Horticulture
||| | | | | |
தோட்டக்கலை :: மலைத்தோட்டப் பயிர்கள் :: பனை

பரவல்

ஆப்பிரிக்காவைத் தயாகமாகக் கொண்ட பனை, இந்தியாவை அடைந்த பிறகே பரவலாகப் பேசப்படும் நிலையை அடைந்தது. அமெரிக்க பகுதிகளை பனை வகைகள் சென்றடையாததால் அங்கு பனைமரங்கள் காணப்படவில்லை. தென்னிந்தியாவல் இருந்து வேலைக்குச் சென்ற கரும்புத் தொழிலாளர்களாலும் அடிமையாக அழைத்துச் செல்லப்பட்ட ஆப்பிரிக்கர்களாலும் பனை விதைகள் அமெரிக்க நாடுகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக அறிமுகம் ஆயின. இந்தியா, தென்கிழக்கு ஆசிய நாடுகள், வடக்கு ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் பல நூறு ஆண்டுகளாக பனை பரவலாகக் காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக இந்தியா, மியான்மர், கம்போடியா போன்ற நாடுகளில் பனைகள் அதிகம் காணப்படுகின்றன.

அ. உலக அளவில் பரவல்
மரிட்டானியா
மேற்கு ஆப்பிரிக்காவின் வடக்கு பகுதியான டிராச்சாவில் மணல் மேடுகளின் இடையே காணப்படும் உப்பு பள்ளத்தாக்குகளில் 1000 பனை மரங்களை கண்டதாக பெல்லுவார்டு என்னும் அறிஞர் (1950) கூறுகிறார்.

செனகல்
மேல் செனகலில் 2,00,000க்கும் மேற்பட்ட பனைகள் காணப்படுகின்றன. செனகல் ஆற்றுப் படுகை, போடோர் போன்ற பகுதிகளில் காணப்பட்டாலும் மாடம் பகுதியில் அடர்த்தியாகக் காணப்படுகிறது.

மாலி
நைசர் நதியோரம் அமைந்துள்ள கேய்சு மற்றும் சென்னி ஆகிய இரு பகுதிகளிலும் பனை காணப்படுவதாகவும் 1912 ஆம் ஆண்டிலிருந்து ஆண்டொன்றுக்கு 60,000 பனை மரங்கள் கட்டுமான பணிகளுக்காக வெட்டப்பட்டதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

சாம்பியா
40 மீட்டர் உயரம் மற்றும் 3 மீட்டர் அடிப்பகுதி விட்டம் கொண்ட வலிமை மிகு பனை வகைகள் காணப்படுகின்றன.

கினியா
வறண்ட பகுதிகளில் சாறு பெறுவதற்காக பனை வளர்க்கப்பட்டாலும் வெகுவேகமாக மறைந்து வருகிறது.

ஐவரி கடற்கரை
பாவாலே மக்களால் சாவானா புல்வெளியில் பெருமளவு பயன்படுத்தப்படுகிறது.

மேல் வோல்டா
பான்போரா பகுதிகளில் இரு ஆற்றுப் படுகைகளின் ஊடே பெருமளவு காணப்படுகிறது.

நைசீரியா
நைசர் ஆற்றுப் படுகையில் பொ.எதியோபம் என்னும் சிற்றினம் காணப்படுகிறது.

காபன்
சில இடங்களில் பனை காணப்படுகிறது.

காங்கோ
உபான்கை ஆற்றுப் படுகையைச் சுற்றிலும் பல்வேறு வகை பனைகள் காணப்படுகின்றன.

மடகாஸ்கர்
மொரோவாய் நதி, பாம்பெடொக் வளைகுடா மற்றும் மாசுங்கா கிராமங்களில் பொ.சாம்பிரானென்சிஸ் மற்றும் பொ.மடகாஸ்காரியன்சிஸ் சிற்றினங்கள் காணப்படுகின்றன.

தான்சானியா
பொ.எதியோபம் வகை. பகாமொஜென்சிஸ் வகை சான்சிபார் பகுதியில் காணப்படுகிறது.

சூடான்
நுபியா பகுதியில் பொ.டெலிப் என்னும் சிற்றினம் கண்டறியப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகள்
பாரசீக வளைகுடாவின் இரு மருங்கிலும் 30 பாகை வடக்கு அட்ச ரேகை வரை பனை காணப்படுகிறது.

