திருநீற்றுப் பச்சிலை
ஆசிமம் பேசிலியம் - லேமியேசியே |
திருநீற்றுப் பச்சிலை, தெற்கு ஆசியாவை பிறப்பிடமாகக் கொண்ட மூலிகையாகும். தற்போது பிரான்ஸ், இந்தோனேஷியா, மொராக்கோ, அமெரிக்கா, இத்தாலி ஆகிய நாடுகளில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்களில் சில இடங்களில் வணிக ரீதியாகப் பயிர் செய்யப்படுகிறது. எஸ்ட்ரகால் (Estragol), யூஜினால் (Eugenol) லினலூள் (Linalol), தைமால் (Thymol), டேனின் (Tannin), காம்ஃபர் (Basil camphor) போன்ற வேதிப் பொருட்களும் அடங்கியுள்ளன. இலையிலிருந்து 0.5 சதம் வாசனை எண்ணெய் எடுக்கப்படுகிறது. இந்த எண்ணெய் பூச்சி கொல்லியாகவும் பயன்படுத்தப்படுகிறது.
இரகங்கள்
திருநீற்றுப் பச்சிலையில் நான்கு வகைகள் உள்ளன. அவை ஐரோப்பிய வகை, ரீயூனியன் வகை, சின்னமேட் வகை மற்றும் யூஜினால்.
மண் வகை
இயற்கை வளம் மிகுந்த, வடிகால் வசதியுடன் உள்ள மண் வகையில் வளரக் கூடியது.
தட்பவெப்ப நிலை
சமவெளியில், வெப்பம் அதிகமான பகுதியிலும் வளரக் கூடியது. பனியின் தாக்குதல் உற்பத்தியைப் பாதிக்கும்.
விதையளவு
ஒரு எக்டரில் விதைக்க 5 கிலோ விதைகள் தேவைப்படும்.
நாற்றங்கால்
வடிகால் வசதியுடைய, நன்கு உழது சமன் செய்யப்பட்ட நிலத்தில் 15 டன் தொழு எரு இட்டு கொத்தி உயரமான பாத்திகள் அமைக்க வேண்டும். 10 மீட்டர் நீளம், 1 மீட்டர் அகலம் 10-15 செ.மீ உயரமுள்ள பாத்திகளை அமைக்க வேண்டும். விதைகளை வரிசைகளில்1-2 செ.மீ ஆழத்தில் விதைக்க வேண்டும். விதைத்த பிறகு நன்கு சலித்த மணல் கொண்டு மேல் பரப்பை மூட வேண்டும். விதையை விதைக்கும் முன்பே பாத்திகளைத் தண்ணீர் தெளித்து ஈரமாக வைத்திருக்க வேண்டும். விதைகளை விதைத்த பின்பும் நீர் தெளிக்க வேண்டும். தினமும் பூவாளி கொண்டு தண்ணீர் தெளிக்க வேண்டும்.
நடைமுறை
விதைகள் 10-15 நாட்களுக்குள் முளைத்து விடும். 7-10 செ.மீ உயரமுள்ள நாற்றுகளை வயலில் நட வேண்டும். ஒரு எக்டா் நிலத்தில் 15 டன் தொழு எருவை அடியுரமாக இட்டு, நன்கு உழுது சமன் செய்த பிறகு நாற்றுகளை நட வேண்டும்.
பருவம்
மார்ச் – ஏப்ரல் மாதங்களில் 20 நாட்கள் வயதுடைய நாற்றுகளை நடவு செய்யலாம்.
இடைவெளி
வரிசைகளுக்கிடையே 75 செ.மீ இடைவெளியும், செடிகளுக்கிடையே 30 செ.மீ இடைவெளியும் இருக்க வேண்டும்.
பின்செய் நேர்த்தி
நாற்றுகளின் நுனியை அதாவது முதல் பூவைக் கிள்ளி விட வேண்டும். இவ்வாறு செய்தால் செடியின் பக்க வளர்ச்சி அதிகரித்து அதிகப் பலன் கிடைக்கும்.
உரமிடுதல்
எக்டருக்கு 20 டன் தொழு எரு இடுவது அவசியம். செடிகளின் சீரான வளர்ச்சிக்கு எக்டருக்கு 50 கிலோ தழைச்சத்து உரத்தை அடியுரமாக இட வேண்டும். மூன்றாவது மாதத்தில் திரும்பவும் 50 கிலோ தழைச்சத்து உரத்தை இட வேண்டும்.
பயிர்ப் பாதுகாப்பு
பூச்சி நோய் தாக்குதல் அதிகம் கிடையாது.
அறுவடை
நாற்றுகளை நட்ட மூன்றாவது மாதத்திலிருந்து இலைகளை அறுவடை செய்யலாம். ஒரு ஆண்டிற்கு மூன்று அல்லது நான்கு முறை அறுவடை செய்யலாம். அறுவடை செய்த இலைகளை நிழலில் உலர்த்தி பின்பு சேமித்து வைக்கவோ, எண்ணெய் எடுக்கவோ பயன்படுத்தலாம்.
மகசூல்
ஒரு எக்டருக்கு 13-14 டன் இலைகளை மகசூலாகப் பெறலாம்.
|