தோட்டக்கலை :: மூலிகை பயிர்கள் ::மணத்தக்காளி

மணத்தக்காளி

தாவரப் பெயர் :சொலானம் நைக்ரம்
குடும்பம் : சொலானசியே

பயன்கள்:

மணத்தக்காளியானது  வாத நோய், வீக்கம், இருமல், ஆஸ்துமா, மார்ப்புச்சளி நோய், காயம், அல்சர், வயிற்றுப் பொருமல், வயிற்று மந்தம், ஈரல் வீக்கம், காதுவலி, கண் மருத்துவம், வாந்தி, இதய நோய், தொழு நோய், தோல் நோய்கள், காய்ச்சல், மண்ணீரல் வீக்கம், நச்சு தடை மருந்து, ஒவ்வாமை, இதய மருந்து, புண்ணாற்றுமை, செரிமானம், குடலிளக்கி, புத்துணர்ச்சி, மனதை அமைதிப்படுத்துதல் ஆகிய நோய்களுக்கு மருந்தாகவும்  மற்றும் சத்து மருந்தாகவும் முழுத் தாவரமும் பயன்படுகிறது.

மண் மற்றும் காலநிலை:

வெப்ப மற்றும் மிதவெப்ப மண்டல பகுதிகளில் 2000மீ குத்துயரத்தில் மணத்தக்காளி நன்கு வளரும். அங்ககத் தன்மை அதிகமுள்ள மண் இதற்கு ஏற்றது. இது வறண்ட, கற்கள் நிறைந்த, மணற்பாங்கான அல்லது ஆழமான மண்ணில் நன்கு வளரும். ஈரப்பதமுள்ள மணலில் களையாக வளருகிறது. வெப்ப மற்றும் மிதவெப்ப மண்டல வேளாண் காலநிலை மண்டலத்தில் சாகுபடி செய்யலாம்.

நாற்றங்கால் தயாரித்தல் மற்றும் நடவு:

விதைகள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. நாற்றுகள் நாற்றங்காலிலிருந்து 30-45 நாட்களில் பயிர் 8-10 செ.மீ உயரம் அடைந்தவுடன் விளைநிலங்களில் நடவு செய்யப்படுகின்றது. மழை காலத்தில் நடவானது வரப்புகளிலும் வெயில் காலத்தில் வாய்க்காலிலும் செய்யப்படுகிறது.  30 – 90 செ.மீ இடைவெளியில் பயிரின் படரும் தன்மையைப் பொறுத்து நடவு செய்ய வேண்டும். வெயில் காலங்களில் நடவு செய்யப்பட்ட பயிருக்கு தற்காலிக நிழல் 2-4 நாட்களுக்கு அளிக்க வேண்டும்.

உர மேலாண்மை:

நிலத்தை தயார் செய்யும்போது தொழுவுரம் எக்டருக்கு 20-25 டன் அளிக்க வேண்டும். தழை, மணி மற்றும் சாம்பல் சத்து எக்டருக்கு முறையே 75:40:40 அளிக்க வேண்டும். சாம்பல் சத்தை அடியுரமாக அளிக்க வேண்டும். தழை மற்றும் மணிச்சத்தை 2-3 பிரிவுகளாக அளிக்க வேண்டும்.

நீர் மேலாண்மை:

நாற்றங்கால் மற்றும் பயிருக்கு வார இடைவெளியில் பாசனம் செய்ய வேண்டும். பயிரில் பூ அரும்பும் வரை பாசனம் செய்ய வேண்டும்.

ஊடுசாகுபடி:

களை எடுத்தபின் மற்றும் மேலுரம் அளித்த பின் பயிருக்கு மண் அணைத்தல் வேண்டும்.  வெயில் காலங்களில் 3-4 நாட்களுக்கு ஒரு முறை பாசனம் செய்ய வேண்டும் மற்றும் காய் பருவத்தில்  ஒரு நாள் விட்டு ஒரு நாள் பாசனம் செய்ய வேண்டும். அதிக காய்க்கும் தன்மை கொண்டதால் சாயாமல் இருக்க பயிருக்கு முட்டுக்கொடுக்க வேண்டும்.

பயிர் பாதுகாப்பு:

தண்டுத் துளைப்பான், மாவுப்பூச்சி மற்றும் இலை பிணைக்கும் புழு ஆகியவை பயிரில் காணப்படும். இவற்றைக் கட்டுப்படுத்த மிதமான பூச்சிக்கொல்லிகள் தெளித்தால் போதுமானது. வேர் முடிச்சுப் புழு, வாடல் நோய் ஆகியவற்றை நிலத்தை சுத்தம் செய்தல், பயிர் சுழற்சி மற்றும் பயிர் எச்சங்களை எரிப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.

அறுவடை மற்றும் மகசூல்:

மண் மற்றும் காலநிலையைப் பொறுத்து மணத்தக்காளி 4-6 மாதங்களில் அறுவடைக்குத் தயாராகும். மணத்தக்காளி செடி சேகரிக்கப்பட்டு நிழலில் உலர்த்தப்படுகிறது.

மகசூல்:

எக்டருக்கு 12-20 டன் மூலிகை கிடைக்கிறது.

 
மணத்தக்காளி பழம்
மணத்தக்காளி பூக்கள் மற்றும் பழம்
மணத்தக்காளி பூக்கள்
மணத்தக்காளி செடி

ஆதாரம்:

Dr. K. Rajamani, Department of Medicinal Plants,TNAU,
Medicinal plants production towards globalization,
Page no: 107-111.
ISBN no:978-81-905951-1-7