பூச்சிகள் |
மேலாண்மை முறைகள் |
காண்டாமிருக வண்டு
|
- இறந்த மரங்களைத் தோப்புகளிலிருந்து அகற்றி எரித்துவிடல் வேண்டும். ஏனெனில் அவைகள் வண்டினம் இனப்பெருக்கத்துக்கு உகந்த இடமாகிவிடுகிறது.
- தொழு உரத்தை குழிகளிலிருந்து எடுக்கும் போது அவற்றிலிருக்கும் புழுக்கள் மற்றும் கூட்டுப்புழுக்களைச் சேகரித்து அழித்துவிடவேண்டும்.
- புழுக்களை உண்டு அழிக்கும் பச்சை மஸ்கார்டைன் பூஞ்சாணத்தை (மெட்டாரைசியம் அனிசோபிலியே) எருக்குழிகளில் கலந்து விடவேண்டும். இவ்வகைப் பூஞ்சாணம் அரசு உயிரியல் ஆய்வகங்களில் வளர்க்கப்படுகிறது. இப்பூஞ்சாணம் ஆய்வகத்தில் சோளம் மற்றும் காரட் போன்றவற்றில் வளர்க்கப்படுகிறது.
- ஒரு கிலோ ஆமணக்குப் புண்ணாக்கினை 5 லிட்டர் தண்ணீரில் மண்பானைகளில் ஊறவைத்து, தோப்புகளில் ஆங்காங்கே வைத்து வண்டுகளைக் கவர்ந்து அழிக்கவும்.
- பச்சைத் தென்னை மட்டைகளை நீளவாக்கில் பிளந்து அல்லது அழுகிய இளம் தென்னை மரத்தண்டுப் பகுதியினை கள்ளில் நன்குத் தோய்த்து, தோப்புகளில் ஆங்காங்கே வைப்பதன் மூலம் வளர்ந்த வண்டுகளைக் கவர்ந்தழிக்கலாம்.
- ஒவ்வொரு முறையும் தேங்காய் எடுக்கும் தருணத்தில் தென்னை மடல் பகுதிகளை நன்கு சோதிக்கவேண்டும். அரை மீட்டர் நீளமுள்ள குத்தூசிக் கொண்டு மடல்களுக்கும் குருத்துகளுக்கும் இடையே செருகி, வண்டிருப்பதைச் சோதித்து, இருந்தால் குத்தி எடுத்துவிடவேண்டும்.
- தென்னங்கன்றுகளில் அடிப்பாகத்தில் பண்ணாடைகளின் உட்பகுதியில் மூன்றரை கிராம் எடையுள்ள மூன்று பூச்சிக்குண்டுகளை (பாச்சை உருண்டைகளை (அ) அந்துப் பூச்சி உருண்டைகளை) ஒரு கன்றுக்கு என்ற அளவில் 45 நாட்களுக்கு ஒருமுறை வைத்து கன்றுகளை வண்டின் தாக்குதலிலிருந்துத் தவிர்க்கலாம்.
- விளக்குப் பொறியை முதல் கோடைமழை சமயங்களில் மற்றும் பருவமழைக் காலங்களிலும் அமைத்துக் கவர்ந்தழிக்கலாம்.
- விளக்குப் பொறியை முதல் கோடை மழை சமயங்களில் மற்றும் பருவமழைக் காலங்களிலம் அமைத்துக் கவர்ந்தழிக்கலாம்.
- பேக்குலோ நச்சுயிரியும் இவ்வண்டினத்தைத் தாக்கி அழிக்கிறது. இந்நச்சுயிரி உட்செலுத்தப்பட்ட வண்டுகளைத் தோப்புகளில் விடுவதன் மூலம் நச்சுயிரி அடுத்து வரும் சந்ததிகளில் பரவிப் புழுப்பருவத்தில் அழிவை ஏற்படுத்துகிறது. பேக்குளோ நச்சுயிரி நோய் தாக்கிய வண்டுகளை எக்டர் ஒன்றுக்கு 15 வீதம் தோப்புகளில் விடவும்.
- வேப்பங்கொட்டைத் தூள் அல்லது வேம்பு பருப்புத் தூள் 150 கிராமுடன் இரண்டு மடங்கு மணலைக் கலந்து மடல் பகுதிகளில் உள்ளிருந்த மூன்றாவது மட்டைகளின் அடிப்பகுதியில் பண்ணாடைகளுக்கு இடையில் வைப்பதன் மூலம் வண்டுகளால் ஏற்படும் சேதத்தைத் தவிர்க்கலாம்.
