Horticulture
||| | | | | |
தோட்டக்கலை :: மலைத்தோட்டப் பயிர்கள் :: பனை

நுங்கு மற்றும் பனம் பழம்

இந்தியாவில் மேற்குக் கடற்கரையோரங்களிலும் தமழ்நாட்டிலும், இலங்கையிலும் இளம் பனம் பழங்களில் இருந்து பெறப்படும் நுங்கு பெரிதும் விரும்பி உண்ணப்படுகிறது. இளநீர் போன்று முதிரா பனம் பழத்தில் இருந்து பெறப்படும் நுங்கு கொடையில் குளிர் பானமாகப் பயன்படுகிறது.

பனையில் மதிப்பு கூட்டப்பட்ட பண்டங்கள் தயாரிப்பு


பனஞ்சீம்பு மதிப்புக் கூட்டுதல்

நுங்கு மதிப்பு கூட்டுதல் பயிற்சி (மேச்சேரி)

நுங்கு கீர்

பனம் பழ பனிக்கூழ்

நுங்கு

நுங்கு முதலில் சிறிய உருண்டையாய்த் தோன்றும். இதற்குக் “கிட்டி” என்று பெயர். கிட்டி வளர வளர, கண்கள் தோன்றி, வித்திற்கு வேண்டிய முன்று குழிகள் உண்டாகும். விதையின் வெளியில் கடினமான தோல் முதலில் தோன்றி அதற்குள் தவண் தோன்றும். கிட்டிப் பருவத்தில் பாளையை இடுக்கிப் பதநீர் இறக்கி விட்டால் நுங்கு காய்க்க வாய்ப்பில்லை. கிட்டிகள் முற்றி நுங்காக மாறும். அதை இளம் நுங்கு, கல்நுங்கு என்று இரு வகைகளாகப் பிரிக்கலாம். இளநுங்கைச் சாப்பிடலாம். சாப்பிடும் பருவம் தாண்டி நுங்கு முற்றி கல் மாதிரி இறுகி விடுவதால் ‘கல் நுங்கு’ என்று அழைக்கப்படுகிறது.

மலர் விரிந்ததில் இருந்து பழங்கள் தோன்ற 12 நாட்களும் பழங்கள் தோன்றியதில் இருந்து நுங்கு நிலையை அடைய 50 நாட்களும் தேவைப்படும் எனக் கண்டறியப்பட்டது. பூவிதழ் வட்டத்தையொட்டியுள்ள மேல்தோலின் நிறம் மஞ்சள் கலந்த பச்சையாக மாறும் பொழுது அறுவடை செய்வதால் இளம் நுங்கு கிடைக்கும். பழங்களின் தோல் கரப்பாகும் பொழுது நுங்கு கடினமாகி உண்ணத் தகுதி அற்றதாகிவிடும். நுங்கை முழுமையாக சீவி எடுத்தோ, பனம் பழத்தின் மேல்பகுதியை வெட்டி விரல் விட்டு உறிஞ்சியோ உண்ணலாம்.

விரைவில் கெட்டுப் போகும் தன்மையை நுங்கு பெற்றுள்ளதால் வெட்டிய உடனே உண்பது நல்லது. குளிர் பகுதிகளில் சேமித்து வைத்து பயன்படுத்தும் உணவுப் பொருளாக நுங்கு உள்ளது. அறை வெப்பநிலையில் நுங்கு சேமித்து வைக்கப்பட்ட பொழுது 24 மணி நேரம் கழித்து தோலின் நிறம் பழுப்பு நிறமாக மாற்றம் அடைந்தாலும் உண்ணும் நிலையில் காணப்படும். நுங்கை 36 மணி நேரம் அறை வெப்பநிலையில் சேமித்து வைத்தபோதும் உண்ணும் நிலையில் நிறம் மாறியதோடு மணம் மாற்றம் அடைந்து காணப்பட்டது. நுங்கை 48 மணி நேரம் அறை வெப்பநிலையில் வைத்திருந்த பொழுது உண்பதற்கு ஏற்றதாக இல்லாமல் கெட்டு விட்டது. சுமார் 150 செ வெப்பநிலையில் ஐந்து நாட்கள் வரை கெடாமல் வைத்திருக்கலாம் எனக் கண்டறியப்பட்டுள்ளது. சுமார் 100 செ வெப்பநிலையில் 20 நாட்கள் வரையும் 50 செ வெப்பநிலையில் 45 நாட்கள் வரையும் 00 செ வெப்பநிலையில் 3 மாதங்கள் வரையும் எவ்வித பாதிப்புமின்றி நுங்கை சேமித்த வைக்கலாம்.

