||| | | | | |
தோட்டக்கலை :: பசுமைக்குடில் தொழில்நுட்பம்

பசுமைக்கூடச் சாகுபடி

  1. பசுமைக்கூடத்தின் வடிவங்கள் மற்றும் வகைபாடுகள்
  2. பசுமைக்கூடம் / பாலிதீன் கூடத்தின் திசை அமைவு
  3. பசுமைக்கூடத்தின் அங்கங்கள்
  4. பசுமைக்கூடச் சாகுபடியில் இடம்பெறும் தாவர வளர்ப்பு கட்டமைப்புகள் / கொள்கலங்கள்
  5. பசுமைக்கூடச் சாகுபடியில் சுற்றுப்புறக் காரணிகளின் ஆதிக்கம்
  6. ஊடக் தயாரிப்பு மற்றும் புகையூட்டம்
  7. பசுமைக்கூடச் சாகுபடியில் பின்பற்றப்படும் சொட்டுநீர்ப்பாசனம் மற்றும்  சொட்டுநீர் உரப்பாசன முறைகள்
  8. பசுமை/பாலிதீன்கூடக் கட்டுமானத்திற்கான விலை மதிப்பீடு
  9. பசுமைக்கூடச் சாகுபடியில் ஏற்படும் சிக்கல்களுக்கான நிர்வாக முறைகள்
  10. பசுமைக்கூட உற்பத்திக்கான மேம்பட்ட தோட்டக்கலைச் செயல்பாடுகள்
  11. பசுமைக்கூடத்தில் சாகுபடி செய்யப்படும் கொய் மலர் பயிர்களில் தோன்றும் உயிர் வினையியல் குறைபாடுகள்
  12. கொய் மலர்களில் அறுவடைக்குப்பின் கையாளும் செயற்பாடுகள்

01. பசுமைக்கூடத்தின் வடிவங்கள் மற்றும் வகைபாடுகள்

பாதுகாப்பான சூழ்நிலையில் பயிர்களை வளர்ப்பதற்காக உப்பிப்பெருத்த உள்ளுறைச் சட்டங்களின் மேல் ஒளிபுகும் இயல்புள்ள பொருளை மூடாக்காகப் பயன்படுத்தி உருவாக்கப்படும் கட்டமைப்புகளே பசுமைக்கூடங்களாகும்.  வருடம் முழுவதும் அல்லது தேவைக்கேற்ற பயிர் உற்பத்திக்கு வித்திடும் ஏதுவான நுட்ப காலநிலையினை உருவாக்குவதற்கே பசுமைக்கூடம் போன்ற பாதுகாக்கப்பட்ட சூழ்நிலையில் பயிர் சாகுபடி செய்யும் நுட்பம் கண்டறியப்பட்டுள்ளது.  இத்தொழில்நுட்பமானது வெளிப்பரப்பில் உற்பத்திக்கு ஏதுவற்ற ஆபரணச் செடிகளின் பருவம் மாறிய உற்பத்திக்கும் குளிர்ப்பகுதியில் சாகுபடி செய்யப்படும் அதிக மதிப்புடைய உணவுப் பயிர்களின் உற்பத்தியிலும் பங்களிக்கின்றது.  முதன்மையாக சுற்றுப்புறத்திற்கு தேவையான வெப்பத்தை அளித்து கடுங்குளிர்ச்சி நிலையானது தவிர்க்கப்படுகின்றது.  மேலும் வெப்பம், வெளிச்சம், கரியமிலவாயு அளவு, காற்றின் ஈரப்பதம், நீர்த் தேவை, பயிர் சத்துக்களின் தேவை மற்றும் பூச்சிக் கட்டுப்பாடு போன்றவையும் கட்டுப்படுத்தப்படுகின்றது.

உபயோகத்திற்கு ஏதுவான மற்றும் விலைக்கேற்ற பசுமைக்கூடங்களின் வகைப்பாடு

அ. குறைந்த மதிப்பு அல்லது குறைந்த நுட்ப பசுமைக்கூடம்

குறைந்த மதிப்பு பசுமைக்கூடமானது உள்ளூரில் கிடைக்கும் மூங்கில், மரக்கட்டை போன்றவற்றைக் கொண்டு சாதாரணமாக கட்டமைக்கப்படுவதாகும்.  மெல்லிய புறஊதா சவ்வுகள் மூடாக்கு பொருளாகப் பயன்படுகின்றது.  இதில் உயர் நுட்ப பசுமைக்கூடங்களில் உள்ளது போல் சுற்றுப்புற அளவுப் பண்புகளை கட்டுப்படுத்துவதற்கான சிறப்பு கருவிகள் ஏதுமில்லை.  எனினும் வெப்பம் மற்றும் காற்றின் ஈரப்பதம் ஆகியவற்றை குறைக்கவும் அதிகப்படுத்துவதற்கும் எளிய நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன.  மேலும் வலைகள் போன்ற நிழல் தரும் பொருட்களைப் பயன்படுத்தி வெளிச்சத்தின் அடர்வினைக் கூட குறைக்கலாம். கோடைக்காலத்தில் பக்கத் தடுப்புகளை திறந்து விடுவதன் மூலம் வெப்பம் குறைக்கப்படுகின்றது.  பயிர் சாகுபடியின்போது இத்தகைய அமைப்புகள் மழைக் காப்பிடமாகத் திகழ்கின்றது.  பசுமைக்கூடத்தின் அனைத்து பக்கமும் பாலித்தீன் சவ்வினால் மூடப்பட்டிருந்தால் உட்புற வெப்பநிலை அதிகரித்து விடும்.  இத்தகைய பசுமைக்கூடங்கள் குளிர் கால நிலை மண்டலத்திற்கு ஏற்ற வகையாகும்.

ஆ. மித நுட்ப பசுமைக்கூடம்

பசுமைக்கூட உபயோகிப்பாளர்கள் குறைந்த முதலீட்டிற்கு வித்திடுகின்ற உடலால் இயக்கப்படுகின்ற அல்லது பகுதி தானியக்க கட்டுப்பாடு அமைப்புகளையே விரும்புகின்றனர்.  இவ்வகை பசுமைக்கூடங்கள் துத்தநாகம் பூசிய இரும்புக் குழாய்களைக் கொண்டு அமைக்கப்படுகின்றன. மேல் மூடாக்கானது திருகாணி மூலம் கட்டமைப்புடன் இணைக்கப்படுகின்றது.  கட்டமைப்பானது காற்றின் பாதிப்பினை தாங்கிக்கொள்வதற்காக நிலத்தில் திடமாகப் பொருத்தப்படுகின்றது.  வெப்பச்சீர் நிலைக் கருவியுடன் வெளியேற்றும் விசிறியும் பயன்படுத்தப்பட்டு தட்பவெப்பநிலைக் கட்டுப்படுத்தப்படுகின்றது.  ஏதுவான காற்றின் ஈரப்பத்தினைப் பசுமைக்கூடத்தில் பராமரிப்பதற்கு ஆவியாக்கிக் குளிர் தண்டுகள் மற்றும் மென்பனி அமைவு முறைகள் பொருத்தப்படுகின்றன. இம்முறைகள் பகுதி தானியக்க கட்டுப்பாட்டினைக் கொண்டுள்ளதால் மிகுந்த ஈடுபாடும் கவனமும் தேவை. மேலும் பயிர்காலம் முழுவதும் ஒரே சீரான சுற்றுப்புறச் சூழ்நிலையை பராமரிக்கவும் மிகுந்த சிரமம் ஏற்படுகின்றது.  இப்பசுமைக்கூடங்கள் வறண்ட மற்றும் கலப்பு காலநிலை மண்டலங்களுக்கு ஏற்ற வகையாகும்.

இ. உயர் நுட்ப பசுமைக்கூடம்

மிதநுட்ப பசுமைக்கூடத்தில் உள்ள ஒரு சில இன்னல்களிலிருந்து மீள்வதற்கும் அனைத்து கருவிகளும் தானியக்க முறையில் இயங்கி சுற்றுப்புற அளவுப்பண்புகளைக் கட்டுப்படுத்தவும் உயர்நுட்ப பசுமைக்கூடம் அமைக்கப்படுகின்றது.

01.

விசிறி  மற்றும் தண்டு  ஆகியவை இல்லாத குறைந்த மதிப்பு பசுமைக்கூடம்

:

ரூ.300 முதல்  500 வரை / சதுரம்

02.

தானியக்கி வசதியில்லாத விசிறி மற்றும் தண்டுடன் கூடிய மித மதிப்பு பசுமைக்கூடம்

:

ரூ.800 முதல் 1100 வரை / சதுரம்

03.