- போரெமட 10 சத குருணை மருந்து 5 கிராமை ஒரு சிறிய அடிப்பகுதியில் குண்ட ஊசியால் துளையிட்ட பாலீத்தீன் பையில் எடுத்துககொண்டு அடை மடல் பகுதிகளில் உள்ளிருந்து இரண்டாவது இடைவெளியில் இருமுறை வைப்பதன் மூலம் வண்டுகளால் ஏற்படும் சேதத்தைத் தவிர்க்கலாம்.
- ரைனோலூர் (Rhinolure) இனக்கவர்ச்சிப் பொறிகளை இரண்டு எக்டருக்கு ஒன்று வீதம் வைத்து வண்டுகளைக் கவர்ந்து அழிக்கவும்.
|
கருந்தலைப்புழு
|
- இப்பூச்சியின் தாக்குதல் நவம்பர் மாதம் முதல் மே மாதம் வரையிலும் மற்றும் பருவமழைக்குப்பின் ஆகஸ்ட் மாதம் முதல் நவம்பர் மாதம் வரைக் காணப்படும். தென்னையின் அனைத்து வயதுடைய மரங்களையும் தாக்கும்.
- கோடைக்காலத்தில், கருந்தலைப்புழுக்களின் உற்பத்தி அதிகமாக காணப்பட்டால் எக்டருக்கு ஒட்டுண்ணிகளான பெத்திலிட் 3000 என்ற அளவிலும் மற்றும் பிரகோனிட் 4500 என்ற அளவில் விடவேண்டும். ஒட்டுண்ணி பொறி மூலம் ஒட்டுண்ணிகளை மரத்தில் விடவேண்டும். ஒட்டுண்ணிகளை மரத்தின் உச்சியில் (மட்டைகளுக்கு இடையில் ) விடக்கூடாது.
- இலைகளில் கருந்தலைப்புழு முதல் இரு நிலைகளில் காணப்பட்டால், எக்டருக்கு பெத்திலிட் என்ற புழு ஒட்டுண்ணியை 3000 அல்லது 1:8 (கருந்தலைப்புழு ஒட்டுண்ணி) என்ற அளவில் விடவேண்டும்.
- தாக்கப்பட்ட இலைகளை வெட்டி எரித்துவிடவேண்டும்.
- இளமரங்களில், கருந்தலைப்புழுக்களின் சேதம் காணப்பட்டால், மாலத்தியான் 50 சதம் ஒரு மில்லி மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்துத் தெளிக்கலாம்.
- வேர்மூலம் செலுத்துதல் மானோகுரோட்டாபாஸ் 36 சத மருந்து 10 மில்லியுடன் 10 மில்லி தண்ணீர் கலந்து வேர் மூலம் செலுத்திக் கட்டுப்படுத்தலாம். மருந்து செலுத்திய 45 நாட்கள் கழித்துதான், இளநீர் மற்றும் தேங்காய்களைப் பறிக்கவேண்டும்.
|
சிகப்புக் கூன் வண்டு
|
- காண்டாமிருக வண்டுகள் தாக்குதலுக்கு இல்ககான மரங்களை இவ்வண்டுகள் எளிதில் தாக்குகின்றன. எனவே காண்டாமிருக வண்டுகள் தாக்குதலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.
- காய்ந்த மற்றும் சேதம் அடைந்த மரங்களின் பகுதிகள் மற்றும் இறந்த மரங்களை அகற்றி அழித்து வண்டின் இனப்பெருக்கத்தை தடுக்கவேண்டும்.
- மரத்தில் சேதம் ஏற்படாமல் முடிந்த வரை பார்த்துக்கொள்ளவேண்டும். அவ்வாறு சேதம் ஏற்பட்டால் சிமெண்ட் கொண்டு அவற்றை அடைத்து இவ்வண்டுகள் முட்டையிடுவதைத் தடுக்கலாம்.
- பச்சை மட்டைகளைவெட்டுவதைத் தவிர்க்கவேண்டும்.
- ஒரு ஏக்கருக்கு கரும்புச் சர்க்கரைப்பாகு (Molasses) 2.5 கிலோ (அ) கள் 2.5 லிட்டர் + அசிடிக் அமிலம் 5 மில்லி + ஈஸ்ட் மாத்திரை 5 கிராம் இவற்றுடன் முப்பது தென்னை மட்டைகளை நீளவாக்கில் சிறு துண்டுகளாக்கி சேர்த்து தோப்புகளில் வைத்து கூன் வண்டுகளைக் கவர்ந்து அழிக்கலாம்.
- கூன் வண்டின் தாக்குதலைத் தவிர்க்க தோப்பைத்
- துப்புரவாக வைப்பது மிகவும் அவசியம்.
