அலங்காரச் செடிகளில் பயிர்ப் பெருக்கம்
மலர் மற்றும் அலங்காரச் செடிகளைத் தேவையான எண்ணிக்கையில் உற்பத்தி செய்து தோட்டங்களில் நடவுக்காகவும், விற்பனைக்காகவும் பயன்படுத்தலாம். அலங்காரச் செடிகளில் பயிர்ப் பரப்புதல் பொதுவாக இரு முறைகளில் செய்யப்படுகின்றன.
- பாலின இனப்பெருக்கம்
- பாலிலா இனப்பெருக்கம்
பாலின இனப்பெருக்கம்
ஓராண்டு மலர்ச் செடிகள் விதைகளின் மூலம் உற்பத்தி செய்யப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. விதைகளின் மூலம் உற்பத்தி செய்யப்படும் முறையைப் பாலின இனப்பெருக்கம் என்று கூறலாம். இம்முறையில் நன்கு முதிர்ந்த விதைகளைச் சேகரித்து அவற்றை நாற்றாங்கால் தயாரித்து விதைத்து , வளர்ந்த நாற்றுகளை நடுவதற்கு பயன்படுத்தலாம். இவ்வாறு பயன்படுத்தும் போது நமக்குத் தேவையான நிறத்துடன் கூடிய மலர்களை தன் மகரந்தச் சேர்க்கை மூலம் உற்பத்தி செய்து பயன்படுத்துவது அவசியம். அயல் மகரந்தச் சேர்க்கை மூலம் உண்டான விதைகள் தாய்ச்செடியின் குணநலன்களை பெற்றிருக்காது. இம்முறை எளிதானது. அதிக எண்ணிக்கையில் கன்றுகள் உற்பத்தி செய்யலாம். பொதுவாக ஓராண்டு மலர்ப்பயிர்கள் இம்முறையில் பயிர்ப்பெருக்க்ம் செய்யப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. உதாரணம் ஜினியா, பாஸ்மாஸ், கோழிக் கொண்டை, பால்சம்.
பாலிலா இனப்பெருக்கம்
மலர் மற்றும் அலங்காரச்செடிகள் தாய்ச் செடியின் குணநலன்களுடன் பெற பாலிலா இனப்பெருக்கம் பின்பற்றப்படுகிறது. விதையைத் தவிர ஏனைய பகுதியைப் பயன்படுத்துதல் பாலிலா இனப்பெருக்கம் ஆகும். மலர் மற்றும் அலங்காரச் செடிகள் பொதுவாக கீழ்கண்ட முறைகளில் பயிர்ப்பெருக்கம் செய்து பயன்படுத்தப்படுகின்றன.
- குச்சிகளின் மூலம்
- பதியன் மூலம்
- மொட்டுக் கட்டுதல் மூலம்
- ஒட்டுக்கட்டுதல் மூலம்
குச்சிகளின் மூலம்
செடிகளின் குச்சிகளையோ அல்லது இலைகளின் துண்டுகளைக் கொண்டோ பயிர்ப் பெருக்கம் செய்யலாம். குச்சிகளில் 4 வகையானவை பயன்படுத்தப்படுகின்றன.
- இளம் நுனி தளிர்
- மென் தண்டு
- மத்திமத் தண்டு
- கடினத் தண்டு
இளம் நுனித் தளிர் குச்சிகள்
பொன்னாங்கண்ணி, புதினா போன்றவை இளம் நுனித் தளிர்கள் மூலம் பயிர் பரப்பப்படுகின்றன. இம்முறையில் இளம் நுனித் தளிர்கள் கொய்யப்பட்டு நேரடியாக தயார் செய்யப்பட்ட தோட்டங்களில் நடவு செய்யப்படுகின்றன. இவற்றை மாலை நேரங்களில் நடவு செய்து தொடர்ந்து நீர்ப்பாய்ச்சி வளரச் செய்து பயன் பெறலாம். இவ்வகையான செடிகள் தோட்டங்களில் பார்டர்கள் அமைக்க பயன்படுகின்றன.
மென் தண்டு குச்சிகள்
இவை பொதுவாக சற்று வயதான நுனிக் குச்சிகள் ஆகும். கோலியஸ், டுராண்டா மற்றும் கருநொச்சி போன்றவை மென் தண்டுகளின் மூலம் பயிர் பரப்பப்படுகின்றன. இக்குச்சிகள் சற்றேறக்குறைய 10 முதல் 15 செ.மீ நீளத்தில் சிறு துண்டுகளாக வெட்டப்பட்டு நடவுக்கு பயன்படுத்தப்படுகின்றன. இவ்வகை மென் தண்டுகள் நல்ல சதைப் பற்றுடன் நன்கு வளையும் தன்மையுடன் காணப்படும். இவற்றை நேரடியாக நடலாம் அல்லது மேட்டுப் பாத்திகளில் நடவு செய்து வேர் வந்தபின் எடுத்த பாலிதீன் பைகளில் மாற்றிப் பயன்படுத்தலாம்.