முழுமையான தானியக்கி கட்டுப்பாட்டு முறையினைக் கொண்ட அதிக மதிப்புடைய பசுமைக்கூடம்

:

ரூ.2000 முதல் 3500 வரை / சதுரம்

பிற வகைப்பாடுகள்

பசுமைக்கூடமானது கட்டமைப்பு வகை, மூடாக்கு வகை, நீட்டங்களின் எண்ணிக்கை, சுற்றுப்புறக் கட்டுப்பாடு ஆகியவற்றைப் பொறுத்தும் பலவாறு வகைப்படுத்தப்படுகின்றது.  இத்தகைய வகைகள் பின்வருமாறு:

கட்டமைப்பு வகையினைப் பொறுத்த வகைப்பாடு

அ. க்யோன்செட் வகை (Quonset type)
ஆ. வளைவான மேற்கூரை வகை (Curved roof type)  
இ. கேபில் மேற்கூரைவகை (Gable roof type)

மூடாக்கினைப் பொறுத்த வகைப்பாடு

அ. கண்ணாடி மூடாக்கு
ஆ. நாரிழைக் கண்ணாடி வலுçட்டிய பாலிதீன் மூடாக்கு
i) சமபரப்பு தாள்
ii) நெளிவான தாள்

இ பாலிதீன் சவ்வு
i) புறஊதா நிலைப்படுத்திய குறைந்த அடர்வு பாலி எத்திலின்
ii) சில்பாலின் (Silpaulin)

நீட்டங்களின் எண்ணிக்கையைப் பொறுத்த வகைப்பாடு

அ. இயல்பான நிலை அல்லது ஒற்றை நீட்டம் (Free standing or single span)
ஆ. பல நீட்டம் அல்லது வரப்பும் வாய்க்காலும் அல்லது வடிநீர்க்கால் இணைக்கப்பட்டது (Multispan or ridge and furrow or gutter connected)

சுற்றுப்புற கட்டுப்பாட பொறுத்த வகைப்பாடு
அ. இயற்கைக் காற்றோட்டம் (Naturally ventilated)
ஆ. உயிர்ப்பற்ற காற்றோட்டம் (Passive ventilation)

பாலிதீன் கூடம்

திறந்த வயல்வெளிகளில் வளரும் பயிர்கள் பல சுற்றுப்புற இன்னல்கள் மற்றும் பூச்சி மற்றும் நோய்களின் தாக்குதல்களுக்கு உட்படுகின்றன. ஆனால் பாலிதீன் கூடாமானது ஒரு நிலையான சுற்றுப்புறத்தினை அளிக்கின்றது. பாலிதீன் கூடமானது இரண்டு வகைப்படுகின்றது.

அ. இயற்கைக் காற்றோட்டமுள்ள பாலிதீன் கூடம்

போதுமான காற்றோட்டம் மற்றும் நீர்த்தி வலைத் தெளிப்பான் முறையைத் தவிர,     தட்ப வெப்ப நிலை பிறழ்ச்சி மற்றும் பிற இயற்கை செயலிகளால் ஏற்படும் பாதிப்பினைத் தடுப்பதற்கு வேறு எவ்வித சுற்றுப்புற கட்டுப்பாடு முறைகளும் இப்பாலிதீன் கூடத்தில் அமையப்பெறவில்லை.

ஆ. சுற்றுப்புறநிலை கட்டுப்பாடுடைய பாலிதீன் கூடம்

வெளிச்சம், தட்ப வெப்ப நிலை, காற்றின் ஈரப்பதம், கரியமிலவாயு அளவு மற்றும் வேர்வளர்ச்சிக்கான ஊடகத்தின் இயல்பு ஆகியவற்றை கட்டுப்படுத்துவதன் மூலம் பயிர் வளர்ச்சிப் பருவத்தினை நீட்டிப்பதற்கும் பருவமில்லா காலத்தின் உற்பத்திக்கும் இப்பாலிதீன் கூடம் உதவுகின்றது.

நிழற்கூடம்

நிழற்கூடமானது வெப்பமான கால நிலைகளிலும் கோடைக் காலங்களிலும் பயிர் செய்வதற்கு பயன்படுகின்றது. நாற்றங்காலர் கோடைக்காலத்தில் ஹைட்ரான்றƒியா மற்றும் அஜேலியா போன்ற ஆபரணச் செடிகளை இக்கூடங்களில் வளர்ப்பர்.  இதைத் தவிர ஆர்கிட் போன்ற மலர் பயிர்களும் நிழற் கூடங்களில் சாகுபடி செய்யப்படுகின்றன. நிழல்கூடங்கள் பெரும்பாலும் கொம்புகளின் துணையுடனே கட்டமைக்கப்பட்டு மென்மரப்பட்டிகை அல்லது பாலிப்புரப்பிலீன் நிழல் போர்வையினை கொண்டு மேற்போர்வையிடப்படுகின்றது.  வெவ்வேறு காற்றோட்ட சதவிகிதங்களைக் கொண்ட பாலிப்புரப்பிலீன் நிழல்வலைகள் உபயோகப்படுத்தப்படுகின்றன. கருப்பு, பச்சை மற்றும் வெள்ளை நிறமுடைய வலைகள் பயன்படுத்தப்பட்டாலும் வெப்பத்தினை கூடத்தின் வெளிப்பகுதியிலேயே பிடித்து நிறுத்தும் கருப்பு நிற வலைகளே பெரும்பாலும் விரும்பப்படுகின்றது.

02. பசுமைக்கூடம் / பாலிதீன்  கூடத்தின் திசை அமைவு

பசுமைக்கூடத்தின் வடிவமானது பயிர் வளர்ச்சிக்கேற்ற பாதுகாப்பான சுற்றுப்புறத்தினை அளிப்பதற்கு வழிவகுக்கும் சிறந்த தொழில்நுட்பத்துடன் அமைக்கப்படவேண்டும்.  பயிர் மற்றும் பயிர் சார்ந்த பொருட்கள் உற்பத்திக்கும் திறந்த வெளியில் சாத்தியமில்லாத தரமான உற்பத்திக்கும் பசுமைக்கூடம் உதவுகின்றது. திறந்த வெளியில் செய்யப்படும் பயிர் சாகுபடியை விட இப்பசுமைக்கூடங்களில் செய்யப்படும் முறைக்கு அதிக முதலீடு தேவைப்படுவதால், இதனால் கிடைக்கப்பெறும் இலாபமும் அதிகமாக இருக்கவேண்டும். பசுமைக்கூட கட்டமைப்பானது பயிர் வளர்ச்சிக்குத் தேவையான இயற்கை ஒளிபுகும் இயல்புள்ள மூடாக்குப் போர்வையினைக் கொண்டிருக்க வேண்டும். செழிப்பான பயிர் வளர்ச்சிக்கு பசுமைக்கூடத்தின் கட்டமைவு, மூடாக்குப் போர்வை மற்றும் வெப்பநிலை கட்டுப்பாட்டு கருவிகள் ஆகியன சரியான முறையில் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

இந்திய சூழ்நிலைக்கு எளிமையான முறையில் குறைந்த செலவுடன் அமைக்கப்படும் க்யொன்செட் வகை, பல அடுக்கு (multispan) பசுமைக்கூடமே சிறந்து விளங்குகின்றது. இயற்கை காற்றோட்ட வகை மற்றும் விசிறி மற்றும் தண்டு வகை பசுமைக்கூடங்களுக்கு 200 மைக்ரான் தடிப்புடைய ஒற்றைச் சவ்வு புறஊதா எதிர்ப்புத்திறன் கொண்ட குறைந்த அடர்வு பாலிஎத்திலின் போர்வைகளே போதுமானதாக திகழ்கின்றது.

சுருங்கிப்போகுதல் மற்றும் கிழிந்து போகுதல் போன்ற பிரச்சனைகளைத் தவிர்ப்பதற்கு இம்மூடாக்குப் போர்வைகள் மிகவும் உறுதியாக கட்டமைப்புடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு இணைப்பதற்கு ஆணி மற்றும் திருகாணிகளை பயன்படுத்தாதிருந்தால் கிழிதலுக்கான வாய்ப்பு தவிர்க்கப்படுகின்றது.  இதற்கு பதிலாக ‘T’ வடிவ பூட்டு (lock) அல்லது ‘ட’ வடிவ பூட்டினைப் பயன்படுத்தி இணைக்கலாம்.  போர்வையை மாற்றுவரதும் இதனால் சுலபமாகின்றது.
வடிவம்

கட்டமைப்பானது பல்வேறு விதமான கீழ்வரும் சுமைகளைத் தாங்கவேண்டியுள்ளதால் அதற்குத் தகுந்தவாறு வடிவமைக்க வேண்டும்.

அ. உயிரற்ற சுமை

அனைத்து கட்டுமான சுமைகள், போர்வை, வெப்பம் மற்றும் குளிரூட்டும் கருவி, தண்ணீர் குழாய்கள் மற்றும் நிரந்தரமாக பொறுத்தப்பட்டுள்ள அனைத்து கருவிகளும்.

ஆ. உயிருள்ள சுமை

உபயோகிப்பால் ஏற்படும் சுமை (தொங்கு தொட்டிகள், அலமாரிகள் மற்றும் மேற்கூரைமேல் பணிபுரிந்து கொண்டிருக்கும் வேலையாட்களின் சுமை உட்பட)

பசுமைக்கூடத்தின் ஒரு சதுர அடி அதிகபட்சம் 15 கிலோ எடையை தாங்கும் சக்தி கொண்டதாக அமைக்கப்படவேண்டும். மேற்கூரையின் ஒவ்வொரு பகுதியும் 45 கிலோ எடையை தாங்கக் கூடியதாக அமைக்கவேண்டும்.
இ. காற்று சுமை

ஒரு மணிக்கு 110 கி.மீ என்ற வேகத்தில் வீசும் காற்றின் வேகத்தையும் குறைந்தபட்சம் ஒரு சதுர அடிக்கு 50 கிலோ எடையை தாங்கும் சக்தியைக் கொண்டதாகவும் பசுமைக்கூடம் கட்டமைக்கப்படவேண்டும்.

ஈ. பனிச்சுமை

குறிப்பிட்ட இடத்தின் சராசரி பனிப்பொழிவைப் பொறுத்து கணக்கிடவேண்டும்.

பசுமைக்கூடமானது உயிரற்ற சுமை மற்றும் உயிருள்ள சுமை அல்லது உயிரற்ற சுமை மற்றும் காற்று சுமை மற்றும் பாதியளவு உயிருள்ள சுமை ஆகியவற்றை தாங்கும் சக்தியைக் கொண்டிருக்கவேண்டும்.

பசுமைக்கூடத்தில் துத்தநாகம் பூசிய இரும்புக் குழாய்களை 60 செ.மீ x 60 செ.மீ x 60 செ.மீ என்ற இடைவெளியில் பயன்படுத்தவேண்டும்.

