Horticulture
||| | | | | |
தோட்டக்கலை :: மலைத்தோட்டப் பயிர்கள் :: பனை

நாற்றங்கால்

பனைகள் விதைகள் வழியே பெருக்கம் செய்யப்படுகின்றன. பனங்கொட்டைகளை சேகரிக்க தேர்வு செய்யப்படும் தாய்ப்பனைகள் பூச்சி மற்றும் நோய்களின் தாக்குதல் இன்றியும் அதிக விளைச்சல் அளிப்பதாகவும் குட்டை தன்மை கொண்டதாகவும் விரைவில் ஈனக் கூடியதாகவும் முறையாகக் காய்க்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும். தாய் பனைகளிலிருந்து சேகரிக்கப்பட்ட பழுத்த பழங்களை நான்கு வாரங்களுக்கு நிழலில் குவித்து வைத்திருக்க வேண்டும். சுருங்கிய, எடை குறைந்த, துளைகள் உள்ள பழங்களை விலக்கிவிட்டு கொட்டைகளை பழங்களிலிருந்து பிரித்தெடுக்க வேண்டும்.

விதை சேமிப்பு
பனங்கொட்டைகளின் சேமிப்புக் காலத்தைப் பொருத்து முளை்பபுத் திறன் விழுக்காடு மாறுபடும்.

சேமிப்புக்காலம் முளைப்புத் திறன் (விழுக்காடு)
விதைத்த மூன்றாவது வாரம் விதைத்த ஆறாவது வாரம்
உடனடி விதைப்பு 0.00 17.50
ஒரு வாரம் 11.25 73.75
இரண்டு வாரங்கள் 11.25 85.00
மூன்று வாரங்கள் 26.25 86.25
நான்கு வாரங்கள் 37.50 53.75
சராசரி 17.25 63.25

பனங்கொட்டைகளை சேமித்து வைக்கும் முறைகளைப் பொருத்தும் முளைப்புத்திறன் விழுக்காடு மாறுபடும்.

விதை நேர்த்தி வழிமுறை விதைகளின் முளைப்புத் திறன் (விழுக்காடு)
வகை 1 வகை 2
நேரடி விதைப்பு 73.30 100.00
நீரில் நனைப்பு 100.00 100.00
டி.ஏ.பி-2% நனைப்பு 100.00 91.40

பனங்கொட்டை சேமிப்புக் காலம் விதைத் மூன்று வாரம் கழித்து
சூரிய ஒளி நிழல்
உடனடி விதைப்பு 0.00 5.00
ஒரு வாரம் 11.25 11.25
இரண்டு வாரங்கள் 11.25 21.25
மூன்று வாரங்கள் 26.25 57.25
நான்கு வாரங்கள் 37.50 17.50
சராசரி 17.25 22.50

நிழலில் பனங்கொட்டைகளை சேமித்து வைத்தால் விரைவில் முளைப்பு நிகழும் எனக் கண்டறியப்பட்டுள்ளது. அறுவடையின் பொழுது பனங்கொட்டைகளின் முளைப்புத் திறன் 51 விழுக்காடாகவும் நிழலில் 30 நாட்கள் வைத்திருந்து முளைக்க வைக்கும் பொழுது முளைப்புத்திறன் 79 விழுக்காடாகவும் காணப்பட்டது.

விதை முளைப்பு
பனையில் இருவித முளைப்பு முறைகள் காணப்படுகின்றன. விதையிலையுறையின் நீட்சியுடனோ அல்லது நீட்சியற்றோ முளைப்பு நிகழ்கிறது. தென்னையைப்போல் அல்லாமல் பேரிட்சை போன்று முதல் இலை உருவாவதற்கு முன்னர் வித்திலையுறை கீழ்நோக்கி வளரும். விதைகள் முளைக்கும் பொழுது தரைகீழ் தண்டுடனும் அவற்றிலிருந்து 15 செ.மீ நீளமுள்ள முதல் இளம் இலையுடனும் உண்ணத் தக்க மாவுச் சத்துடனும் காணப்படும். தரைக்கு மேல் இலைகள் தோன்றும் பொழுது இம்மாவுச் சத்தைப் பயன்படுத்தி வளரும். விதைத்ததிலிருந்து 179-186 ஆம் நாள் முதல் ஓலை உருவாகும்.

