தோட்டக்கலை :: மலைத்தோட்டப் பயிர்கள் :: தென்னை

நடவுப் பொருள்

விதைப் பண்ணை தேர்வு

  • பண்ணையானது அதிக எண்ணிக்கையில் நன்கு காய்க்கும் மரங்களை கொண்டதாக இருக்க வேண்டும். ஆனால் அது அதிக சாதகமான சூழலில் இருக்க கூடாது என்பதை மனதில் கொள்ள வேண்டும். மேலும் பூச்சி மற்றும் நோய் தாக்குதலின்றி இருக்க வேண்டும்.
  • வீடு, மாட்டுத் தொழுவம், மாட்டு எருக்குழிகள் அருகில் உள்ள மரங்களை தவிர்க்கவும்.

தரமான விதைத் தேங்காய் மற்றும் கன்றுகளுக்கு பெயர் வாய்ந்த சில இடங்கள் உள்ளன. எ.கா: குட்டியடி (கோழிக்கோடு), சாவக்காடு (திருச்சூர்), ஆழியார் நகர் (கோயம்புத்தூர்), வேப்பங்குளம் (தஞ்சாவூர்).

தாய் தென்னை தேர்வு
நல்ல தரமான நாற்றுகள் உற்பத்திக்கு, தகுந்த இரகத்திலிருந்து தரமான தாய்தென்னையை தேர்வு செய்வது முக்கியமானதாகும். தகுந்த விதையில்லா இனப்பெருக்க முறை இல்லாத நிலையில் விதை இனப்பெருக்கமே சிறந்த வழி. எனவே தாய்தென்னையை தேர்வு செய்வதே தென்னங்கன்றுகள் உற்பத்திக்கு முக்கிய காரணி ஆகும்.

ஒரு உயரிய தாய் மரத்தின் இயல்புகள்

  • நிரந்தர காய்ப்பு தன்மை: ஒரு சிறந்த நிரந்தர காய்ப்பு தன்மையுள்ள தென்னை மரத்திலிருந்து சுமார் ஒரு ஓலை மற்றும் ஒரு பாளை வீதம் ஒவ்வொரு மாதமும் வரும். எனவே ஒவ்வொரு முறையும் 12 குலைகள் வெவ்வேறு வளர்ச்சி பருவத்திலும், வலுவான குலைக் காம்புகளுடனும் காணப்படும். வெற்றுக் காய்களை தரும் மரங்களை தவிர்க்கவும்.
  • நேரான பருத்த தண்டு பகுதியானது சீரான வளர்ச்சியுடனும் மற்றும் நெருக்கமான ஓலை இடுக்குகளுடனும் காணப்படும்
  • வட்டம் அல்லது அரைவட்ட வடிவிலான தலைப்பாகம்
  • அதிக எண்ணிக்கையில் ஓலைகள் (30க்கும் அதிகமான முழுவதும் திறந்த ஓலைகள்) மற்றும் பாளைகள் விடுதல் (12 பாளைகள்)
  • கட்டையான, தடித்த குலைக்காம்பு, மற்றும் தண்டுடன் உறுதியாக இணைந்துள்ள அகன்ற அடிமட்டை இருக்க வேண்டும்.
  • கட்டையான, தடித்த பாளை காம்புள்ள குலைகள்,  இலைக் காம்பின் கீழ்ச் சுருள் மீது அமர்ந்த வண்ணமும், மற்றும் அதிக எண்ணிக்கையிலான பெண் மலர்கள் உடனும் (25க்கும் அதிகமாக) இருக்க வேண்டும்.
  • நடுத்தர வயதுள்ள மரங்களை தேர்வு செய்ய வேண்டும். எ.கா. 25 முதல் 40 வரை. 15 வயதுள்ள அதிக, நிலைத்த மகசூல் தருகின்ற மரங்களைக் கூட தேர்வு செய்யலாம். (எ.கா) சவ்காட் குட்டை. 60 வயதுக்கு மேல் உள்ள மரங்களை தவிர்க்கவும்.
  • அதிக மகசூல் தருகின்ற தாய் மரங்கள். பாசன வசதியுடன் கூடிய நிலத்தில் குறைந்தது ஆண்டிற்கு மரமொன்றிற்கு 100 காய்கள் வீதம் தருகின்ற மரங்களை தேர்வு செய்யலாம். மானாவாரி நிலத்தில் ஆண்டிற்கு 70-80 காய்கள் தரும் மரங்களை தேர்வு செய்யலாம்.
  • மட்டையுடன் கூடிய காயின் எடை 600 கிராமிற்கும் குறையாமல் இருக்க வேண்டும்.
  • சராசரி கொப்பரை தேங்காயின் அளவு காய் ஒன்றிற்கு 150 கிராம் அல்லது அதிகமாக இருக்க வேண்டும்.
  • பூச்சி மற்றும் நோய் தாக்கின்றி இருக்க வேண்டும்.