செங்குத்து கம்புகளை சுமார் 60 செ.மீ உயரத்திற்கு 5 செ.மீ அடர்த்தியுள்ள பிசிசி குழாயினைக் கொண்டு உள்ளடக்க வேண்டும். இதனால் கம்புகள் துருப்பிடிக்காமல் காக்கப்படுகின்றன.

திசை அமைவு

காற்றடிக்கும் திசை, இடத்தின் குறுக்கையளவு மற்றும் வெப்பத்தைக் கட்டுப்படுத்தும் வகை ஆகியவற்றைப் பொறுத்தே பசுமைக்கூடத்தின் திசையமைவு இருக்கவேண்டும்.  குறுக்கையளவு 40 டிகிரி வடக்கிற்கும் அதிகமாக இருப்பின் ஒற்றை பசுமைக்கூடங்கள் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி இருக்குமாறு அமைக்கப்பட வேண்டும். குறுக்கையளவானது 40 டிகிரி வடக்கிற்கும் குறைவாக இருப்பின் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி அமைக்கப்படவேண்டும்.  ஒரு பசுமைக்கூடத்தின் நிழல் இன்னொரு பசுமைக்கூடத்தின் மேல் விழாமலிருக்க கிழக்கிலிருந்து மேற்குதிசை நோக்கியிருக்குமாறு அமைக்கவேண்டும். எனினும், காற்றடிக்கும் திசை மற்றும் குறுக்கையளவு ஆகியவற்றையும் கருத்தில் கொள்ளவேண்டும்.

காற்றின் பாதிப்புகள்

இயற்கை காற்றோட்ட வசதி கொண்ட பசுமைக்கூடத்தைப் பொறுத்தவரை இயற்கை காற்றடிக்கும் திசையின் பலன்களை உபயோகித்து கொள்ளவேண்டும்.  குறிப்பாகக் கோடைக்காலத்தில் வீசும் காற்றின் திசையிலிருந்து பசுமைக்கூடத்தின் அதிகபட்ச நீளம் செங்குத்தாக அமைந்திருக்கவேண்டும். விசிறி மற்றும் திண்டு வகை பசுமைக்கூடத்தில், இயற்கை காற்றின் திசையானது விசிறியிலிருந்து வரும் காற்றின் திசையிலேயே இருக்கவேண்டும்.

பசுமைக்கூடத்தின் அளவு

இயற்கை காற்றோட்ட வகை பசுமைக்கூடமானது 50 மீ x 50 மீ அளவிற்கும் அதிகமாக இருத்தல் கூடாது.  பசுமைக்கூடங்கள் மிகவும் பெரிதாக அமைக்கப்பட்டால் குறைவான காற்றோட்டம் ஏற்பட்டு அதனால் உட்புற வெப்பநிலை அதிகரித்துவிடும்.  ஆவியாக்குதலால் குளிரூட்டும் பசுமைக்கூட அளவானது 60 மீட்டருக்கும் அதிகமாக இருத்தல் கூடாது.

பசுமைக்கூடங்களுக்கான இடைவெளி

இயற்கை காற்றோட்ட பசுமைக்கூடங்களுக்கு இடையே 10 முதல் 15 மீ இடைவெளி இருக்கவேண்டும். இதன் மூலம் ஒரு பசுமைக்கூடத்திலிருந்து வெளியில் தள்ளப்படும் வெப்ப காற்று அடுத்த பசுமைக்கூடத்திற்குள் புகாதவாறு தடுக்கப்படுகின்றது.

பசுமைக்கூடத்தின் உயரம்

50 மீ x 50 மீ அளவுடைய பசுமைக்கூடத்தின் உயரம் 5 மீ வரை இருக்கலாம்.  பசுமைக்கூடத்தின் அளவு குறையும்போது உயரத்தினையும் அதற்கேற்றவாறு குறைத்துக் கொள்ளலாம்.  உயரம் அதிகரிக்கும்போது கட்டமைப்பிற்கும் மூடாக்கிற்கும் காற்றின் சுமை அதிகரிக்கின்றது. பக்கவாட்டில் 2 மீ அகலத்திற்கும் மேற்கூரையிலிருந்து 1மீ அகலத்திற்கும் காற்றோட்டம் இருக்கலாம்.

கட்டமைப்பு வடிவம்

பசுமைக்கூடத்தின் வடிவம் தேவையான பாதுகாப்பு, பயன், கட்டமைப்பு ஒருங்கிணைப்பு கொண்டு உபயோகத்திற்கு ஏதுவானதாகவும் இருக்கவேண்டும்.  கட்டமைப்பானது தேவைக்கேற்ற அனைத்து உயிரற்ற, உயிருள்ள, காற்று மற்றும் பனிச் சுமைகளை தாங்கவல்லதாக இருக்கவேண்டும். அடித்தளம், தூண்கள் மற்றும் கிளைக்கம்பிகளும் இதற்கேற்றவாறு அமைக்கப்பட்டிருக்கவேண்டும். தேசிய பசுமைக்கூட உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் தரநிர்ணயம் (1994) கூறியுள்ளபடி பசுமைக்கூடங்களை வடிவமைக்கவேண்டும்.

03. பசுமைக்கூடத்தின் அங்கங்கள்

மேற்கூரை: பசுமைக்கூடத்தின் ஒளிபுகும் இயல்புள்ள மூடாக்கு
பக்கச்சுவர்: பசுமைக்கூடத்தின் ஒளிபுகும் இயல்புள்ள பக்கச்சுவர்
மூடாக்கு:    ஒளிபுகும் இயல்புள்ள மூடாக்கு பக்கச்சுவரின் மேலும் மேற்கூரையின் மேலும் போர்த்தப்படும்
இணக்கமற்ற மூடாக்குப் போர்வை: வடிவமைப்பில் ஏதேனும் உருமாற்றம் ஏற்படின் இவ்வகை மூடாக்குப் போர்வை உடைந்துவிடும் அளவிற்கு திண்மத்துடன் இருக்கும். எ.கா.கண்ணாடி
இளக்கமான மூடாக்குப் போர்வை:  வடிவமைப்பில் ஏதேனும் உருமாற்றம் ஏற்படின் இவ்வகை மூடாக்குப் போர்வைக்கு எவ்வித சேதாரமும் ஏற்படாது எ.கா. நெகிழிச்சுருள்
வழநீர்கால்:        மழைநீர் மற்றும் பனிப்பொழிவினை சேகரித்து வடிப்பது, இரண்டு அடுக்குகளுக்கு இடையே உள்ள உயரமான இடத்தில் பொருத்தப்பட்டிருக்கும்.
தூண்: பசுமைக்கூட கட்டமைப்பைத் தாங்கக் கூடிய செங்குத்தான தூண்கள்
இணைப்பு (Purlin): மூடாக்கிற்கு உறுதுணையாக இருக்கும் தகடுகளை தூண்களுடன் இணைப்பது.
மேல் உச்சி:         கூரையின் மேல் உச்சி
உத்திரம்: தூண்களை வடிநீர்காலின் உயரம் வரை இணைக்கும்
ப்ரேசிங்குகள் (Bracings): காற்றின் வேகத்திலிருந்து காட்டமைப்பை பாதுகாப்பது
மேல் வளைவு: மூடாக்கு பொருட்களுக்கு உறுதுணையாக இருப்பது
அடித்தள குழாய்: அடித்தளத்தையும் கட்டமைப்பையும் இணைக்கும் குழாய்
ஸ்பேன் அகலம்: பல அடுக்கு பசுமைக்கூடங்களில் ஒரு நீர்வடிகாலின் மையப்பகுதியிலிருந்து அடுத்த நீர்வடிகாலின் மையப்பகுதிவரை.
பசுமைக்கூடத்தின் நீளம்: பக்கவாட்டு திசையிலிருந்து பசுமைக்கூடத்தின் அளவ

பசுமைக்கூடத்தின் அகலம்: வடிநீர்காலின் திசையிலிருந்து பசுமைக்கூடத்தின் அளவு


Covering polyhouse with cladding material stage - I

Covering polyhouse with cladding material stage – II

Covering polyhouse with cladding material stage – III

Covering polyhouse with cladding material stage – IV

Covering polyhouse with cladding material stage – V


Covering polyhouse with cladding material stage – VI

மூடாக்குப் பொருள்

பாலிதீன் சிக்கனமான மூடாக்குப் பொருளாகும். தற்சமயம் அதிக நாள் உழைக்கின்ற, வலுவான ஆனால் எடைக் குறைவான கூரைப் போர்வைகளான புறஊதா தாங்கு திறன் கண்ணாடி போர்வை மற்றும் பாலிகார்பனேட் பேனல்களும் கிடைக்கின்றன. குழைமங்கள் பயிர் வளர்ச்சிக்கு, கவர்ந்த சுற்றப்புற அமைவினை தருகின்றன. வெப்ப மற்றும் மித வெப்ப பகுதிகளில் பணச்சிக்கனத்தின் காரணமாக கண்ணாட / கண்ணாடி இழைகளைக் காட்டிலும் குழைமங்களே அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. புறஊதா நிலை நிறுத்தமில்லா பாலிதீனைக் காட்டிலும் குறைந்த அடர்வு பாலிஎத்திலீன் (LDPE) / நீள அமைப்புடைய குறைந்த அடர்வு பாலிஎத்திலீன் 3-4 வருடங்கள் வரை நீடிக்கும்.

பல்வேறு விதமான போர்வைகளின் ஒப்பீடு


வ.எண்

விதம்

நிலைப்புத் திறன்

கடத்தும் அளவு

பராமரிப்பு

ஒளி

வெப்பம்

01.