மத்திமத் தண்டுக் குச்சிகள்
இவ்வகையான குச்சிகள் மென் தண்டுக்கும் கடினத் தண்டுக்கும் இடைப்பட்ட நிலையில் கானப்படும். இவற்றை வளைக்கும் போது எளிதாக வளையாது. எனினும் கடினமாகவும் இருக்காது. இதில் காணப்படும் செல்லுலோசின் அளவு சற்று குறைவாக இருப்பதால் இவற்றின் குச்சியில் எளிதில் வேர் உண்டாக்க வல்லவை. குரோட்டன், அரேலியா, செம்பருத்தி போன்றவை மத்திமத் தண்டு குச்சிகளின் மூலம் பயிர் பரப்பப்படுகின்றன. இக்குச்சிகள் நாம் எழுதப் பயன்படுத்தும் காகிதப் பென்சில் தடிமனில் இருக்க வேண்டும். ஒவ்வொரு துண்டும் 15 முதல் 20 செ.மீ நீளம் இருக்கலாம். இவற்றின் அடிப்பகுதி சாய்வாகவும் மேல் பகுதி தட்டையாகவும் வெட்டப்பட்டிருக்க வேண்டும். இவ்வாறு குச்சிகளை தயார் செய்யும் போது அவற்றில் குறைந்தது 3-4 முதிர்ந்த மொட்டுகள் இருக்கின்றனவா என்று பார்த்துக் கொள்ள வேண்டும்.
இக் குச்சிகளை நேரடியாக மண், மணல் அல்லது குப்பை (சரிபங்கு) கலந்து நிரப்பப்பட்ட பாலிதீன் பைகளிலோ அல்லது மேட்டுப்பாத்திகளிலோ நட்டு பின்னர் வேர் விட்ட பின்னர் தேவைக்கேற்ப பயன்படுத்தலாம். இவ்வகைக்குச்சிகளை பனிக்கூடங்களில் வளர்ப்பதன் மூலம் அதிக எண்ணிக்கையில் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்து பயன்பெறலாம்.
கடினத் தண்டுக் குச்சிகள்
நன்கு முதிர்ந்து போன பருவக் கிளைக் குச்சிகள் கடினத் தண்டுக் குச்சிகள்
ஆகும். இவை கடினமானதாகக் கானப்படும். இக்குச்சிகளின் மேல்பகுதி பச்சையமின்றிக் கானப்படும். அலங்கார மாதுளை மற்றும் திராட்சை போன்றவை கடினத் தண்டுக் குச்சிகள் மூலம் பயிர் பரப்பப்படுகின்றன. மத்திமத் தண்டுக் குச்சிகள் பயிர்ப்பரப்புதலுக்கு தயாரிப்பது போல் இக்குச்சிகளையும் தயாரித்து நடவு செய்து வேர் வந்த பின்னர் தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொள்ளலாம்.
குச்சிகளை பயன்படுத்தி பயிர்பரப்பும் போது அதன் வேர் வளர்ச்சியை ஊக்குவிக்க, வேர் வளர்ச்சி ஊக்கிகள் பயன்படுத்தலாம். வேர் வளர்ச்சியை ஊக்குவிக்க இன்டோல் பியூட்ரிக் அமிலம் பொதுவாகாப் பயன்படுத்தப்பட்டு வரும் வேர் வளர்ச்சி ஊக்கி. இது வியாபார ரீதியில் செராடிஷ், கிராடிஷ், ரூட்டெக்ஸ் போன்ற பெயரில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குச்சிகளை நீரில் நனைத்து இம்மருந்தில் நனைத்து நடுவதன் மூலம் வேர் உண்டாவதை துரிதப்படுத்தலாம்.
இவை தவிர சிலவகை அலங்காரச் செடிகள் இலைத்தூண்கள் மூலம் பயிர் பரப்பப்படுகின்றன. பாம்புக் கற்றாழை, பிரையோபில்லம் போன்றவை இலைத்துண்டுகள் மூலம் பயிர் பரப்பப்படுகின்றன.
சிலவகை செடிகள் வேர்கள் மூலம் பயிர் பரப்பப்படுகின்றன. விதையில்லா கறிப்பலா வேர்கள் மூலம் பயிர் பரப்பப்படுகின்றன.