பாலித்தீன் பைகளில் நுங்கு சேமிப்பு

காற்றோட்டம் கொண்ட பாலித்தீன் பைகளில் நுங்கை சேமித்து வைப்பதே சிறப்பானது. இவ்வாறு சேமித்து வைத்தால் உண்ணும்பொழுது மேல் தோலை நீக்குவது எளிது. தோல் நீக்கப்பட்ட நுங்கை வேகவைத்தோ அல்லது வேகவைக்காமலோ காற்றோட்டமுள்ள அல்லது காற்றோட்டமற்ற பாலித்தீன் பைகளில் 50 செ வெப்ப நிலையில் 10 நாட்களுக்கு சேமித்து வைக்கலாம். தோல் நீக்கப்பட்ட நுங்கை 3 நிமிடங்கள் வேகவைத்து பாலித்தீன் பைகளில் பொதித்து 50 செ வெப்பநிலையில் வைத்திருந்தால் 5 நாட்கள் கழித்து பழுப்பு நிறமாக மாறும்.

பாதுகாக்கப்பட்ட நுங்கு

இளம் நுங்கை (மிருதுவான வகை) தேர்ந்தெடுத்து, தோலுடன் உள்ள கண்களை சிறிது உப்பு கலந்த நீரில் கொட்டி வேக வைக்க வேண்டும். கொதி பருவத்தில் சிறிது நேரம் வெந்தவுடன் நுங்கைக் கையால் அழுத்தினால் மேல் உள்ள தோல் எளிதாக உரிந்துவிடும். இதைச் சூட்டுடன் அகற்ற வேண்டும். இல்லாவிடில், தோலில் உள்ள செந்நிறம் நுங்கில் இறங்கி விடும். தோலை நீக்கிய பின் கிடைக்கும் மிருதுவான நுங்கைக் கழுவ வேண்டும். பிறகு அதை இரண்டாகவோ அல்லது நான்காகவோ நறுக்க வேண்டும்.

பாகு தயாரித்தல்

பனஞ்சர்க்கரையை நீரில் கரைத்து, கொதிக்க (நீர் 700 மிலி பனஞ்சர்க்கரை ஒரு கிலோ) விட்டு பாகாக மாற்றி அழுக்கை நீக்கி உடன் சிட்ரிக் அமிலம் கலந்து தெளிவான பாகை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு பவுண்டு டின்னில் அடைக்க 225 கிராம் எடையுள்ள தொற்று நீக்கிய நுங்கை (Sterlised Nungu) டின்னில் போட்டு 150 கிராம் பாகை ஊற்றிக் கரண்டியால் கலக்கி விட வேண்டும். பிறகு நுங்கு நிரப்பிய டின்களை வெந்நீர்த் தொட்டியில் (Exhaust Box) முக்கால் பகுதி மூழ்கும்படி அடுக்க வேண்டும். பிறகு வெந்நீர்த் தொட்டியில் உள்ள தண்ணீரைச் சூடேற்ற வேண்டும். நீரின் வெப்ப அளவு 1850F – ல் 7 நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும். (டின்னில் உள்ள நுங்கின் வெப்பநிலை (1850F-1900F) பின்பு உடனே மூடியிட்டு, வெளியில் எடுத்து சீலிங் கருவியில் வைத்து டின் உள்ளே காற்று புகாமல் மூடியிட வேண்டும். குளிர்ந்த நீரில் டின்களை அடுக்கிக் குளிர வைத்து, வெளியில் எடுத்து நீரைத் துடைத்து தரவுத்தாள் ஒட்டி விற்பனை செய்யலாம். இது சுமார் ஓராண்டு வரை கெடாமல் இருக்கும்.