பாலி எத்திலீன்

ஒரு வருடம்

90 சதம்

70 சதம்

மிகவும் அதிகம்

02.

புறஊதா தடுப்பாற்றலுடைய பாலிஎத்திலீன்

இரண்டு வருடங்கள்

90 சதம்

70 சதம்

அதிகம்

03.

கண்ணாடி இழை

ஏழு வருடங்கள்

90 சதம்

5 சதம்

குறைவு

04.

டெட்லர் (Tedlar) முலாமிடப்பட்ட கண்ணாடி இலை

பதினைந்து வருடங்கள்

90 சதம்

5 சதம்

குறைவு

05.

இரட்டிப்பு வலுவுள்ள கண்ணாடி

ஐம்பது வருடங்கள்

90 சதம்

5 சதம்

குறைவு

06.

பாலிகார்னேட்

ஐம்பது வருடங்கள்

90 சதம்

5 சதம்

மிகவும் குறைவு

04. பசுமைக்கூடச் சாகுபடியில் இடம்பெறும் தாவர வளர்ப்பு

கட்டமைப்புகள் / கொள்கலங்கள்

பசுமைக்கூட தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக்குவது சாகுபடி செய்யும் பயிரின் கால அளவைப் பொறுத்தே அமைகின்றது. பசுமைக்கூடத்தின் உற்பத்தி காலம் குறைவானதாகவே இருக்கவேண்டும்.  இதன் தொடர்பாக, பசுமைக்கூட உற்பத்தியில் உபயோகிக்கப்படும் கொள்கலங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.  பசுமைக்கூடத்தில் கொள்கலங்கள் கீழ்வரும் செயல்பாடுகளுக்கு உபயோகப்படுகின்றன.

  • நாற்றங்காலில் நாற்றுகளை வளர்த்தல்
  • மலர்ப்பயிர்களை வீரிய ஒட்டு விதை உற்பத்திக்காக பசுமைக்கூடத்தில் வளர்த்தல்
  • கொய்மலர் சாகுபடி செய்தல்
  • பூந்தொட்டிகளில் ஆபரணச் செடிகளை வளர்த்தல்

பசுமைக்கூடச் சாகுபடியில் கொள்கலங்களின் நன்மைகள்

  • குறைவான பயிர் வளர்ப்பு காலத்தால் உற்பத்தித்திறன் அதிகரிக்கப்படுகின்றது
  • உயர்ந்த தரமுடைய உற்பத்தி பொருள்
  • வீரியத்துடன் கூடிய சீரான பயிர் வளர்ச்சி
  • மாற்றி நடும் அதிர்வு ஏற்படாமல் உடனடியாக பயிர், வளர ஆரம்பித்துவிடும்
  • பசுமைக்கூடத்தில் சுகாதாரம் எளிமையாக பராமரிக்கப்படுகின்றது.
  • கையாளுவதற்கும், தரம் பிரிப்பதற்கும், இடமாற்றம் செய்வதற்கும் மாற்றி நடுவதற்கும் எளிமையாகின்றது
  • தொட்டியில் உள்ள ஊடகத்தில் சிறந்த நீர் வடிகால் மற்றும் காற்றோட்ட வசதி
  • சொட்டு நீர் போன்ற மேம்படுத்தப்பட்ட நீர்ப்பாசன முறைகளினால் வேதியியல் சிறப்பியல்புகளும் தாவர ஊட்டச்சத்துக்களும் எளிதாக மேற்பார்வையிடப்படுகின்றன.

பயிர்வளர்ப்பு கொள்கலன்களின் நன்மைகளும் பாதகங்களும்

கொள்கலன்கள்

நன்மைகள்

பாதகங்கள்

மண் தொட்டி

  • குறைந்த விலை
  • சுலபமான நீர் மேலாண்மை
  • மெதுவாகக் கையாள வேண்டும்
  • விரைவில் உலர்ந்து விடும்
  • கையாளுவதற்கு மிகவும் கனமாக இருக்கும்

நாரிழைத் தொட்டி

  • எளிமையாகக் கையாளலாம்
  • மந்தமான வேர் வளர்ச்சி
  • குறுகிய வாழ்நாள்

நாரிழைத் தட்டு

  • குறைவான இடைவெளி பயன்பாடு
  • ஈரப்பதத்தில் கையாளுவது மிகவும் கடினம்

ஒற்றை மட்கு பேலட் (Single peat pallet)

  • ஊடகம் தயாரிப்பு தேவையில்லை
  • குறைவான சேமிப்பு தேவை
  • தனித்தனியாகக் கையாள வேண்டும்

முன்மட்கு பேலட் (Prespaced peat pallet)

  • ஊடகத்தயாரிப்பு தேவையில்லை
  • குறைந்த அளவிற்கு உட்பட்டது
  • வரையறுக்கப்பட்ட அளவுடைய 5 அலகுகளையே கையாள முடியும்

ஒற்றை மட்கு தொட்டி

  • சிறந்த வேர் ஊடுருவல்
  • பெரிய பரப்பளவில் கையாளுவதற்கு எளிமையானது
  • பிரித்தெடுப்பதில் சிரமம்

ஸ்ட்ரிப் மட்கு தொட்டி (Strip peat pot)

  • சிறந்த வேர் ஊருவல்
  • பிரித்தெடுப்பதில் தாமதம்

குழித்தட்டு

  • கையாளுவதற்கு எளிமை
  • மறு உபயோகிப்புத் திறன்
  • அளவில் மிகவும் சிறயது

ஒட்டவத்தாள் பை

  • கையாளுவதற்கு எளிமை
  • கொள்கலத்திற்கு வெளியே வேர்கள் வளர்ந்து காணப்படும்

குழைமத் தொட்டி

  • மறு உபயொகிப்புத் திறன்
  • சிறந்த வேர் ஊடுருவல்
  • தனித்தனி செடியாகவே கையாள வேண்டும்

பாலியூரித்தேன் பஞ்சு

  • சுலபமாக கையாளலாம்
  • குறைவான ஊடகத் தேவை
  • மறுமுறை உபயோகிக்கலாம்
  • சீரான இடைவெளியில் உரமிடுதல் அவசியம்

மண் பட்டை

  • சிறந்த வேர் வளர்ச்சி
  • அதிக வேலையாட்கள் தேவை

மண் கட்டி

  • மிகச் சிறந்த வேர் வளர்ச்சி
  • இயந்திர செலவு

துளையூட்டப்பட்ட குழைமத் தட்டு

  • சுலபமாக கையாளலாம்
  • குறைவான ஊடகத் தேவை
  • பல அளவுகளில் கிடைக்கும்
  • மறுமுறை உபயோகிக்கலாம்
  • கொள்கலத்திற்கு வெளியே வேர்கள் வளர்ந்து காணப்படும்

துளையூட்டப்பட்ட பாலி எத்திலீன்

  • குறைவான செலவு
  • மறுமுறை உபயோகமாகும் பைகள்
  • குறைவான காலம்

பசுமைக்கூடத்தில் சாகுபடி செய்ய விரும்பும் பயிர் மற்றும் பயிரின் நிலை, பயிர்காலம், வீரியம், வளரியல்பு, வேர் அமைப்பு ஆகியவற்றை பொறுத்தே கொள்கலன்களைத் தேர்வு செய்யலாம். பொதுவாக குறைந்த பயிர்க்காலம், மேலோட்டமான வேரமைப்பு மற்றும் குறைந்த வீரியத்துடைய வளர்ச்சி கொண்ட பயிரைக் காட்டிலும் நீண்ட பயிர்க்காலம், ஆழமான வேரமைப்பு மற்றும் வீரிய வளர்ச்சியுடைய பயிர்களுக்கு பெரிய கொள்கலன்கள் தேவைப்படுகின்றன. விதை முளைப்பதற்கும் மாற்றி நடவு செய்யப்படும் பயிர்களின் வளர்ச்சிக்கும் தேவையான சாதகமான சூழ்நிலையை கொள்கலன்கள் அளிக்கின்றன.

05.பசுமைக்கூடச் சாகுபடியில் சுற்றுப்புறக் காரணிகளின் ஆதிக்கம்

பயிர்களின் அதிகபட்ச மகசூல் மற்றும் தரமான உற்பத்திக்கு போதுமான தட்பவெப்பநிலை மிகவும் அவசியமாகும். இந்தியாவில் சமவெளி மற்றும் கடற்கரை பகுதிகளிலுள்ள பசுமைக்கூடங்களுக்கு குளிர்ச்சி மிகவும் தேவை. மென்மையான காலநிலைகள் மற்றும் கடற்கரை பகுதிகளில் உள்ள பசுமைக்கூடங்கள் இயற்கை முறையில் காற்றோட்ட வசதி பெற்றுள்ளன. வெப்பத்துடன் கூடிய கோடை காலநிலையைக் கொண்ட வடமாநிலங்களின் சமவெளியிலுள்ள பசுமைக்கூடங்களை நீராவியாக்குதல் மூலமாகவோ அல்லது விசிறி மற்றும் திண்டு முறையிலோ குளிர்விக்க வேண்டும். வடமாநிலங்களில் உள்ள பசுமைக்கூடங்களுக்கு குளிரூட்டுதல் மற்றும் வெப்பமூட்டுதல் ஆகிய இரண்டுமே பயிரைப் பொறுத்து தேவைப்படுகின்றது.

இயற்கை காற்றோட்டம்

தட்பவெப்ப நிலையைக் கட்டுப்படுத்துவதற்காக பசுமைக்கூடங்கள் முழுமையான காற்றோட்டத்தைப் பெற்றிருக்கவேண்டும். பசுமைக்கூடங்களின் தட்பவெப்ப நிலையானது வருடம் முழுவதும் 2 டிகிரி செண்டிகிரேட்டிற்கும் மிகையாகாமல் இருக்க வேண்டும். மேலும் வெப்பமான மாதங்களில் பசுமைக்கூடத்தின் தட்பவெப்ப நிலையானது சுற்றுப்புறத்திலுள்ள தட்பவெப்பநிலையின் அளவிலேயே இருக்க வேண்டும்.

