தோட்டக்கலை :: மலைத்தோட்டப் பயிர்கள் :: தென்னை

முக்கிய ஊட்டச்சத்துகள்

1. தழைச்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்:

இது மண்ணில் சரியான அளவு தழைச்சத்து இல்லாததால் ஏற்படுகிறது. தழைச்சத்து பற்றாக்குறையானது,  முதிர்ந்த ஓலைகளில் பச்சையம் இழந்து,  மஞ்சள் நிறத்தில் காணப்படும்.  இந்த மஞ்சள் நிற அறிகுறியானது ஓலையின் நுனியிலிருந்து ஆரம்பித்து,  அடிபகுதி வரை பரவி காணப்படும். இதன் விளைவாக இளம் ஓலைகள் நிறமிழந்தும், முதிர்ந்த ஓலைகள் மஞ்சள் நிறத்திலும் காணப்படும்.  தழைச்சத்து பற்றாக்குறை மிக அதிகமாக இருக்கும்போது மரத்தின் வளர்ச்சி தடைப்பட்டு, ஓலைகள் உதிர்ந்துவிடும்.

கண்டறியும் முறைகள்

தழைச்சத்து பற்றாக்குறையை அறிகுறிகளைக் கொண்டே எளிதில் கண்டறியலாம். இலை ஊட்டச்சத்து சோதனை மூலமும் கண்டறியலாம். இதன் அறிகுறிகள், இரும்பு மற்றும் கந்தகச்சத்து பற்றாக்குறையின் அறிகுறிகளைப் போன்றே காணப்படும்.  இரும்பு மற்றும் கந்தகச் சத்து பற்றாக்குறையின் அறிகுறிகள் இளம் ஓலைகளில் காணப்படும். ஆனால் தழைச்சத்து பற்றாக்குறையானது இதற்கு எதிர்மாறாக முதிர் இலைகளில் காணப்படும்.

கட்டுப்படுத்தும் முறைகள்:

2% யூரியாவை இலை வழி 15 நாட்கள் இடைவெளியில் 3 முறை தெளித்தல் அல்லது மரம் ஒன்றிற்கு 1-2 கிலோ யூரியாவை மண்ணில் இடுதல் அல்லது 1% (200 மி)யூரியாவை வேர்வழி ஊட்டமாக வருடத்திற்கு இருமுறை செலுத்துதல்.

பற்றாக்குறை அறிகுறிகள்



2. சாம்பல் சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • இந்த சாம்பல் சத்து பற்றாக்குறையின் அறிகுறிகள் முதலில் முதிர்ந்த இலைகளில் தோன்றி அதன் பிறகு இளம் இலைகளுக்கு பரவுகிறது.
  • வெளிரிய மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறப்புள்ளிகள் சிற்றிலைகளில் காணப்படும் (இலை ஓரங்களில் மஞ்சள் நிறத்தில் காணப்படும்).
  • முதிர்ந்து இலைகள் காய்ந்த புள்ளிகளுடன் நுனியில் சுருண்டும் காணப்படும்.
  • இலைகளின் ஓரங்களில் காய்ந்து காணப்படும்.  இலைகள் பிறகு உதிர்ந்து விடும்.
  • இந்த மரமானது மஞ்சள் நிறத்தில்,  தண்டு மெலிந்து சில ஓலைகள் சிறுத்தும் காணப்படும்.

கண்டறியும் முறைகள்

பார்வையில் தென்படும் அறிகுறிகளை கொண்டே எளிதில் கண்டறியலாம்.  மேலும் இலை ஊட்டச்சத்து சோதனை மூலமும் கண்டறியலாம். முதிர்ந்த நிலையில் சாம்பல் சத்து பற்றாக்குறையை மாங்கனீசு பற்றாக்குறை அறிகுறியிலிருந்து வேறுபடுத்தி அறிவது கடினம்.  இந்த இரு பற்றாக்குறைகளும் ஒரே மாதிரியாக இருக்கும். கூர்ந்து கவனிப்பதன் மூலம் இந்த இரு ஊட்டச்சத்து பற்றாக்குறைகளை வேறுபடுத்தி அறிய முடியும். சாம்பல் சத்து பற்றாக்குறையின் அறிகுறியானது இலை நுனிகள் காய்ந்த புள்ளிகளைக் கொண்டும் மாங்கனீசு பற்றாக்குறையானது காய்ந்த கோடுகளைக் கொண்டு காணப்படும். சாம்பல் சத்து பற்றாக்குறையின் அறிகுறியானது ஓலையின் அடிப்பகுதி காட்டிலும் நுனியில் அதிகமாகக் காணப்படும். இதற்கு நேர்மாறாக மாங்கனீசு பற்றாக்குறையில் காணப்படும்.