மொட்டுக் கட்டுதல்
மொட்டுக் கட்டுதலின் மூலம் பயிர் பெருக்கம் செய்யும் போது தாய்ச் செடியின் குணாதிசயங்கள் மாறாமல் இருப்பதால் இம்முறை ரோஜா போன்ற மலர்ப்பயிர்களில் பின்பற்றப்படுகின்றன. இம்முறையில் எட்வர்டு அல்லது ஆந்திர ரோஜா வகைகள் வேர்ச் செடிகளாக வளர்க்கப்பட்டு அவை வேர் விட்ட பின்னர் அவற்றில் தேவையான இரகங்களின் மொட்டையெடுத்து பொருத்திப் பின்னர் எதிலிருந்து மொட்டுகள் எடுக்கப்பட்டனவோ அந்தத் தாய்ச் செடியின் குணநலன்களுடன் காணப்படும். மொட்டுக் கட்டுதலில் பல முறைகள் இருந்தாலும் அதிகமாக இரு முறைகள் பின்பற்றப்படுகின்றன.
- பட்டை வடிவ மொட்டுக் கட்டுதல்
- ஙகூங வடிவ மொட்டுக் கட்டுதல்
பட்டை வடிவ மொட்டுக் கட்டுதல்
பட்டை வடிவத்தில் மொட்டை வேர்ச்செடியிலிருந்து எடுத்து நீக்கி விட வேண்டும். அதன் பின்னர் அதே மாதிரியான மொட்டு தாய்ச் செடியிலிருந்து எடுத்து வேர் செடியில் பொருத்த வேண்டும். பொருத்தப்பட்ட பின்னர் அதனை பாலித்தீன் தாள் கொண்டு கட்டிவிட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் தாய்ச் செடியிலிருந்து மொட்டு வளர்ந்து செடியாக உருவாகும். இவ்வாறு உருவாக்கப்பட்ட மொட்டுக்கட்டிய கன்றுகளை நட பயன்படுத்தலாம்.
ஙகூங வடிவ மொட்டுக் கட்டுதல்
கவசம் போல் மொட்டுக்களை தாய்ச் செடியிலிருந்து எடுத்து கொண்டு ஙகூங வடிவில் வெட்டிய வேர் செடியின் பட்டையில் உள்ளே செல்லுமாறு பொறுத்திப் பின்னர் பாலிதீன் கொண்டு கட்டி விடவேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் மொட்டுகள் பாதுகாப்பாக பராமரிக்கப்பட்டு எளிதில் துளிர்த்து செடியாக வளரும்.
- விண் பதியம்
- மண் பதியம்
விண் பதியம்
இம்முறையில் செடிகளில் மேல்பகுதியில் காணப்படும் பென்சில் அளவுள்ள தண்டுகளை தேர்வு செய்து அவற்றின் உள்ள பட்டையை ஒரு செ.மீ நீளத்திற்கு வெட்டி எடுத்து விட வேண்டும். இதில் நன்கு வேக வைத்த ஆற வைத்த தென்னை நார் கழிவு வைத்து பாலிதீன் பேப்பர் கொண்டு கட்டி விடவேண்டும். காயம்பட்ட பகுதியிலிருந்து வேர்கள் தோன்றிய பின்னர் அவற்றைத் தாய்ச் செடியிலிருந்து பிரித்து எடுத்து விட வேண்டும். இதனை மண் சட்டிகளில் நட்டு பராமரித்து பின்னர் நடவுக்குப் பயன்படுத்தலாம். இவை செடிகளின் மேல் பகுதியில் செய்யப்படுவதால் விண் பதியம் என்று பெயர் பெற்றது.
மண் பதியம்
தரையோடு அல்லது தரைக்கு அருகில் காணப்படும் குச்சிகளை தேர்வு செய்து மண் பதியத்திற்கு பயன்படுத்தலாம். பென்சில் அளவுள்ள குச்சிகளை தேர்வு செய்து நுனியிலிருந்து ஒரு அடி தள்ளி சிறு காயம் செய்த பகுதியை மண் நிரப்பப் பட்ட தொட்டியில் நன்கு உட்புகுமாறு செலுத்தி அதன் மேல் தேவைப்படும் அளவு மண்ணிட்டு நிரப்பி குச்சி மேலே வராமல் இருக்க சிறிய கல் ஒன்றை வைக்க வேண்டும். தொட்டிக்கு தொடர்ந்து நீர் ஊற்றி வர குச்சிகள் வேர்விடத் தொடங்கும். இரண்டு மாத காலத்தில் வேர் வளர்ந்த பின்னர் தாய்ச் செடியிலிருந்து பிரித்து பின்னர் நடவுக்கு பயன்படுத்தலாம்.
ஒட்டுக்கட்டுதல்
பொதுவாக இம்முறை அலங்காரச் செடிகளில் பின்பற்றுவது இல்லை. ஒட்டுக் கட்டுதலின் போது தாய்ச் செடியிலும், வேர்ச் செடியிலும் ஒரே மாதிரியான காயங்கள் ஏற்படுத்தி இணைத்துப் பின்னர் துணியினால் அல்லது பாலிதீன் பேப்பர் மூலம் கட்டி விடுவர். இம்முறை பழங்கள் பயிர்பரப்ப அதிகம் பின்பற்றப்படுகிறது.
|