கீழ்கண்ட தன்மையுள்ள மரங்களை தவிர்க்கவும்

  1. நீண்ட, ஒல்லியான பாளைக் காம்புள்ள மரங்கள் 
  2. நீண்ட, ஓல்லியான, சிறிய காய்கள் அல்லது வெற்றுக் காயுள்ள மரங்கள் 
  3. மாற்றுக் காய்ப்பு தன்மையுள்ள மரங்களைத் தவிர்க்கவும் 
  4. அதிக குருத்து உதிர்வு தன்மையுள்ள மரங்கள் 
  5. தகுந்த சூழலில் வளராத மரங்கள் எ.கா:எருக்குழி அருகில் உள்ள மரங்கள்

வேர்வாடல் நோய் பாதித்த பகுதிகளுக்கான யுத்திகள்

வேர்வாடல் நோய் அதிகமுள்ள பகுதிகளில், அதிக நோய் பாதித்த மரங்களுக்கிடையில் அதிக மகசூல் தரக்கூடிய மேற்கு கடற்கரை நெட்டை, செளகாட் பச்சைக் குட்டை மற்றும் செளகாட் ஆரஞ்சு குட்டை ஆகியன காணப்படும். அத்தகைய மரங்களை தாய்த் தென்னை மரங்களாக தேர்வு செய்து, அதிலிருந்து அயல் மகரந்த சேர்க்கை மூலம் உருவான காய்களிலிருந்து பெறப்பட்ட நாற்றுகள் அதிக மகசூல் தரக்கூடியனவாகவும், நோய் எதிர்ப்பு தன்மை உடையனவாகவும் இருக்கலாம்.

விதைத் தேங்காய் முதிர்ச்சி

முதிர்ந்த காய்கள், வயதான குலையில்  குறைந்தது ஏதேனும் ஒரு காயாவது காய ஆரம்பித்தவுடன் அறுவடை செய்யப்படுகிறது. நெட்டை ரகங்களில் 11-12 மாதங்களில் முதிர்ந்த விதை தேங்காய் கிடைக்கிறது. குட்டை ரகங்களில் பாளை வந்து 10-11 மாதங்களில் காய்கள் முதிர்கின்றன. முதிர்ந்த காய்கள் மட்டை உலர்ந்துவிட்டதை குறிக்கும் வகையில் விரல் அல்லது அரிவாளால் தட்டும் போது கணீரென்ற ஒலி எழுப்பும். மரங்கள் உயரமாகவோ அல்லது நிலம் கடினமாகவோ இருப்பின் விதைக் காய்க்கான குலைகளை கயிறு கட்டி கீழிறக்குவதால், குலைகள் காயப்படுவதை தடுக்கலாம். விதைத் தேங்காய் நடுத்தர அளவுடையதாகவும், உருண்டை அல்லது கோள வடிவத்தில் இருக்க வேண்டும்.

mother plam
நல்ல தாய் மரம்
healthy root system
ஆரோக்கியமான தென்னை மரம்

நன்கு காய்க்க்கூடிய மரம்

ஆரோக்கியமற்ற தென்னை மரம்

அதிக இலையுடைய மரம்

வட்டமான உச்சிப்பகுதி

நேரான தடித்த அடிமரம்

விதைத் தேங்காய் தேர்வு

தமிழ்நாட்டில் விதைத் தேங்காயை பிப்ரவரி -  ஆகஸ்ட் மாதங்களிலும், கேரளாவில் டிசம்பர் முதல் மே வரை அறுவடை செய்வதன் மூலம், அதிக முளைப்புதிறன் மற்றும் நல்ல தரமான நாற்றுகளையும் பெற முடியும். நெட்டை ரகங்கள் 1 அல்லது 2 மாதங்களுக்கு பிறகு நட வேண்டும். குட்டை ரகங்கள் உடனடியாக நடப்பட வேண்டும் (10-15 நாட்கள்).


தரமான தேங்காய்கள்

தேர்ந்தெடுத்த தரமான தென்னங்காய்கள்

தகுந்த விதை தேங்காய்

முதிராத நோயுற்ற தேங்காய்கள்

நோயுற்ற தேங்காய்கள்

நிராகரிக்கப்பட்ட விதைக் காய்கள்

விதைத் தேங்காயை சேமித்து வைத்தல்

நல்ல தரமான கன்றுகளை பெறுவதற்கு, நெட்டை ரகங்களின் விதைகாய்கள் காற்றில் 1 மாதம் உலர்த்தப்பட்ட பின் மணலில் 2 மாதங்கள் வரை உலர்த்தப்பட வேண்டும். குட்டை ரகங்களின் விதைக் காய்கள் 1 மாதத்திற்கும் குறைவாக காற்றில் உலர்த்தப்பட்ட பின் 2 மாதத்திற்கு மணலில் உலர்த்தப்பட வேண்டும். பொதுவாக நெட்டை ரக காய்கள் அறுவடைக்குபின் 2 மாதங்கள் வரை குவித்து வைக்கப்படுகின்றன. ஆனால் குட்டை ரக காய்கள் 15 நாட்களுக்குள் விதைக்கப்படுகின்றன. குவித்து வைப்பதற்காக விதைத் தேங்காயை கட்டி மேலே இருக்கும் படி அடுக்கி 8 செ.மீ. உயரத்திற்கு மணலால் நிரப்ப வேண்டும். இது காயில் தண்ணீர் வற்றுவதை தடுக்கும். இது போல் 5 வரிசைகளில் காய்களை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கலாம்.
மணற்பாங்கான, போதுமான நிழலுள்ள இடங்களில் காய்களை குவித்து வைக்கலாம். காய்கள் மே மாதத்தில் அறுவடை செய்தால், அதன் மட்டை காயும் வரை பகுதி நிழலில் குவித்து வைத்த பின் நாற்றங்காலில் நட வேண்டும். தண்ணீர் தெறிக்கும் ஒலி எழப்பாத காய்களில் தண்ணீர் வற்றிப் போயிருக்கலாம், எனவே அதனை விதைக்க பயன்படுத்த கூடாது.


தென்னை மரம் நிழலிடப்பட்ட தேங்காய்கள்

நன்றாக சேமித்த தேங்காய்கள்

விதைத் தேங்காய்களை நனைத்தல் : - காப்பர் ஆக்ஸி குளோரைடு கொண்டு நனைக்க வேண்டும்.


விதைத் தேங்காய்களை நனைத்தல்

Update : December 2014