கட்டுப்படுத்தும் முறைகள் 

  • வழக்கமாக பொட்டாஷியம் உரங்களை இடுவதன் மூலம் பொட்டாசியம் பற்றாக்குறையை தவிர்க்கலாம்.  மணல் சார்ந்த பகுதி அல்லது அணுக்களை மாற்றிக் கொள்ளும் திறன் குறைவாக உள்ள பகுதிகளில் எளிதில் நீரில் கரையும் பொட்டாசியம் உரத்தைக் காட்டிலும் மெதுவாக கரையும் பொட்டாசியம் உரம் மிகவும் உகந்ததாக இருக்கும். 
  • பசையூட்டப்பட்ட பொட்டாசியம் சல்பேட் 3.4 கிலோ அதனுடன் 2 கிலோ மெக்னீசியம் சல்பேட்  சேர்த்து வருடத்திற்கு மரம் ஒன்றிற்கு நான்கு தடவை இட வேண்டும். 
  • 1% பொட்டாசியம் குளோரைடு 200 மி. கரைசலை வேர்வழி ஊட்டமாக வருடத்திற்கு மூன்று முறை செலுத்த வேண்டும்.
பற்றாக்குறை அறிகுறிகள்




3. மணிச்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • இலைகள் இளஞ்சிவப்பு நிறத்தில் காணப்படும்(இப்பற்றாக்குறை அதிகமாக இருக்கும்போது இலை மஞ்சள் நிறத்தில் மாறி முதிர்வதற்கு முன்பாகவே காய்ந்து காணப்படும்)
  • வளர்ச்சி மந்த நிலையில் இருக்கும்.
  • ஒலைகள் மேல்நோக்கி இருக்கும்.
  • இலைகள் முதிர்வதற்கு முன்பாகவே உதிர்ந்து விடும்.
  • ஒலையின் வளர்ச்சி,  அளவு மற்றும் எண்ணிக்கை குறைந்து விடும்.
  • மணிச்சத்து பற்றாக்குறை இருப்பின் வேரின் வளர்ச்சி தடைபடும்.
  • வளர்ச்சி குன்றுதல் மற்றும் மகசூல் குறைபாடு தவிர வேறு அறிகுறிகளை பார்வையில் கண்டறிய இயலாது.

கட்டுப்படுத்தும் முறைகள்

2% டி.ஏ.பி- யை 15 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை இலைவழி தெளிக்க வேண்டும்.  அல்லது மரம் ஒன்றிற்கு 5 கிலோ தொழு எருவை மண்ணில் இடவேண்டும். வருடத்திற்கு 2 முறை 1% (2 மில்லி லிட்டர்) டி. ஏ. பி. கரைசலை வேர்வழியாக செலுத்த வேண்டும்.

பற்றாக்குறை அறிகுறிகள்

4. கந்தக சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

சிற்றிலைகள் பசும் மஞ்சள் அல்லது ஆரஞ்சு மஞ்சள் நிறத்தில் இருக்கும். முதிர்ந்த ஓலைகள் பச்சையாகவே இருக்கும். தண்டுகள் பலவீனமாக இருப்பதால் ஓலைகள் தொங்கி காணப்படும்.  சில நேரங்களில் மரத்தைச் சுற்றி தண்டின் பலவீனத்தால் வறண்ட ஓலைகள் காணப்படும்.  காய்கள் முதிர்வதற்கு முன்பாகவே உதிர்ந்துவிடும்.  கொப்பரை தேங்காய் குறைந்த தரத்துடன் காணப்படும். 

கட்டுப்படுத்தும் முறைகள்: 

வருடத்திற்கு மரம் ஒன்றிற்கு 2-5 கிலோ ஜிப்சத்தை மண்ணில் இடுதல், 0.2% (1 லிட்டர் தண்ணீருக்கு 2 கிராம்) ஜிப்சத்தை வேர் வழியாக செலுத்த வேண்டும்.

பற்றாக்குறை அறிகுறிகள்



 

Update : December 2014