விற்பதன் மூலமாகவோ பொருளாதாரத்தை ஈட்டலாம். இன்றைய சந்தைகளில் உலர் மலர்களுக்கு 3 விதமான தேவை நிலவுகிறது. அவையாவன,
  • பூ அலங்காரம்
  • அழகுச் செடிகள் அலங்காரம்
  • பாட்பூரி
மேற்கண்ட தயாரிப்புகளை உலர்ந்த பூக்கள், கூம்புகள், இலைகள், இதழ்கள், பூ மொட்டுகள் மற்றும் இளஞ்செடிகள் ஆகியவற்றை கொண்டு உருவாக்கலாம். இந்திய சந்தையில் மலர்களின் ஏற்றுமதி 120 மில்லியன் ரூபாய் விட அதிகமாக உள்ளது. ஆண்டுதோறும் 500 விதமான உலர் மலர்கள் 20 வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அவற்றுள் வட அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளில் மிக முக்கியமானவையாகும். பாட்பூரி வகைக்கு உலக நாடுகளில் அதிக வரவேற்பு உள்ளது.

சிறு தொழிலாக உலர் மலர்கள் தயாரித்தல்
  • உலர் மலர்கள் தயாரிப்பதற்கு எளிதில் கிடைக்கக்கூடிய பொருட்களைச் சேகரித்து சிறிய அளவில் வணிகத்தைத் தொடங்கலாம்.
  • திருமணம் உள்ளிட்ட விழாக்களுக்கு மேடை அலங்காரம் மற்றும் உள்கட்டமைப்பு அலங்காரம் ஆகியவற்றை அவ்வப்போது மேற்கொள்ளலாம்.
  • சேமித்து வைக்கக்கூடிய மலர்களை வியாபாரிகளிடம் இருந்து பெற்று உலர் மலர்கள் தயாரித்து விற்பனை செய்யலாம். மேற்படி சிறிய அளவில் உலர் மலர் விற்பனைக்கான சந்தை வசதி, நுகர்வோர் விபரம், போக்குவரத்து வசதி, தொடர் முகவரிகள், இணையதளம் போன்ற தகவல்களை சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
உலர் மலர் தொழில் முனைவோர் சட்ட ஆலோசனை கவனத்திற்கு
  • தொழில் முனையும் ஆர்வம் – புதிய தொழில் தொடங்குவதற்கான முழு ஆர்வத்துடன் தொழிலில் ஈடுபட வேண்டும்.
  • தொழில் முனைவதற்கான திட்டம் – புதிய தொழில் தொடங்குவதற்கான வருடாந்திர திட்டம், இட வசதி ஈடுபொருள்கள் இருப்பு, தொழிலாளர்கள் வசதி, சந்தை வசதி, நுகர்வோர் வசதி போன்றவற்றை தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும்.
  • தொழில் முனைவதற்கான நிதிவசதி – தொழில் தொய்வு ஏற்படா வண்ணம் திட்டமிட்டபடி தொடர்ந்து நடத்துவதற்கான நிதி ஆதாரங்களைத் திரட்டிக் கொள்ளுதல் அவசியம்.
  • தொழில் தொடக்கம் – தொழில் தொடங்குவதற்கான அனைத்து வித சட்ட ரீதியான அனுமதிகளைப் பெற்றுக்கொள்ளுதல் அவசியம்.
  • தொழிலைத் துவக்குதல் – மேற்கண்ட வழிகாட்டுதலின் படி தொழிலை குறித்த நேரத்தில் தொடங்குதல் அவசியம். தொடக்கத்தில் சிறிய அளவில் உலர் மலர்களை தயாரித்து விற்பனை செய்ய வேண்டும். பின்னர் படிப்படியாக உள்ளூர் மற்றும் வெளிச்சந்தையில் உலர் மலர்களின் தேவைக்கு ஏற்ப தொழிலை விரிவுபடுத்த வேண்டும்.

சிறுதொழில் முனைவோருக்கான அரசு நிதிஉதவி:

பிரதம மந்திரியின் தொழில் தொட           ங்கும் திட்டம் (PMEGD). இத்திட்டம் சிறுதொழில் தொடங்குவதற்கான மத்திய அரசால் தொடங்கப்பட்ட கடனுதவி திட்டம் ஆகும். இத்திட்டத்தில் ரூபாய் 25 இலட்சம் மதிப்பீடு வரையிலான திட்டங்களுக்கு கடனுதவி பெற இயலும். பொதுப் பிரிவினர் மற்றும் சிறுபான்மையினருக்கு நகர பகுதிகளில் மற்றும் கிராம பகுதிகளில் தொழில் தொடங்க 15.25 சதவிகிதம் வரையிலான மானியம் வழங்கப்படுகிறது. அனைத்து வங்கிகளிலும் சுய தொழில் மையத்தை அணுகி உலர் மலர் தயாரிப்பதற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் கடன் வசதி குறித்த தகவல்களை பெற்றுக்கொள்ளலாம்.