சென்னையில் உள்ள தமிழ்நாடு பனை வெல்லம் தயாரிப்போர் கூட்டமைப்பின் சார்பில் நுங்கு சேமிப்பு கலன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இள நிலை பழங்களின் புறத்தோல் கால் நடைகளால் விரும்பி உண்ணப்படுகிறது.

நுங்கின் மதிப்பு கூட்டுப் பொருட்கள்

நுங்கிலிருந்து மதிப்பு கூட்டப்பட்ட பண்டங்கள் செய்யும் பொழுது நுங்குகளின் மேல் தோலை நீக்குவது இன்றியமையாதது.

() நுங்கு உலர் பழம்

தேவையான பொருட்கள்

நுங்கு – 1கிலோ, சர்க்கரை – 1 கிலோ, சிட்ரிக் அமிலம் – 5 கிராம், நிறமி-2 கிராம்

செய்முறை

ஒவ்வொரு நுங்கையும் இரண்டு சிறு பிரிவாக பிரித்துக் கொண்டு அதனை ஒரு கூர்மையான கத்தியில் குத்தி நீர்த்த ஏலுமிச்சைக் கரைசலில் (2 விழுக்காடு) ஒரு மணி நேரம் அமிழ்த்தி வைக்கவும். பிறகு நுங்கு தண்டுகளை கத்தியில் இருந்து தனியாக எடுத்து தூய்மையான நீரில் எலுமிச்சைக் கரைசல் முழுவதும் நீங்கும் வண்ணம் கழுவிக் கொள்ளவும். இத்துண்டுகளை நீர்த்த (40 விழுக்காடு) சர்க்கரைப் பாகில் ஒரு நாள் முழுவதும் நனைக்கவும். நனைக்கும் முன் உணவு நிறமியை சர்க்கரைப் பாகில் சேர்க்கவும். அடுத்த நாள், நுங்கு துண்டுகளை சர்க்கரைப் பாகில் இருந்து எடுத்து பிறகு, சர்க்கரைப் பாகை கொதிக்க வைத்து சர்க்கரையின் அளவு 600 பிரிக்ஸ் ஆக வைத்தக் கொள்ளவும். பிறகு, சர்க்கரைப்பாகை குளிர வைத்து மீண்டும் நுங்குத் துண்டுகளை பாகில் 24 மணி நேரம் நனைத்து வைக்கவும். இம்முறையில் மீண்டும் மீண்டும் சர்க்கரைப் பாகில் சர்க்கரையின் அளவை ஒவ்வொரு முறையும் 5 விழுக்காடு கூட்டி 75 விழுக்காடு வரும் வரை ஒரு நாள் விட்டு ஒரு நாள் நுங்குத் துண்டுகளை ஒரு நாள் முழுவதும் நனைத்து எடுக்கவும். கடைசியாக 75 விழுக்காடு சர்க்கரை பாகில் ஒரு வாரம் நனைத்து வைக்கவும். பிறகு நுங்கு துண்டுகளை சர்க்கரைப்பாகில் இருந்த தனியாக வடித்த கொதிநீரில் இட்டு எஞ்சிய ஒட்டிக் கொண்டுள்ள பாகை தனியாக பிரித்தெடுக்கவும். இவ்வாறு பெறப்பட்ட நுங்கு துண்டுகளை நிழலில் உலாந்த சிறு துண்டுகளாக நறுக்கி பாலித்தீன் பைகளில் அடைத்து உலர்ந்த இடத்தில் பாதுகாக்க வேண்டும்.