மியான்மர்
மியான்மரில் 1940 ஆம் ஆண்டு வரை 30,000 எக்டர் நிலப்பரப்பில் பனைகள் காணப்பட்டதாகவும் இடையில் நிகழ்ந்த போர்கள் காரணமாக பரப்பு குறைந்து 1966 ஆம் ஆண்டில் பனை 24,500 எக்டர் பரப்பில் காணப்பட்டதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன. இங்கு 150 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வயதுடைய பனைகள் காணப்படுகின்றன. நடுவண் பகுதியில் ஐராவதி நதியையொட்டிய பகுதிகளில் பனை மிகவும் நெருக்கமாகக் காணப்படுகிறது. மியான்மார், கம்போடியா போன்ற நாடுகளில் நெல்லுக்கு அடுத்து உயர் வருவாய் தரும் பயிராக சிறு உழவர்களால் பனை வளர்க்கப்படுகிறது. அங்குள்ள உழவர்கள் மழைப்பொழிவு நிலவும் காலகட்டங்களில் நெற்பயிரை வளர்த்து விளைச்சல் பெறவும் வறண்ட காலகட்டங்களில் பனைபொருட்களை உற்பத்தி செய்து விற்கவும் திட்டமிட்டு செயல்படுகின்றனர்.

தாய்லாந்து
முன்பு பனைகள் மிகுதியாகக் காணப்பட்ட இடங்கள் அனைத்திலும் தற்பொழுது தென்னை பயிரிடப்பட்டு வருகிறது. பாங்காக், டொன்புரி, அயுத்தியா, பெச்பூரி, நகோன் பாதம் மற்றும் சோல்பரி போன்ற ஒரு சில இடங்களில் மட்டுமே பனைகள் காணப்படுகின்றன.

கம்பூசியா
கண்டால், கம்போங்க், பியூ, டாகியோ மற்றும் கோம்போங் ஆகிய மாநிலங்களில் பனை பெருமளவு காணப்படுகிறது. மொத்தம் 1,800,000 பனைகள் காணப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தோனேசியா
சுலாவேசி, மொலுகஸ் தீவுகள், சாவா மற்றும் மதுரா பகுதிகளிலும் பனை காணப்படுகிறது. இவற்றில் சாவா மற்றும் மதுரா பகுதிகளில் மட்டும் 15,050 எக்டர் பரப்பளவில் 5,56,700க்கும் மேற்பட்ட பனைகள் காணப்படுகின்றன.

கிழக்கு தைமூர்
சுண்டா தீவுகளில் பனை காணப்படுகின்றது.

இலங்கை
இலங்கை பனை வளர்ச்சி வாரிய மதிப்பீட்டின்படி இலங்கையில் 1.1 கொடி பனைகள் காணப்படுகின்றன. இதில் மூன்றில் இரு பங்கு பனைகள் யாழ்ப்பாணம் மாவட்டத்திலும் அதையொட்டியுள்ள கடலோரத் தீவுகளிலும் காணப்படுகின்றன. மன்னார் தீவிலும் முல்லைத் தீவிலும் பெருமளவு பரப்பில் பனைகள் நெருக்கமாகக் காணப்படுகின்றன. தற்பொழுது அங்கு நடைபெறும் உள்நாட்டுப் போரால் பனைவளம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் பனையின் பரப்பளவு

வ.எண் மாவட்டம் மொத்த பரப்பளவு (எக்டர்) விழுக்காடு
1. திரிகோண மலை 107 0.4
2. முல்லைத் தீவு 2,024 8.2
3. மன்னார் 6,073 24.7
4. வவுனியா 20 0.1
5. யாழ்ப்பாணம்
(கிளிநொச்சி உட்பட)
16,194 66.0
6. மட்டக்களப்பு 20 0.1
  மொத்தம் (வடகிழக்கு)
மொத்தம் (இலங்கை)
24,432 99.5
24,555 100.00
சான்று : பனை திட்ட அறிக்கை 1986, இலங்கை
இலங்கையில் பனங்கிழங்கிலிருந்து ஆண்டுதோறும் 5000 டன் பனங்கிழங்கு மாவு பெறப்படுகிறது. வேக வைத்து பொடி செய்யப்பட்ட பனங்கிழங்கு மாவிலிருந்து பெறப்படும் உணவுப் பண்டங்களில் சத்துகள் மிகுதியாகக் காணப்படுகின்றன.