நிறுவன மற்றும் வங்கிக்கடன் வசதி பெறுவதற்கான தகுதி
:

  • சிறப்பாகச் செயல்படும் குழுக்கள் மட்டுமே கடன் பெற வழிவகை செய்யப்படும்.
  • குழுக்கடன் (Group Loan) பெறவும் வழிவகை செய்யலாம். ஊரக வளர்ச்சித் துறையினர் எஸ்.ஜி.எஸ்.ஒய் (S.G.S.Y), தாட்கோ (TAHDCO) போன்ற திட்டங்கள் மூலம் கடன் பெறலாம்.
  • வங்கிக்கடன் வழங்கும் போது, இரண்டில் ஒரு பங்கு உறுப்பினர்களுக்கு மேல் கடன் வழங்கக் கூடாது. குழு கூட்டு தொழிலுக்கு (Group Activity) கடன் வழங்கும் போது இந்த விதியை தளர்த்தலாம்.
  • அனைத்து கடன்களும், குழு வழியாக உறுப்பினர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
  • கடன் தொகை வங்கியிலிருந்து எடுக்கப்படும் போது வங்கிக்கு குழுவின் தீர்மானம் கொடுக்கப்பட வேண்டும். அத்தீர்மானத்தில் கடனுக்குக் கட்ட வேண்டிய வட்டி தவணைக்காலம், தவனை எண்ணிக்கை ஆகியவை குறிப்பிடப்பட்டு அனைத்து உறுப்பினர்களும் கையெழுத்திட்டு இருக்க வேண்டும்.
  • கடன் பெறுவதன் மூலம் வாங்கப்படும் சொத்துக்களை, உறுப்பினர்கள் சரியான முறையில் பராமரிக்கிறார்களா என கண்காணிக்க வேண்டும்.
  • உறுப்பினர் வங்கிக்கடனை சரியான தவணையில் மாதாமாதம் திரும்ப செலுத்த குழு பொறுப்பு ஏற்க வேண்டும்.
  • வங்கியிலிருந்தோ   தொண்டு நிறுவனத்திடமிருந்தோ பெறும் கடன்கள் குறைந்த வட்டிக்கு பெறுவது அவசியம். அதிக வட்டிக்கு வெளிக் கடன்கள் வாங்குவதை தவிர்க்க வேண்டும்.

செய்யக் கூடாதவை

  • ஒரு காரணத்திற்கு கடன் பெற்று விட்டு, பிற உபயோகத்திற்கு செலவிடுவதை குழு அனுமதிக்கக்கூடாது.
  • ஒரு உறுப்பினர், ஏற்கனவே அரசு நல திட்டத்தில் வங்கிக்கடன் பெற்று, திருப்பிச் செலுத்தாமல், கடன் நிலுவையில் இருந்தால், அத்தகைய உறுப்பினரை புதிய கடனுக்கு பரிந்துரை செய்யக் கூடாது.

கடன் பெற குறைந்த பட்ச தகுதி – முதல் கட்ட மதிப்பீடு

  • குழு உறுப்பினர்கள் எண்ணிக்கை 12-லிருந்து 20-க்குள் இருக்க வேண்டும்.
  • குழு ஆறு மாத காலம் தவறாமல் ஒவ்வொரு மாதமும் ஒரு முறையாவது கூடியிருக்க வேண்டும்.
  • மாதம் தவறாமல் சேமிப்பு செய்திருக்க வேண்டும். வாரச் சேமிப்பு செய்தால் நலம்.
  • எல்லா உறுப்பினர்களும் குழு நடவடிக்கைகளும் விவரங்களும் வெளியில் தெரியும் முறையில் ஒளிவு மறைவின்றி செயல்படுவதோடு அனைத்து உறுப்பினர்களின் முழு பங்கேற்பு இருக்க வேண்டும்.
  • ஒவ்வொரு கூட்டத்திற்கும் 75 சதவீதம் குறையாது உறுப்பினர்கள் வருகை தந்திருக்க வேண்டும்.
  • இதுவரை பெற்ற வங்கி கடன்களை முழுமையாகத் திரும்ப கட்டியிருக்க வேண்டும். இது முதல் கடன் பெறும் புதிய குழுவிற்கு பொருந்தாது.
  • 50 சதவீத குறையாத உறுப்பினர்கள் சங்கக் கடன்கள் பெற்றிருக்க வேண்டும்.
  • கடன்கள் திரும்ப செலுத்துதல் 90 சதவீதம் குறையாது இருத்தல் வேண்டும்.
  • கணக்கு புத்தகங்கள் நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு, அனைத்து உறுப்பினர்களும் தெரிந்து கொள்ளும் வகையில் ஒவ்வொரு கூட்டத்திலும் கணக்குகளை வாசிக்கும் முறை பின்பற்றியிருக்க வேண்டும்.
  • குழு விதிமுறைகள் தெளிவாக வடிவமைக்கப்பட்டு தீர்மானமாக இயற்றப்பட்டு முறையாக செயல்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.

கடன் வழங்குவதற்கான குழு தரம்பிர்த்தல் – இரண்டாம் கட்டம் (Credit Rating)

குழு தரம்பிரித்தல் மூலம் குழுவின் பலத்தையும், பலவீனத்தையும் அறிந்து கொள்ளலாம். பலவீனத்தை அறிந்து கொள்வதால், குழு உறுப்பினர்கள் குழுவை மேம்படுத்த சரியான நடவடிக்கை எடுக்க முடியும். குழுக்கள் ஒவ்வொரு மாதமும் தாங்களே குழு தரத்தை அளவிட்டு பார்ப்பது அவசியம். குழுக்களை மூன்று விதமாக பிரிக்கலாம்.
வங்கிகள் கடன் வழங்குவதற்கு முன் குழுக்களை தரம் பிரித்து, சிறந்த குழுக்களுக்கு மட்டும் கடன் வழங்குகின்றன. வங்கிக் கடன் பெறுவதற்கு இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள 1 முதல் 14 வரை காரணிகள் கணக்கில் எடுத்துக்கொண்டு ஆகமொத்தம் 100 மதிப்பெண்களில் குழு பெறும் மதிப்பெண்ணின் அடிப்படையில் வங்கி மேலாளார் கீழ்க்கண்டவாறு நடவடிக்கையெடுப்பார்.

Last Update : November 2014