பனை விதைகளின் முளைப்புத் திறன் குறைபாடு பனைவளர்ப்பில் உள்ள குறைபாடாகும். எதிர்பாராத நீண்ட கால விதை உறக்கமே சமனற்ற விதை முளைத்தலுக்கு காரணமாகக் கருதப்படுகிறது. விதை நேர்த்தி செய்யாத பனங்கொட்டைகள் முளைக்க 260 நாட்கள் தேவைப்படும். பனங்கொட்டைகளின் சதைப் பகுதியை நீக்கினால் விதைத்த ஒரே வாரத்தில் முளைக்கும் எனக் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் வெறுமனே சதைப் பகுதியை நீக்கினால் முளைப்புத் திறன் 15 விழுக்காடு உயரும் எனவும் சுழுநீரில் 30 நிமிடங்கள் நனைத்து விதைத்தால் முளைப்புத் திறன் பாதிக்கப்படும் எனவும் தெரிய வருகிறது. விதைப்பதற்கு முன்பாக பனங்கொட்டைகளை மூன்று மணி நேரம் நீரில் ஊற வைத்தாலே நூறு விழுக்காடு முளைப்புத் திறனைப் பெறலாம் எனவும் கண்டறியப்பட்டுள்ளது. ஈரமான மணல், மலைமண், பெர்லைட் ஆகியவற்றை 1:1:1 என்ற விகிதத்தில் கலந்து அதில் பனங்கொட்டைகளை விதைத்தால் விரைவாக முளைக்கும்.

ஊட்டச்சத்துக் கரைசல், வளர்ச்சி ஊக்கிகளுடன் விதை நேர்த்தி செய்யும் பொழுது விதை முளைப்புத் திறன் மற்றும் நாற்றுகளின் வீரியத்தில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உண்டாகும். சதையுடன் கூடிய கொட்டைகளை பொட்டாசியம் டை ஹைட்ரஜன் பாஸ்பேட் கரைசலில் 24 மணி நேரம் ஊற வைத்த பிறகு விதைத்தால் முளைப்புத்திறன் விழுக்காடு அதிகரிக்கும் எனக் கண்டறியப்பட்டுள்ளது.

விதை நேர்த்தி விழுக்காடு விதைகளின் முளைப்புத் திறன் (விழுக்காடு)
வகை 1 வகை 2
நேரடி விதைப்பு 73.30 100.00
நீரில் நனைப்பு 100.00 100.00
டி.ஏ.பி – 2% நனைப்பு 100.00 91.40
பொட்டாசியம் குளோரைடு – 2% நனைப்பு 83.90 94.30
டி.ஏ.பி – 2% நனைப்பு + பொட்டாசியம் குளோரைடு – 2% நனைப்பு 88.20 97.20

பனங்கொட்டைகள் வெவ்வேறு அளவுகளில் மூன்று மணி நேரம் எதிரல் வளர்ச்சி ஊக்கியில் நனைத்து விதை நேர்த்தி செய்து விதைத்ததில் நான்கு மாதம் கழித்து பின்வரும் முடிவுகள் பெறப்பட்டன.

எதிரல்அளவு (மிகி/லிட்டர்) நாற்று உயிர்ப் பிடிப்பு (%) நாற்று ஒன்றில் ஓலைகளின் எண்ணிக்கை ஓலையின் அகலம் (செ.மீ)
0 29.90 1.07 1.82
25 31.60 1.14 1.41
50 33.20 1.18 1.92
100 31.10 1.32 5.42
200 55.10 1.03 1.65
400 38.30 1.05 1.58
800 21.60 1.08 2.03
நேரடி விதைப்பு 22.50 1.11 2.11

பனங்கொட்டைகள் இரவு முழுவதும் (15 மணி நேரம்) வெவ்வேறு அளவு தயோ யூரியாவில் நனைத்து விதைக்கப்பட்டன. விதைப்பு மேற்கொண்ட 308 நாட்கள் கழித்து முளைப்புத் திறன் விழுக்காடு நாற்றுகளின் உயிர்பிடிப்பு விழுக்காடு, நாற்றுகளின் வீரியம் போன்றவை கணக்கிடப்பட்டன.