வழக்கத்தில் இல்லாத வெப்பம் மற்றும் குளிரூட்டும் முறைகள்

அ. வெந்நீர் மற்றும் குளிர் நீரினை நிழல்வலையால் சூழப்பட்ட பசுமைக்கூடத்தின் மேல் தெளித்தல்
ஆ. கோடையில் குளிரூடட்வும் பனிக்காலத்தில் வெப்பமூட்டவும் நிலச் சுரங்கத்தினைப் பயன்படுத்துதல்
இ. கோடையில் குளிரூட்டவும் பனிக்காலத்தில் வெப்பமூட்டவும் அகழியில் பசுமைக்கூடம் அமைத்தல்
ஈ. பசுமைக்கூடத்தின் நிலப்பகுதியில் புதைக்கப்பட்டிருக்கும் குழாய்களின் வழியாக துளைக்கிணற்று நீரை சுழலச் செய்தல்

பசுமைக்கூடத்திற்கு வெப்பமூட்டுதல்

வட இந்தியா அல்லது அதிக குத்துயரத்திலிருக்கும் இமாலய பிரதேசத்திலிருக்கும் பசுமைக்கூடங்களைக் குளிர் காலங்களில் வெப்பமூட்டுதல் மூலம் சிறந்த விளைப்பொருட்களைப் பெற முடியும்.

வெப்பமூட்டும் முறைகள்

பசுமைக்கூடங்களில் பின்வரும் முறைகளில் வெப்பம் உண்டாக்கலாம்

அ. கொதிகலன்
1. வெந்நீர் குழாயுடன்
2. நீராவி குழாயுடன்
ஆ. சூடாக்கிகள்
இ. அகச்சிவப்பு சூடாக்கிகள்
ஈ. சூரிய ஒளியின் மூலம் சூடாக்குதல்

அ. கொதிகலன்

மிகப் பெரிய பசுமைக்கூடங்களில் இம்முறை பின்பற்றப்படுகின்றது.  தேவையான கொள்திறனுடைய கொதிகலன்கள் பசுமைக்கூடங்களில் பொருத்தப்பட்டு நிலக்கரி அல்லது எரிபொருள் எண்ணெய்யை எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகின்றது. பொதுவாக 85 டிகிரி செண்டிகிரேட் கொண்ட வெந்நீர் அல்லது 102 டிகிரி செண்டிகிரேட் உடைய நீராவி மூலமாகவே பசுமைக்கூடங்கள் வெப்பமேற்றப்படுகின்றன. நிலப்படுக்கை மேலும் பக்க சுவர்களிலும் நீர் அல்லது நீராவி குழாய்கள் பொருத்தப்படுகின்றன. வெந்நீர் முறையைக் காட்டிலும் நீராவி முறையே மலிவானதாகும். குழாய்களின் நீளத்தைக் குறைப்பதற்கு பல வெந்நீர் அல்லது நீராவி சுருள் கம்பிகளை பயன்படுத்தலாம்.

ஆ. சூடாக்கிகள்

வெப்பமேற்றுவதற்காக உள்ளூரில் பயன்படுத்தப்படும் முறையாகும்.  பசுமைக்கூடத்தில் வெப்பத்தை ஒரே சீராக ஏற்படுத்துவதற்காக 3 மீட்டர் உயரத்தில் பல சூடாக்கிகளைப் பொறுத்தவேண்டும். இத்தகைய சூடாக்கியின் அடிப்பகுதியில் எரிபொருள் எரிக்கப்பட்டு குழாய்களின் வழியாக வெப்பமேற்றப்படுகின்றன.  புகையானது மேல்மட்டத்தில் இருக்கும்.

இ. அகச்சிவப்பு சூடாக்கிகள்

பயிரிலிருந்து 1.5மீ உயரத்தில் பொருத்தப்பட்டிருக்கும் 10 செ.மீ சுற்றளவுடைய குழாய்களின் வழியாக எரிசக்தி வாயுவிலிருந்து பெறப்பட்ட 480 டிகிரி செண்டிகிரேட் வெப்பமானது செலுத்தப்படுகின்றது. குழாய்களின் முழு நீளத்திற்கும் 6 - 10 மீ இடைவெளிகளில் பிரதிபலிப்பிகள் பொருத்தப்பட்டு அகச் சிவப்பு கதிர்கள் செடிகளின் மீது பாய்ச்சப்படுகின்றன. காற்றை சூடாக்காமல் பயிரும் மண்ணும் மட்டுமே வெப்பமேற்றப்படுகின்றன. பசுமைக்கூடத்திலிருந்து வெளியேற்றும் விசிறியின் மூலம் வெளியேற்றப்படும் காற்றின் வெப்பம் 65 டிகிரி செண்டிகிரேட் ஆகும்.

ஈ. சூரிய ஒளியின் மூலம் சூடாக்குதல்

தட்டையான தட்டுடைய சூரிய ஒளி சூடாக்கிகள் பகல் பொழுதில் நீரை சூடாக்குகின்றன. இவ்வெந்நீரானது காப்பிடப்பட்ட தரைக் தொட்டியில் தேக்கிவைக்கப்படுகின்றது. பசுமைக்கூடத்தின் முழு நீளத்திற்கும் பொறுத்தப்பட்டிருக்கும் குழாய்களின் வழியாக இவ்வெந்நீரானது இரவு நேரங்களில் செலுத்தப்படுகின்றது.  புகை மூடிய அல்லது மழை நாட்களில் துணை அல்லது அவசர கால வெப்பமூட்டும் முறைகள் மூலம் பசுமைக்கூடத்தில் வெப்பமுண்டாக்கலாம்.

சுற்றுப்புறக் கட்டுப்பாடு

தட்பவெப்ப கட்டுப்பாடு

பசுமைக்கூடத்தில் தட்பவெப்ப நிலையினைக் கட்டுப்படுத்துவதற்காக வெப்பச் சீர்நிலைக் கருவியினை நீர் சுழற்சி குழாயிலோ அல்லது காற்றை வெளியேற்றும் விசிறியிலோ பொருத்தப்பட்டிருக்கும்.

காற்றின் ஈரப்பதம் கட்டுப்பாடு

விசறி மற்றும் திண்டு பசுமைக்கூடத்தில் காற்றின் ஈரப்பதத்தினைக் கட்டுப்படுத்துவதற்காக ஈரப்பதச் சீர்நிலைக் கருவியினை நீர் சுழற்சி குழாயிலோ அல்லது காற்றை வெளியேற்றும் விசிறியிலோ பொருத்தப்பட்ருக்கும். விசிறி சீரியக்க பசுமைக்கூடத்தில் அதிகபட்ச காற்றின் ஈரப்பதமாக 90 சதவிகிதம் அடையப்படுகின்றது.

ஒளிச் செறிவுக் கட்டுப்பாடு

ஒரு சில இடங்களில் இயற்கை வெளிச்சம் இல்லாமலோ அல்லது குறைவாகவோ இருப்பின் செயற்கை முறையில் செடிகளுக்கு ஒளி பாய்ச்சலாம். வெள்ளொளி பரப்பும் குமிழ்கள் அதிக வெப்பத்தை ஏற்படுத்துவதோடு பல தருணங்களில் ஏதுவானதாக அமைவதில்லை.  வெளிச்சத்திற்கான ஒற்றை ஆகாரமாக உடனொளிர் விளக்குகள் திகழ்கின்றன. பல பயிர்களின் பச்சைய உற்பத்தி ஒளியைச் சார்ந்தே இருந்தாலும் அதிகபட்ச ஒளியினால் செடிகளின் பச்சையம் அழிவுக்குள்ளாகின்றது.

ஒளியின் தரம்

ஒளியின் தரமானது அலை நீளக் கூட்டமைவினைக் குறிக்கின்றது. அலை நீளமானது வளர்ச்சி பொருளின் இயங்கமைப்பை ஊக்குவிப்பதனால் தனிப்பட்ட இயல்புகள் பயிரில் உண்டாகின்றன.

விசிறி மற்றும் திண்டு முறை

விசிறியைத் தேர்ந்தெடுத்தல்

விசிறியானது தேவைப்படும் காற்றை 15 மிமீ அசைவற்ற அழுத்தத்தில் கொடுக்க வேண்டும். பசுமைக்கூடத்தில் வளர்க்கப்படும் பயிரின் உயரத்தைப் பொறுத்தே விசிறிகளைப் பொருத்தும் உயரம் நிர்ணியக்கப்படுகின்றது. விசிறியின் தகடுகளும் உள்ளுறைச் சட்டங்களும் அலுமினியம், சாயமில்லாத தகடு போன்ற துருப்பிடிக்காத பொருள்களால் உருவாக்கப்பட்டதாக இருக்கவேண்டும்.

வடிவம்

தாவர நார்களால் செய்யப்பட்ட திண்டுகளே விரும்பத்தக்கது. இவை பெரும்பாலும் 100 மி.மீ தடிப்புடனேக் கிடைக்கின்றன. வீசும் காற்றின் வீதமானது 75 கன மீ / நிமிடம் / திண்டத்தின் சதுர மீ ஆகும்.  நீர் பாயும் வீதமானது ஒரு மீட்டர் நீட்டலளவுடைய திண்டுகளுக்கு நிமிடத்திற்கு 9 லிட்டர்களாகும். திண்டுகளில் சீரான நீர் பரப்பினை மேற்கொள்ளவேண்டும்.