- வேர் மூலம் மானோகுரோட்டோபாஸ் மருந்தை 10 மில்லி + 10 மில்லி தண்ணீரில் கலந்து 45 நாட்கள் இடைவெளியில் 3 தடவைச் செலுத்தவும்.
- வேர் மூலம் மருந்து செலுத்துதல் தாக்கப்பட்ட பகுதினைச் சுற்றி ஏதாவது ஒரு இடத்தில் குழிபறித்து ஒரு நல்ல இளம் வேர் ஒன்றை எடுக்கவும். பிறகு ஒரு பாலித்தீன் பையில் (7 x 10 செ.மீ) 10 மில்லி மானோகுரோட்டாபாஸ் மருந்துடன் 10 மில்லி தண்ணீரைக் கலந்து எடுத்துக்கொள்ளவும். பின்பு வேரின் நுனியைக் கத்தியினால் நீளமாகச் சீவி விட்டு இந்த வேரை பாலித்தீன் பையில் உள்ள மருந்துக்கலவையில் நனையும்படி வைத்துப் பையை வேருடன் இணைத்துக் கட்டிவிடவேண்டும். 24 மணி நேரத்தில் மருந்து உறிஞ்சப்படுகிறதா என்றுத் சோதித்துக் குழியினை மூடலாம். அப்படி மருந்து உறிஞ்சப்படவில்லை என்றால் வேறு ஒரு வேரை எடுத்துச்செலுத்தவேண்டும்.
- குறிப்பு : வேர் மூலம் மருந்து செலுத்திய பின் 45 நாட்கள் கழித்து இளநீர் மற்றும் காய்களைப் பறிக்கவும்.
|
கரையான்
|
- தென்னை தோப்புகளுக்கு அருகாமையில் காணப்படும் கரையான் புற்றுக்களைக் கண்டறிந்து அழிக்கவும்.
- வேப்பம் எண்ணெய் 5 சதம் மருந்துக் கரைசலை மரங்களின் அடிப்பாகத்தில் 2 அடி உயரத்திற்குத் தடவவும்.
- குளோர்பயிரிபாஸ் மருந்து 3 மில்லி ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.
- தென்னை மட்டைகளை சேமித்து வைக்க கீழ்க்கண்ட மருந்துகளில் ஏதேனும் ஒன்றினைத் தெளிக்கவும்.
- காப்பர் சல்பேட் 1% (அ) முந்திரி கொட்ட எண்ணெயை (80% ) நீரில் கலந்து வேப்ப எண்ணெய் 5% (அ) வேம்புகாய்பொடி 20% தெளிப்பதன் மூலம் தென்னை ஓலைகளைக் கரையான் தாக்காமல் தடுக்கலாம்.
|
செதில் பூச்சிகள் |
- இளநீர் மற்றும் முதிர்ந்த தென்னய்காய்களைப் பறித்து விட்டு மானோகுரோட்டாபாஸ் 36 இசி ஒரு மில்லி அல்லது டைமித்தோயெட் 30 இசி 1.25 மில்லி மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து, பாதிக்கப்பட்ட காய்களின் மேல் தெளிக்கவும்.
- குறிப்பு : மருந்து தெளித்த 45 நாட்கள் கழித்து இளநீர் மற்றும் காய்களைப் பறிக்கவும்.
மீன் எண்ணெய் சோப்புக் கரைசலை 2.5 சதம் தெளிக்கவும்.
|
மாவுப் பூச்சிகள் |
- பாதிக்கப்பட்ட தென்னை மட்டை மற்றும் இலைகளை வெட்டி எரிக்கவும். கீழ்க்கண்ட மருந்துகளில் ஏதேனும் ஒன்றினை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து, பாதிக்க்பபட்ட காய்களின் மேல் தெளிக்கவும்.
- மாலத்தியான் 50 இசி 2 மில்லி
- டைமித்தோயேட் 30 இசி 1 மில்லி
- மீதைல்தோயெட் 25 இசி 1 மில்லி
- பாஸ்பாமிடான் 40 எஸ்.எல். 1.25 மில்லி
- மானோகுரோட்டோபாஸ் 36 டபுள்யூ.எஸ்.சி 1 மில்லி
- மிதோமில் 25 இசி 1 மில்லி
- வேப்பண்ணெய் 30 மில்லி
|
பழுப்பு நிறப்புழு, குரும்பைப் புழு மற்றும் குரும்பை நாவாய்ப்பூச்சி |
- தென்னைகளை நன்கு கவனித்து, வளராத இளம் புழுக்கள் இருப்பின் அவற்றை சேகரித்து அழித்து விட வேண்டும் பின்பு கார்பரில் 0.1 % மருந்தினை தெளிக்கவும்.