விதை நேர்த்தி வழி முறை முளைப்புத் திறன் (%) நாற்று உயிர்ப் பிடிப்புத் திறன் (%) ஓலை உருவான நாற்றுகள் (%) நாற்று ஒன்றில் ஓலைகளின் எண்ணிக்கை
நேரடி விதைப்பு 20.0 15.0 15.0 1.3
தயோ யூரியா – 0.1 % 18.3 15.0 15.0 1.5
தயோ யூரியா – 0.2 % 36.7 26.7 26.7 1.4
தயோ யூரியா – 0.4 % 38.3 30.0 30.0 1.5
சராசரி 28.3 21.7 21.7 1.4

விதைக் கொட்டைகளை பழங்களில் இருந்து பிரித்தெடுத்து அவற்றை கார்பென்டாசிம் 0.1 விழுக்காடு கரைசலில் 24 மணி நேரம் ஊற வைப்பதால் கிழங்கு அழுகல் குறைவதோடு முளைத்தல் விரைவில் நிகழும்.

நாற்றங்கால் தொழில்நுட்பங்கள்
நாற்றங்கால் அமைக்க 3 பங்கு செம்மண் ஒரு பங்கு மணல் என்ற வீதத்தில் கலக்க வேண்டும். விதைகள் முளைத்தவுடன் நாற்றுகளை பிடுங்கி எடுத்துச் செல்லக் கூடாது. பொதுவாக பிடுங்கி நடப்படும் நாற்றுகள் வயலில் வேர் பிடிக்காமல் வாடி மடிந்து விடுகின்றன. எனவே பனை விதைகளை நடவு செய்ய வேண்டிய இடத்தில் நேரடியாக விதைப்பதே சாலச் சிறந்தது.

பனங்கொட்டைகளை நேரடியாக மண்ணிலோ சிமெண்டினால் ஆன பக்கச் சுவர் கொண்ட பாத்திகளிலோ விதைப்பதைக் காட்டிலும் மேட்டுப்பாத்திகளில் விதைத்தால் அதிக எண்ணிக்கையிலான ஓலைகள் விரைவில் தோன்றும் எனக் கண்டறியப்பட்டுள்ளது.


வழிமுறை
முளைப்புத் திறன் நாற்று உயிர்ப் பிடிப்பு (%) இளம் ஓலைகளின் எண்ணிக்கை (நாற்று ஒன்றுக்கு) இளம் ஓலைகளின் நீளம் (செ.மீ) இளம் ஓலைகளின் அகலம் (செ.மீ)
ஊடகம் மணல் மண் 85.37
86.66
77.04
77.04
1.73
1.61
18.13
16.99
1.43
1.26
நிலப் போர்வை களைகள்
பாலித்தீன்
நேரடி விதைப்பு
87.22
85.05
87.77
75.56
76.67
78.89
1.83
1.60
1.58
16.86
15.88
20.00
1.36
1.45
1.24
விதைப்பு ஆழம் தரையிலிருந்து 10 செ.மீ
10-20 செ.மீ
20-30
88.52
84.81
87.71
79.62
78.15
75.56
1.66
1.69
1.67
16.94
17.26
18.39
1.49
1.04
0.64

கொள்கலன் நாற்றுகள்
பொதுவாக பருவமழை பொழியும் பொழுது பனங்கொட்டைகள் நேரடியாக வயலில் விதைப்பு செய்யப்படுகின்றன. பனங்கொட்டையின் முளைப்புத் திறன் 60-65 விழுக்காடு வரை இருக்கும். இதனால் வயலில் இடைவெளி உருவாகும். பனை மெதுவாக வளரும் தன்மையைக் கொண்டிருப்பதால் இடைவெளியில் விதைப்பு மேற்கொண்டால் தொகுப்பில் வளர்ச்சி வேறுபாடுகள் காணப்படும். இது தவிர மண் கடினமாக இருந்தால் பனங்கிழங்குகளை பிடுங்கும் பொழுது எளிதில் உடையும் வாய்ப்புகளும் உள்ளன. மேற்கண்ட குறைபாடுகளைத் தவிர்க்க கொள்கலன்களில் நாற்றுகளை வளர்த்து அவற்றை இடைவெளிகளில் நடுவதன் மூலம் பனந்தோப்புகளில் உள்ள பனைகளில் சீரான வளர்ச்சியைப் பெறலாம். கொள்கலன் நாற்று உருவாக்கம் இரு நிலைகளைக் கொண்டது.