திண்டு பராமரிப்பு

ஒழுங்காக பராமரிக்கப்படாவிட்டால் பாசிகள் வளர்வதுடன் திண்டுகளில் உப்பும் படிந்து விடும். எவ்வித இரசாயன உபயோகிப்பும் இல்லாமல் கீழ்வரும் முறைகளில் திண்டுகளைப் பராமரிக்கலாம்.

  • திண்டு மற்றும் நிலமட்டத் தொட்டிகளுக்கு நிழலமைத்தல்
  • தினமும் திண்டுகளை உலரவைத்தல்
  • ஊட்டச்சத்து மாசுபடுதலைத் தவிர்த்தல்
  • சீரான இடைவெளிகளில் நிலமட்டத் தொட்டியினை வடித்தல் மற்றும் நோய் தொற்றுக் கிருமி நீக்குதல்

விசிறி பராமரிப்பு

  • சீரான இடைவெளியில் அனைத்து தாங்குப் பொருட்களும் உயவுற்றிருக்க வேண்டும்
  • ‘வி’ வாரானது போதுமான அளவிற்கு இறுகியிருக்கவேண்டும்
  • நெம்புகோல்கள் முறையாக உய்வுற்றிருக்க வேண்டும்

06. ஊடகத் தயாரிப்பு மற்றும் புகையூட்டம்

பசுமைக்கூடத்தில் தொட்டியில் வளர்க்கப்படும் செடிகள் மற்றும் கொய்மலர் சாகுபடி ஆகியவற்றிற்கு பயன்படும் மண் கலவையானது மண், அங்கக மற்றும் அனங்கக பொருட்களின் திருத்தப்பட்ட கலவையாகும்.  நீர்பிடிப்புத் திறன் மற்றும் காற்றோட்டத்தை மேம்படுத்துவதற்காக மேல் மண்ணை ஒரு அங்கமாக இக்கலவையில் பயன்படுத்தவேண்டும். பல பசுமைக்கூடங்களில் இம்மேல் மண்ணை பயன்படுத்தாது, அங்கக மற்றும் அனங்கக ஆகிய இரண்டு பொருட்கள் மட்டும் உள்ள செயற்கை மண் கலவையை பயன்படுத்தப்படுகின்றன. நீர்ப்பாசனம் மற்றும் உரமிடுதலை சரியாக மேற்கொண்டால் மேல் மண்ணில் வளரும் செடிகளைப் போன்றே இச்செயற்கை மண்ணிலும் வளரும்.

பசுமைக்கூட உற்பத்திக்கான ஊடகத் தயாரிப்பு

பசுமைக்கூடத்தில் உபயோகப்படும் ஊடகத்தின் பெளதீக மற்றும் இரசாயன பண்புகள் வயல்வெளிகளில் உள்ள மண்ணிலிருந்து வேறுபட்டிருக்கும்.

  • நீர் கொள்ளும் திறன் மற்றும் புரைமை போன்ற பெளதீக குணங்களுக்கிடையே சமநிலைப் பெற்றிருக்கும் ஊடகமே சிறந்தது.
  • நல்ல வடிகால் வசதியிருக்க வேண்டும்.
  • மிக இறுக்கமான ஊடகமானது வடிகால் மற்றும் காற்றோட்டம் போன்றவற்றில் சிக்கல் ஏற்படுத்துவதுடன் மிகவும் குன்றிய வேர் வளர்ச்சி மற்றும் பல நோய் கிருமிகளுடனும் காணப்படும்.
  • அதிக புரைமைத் தன்மையுடை ஊடகமானது குறைவான நீர் மற்றும் ஊட்டச்சத்து கொள்ளும் திறனைக் கொண்டுள்ளதால் பயிர் வளர்ச்சியும் மேம்பாடும் பாதிக்கப்படுகின்றன.
  • ஊடகச் செயல்பாடகள் (கார அமிலத்தன்மை: 5.0 முதல் 7.0 மற்றும் கரையும் உப்பு அளவு: 0.4 முதல் 1.4 ds/m) என்ற அளவே பெரும்பாலான பசுமைக்கூட பயிர்களுக்கு பொருந்தும்)
  • குறைவான கார அமிலத்தன்மை (<5.0) கொண்ட ஊடகம், இரும்பு, துத்தநாகம், மாங்கனீஸ் மற்றும் தாமிரம் போன்ற நுண்ணூட்டச்சத்துகளின் நச்சியல்புக்கும் முக்கியத்துவமிக்க மற்றும் துணைச் சத்துப்பொருள் ஆகியவற்றின் குறைபாட்டிற்கும் வழிவகுக்கும்.  இதைப்போல கார அமிலத்தன்மை அதிகமாக இருந்தால் போரான் உள்பட பல நுண்ணூட்டச் சத்துக்களில் குறைபாடுகளை உண்டாக்கும். 
  • சுண்ணாம்பு மற்றும் டோலமைட் போன்ற பொருட்களை ஊடகத்தில் கலப்பதன் மூலம் குறைந்த கார அமிலத்தன்மை அதிகரிக்கப்படுகின்றது. மேலும் கால்சியம் நைட்ரேட், கால்சியம் சைனமைடு, சோடியம் நைட்ரேட் மற்றும் பொட்டாசியம் நைட்ரேட்டு போன்ற உரங்களை இடுவதன் மூலமும் கார அமிலத் தன்மையை அதிகரிக்கலாம்.

பசுமைக்கூடத்தில் பயன்படும் ஊடகத்தில் நுண்ணுயிரி வளர்ச்சியைத் தடை செய்தல்

பசுமைக்கூட ஊடகம் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் நச்சுயிரிகள், நூற்புழுக்கள், பூச்சிகள் மற்றும் களை விதைகள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.  ஆகவே வெப்ப நேர்த்தி அல்லது சில எளிதில் ஆவியாகும் இரசாயனங்களாகிய மீத்தைல் ப்ரோமைடு, க்ளோரோபிக்ரின் போன்றவற்றை பயன்படுத்தி நச்சுத்தன்மையை நீக்கலாம்.

செயற்படும் பொருள்

முறை

பரிந்துரை

வெப்பம்

நீராவி

180 டிகிரி பாரன்ஹீட் வெப்பத்தை 30 நிமிடம் செலுத்துதல்

மீத்தைல் ப்ரோமைடு

10 மி.லி / ஊடக கன அடி

24-48 மணி நேரங்களுக்கு காற்று புகாத திரையினைக் கொண்டு போர்த்தி வைக்கவேண்டும். உபயோகிப்பதற்கு முன்னர் 24-28 மணி நேரங்களுக்கு பசுமைக்கூடத்தை காற்று புகும்படியாக திறந்து வைக்கவேண்டும்

க்ளோரோபிக்ரின்

கண்ணீர் புகை, 3-5 மிலி / ஊடகத்தின் கன அடி

தண்ணீருடன் தெளித்து விட்ட பிறகு காற்ற புகாத திரையினைக் கொண்டு 1 முதல் 3 நாட்களுக்கு மூடி வைக்கவேண்டும். பிறகு 14 நாட்களுக்கு காற்று புகும்படியாக திறந்து வைத்தோ அல்லது வாசனை முழுவதும் அகன்ற பின்போதான் பயன்படுத்தவேண்டும்.

பசாமிட்

8.0 கிராம் / ஊடகத்தின் கன அடி

காற்று புகாத திரையினைக் கொண்டு 7 நாட்களுக்கு மூடி வைக்கவேண்டும்.  பின்பு உபயோகிப்பதற்கு முன்னர் 7 நாட்களுக்கு பசுமைக்கூடத்தை காற்று புகும்படியாக திறந்து வைக்கவேண்டும்

ஃபார்மலின்

20 மிலி / லி தண்ணீருக்கு (37 சதவிகிதம்)

ஒரு கன அடிக்கு 2 லி தெளிக்கவும்.  காற்று புகாத திரையினைக் கொண்டு 14 முதல் 36 மணி நேரங்களுக்கு மூடிவைத்த பின்னர் உபயோகத்திற்கு முன்னர் குறைந்த பட்சம் 14 நாட்களுக்கு காற்று புகும்படியாக திறந்து வைக்கவேண்டும்

நச்சுயிர்கொல்லி அல்லது பூஞ்சாணக் கொல்லி ஆகியவற்றை பயன்படுத்தியும் ஊடகத்தின் நோய் தொற்றினை நீக்கலாம்.