ஆ. இந்திய அளவில் பனையின் பரவல்
இந்தியாவின் வடமேற்கு பகுதியில் அலிகார், ஷாஜகான்பூர் போன்ற பகுதிகள் வரையும் மலபார் கடற்கரையோரங்களில் கோழிக்கோடு, கோவா, மும்பை, குசராத் வரையும் கிழக்குக் கடற்கரையோரங்களில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை, சென்னையிலிருந்து பீகார் வரையும் பனைகள் காணப்படுகின்றன. தமிழ்நாடு, ஆந்திரப்பிரதேசம், ஒரிசா, மேற்கு வங்காளம், பீகார், கர்நாடகம் மற்றும் மராட்டியம் ஆகிய மாநிலங்களில் பனை பரவலாகக் காணப்படுகிறது. இந்தியாவிலேயே பனைகளின் எண்ணிக்கையில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது. தமிழ்நாட்டில் காணப்படும் 5.19 கோடி பனைகளில் தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் மற்றும் இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் காணப்படுகின்றன. தமிழ்நாட்டில் மதுரை, தேனி, சேலம், நாமக்கல், காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களிலும் பனை காணப்படுகிறது.
தமிழ்நாட்டில் பெருமளவு பனை காணப்படும் பகுதிகள் பின்வருமாறு

வ.எண் மாவட்டம் பகுதிகள்
1. கன்னியாகுமரி கல்குளம், விளவங்கோடு
2. திருநெல்வேலி நாங்குநேரி, அம்பாசமுத்திரம், சங்கரன் கோவில், தென்காசி, கடையம், பாவூர்சத்திரம்
3. தூத்துக்குடி திருச்செந்தூர், திருவைகுண்டம், வல்லநாடு
4. இராமநாதபுரம் முழுமையும்
5. விருதுநகர் திருவில்லிபுதூர்
6. திண்டுக்கல் வேடசந்தூா்
7. கரூர் கரூர் வட்டம்
8. சேலம் மேட்டூர், ஓமலூர், இடைப்பாடி, சங்ககிரி மேச்சேரி (ஆட்டுக்காரனூர், தீராம்பட்டி)
9. நாமக்கல் திருச்செங்கோடு, குமாரபாளையம்
10. கோயமுத்தூர் பொள்ளாச்சி, ஆனைமலை, போடிபாளையம்
11. ஈரோடு நம்பியூர், குன்னத்தூர்
12. புதுக்கோட்டை கீரனூர், விராலிமலை
13. நாகப்பட்டிணம் மரைக்காடு
14. திருவண்ணாமலை திருவண்ணாமலை
15. விழுப்புரம் செஞ்சி
16. கடலூர் பகுதிகள் மரக்காணம், புதுச்சேரியை ஒட்டிய பகுதிகள்
17. காஞ்சிபுரம் மதுராந்தகம்
18. கிருட்டிணகிரி மத்தூர், மஞ்சள் மேடு, அரசம்பட்டி, போச்சம்பள்ளி
19. புதுச்சேரி தவளக்குப்பம்
20. தஞ்சாவூர் பட்டுக்கோட்டை
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பனைகளை கீழ்க்கண்டவாறு பாதுகாத்துப் பேணி வளர்க்கிறார்கள்.
  • பனைகள் வேலி கட்டி பாதுகாக்கப்படுகின்றன.
  • கிடை அமர்த்தி உரமிடப்படுகிறது
  • பனை வளரும் நிலம் உழுது விடப்படுகிறது
  • பருவ காலத்தில் பெய்த மழை பனையடியில் தேங்கி நிற்க ஏதுவாக வட்டப் பாத்திகள் கட்டி விடப்படுகின்றன.
  • தங்கள் வீட்டில் சேகரிக்கும் குப்பை கூளங்களை மரத்தடியில் உரமாகக் கொட்டி வைக்கிறார்கள்.
  • பதநீர் தரும் பனைகளிலும், வடலி பனைகளிலும் குருத்தோலைகள் வெட்டப்படுவதில்லை.
  • கிராமங்களில் பனைகளிலிருந்து ஓலைகளோ, மட்டைகளோ வெட்டாமல் தடுக்க சமூகக் கட்டுப்பாடு உண்டு