நிலை 1
செங்கற்களைக் கொண்டு பக்கச்சுவர் அமைத்து அவற்றை செம்மண் கொண்டு பூசி மேட்டுப் பாத்திகளை அமைக்க வேண்டும். இவ்வாறு அமைக்கப்படும் பாத்தியின் உயரம் 60 செ.மீ ஆகவும், அகலம் ஒரு மீட்டராகவும் இருக்க வேண்டும். இப்பாத்திகளில் 50 செ.மீ உயரம் வரை மணல் இட வேண்டும். பனங்கொட்டைகளை 0.1 விழுக்காடு கார்பன்டாசிம் கரைசலில் நனைத்து 24 மணி நேரம் வைத்திருக்க பிறகு 10 செ.மீ வரிசை இடைவெளியில் விதைக்க வேண்டும். விதைத்த பிறகு 5 செ.மீ உயரத்துக்கு மணல் கொண்டு பனங்கொட்டைகளை மூட வேண்டும். வாரமிருமுறை பாத்திகளுக்கு நீர்ப் பாய்ச்ச வேண்டும். பாலித்தீன் தாள்களை கொண்டோ வெட்டிய களைகளைக் கொண்டோ மூடாக்கிட வேண்டும். மேட்டுப் பாத்திகளில் வளர்ந்த பனங்கிழங்குகளை எவ்வித பாதிப்பின்றி அகற்றி பாலித்தீன் பைகளில் வளர்க்க வேண்டும்.

நிலை 2
விதைத்த 90 நாட்கள் கழித்து பாத்திகளை உடைத்து விட வேண்டும். பனங்கிழங்குகளின் சல்லி நுனிகளை மென்மையாக சீவி விட வேண்டும். இதன் பிறகு டை அம்மோனியம் பாஸ்பேட் – 2 விழுக்காடு + மூரியேட் ஆப் பொட்டஷ் – 0.2 மிகி விழுக்காடு மற்றும் நாஃப்தலீன் அசிட்டிக் அமிலம் லிட்டருக்கு 25 மிகி ஆகியவை அடங்கிய கலவையில் மூன்று மணி நேரம் பனங்கிழங்கின் அடிப் பகுதியை 0.1 விழக்காடு கார்பென்டாசிம் அல்லது 0.25 விழுக்காடு தாமிர ஆக்சி குளோரைடு கரைசலில் நனைத்த பிறகு மணல் நிரப்பிய பாலித்தீன் பைகளில் 3 செ.மீ ஆழத்தில் நடவு செய்ய வேண்டும். இதன் பிறகு தேவையான நீளம், 1 மீட்டர் ஆழம் கொண்ட குழிகளைத் தோண்டி அவற்றில் பாலித்தீன் பைகளோடு வைக்க வேண்டும். நாளொன்றுக்கு 3-4 முறை நீர் பாய்ச்ச வேண்டும். வேர் வளர்ச்சிக்கு உகந்த சூழலை ஏற்படுத்த ஏதுவாக பாலித்தீன் தாள்களைக் கொண்டு மூடாக்கிட வேண்டும்.

நாற்றுகள் 50-60 நாட்களில் வேர் விடும். பிறகு நாளொன்றுக்கு இருமுறை நீர் பாய்ச்சினால் போதுமானது. இதன் பிறகு பாலித்தீன் பைகளோடு நாற்றுகளை எடுத்து நிழலில் இரு வாரங்கள் வைத்திருக்க வேண்டும். இறுதியாக நேரடி சூரிய ஒளியில் வைத்திருந்து நாற்றுகளை கடினப்படுத்த வேண்டும்.