பூஞ்சாணக் கொல்லிகளும் கட்டுப்படுத்தப்படும் பூஞ்சாணங்களும்

இரசாயனப் பொருள்

பயன்படுத்தவேண்டிய அளவு

கட்டுப்படுத்தப்படும் பூஞ்சாணங்கள்

கேப்டான்

2 கிராம் / லி தண்ணீருக்கு

பித்தியம், ஃப்யுசேரியம், ரைஜாக்டோனியா மற்றும் ஃபைடோப்த்தோரா, வேர் மற்றும் தண்டு அழுகல், வெள்ளை பூசணம், கருப்பு அழுகல், குறுத்து  அழுகல் மற்றும் நாற்றழுகல் போன்றவை குறிப்பிட்ட அளவிற்கு கட்டுப்படுத்தப்படுகின்றன

மெட்டலாக்சைல் + மேன்கோசெப் (ரிடோமில் எம்இசட் 72 நனையும் தூள்)

1 கிராம் / லி தண்ணீருக்கு

பித்தியம், ஃபைடோப்த்தோரா, ஃப்யுசேரியம் மற்றும் பிற மண்ணில் உருவாகும் நச்சுயிரிகள்

மண்ணிலிருக்கும் பூச்சிகளை அழிப்பதற்காக பயன்படுத்தப்படும் வெப்ப அளவு

  • நீர்ப் பூசணத்திற்கு 115 டிகிரி பாரன்ஹீட் (பித்தியம் மற்றும் ஃபைடோப்த்தோரா)
  • நூற்புழுக்களுக்கு 120 டிகிரி பாரன்ஹீட்
  • புழுக்கள், நத்தைகள் மற்றும் பூரான்களுக்கு 135 டிகிரி பாரன்ஹீட்
  • பெரும்பாலான நோய் விளைவிக்கும் நச்சுயிரிகளுக்கு 140 டிகிரி பாரன்ஹீட்
  • களைகளின் விதைகளுக்கு 180 டிகிரி பாரன்ஹீட்
  • எதிர்ப்புசக்தியுள்ள களை விதைகளுக்கும் நச்சுயிரிகளுக்கும் 200 டிகிரி பாரன்ஹீட்

பசுமைக்கூடத்தில் புகையூட்டுதல்

பசுமைக்கூடத்தில் இடம்பெறும் பயிர்பெருக்க அறை, கொள்கலன்கள், கத்திகள், பணித்தளம், நாற்காலிகள் போன்ற அனைத்தையும் ஒரு பகுதி ஃபார்மலினை ஐந்து பகுதி தண்ணீரில் கலந்து அல்லது ஒரு பகுதி சோடியம் ஹைப்போக்ளோரைட்டை 9 பகுதி தண்ணீரில் கலந்து உபயோகித்து நோய்த்தொற்றினை நீக்கலாம்.  டைக்ளோர்வாஸ் போன்ற பூச்சிக்கொல்லிகளைத் தெளிப்பதன்மூலம் பூச்சிகளை அழிக்கலாம். விதை மற்றும் நடவுப் பொருட்களை பசுமைக்கூடத்திற்குள் எடுத்துச் செல்லும் முன் பரிந்துரைக்கப்பட்ட இரசாயனத்தைக் கொண்டு விதை நேர்த்தி செய்தும் பூஞ்சாணக் கொல்லி மற்றும் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தி முறையே தண்டுக்குச்சிகள் மற்றும் அடைப்பான்களையும் தொற்றுநீக்கம் செய்யவேண்டும்.  பசுமைக்கூடத்தின் நுழைவாயிலில் வைக்கப்பட்டிருக்கும் ட்ரைசோடியம் பாஸ்பேட் அல்லது பொட்டாசியம் பெர்மாங்கனேட் போன்ற தொற்றுநீக்கும் கரைசலை வைப்பதன் மூலம் பசுமைக்கூடத்தின் உள்ளே நுழைபவர்களினால் ஏற்படும் நோய்தொற்று தடுக்கப்படுகின்றது.

07. பசுமைக்கூடச் சாகுபடியில் பின்பற்றப்படும் சொட்டுநீர்ப்பாசனம் மற்றும் சொட்டுநீர் உரப்பாசன முறைகள்

பசுமைக்கூடத்தில் தேவைப்படும் அளவைவிட குறைவான இலைகள் மற்றும் வேர் அமைப்புடன் அதிக பலனைத் தருவதற்கு மிக அதிகமான நீரும் உரங்களும் தேவைப்படுகின்றன.

நீர்ப்பாய்ச்சும் முறை

பசுமைக்கூடத்தின் பயிர்களுக்கு சிறுபாசன முறையே மிகச் சிறந்ததாகும்.  தெளிப்பு நீர் அல்லது சொட்டு நீர்ப் பாசன முறைகளை இதில் பின்பற்றலாம். பொதுவாக, நீர்ப்பாசன முறையில், நீரானது இலைகளின் மேலும் âக்களின் மேலும் விழாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.  இவ்வாறு செய்வதனால் நோய் மற்றும் இலைக் கருகும் பிரச்சனைகள் தவிர்க்கப்படுகின்றது. தெளிப்பு நீர்ப்பாசன முறையில், அதிக அழுத்தத்தினால் நீரானது ஒரு அடி உயரத்தில் நிலைக்குழாயின் மேல் பொருத்தப்பட்டிருக்கும் தெளி முனையிலிருந்து வெளியேற்றப்படுகின்றது.

சொட்டுநீர்ப்பாசனத்திற்கு தேவைப்படும் கருவிகள்

  • 2.8 கிலோ / சதுர அடி அழுத்தத்தை ஏற்படுத்தும் ஒரு இறைப்பு அலகு
  • நீர் வடிகட்டும் அமைப்பு - மணல் / சிலிக்கா / வடிகட்டிகள்
  • சொட்டுநீர் குழாய் அல்லது உமிழியுடன் கூடிய பி.வி.சி குழாய்கள்

சொட்டுக் குழாய்கள் பல வகைகளில் கிடைக்கின்றன

  • லேபிரின்த் சொட்டுக் குழாய்கள்
  • டர்போ சொட்டுக் குழாய்கள்
  • அழுத்தத்தை ஈடுசெய்யும் சொட்டுக் குழாய்கள் - அணச்சிய சவ்வுகள் பல ஆண்டுகளுக்கு சீரான வீழ்ச்சி விகிதத்திற்கு வித்திடுகின்றது.
  • பட்டன் சொட்டுக் குழாய்கள் - எளிமையாகவும், சுத்தப்படுத்துவதற்கு சுலபமாகவும் இருக்கும். பக்கங்களில் அல்லது மேல்பகுதியில் வெளியேற்ற வாயுடன் உள்ள இவை தொட்டிகளுக்கும் பழத் தோட்டங்களுக்கும் சிறந்து விளங்குகின்றது.
  • சொட்டுக்குழாயுடனான தொட்டி - கூம்புடன் இணைக்கப்பட்ட நீண்ட குழாய்

சொட்டுக்குழாய்களின் நீர் வெளியீடு

அ. 2.8 கிலோ / சதுர செ.மீ அழுத்தம் கொண்ட 16 மி.மீ சொட்டுக்குழாயானது ஒரு மணி நேரத்திற்கு 2.65 லிட்டர் நீரை அளிக்கும்.
ஆ. 1 கிலோ / சதுர செ.மீ அழுத்தம் கொண்ட 15 மி.மீ சொட்டுக் குழாயானது ஒரு மணி நேரத்திற்கு 1 முதல் 4 லிட்டர் நீரை அளிக்கும்.

வடிகட்டிகள்

நீரின் தன்மையைப் பொறுத்து வெவ்வேறு விதமான வடிகட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன

சரளை வடிகட்டி

கால்வாய்கள் மற்றும் நீர்த்தேக்கங்களிலிருந்து எடுக்கப்படும் அங்கக அழுக்குகள் மற்றும் பாசிகளையுடைய நீரை வடிகட்டுவதற்காக பயன்படுகின்றது.  அடிப்பாறை அல்லது பளிங்குகற்களின் படுக்கைகள் மூலம் வடிகட்டப்படுகின்றது.

நீர்ச்சுழற்சி (Hydrocyclone)

மணற் துகள்களைக் கொண்டிருக்கும் கிணற்று நீர் மற்றும் ஆற்று நீரை வடிகட்டுகின்றது.

வட்டத்தகடு வடிகட்டிகள் (Disc filters)

நீரிலிருக்கும் மிகச்சிறிய துகள்களை நீக்குகின்றது

சல்லடை வடிகட்டிகள்

120 வலைகண் (0.13 மி.மீ) அளவுடைய சாயம் பூசப்படாத தகடுகள் இரண்டாம் கட்ட வடிகட்டுதலுக்குப் பயன்படுகின்றது.

சொட்டுநீர்ப்பாசன முறை

இம்முறையில் தானே கலந்து வெளியே பரப்புகின்ற அலகானது பொருத்தப்பட்டுள்ளது. இதில் மூன்று முறைகள் இறைப்பு மற்றும் வழங்கும் கருவி அமைந்துள்ளது. தொட்டியில் தனித்தனியாக உரங்கள் கரைக்கப்பட்டு பின்பு தேவையான விகிதத்தில் கலந்து செடிகளுக்கு சொட்டுகுழாய்களின் வழியாக அளிக்கப்படுகின்றது.

உரங்கள்

பயிருக்கு பயன்படும் ஊடகத்தைப் பொறுத்தே உர அளவு நிர்ணியக்கப்படுகின்றது. மண்ணில்லா கலவைக்கு குறைந்த ஊட்டச்சத்து கொள்ளும் திறனைக் கொண்டுள்ளதால் விரைவான உரத்தேவை ஏற்படுகின்றது. இன்றியமையாத தனிமங்கள் 5.5 முதல் 6.5 என்ற கார அமிலத் தன்மையிலேயே அதிகபட்ச எளிதில் கிடைக்கக் கூடிய தன்மையில் இருக்கும்.  பொதுவாக, நுண்தனிமங்கள் குறைவான கார அமிலத்தன்மையிலும் பெருமூலகம் ஆறு மற்றும் அதற்கும் அதிகப்பட்ட கார அமிலத்தன்மைகளிலும் எளிதில் கிடைக்கக்கூடியனவாக உள்ளன.

அனங்கக உரங்களின் வடிவங்கள்

உலர் உரங்கள், மெதுவாக பயனளிக்கும் உரம் மற்றும் திரவ உரம் ஆகியவையே பசுமைக்கூடங்களில் பயன்படுத்தப்படுகின்றன.

மெதுவாக பயனளிக்கும் உரம்

பல மாத காலத்திற்கு ஊட்டச்சத்தினை ஊடகத்திற்கு அளிக்கின்றது.  புரையான குழைமத்தால் இவ்வுர குருணைகள் பூசப்பட்டிருக்கும். இக்குருணைகள் ஈரமானவுடன் உள்ளிருக்கும் உரம் மெதுவாக வேர்பகுதியிலிருக்கும் ஊடகத்திற்கு வெளிப்படுகின்றது. ஆனால் ஊடகத்தை வெப்பமேற்றிய பின்னரே இவ்வுரங்களை இடவேண்டும். இல்லையெனில், வெப்பமானது குழைமத்தை உருக்கி அனைத்து உரமும் ஒரே நேரத்தில் ஊடகத்திற்கு வெளிப்பட்டுவிடும். அதிக அமிலத்தன்மை வேர்ப்பகுதியை எரித்துவிடும்.

