நீர் பிரம்மி உலகம் முழுவதும் ஈரப்பதமான பகுதிகளில் காணப்படும். பொதுவாக இது ஈரமான மற்றும் சதுப்பு நிலங்களில் வளரும் படரும் தாவரமாகும்.
பயன்கள்:
நீர் பிரம்மி நரம்பு டானிக்காக உபயோகிக்கப்படுகிறது. வலிப்பு நோய் மற்றும் மனநோய்க்கு மருந்தாக பயன்படுகிறது. இவை சிறுநீர்ப் பெருக்கியாக மற்றும் மூட்டு நோய்க்கு, ஆஸ்துமாவிற்கு மருந்தாக பயன்படுகிறது. இதனுடன் நீர் பிரம்மி இருமல், காய்ச்சல் மற்றும் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது. இதன் பாரம்பரிய குணம் ஞாபக சக்தியை அதிகரிக்கிறது. இதன் பயன்களால் இவை உலகம் முழுவதும் வணிக ரீதியாக சாகுபடி செய்யப்படுகின்றன. சித்த மருத்துவத்தில் இவை, மூட்டு வலி, இணைப்புகளில் வீக்கம், மற்றும் மலச்சிக்கலுக்கு மருந்தாக பயன்படுகிறது. இவை குரல்வளை அழற்சி, நெஞ்சு எரிச்சல் மற்றும் மனநோய்க்கு மருந்தாக பயன்படுகிறது.
மண் மற்றும் காலநிலை:
இந்தியா முழுவதும் நீர் பிரம்மி கால்வாய்கள் மற்றும் நீர்நிலை பகுதிகளில் காணப்டுகிறது. வடிகால் அல்லாத மண்ணில் நன்கு வளரும். இயற்கையாக அமிலத் தன்மை கொண்ட மண் விரும்பப்படுகிறது.
வெப்ப மண்டல மற்றும் மிதவெப்பமண்டல பகுதிகளில் வளரும். பயிர் 330 – 440செ. வெப்பநிலை மற்றும் 60-65 சதவிகித ஈரப்பத்தில் நன்கு வளரும்.
இனப்பெருக்கம்:
நீர் பிரம்மி இளம் தண்டுத் துண்டின் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. அதிகப்படியாக இனப்பெருக்கம் செய்ய முழுத் தாவரமும் சிறுசிறு துண்டுகளாக வெட்டப்பட்டு படுக்கைகளில் நடவு செய்யப்படுகிறது. ஒரு எக்டருக்கு 62,500 இளம் தண்டுத் துண்டுகள் தேவைப்படும். பயிர் விரைவாக வளர இளம் தண்டுத் துண்டுகள்
5-6 மீ நீளம், சில இலைகள் மற்றும் கணுக்களுடன் இருக்க வேண்டும்.
அதிக விளைச்சல் பெற விளை நிலங்களில் தண்டுத் துண்டுகள் ஈரமான மண்ணில் 10 x 10 செ.மீ இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். நடவு செய்தவுடன் பாசனம் செய்ய வேண்டும். அதிக மூலிகை மகசூல் பெற ஜூலை –ஆகஸ்ட் மாதங்களில் நடவு செய்ய வேண்டும்.
உர மேலாண்மை:
நிலத்தை தயார் செய்யும்போது அடியுரமாக எக்டருக்கு 5டன் தொழுவுரம் அளிக்க வேண்டும். தழை, மணி மற்றும் சாம்பல் சத்து எக்டருக்கு முறையே 100:60:60கிகி பரிந்துரைக்கப்படுகிறது.
நீர்ப்பாசனம்:
பயிர் வளர்ச்சிக்கு நடவு செய்தவுடன் பாசனம் செய்வது அவசியமாகும். பிறகு, 7-8 நாட்கள் இடைவெளியில் பாசனம் செய்ய வேண்டும். மழை காலங்களில் பாசனம் செய்வதை தவிர்க்க வேண்டும்.
ஊடு சாகுபடி:
ஆரம்பத்தில், 15-20 நாட்களுக்கு ஒரு முறை கைக்களை எடுக்க வேண்டும். பயிர் அடர்த்தியாக வளர்ந்த பிறகு அவ்வப்போது களையெடுத்தல் போதுமானது.
பயிர் பாதுகாப்பு:
பெதுவாக பயிரில் வெட்டுக்கிளி காணப்படுகிறது. இதனைக் கட்டுப்படுத்த வேம்பு சார்ந்த பூச்சிக்கொல்லி அல்லது 0.2 சதவிகிதம் நுவகுரோன் அல்லது ரோகர் தெளிக்கவும்.