மணல் மற்றும் மண் ஆகியவற்றை சம அளவில் கலந்து குழிகளை நிரப்ப வேண்டும். பிறகு நாற்றுகளை குழிகளில் நடவு செய்ய வேண்டும். நடவு செய்வதற்கு முன் நாற்றுகளை நாப்தலீன் அசிட்டிக் அமிலக் கரைசலில் (லிட்டருக்கு 50 மிலி கிராம்) நனைத்தால் வேர் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். பருவ மழைக்காலங்களில் பாலித்தீன் பைகளில் உள்ள நாற்றுகளை நடவு செய்தால் எவ்வித குறைபாடுகளும் ஏற்படாது. வடகிழக்கு பருவமழை பொழியும் அக்டோபர் – நவம்பர் மாதங்களில் நடவு செய்யலாம்.
புதிதாக உருவாக்கப்படும் பனந்தொகுப்புகளில் இத்தகைய நாற்றுகளை நடவு செய்வதன் மூலம் ஒரே மாதிரியான வீரியம் மிக்க பனைகளை பெற முடியும்.

நடவு
பதநீர் எடுக்க ஏதுவாக பனைகள் தொகுப்புகளாகப் பராமரிக்கப்படுகின்றன. பெரிய வளமான விதைகளை 10 செ.மீ ஆழத்தில் 3-6 மீட்டர் இடைவெளியில் வயலில் நேரடியாக விதைக்க வேண்டும். குழிகளின் நீளம் மற்றும் அகலம் 30 செ.மீ ஆகவும் ஆழம் 60 செ.மீ ஆகவும் இருக்க வேண்டும். வலிமைமிகு ஆண் தொழிலாளியால் நாளொன்றுக்கு 15 குழிகளைத் தோண்ட முடியும். ஒரு எக்டருக்கு 1110 குழிகளைத் தோண்ட வேண்டும். ஒரு நாளில் தோண்ட 74 ஆட்கள் தேவைப்படுவர். இயந்திரங்களைக் கொண்டு குழிகளைத் தோண்டிய பிறகு ஆட்களை வைத்து சீர் செய்வதன் மூலம் செலவினைக் குறைக்க முடியும். இக்குழிகளில் 10 கிலோ தொழுஉரம் மற்றும் மேல் மண் ஆகியவற்றை பாதியளவு குழி நிரம்பும் வரை இட வேண்டும். முளைப்பு தோன்றும் பக்கத்தை பக்கவாட்டில் 5 செ.மீ ஆழத்திலோ கீழாகவோ இருக்குமாறு விதைகளை ஊன்ற வேண்டும். இதன் பிறகு 100 கிராம் மாலத்தியான் பூச்சிக் கொல்லி 4 விழுக்காடு தூளை தூவி விட்டு மேல் மண் கொண்டு கொட்டைகளை மூட வேண்டும். ஒரு எக்டருக்கு 1110 பனங்கொட்டைகள் தேவைப்படும்.  இவற்றை விதை நேர்த்தி செய்ய ஒரு கிலோ பெவிஸ்டின் பூஞ்சாணக் கொல்லி தேவைப்படும். மேலும் நன்கு மக்கிய தொழு எரு குழியொன்றுக்கு 10 கிலோ வீதம் 1110 குழிகளுக்கு 11.10 டன் தேவைப்படும். விதைக்கவும் விதைத்த பிறகு குழிகளை மூடவும் விதை நேர்த்தி செய்யவும் 50-60 பெண் பண்ணையாட்கள் தேவைப்படுவர். எக்டருக்கு 1110 பனைகள் (ஏக்கருக்கு 450 பனைகள்) பூக்கும் பொழுது ஆண் பெண் பாலின விகிதம் 1:1 ஆக இருக்கும்.

Source:Dr.V.Ponnuswami, PhD, PDF (Taiwan), Former Dean & Professor (Horticulture), Horticultural College & Research Institute, Tamil Nadu Agricultural University, Coimbatore

e-mail:swamyvp200259@gmail.com
Website:www.swamyhortiiech.com

 
 

||| | | | | |

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2021