- மோனோகுரோட்டாஃபாஸ் மருந்தினை 5 மி.லி. + 5 மி.லி. நீருடன் சேர்த்து 15 நாட்கள் இடைவெளியில் வேர் மூலம் செலுத்த வேண்டும்.
|
நத்தைப் புழு (அ) எரிப்பூச்சி |
- இப்பூச்சியினால் தாக்கப்பட்ட கீழ்வரிசையில் உள்ள மட்டைகளை வெட்டி, அவற்றைத் தோப்பிலிருந்து அப்புறப்படுத்தி, தீவைத்து எரித்து அழிக்கவேண்டும்.
- புழுக்கள் அதிகம் தாக்கப்பட்டத் தென்னை தோப்புகளில் டிராக்டரில் பொருத்தப்பட்ட அதிக விசையுள்ள மருந்து தெளிப்பான் கருவி கொண்டு, டைக்குளோர்வாஸ் 2 மில்லி அல்லது மீதைல்டெமட்டான் 25இசி 4 மில்லி அல்லது அசோபாஸ் 5 மில்லி அல்லது பேசில்லஸ் துருண்ஜியன்சிஸ் பாக்டீரியா 2 கிராம் மருந்தினை ஒரு லிட்டர் தண்ணீருடன் ஒட்டுத்திரவம் (டீபால்) 0.5 மில்லி கலந்து தெளித்தோ அல்லது மரம் ஒன்றுக்கு மானோகுரோட்டாபாஸ் மருந்து 15 மில்லியுடன் 15 மில்லி தண்ணீர் கலந்து வேர் மூலம் செலத்திக்கட்டுப்படுத்தலாம். இவ்வாறு செலுத்தப்படும் மரங்களில், 45 நாட்களுக்கு இளநீர் மற்றும் தேங்காய் பறித்தலைத்தவிர்க்கவேண்டும்.
- எரிப்பூச்சியின் புழுக்களைத் தாக்கி அழிக்கும் கேந்திகேனோ வகை இரைவிழுங்கி நாவாயப்பூச்சி, சில இடங்களில் இயற்கையில் காணப்படுகிறது. இவைத் தென்படும் தோப்புகளில் மருந்தை தெளிக்காமல் இருப்பது நல்லது. ஏனெனில் இந்நாவாய்ப்பூச்சிகள் பெருகி, நத்தைப்புழுக்களின் சாற்றை உறிஞ்சி இயற்கையாகவே கட்டுப்படுத்தும்.
|
பட்டைத் துளைப்பான் (ஸ்கோழடிட் வண்டு) |
- தென்னை மரத்தில் தரையிலிருந்து 3 அடி உயரத்தில் ஒரு சிறிய துளை போடவும். பென்தியான் 100 இசி 2 மில்லி அல்லது டைகுளோர்வாஸ் 76 டபுள்யூ.எஸ்.சி 3 மில்லி மருந்தை ஒரு லிட்டர் தண்ணீர் கலந்துக் கொள்ளவும். ஒரு விளக்கு திரியை மேலே கூறிய மருந்துகளில் ஏதேனும் ஒன்றில் நனைத்து அதை துளையில் வைத்துக் களிமண் கொண்டு மூடவும். சேதம் அதிகம் இருந்தால் ஒருமாத இடைவெளியில் மீண்டும் ஒரு முறை இதனைச் செய்யவும்.
|
மரநாய்
|
- பழுத்த வாழைப்பழத்தில் 500 கிராம் கார்போபியூரான் 3 சத குருணை மருந்தைக் கலந்த உணவுப்பொறிகளை பரவலாக மட்டைகளில் வைத்து இவைகளைக் கட்டுப்படுத்தலாம்.
|
தென்னை எலிகள் |
- தென்னை மட்டைகளுக்கு இடையெ உள்ள காய்ந்த பாளைகள், பன்னாடைகளை நீக்கி, சுத்தம் செய்தால், எலிகள் தங்க வசதி இருக்காது. எலிகள் இனவிருத்தி அடையாது.
- மரங்களில் புரோமோடயலோன் 0.005 சதம் அளவில், மரம் ஒன்றிற்கு 10 கிராம் வீதம், 12 நாட்கள் இடைவெளியில் வைத்து எலிகளைக் கவர்ந்து அழிக்கலாம். வயலில் 5 மரங்களுக்கு ஒன்று என்ற விகிதத்தில் எலி மருந்து வைத்தல் போதுமானது.
- எலிப்பொறிகள் வைத்தும் கவர்ந்து அழிக்கலாம்.
- மரங்களில் பின் நோக்கி வளைக்கப்பட்ட கூம்பு போன்ற தகரத்தை அடித்து எலிகள் மேலே ஏறாமல் தடுக்கலாம்
|