இங்குள்ள பனங்காடுகளில் கருப்பு உடை மரங்கள் வளர்க்கப்படுகின்றன. இவை வடலி பனைகளைப் பாதுகாக்கின்றன. இந்த மரத்தின் இலை மிகவும் நுண்ணியது. இதனுடைய முள் உறுதியானது. இந்த மரத்திலிருந்து உதிரும் இலை பனையின் அடியிலேயே விழுகிறது. எனவே இந்த இலை பனைக்கு நல்ல சத்துணவாக மாறுகிறது. உடையின் உரத்தால் வளரும் பனைகள் இனிப்புச் சத்துடன் கூடிய பதநீரைத் தருகின்றன.
பொராசஸ் பேரினத்தில் கிளைகளுடன் காணப்படும் பனைகள் கோல்கத்தாவில் உள்ள தாவரவியல் பூங்காவிலும் கோயமுத்தூரில் உள்ள தாவரவியல் பூங்காவிலும் காணப்படுகின்றன. மதுரைக்கு அருகே உள்ள மேலக்கல் என்னும் இடத்தில் திறந்த வயல்வெளியில் காணப்படும் பனையில் 18 கிளைகள் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது போல் மதுரைக்கு வடக்கே 40 கி.மீ தொலைவில் கிளைப் பனை ஒன்று உள்ளதாகவும் தரையிலிருந்து 5 மீ உயரத்தில் கிளைகள் காணப்படுவதாகவும் கூறப்படுகிறது.

பல்வேறு மொழிகளில் பனை
உலகில் பேசப்படும் பல்வேறு மொழிகளில் பனைக்கு வழங்கப்படும் பெயர்கள் பின்வருமாறு.

ஆப்பிரிக்கா
ஐவரி – கியே
செனகல் – ரொன்

ஆசியா
இந்தியா

தமிழ் – அன்பனை, இடகம், கரடாளம், கரும்பனை, நுங்கு, பனை, போந்தை, போந்து, புள், புற்பாடி, சாற்றுப்பனை, தலை, கலம், தலி
வங்காளி – டால், டால்ஹாஹ்
இந்தி – டால், டார், டார்ஜஹார்
வடமொழி – ஆசவண்டு, சிராயு, கிவாஜருமா, திர்காதுரு
மலையாளம் – ஆம்பன, ஈடா, கரும்பனா, பனா, தாலம்
தெலுங்கு – கரடாலமு, நாமட்டு, பென்டிட்டு
கன்னடம் – டாலி
குசராத்தி – டாட்
மராத்தி – டாட், டாமா
மியான்மர் – டான்பின்
சீனா - ஷ% - சோ – சங்க்
இந்தோனேசியா – போஹன் சிவாலண்ட் (சுமத்ரா), லொண்டர், சவாலென், என்டல், டல் (சாவா), டாரேபங்க், டா ஆல் (மதுரா), டால் (லொம்பக்), டியுசு - ஹ% (நொடி), கெபாக்-டூரான், டூவே (சாவா), டாலா, டோலா (சுலாவெசி).
கிழக்கு தைமூர் – டியசு - ஹ%ஆ, காலி
கம்போடியா – துனோச்மெளல்
மலேசியா – லொண்டார்
இலங்கை – பனை
தாய்லாந்து – டென்டல்
வியட்நாம் – கே தாட், லாட்

ஐரோப்பா
ஆலந்து – ஜாஹெர்-பூம், வெய்ங்கே விண்டே பாம்-பூம்
ஆங்கிலம் – பால்மைரா பாம், பிராப்-டிரீ
பிரெஞ்சு – ரோனியர், ரோண்டியர்
ஜெர்மன் – பல்மைரா பால்மே
இத்தாலியன் – பால்மா டி இந்தியா
போர்ச்சுக்கீசு – பனகுயோரா, பல்மிரா, மச்சாபிராவா, சிபிஸ் (கினியா – பிசாயு)

Source:Dr.V.Ponnuswami, PhD, PDF (Taiwan), Former Dean & Professor (Horticulture), Horticultural College & Research Institute, Tamil Nadu Agricultural University, Coimbatore

e-mail:swamyvp200259@gmail.com
Website:www.swamyhortiiech.com

 
 

||| | | | | |

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2021