திரவ உரம்

இவை 100 சதவிகிதம் நீரில் கரையும் தன்மையுடையவை. இவை பொடிவடிவத்தில் கிடைக்கும். இவை ஒற்றை அல்லது கலப்பு உரமாகவும் இருக்கலாம்.  இவை வெந்நீரில் கரைக்கப்படவேண்டும்.

உரமிடும் முறைகள்
1. நிலையான வழங்கல்

குறைவான செறிவுடன் ஒவ்வொரு நீர்ப்பாசனத்திற்கு பிறகும் உரமிடுவது மிகச் சிறந்ததாகும்.  இதனால் சத்துக்கள் தொடர்ந்து செடிகளுக்கு கிடைக்கப்பெற்று சிறந்த, நிலையான வளர்ச்சியை அடைகின்றன.  நீருடன் சேர்த்து உரத்தையும் அளிப்பதே உரப்பாசனம் ஆகும்.

2. இடைவெளியுடன் உரமிடுதல்

திரவ உரங்கள், வார, இரண்டு வார அல்லது மாத இடைவெளிகளில் சீராக அளிக்கப்படுகின்றன. வேர்பகுதிகளில் வேறுபட்ட அளவில் கிடைக்கும் உரமே இம்முறையிலுள்ள மிகப்பெரிய இடர்பாடாகும். உரமளிக்கப்படும் வேலையில் அதிக செறிவுள்ள உரங்கள் வேர்பகுதியில் கிடைக்கப்பெற்று பயிர்கள் உபயோகிக்க ஆரம்பிக்கின்றன. அச்சமயத்தில் அடுத்த உரமளிப்பின்போது மிகவும் குறைவாக அல்லது முழுவதும் இல்லாத நிலை ஏற்படுகின்றது. இதனால் வேறுபட்ட பயிர் வளர்ப்பு விகிதம் காணப்பட்டு பல நெருக்கடிகளை ஏற்படுத்தி மிகவும் தரமில்லா பயிர் வளர்ச்சி ஏற்படுகின்றது.

உரம் உட்புகுத்து சாதனங்கள்

இக்கருவி செறிவுள்ள திரவ உரத்தை நேரடியாக நீர் குழாய்களில் உட்செலுத்துவதால் ஒவ்வொரு நீர்ப்பாசனத்தின் போதும் பசுமைக்கூடப் பயிர்களுக்கு உரமளிக்கப்படுகின்றது.

பன்முக உட்புகுத்து சாதனங்கள்

இணையா நிலையிலுள்ள உரங்களை சொட்டுநீர் உரப்பாசனம் வழியாக அளிப்பதற்கு பன்முக உட்செலுத்திகள் தேவைப்படுகின்றன.  இணையா நிலையிலுள்ள உரங்கள் ஒன்றாக கலக்கப்படும்போது திட பொருளாக படிந்துவிடுகின்றன.  இதனால் ஊட்டச்சத்து பொது கரைசலில் மாற்றங்கள் ஏற்படுவதுடன் உட்செலுத்திகளிலும் அடைப்பு ஏற்பட்டுவிடுகின்றது. பன்முக உட்செலுத்திகள் இத்தகைய பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைகின்றன. கணினி கட்டுப்பாட்டுடன் இவ்வளிப்பான்களை இயங்கச் செய்யலாம்.

 உர உட்புகுத்து சாதனங்கள்

உர உட்புகுத்து சாதனங்கள் இரண்டு வகைப்படுகின்றன. செறிவுள்ள உரத்தை தண்ணீர் குழாய்களில் குவிவிரி கொள்கையின் அடிப்படையில் உட்செலுத்துவது ஒரு வகையானது. நேரிடை இடப்பெயர்ச்சி மூலம் உட்செலுத்துவது மற்றொரு வகையாகும்.

அ. குவிவிரி கொள்கை உட்செலுத்தி

நீர்ப்பாசன குழாய் மற்றும் பொது உரத்தொட்டிக்கிடையே நிலவும் அழுத்தத்தில் தோன்றும் வேறுபாட்டின் அடிப்படையில் இது இயங்குகின்றது.

  • இதற்கு ஹோசான் வீதாச்சாரக் கருவி சிறந்த எடுத்துக்காட்டாகும்.
  • உறிஞ்சு குழாயின் வாயிலில் குறைந்த அழுத்தம் அல்லது உள்வாங்குதல் ஏற்படுகின்றது. இதனால் பொதுத் தொட்டியிலிருந்து உரம் உள்ளிழுக்கப்பட்டு ஹோசான் ஃபாசெட் இணைப்பு வழியாக விழும் பாசன நீரும் கலக்கின்றது.
  • ஹோசான் வீதாச்சாரக் கருவியின் சராசரி வீதம் 1:16 ஆகும். நீர் அழுத்தத்தைப் பொறுத்து வீதத்தின் அளவும் இதில் வேறுபாடு அடையலாம்.
  • இது குறைந்த விலையுள்ள உட்செலுத்தியாக விளங்குவதால் சிறு பரப்பளவிற்கு மிகவும் ஏற்றதாகும். அதிகமான அளவில் உரமிடுவதற்கு பெரிய பொது தொட்டி தேவைப்படும்.

ஆ. நேரிடை இடப்பெயர்ச்சியினால் இயங்கும் உட்செலுத்தி

  • இது ஹோசான் வகையைக் காட்டிலும் அதிக விலையுடையதாக இருந்தாலும் உரம் மற்றும் நீர்க்கலவையின் வீதாச்சாரமானது மிகவும் துல்லியமாக இருக்கும்.
  • இவ்வகை உட்செலுத்திகள் 1:100 மற்றும் 1:200 போன்ற விரிவான விகித அளவுகளைக் கொண்டுள்ளன. ஆகையால் பொதுத் தொட்டிகள் கையாளுவதற்கு எளிதாக இருக்கும். அளவிலும் மற்றும் உட்செலுத்திகள் அதிகமாக வீழ்ச்சி விகிதத்துடனும் இருக்கும்.
  • நீர் எக்கி அல்லது மின் எக்கியைக் கொண்டு உட்செலுத்துதலைக் கட்டுப்படுத்தலாம்.
  • ஒற்றை மற்றும் பன்முக தலை வடிவங்களைக் கொண்ட பசுமைக்கூடங்களில் ஆண்டர்சன் உட்செலுத்திகள் மிகவும் பிரபலம் பெற்றவையாகும்.
  • உடசெலுத்தியானது நேரடியாக நீர் குழாயுடன் இணைக்கப்பட்டிருந்தால் உட்செலுத்தியை சுற்றிலும் மாற்றுக் குழாய் ஒன்றை வெறும் பாசன நீரை மட்டும் செலுத்துவதற்காக அமைக்கவேண்டும்.

சொட்டுநீர் உரப்பானத்திலுள்ள சிரமங்கள்

காலகம்

ஈரப்பதம் அடைந்துவிட்ட மண்ணின் விளிம்பில் காலகம் குவிந்தவிடும். ஆகையால் ஈரப்பதமான பகுதியின் விளிம்பில் உள்ள வேர்களுக்கு மட்டுமே தழைச்சத்து கிடைக்கப்பெறுகின்றது. மண்ணரிப்பு மற்றும் நைட்ரஜன் இழப்பீட்டு வினை (denitrification) ஆகியவற்றால் காலக இழப்பு ஏற்படுகின்றது. கீழ்நோக்கி செல்வதால் காலகை - காலகத்தின் நிரந்தர இழப்பு ஏற்படுகின்றது. அதிகமான வெளியேற்று விகிதத்தால் காலகம் பக்கவாட்டடில் இடம்பெயர்ந்து மண்ணரிப்பினால் ஏற்படும் இழப்பும் குறைகின்றது.

எரிகம்

எரிகமானது உமிழிக்கு அருகில் குவிந்துவிடுகின்றது. எரிக நிலைப்பாட்டு திறனால் இதன் திறன் தீர்மானிக்கப்படுகின்றது. உமிழிக்கு அருகில் குறைந்த அழுத்தம் ஏற்பட்டால் அதிக நிலைப்பாடு ஏற்படுகின்றது.

சாம்புரம்

இது பக்கவாட்டிலும் கீழ்நோக்கியும் செல்வதால் உமிழிக்கு அருகில் குவிவதில்லை. இதன் பரவலானது காலகம் மற்றும் எரிகத்தைவிட மிகவும் சீராக இருக்கும்.

நுண்ணூட்டச் சத்துக்கள்

சொட்டுநீர் உரப்பாசனம் வழியாக நுண் ஊட்டச்சத்துக்கள் செலுத்தப்படும்போது போரானைத் தவிர மற்ற அனைத்தும் உமிழியின் அருகில் குவிந்துவிடும். அங்ககப் பொருள் குறைவாக உள்ள மணற்பாங்கான மண்ணரிப்பு மூலம் போரானை இழந்துவிடும். ஆனால் இரும்பு, துத்தநாகம் போன்ற நுண்ßட்டச்சத்துக்களின் இணைப்புப் பொருள்கள் உமிழியைத் தாண்டி சென்றாலும் வேர்ப்பகுதியைத் தாண்டி செல்லாது.

08. பசுமை / பாலிதீன் கூடக் கட்டுமானத்திற்கான விலை மதிப்பீடு

 

 

||| | | | | |

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2014