() நுங்கு மிட்டாய்

தேவையான பொருட்கள்

நுங்கு – 1, சர்க்கரை – 750 கிராம், சிட்ரிக் அமிலம் – 5கிராம்

செய்முறை

முதலில் இளம் நுங்கைத் தேர்வு செய்து அதன் மேல் தோலை நீக்கிக் கொள்ளவும். இதனை இரண்டு பிரிவுகளாக பிரித்துக் கொள்ளவும். இதனை ஒரு இடுக்கியில் குத்தி கால்சியம் ஆக்சைடு கலந்த நீரில் 5 நிமிடம் மூழ்க வைக்கவும். பிறகு நுங்கு துண்டுகளை தனியாக எடுத்து சுத்தமான நீரில் நன்கு கழுவி கால்சியம் ஆக்சைடு முழுவதையும் நீக்கவும். நுங்கு துண்டுகளை மிண்டும் 5 விழுக்காடு சிட்ரிக் அமிலம் கலந்த நீரில் முழ்க வைத்து, பிறகு கழுவி மீண்டும் சுடு நீரில் முழ்க வைத்து உடனடியாக எடுத்து விடவும். இப்பொழுது நுங்கு துண்டுகள் அனைத்தையும் சர்க்கரை பாகில் கலந்து நூல் போன்ற தன்மையை அடையும் வரை வேக வைக்கவும். பிறகு, நுங்கு துண்டுகள் அனைத்தையும் சர்க்கரை பாகில் இருந்து நீக்கி நிழலில் உலா்த்த வேண்டும். சர்க்கரைத் துகள்கள் நுங்கின் மேல்பகுதியில் ஒட்டிக்கொண்டு சுவையான மிட்டாய் தயாராகிவிடும். இதனை நன்றாக காற்றோட்டம் உள்ள பனையோலையால் செய்யப்பட்ட பெட்டிகளில் சேமித்து வைக்கவும். சர்க்கரை மற்றும் சிட்ரிக் அமிலம் போன்றவற்றை நுங்கு உடன் சேர்த்து நுங்கு மிட்டாய் தயாரிக்கலாம்.

() நுங்கு குளிர்பானம்

தேவையான பொருட்கள்

நுங்குச் சாறு – 250மி, சர்க்கரைப் பாகு -1 தேக்கரண்டி, எலுமிச்சைச்சாறு – 2 தேக்கரண்டி

செய்முறை

தரமான இள நுங்கை தேர்வு செய்து கொண்டு முற்றிலுமாக நீக்கி சிறுதுண்டுகளாக நறுக்கி சிறிது நீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். ஒரு குவளை சர்க்கரை உடன் அரைக்குவளை நீர் சேர்த்து கொதிக்க வைத்து சர்க்கரைப்பாகு தயாரித்துக் கொள்ளவும். நுங்கு சாறு மற்றும் சர்க்கரை பாகு இவை இரண்டையும் சமமாக கலந்து கொள்ளவும். இதனை எலுமிச்சைச்சாறுடன் கலந்து பரிமாறலாம்.

() நுங்கு கீர்

தேவையான பொருட்கள்

நுங்குச் சாறு - 250 மிலி, பால் – 250மிலி, சர்க்கரை – 250 மிலி, ஏலக்காய் -3, ஜாதிப்பத்திரி – சிறுதுண்டு, முந்திரிப்பருப்பு – 10 கிராம்.

செய்முறை

இளம் நுங்கை தேர்ந்தெடுத்து மேல் தோலை நிக்கிக் கொள்ளவும். இதனை அரைக்கும் இயந்திரத்தில் போட்டு கொதிக்க வைத்து பாலுடன் அரைத்து குளிரச் செய்ய வேண்டும். மேற்குறிப்பிட்ட கலவையில் சர்க்கரையைச் சேர்த்து கொதிக்க வைத்து சர்க்கரை முழுவதையும் கரைக்க வேண்டும். ஏலக்காய் மற்றும் ஜாதிப்பத்திரி ஆகியவற்றை இவற்றுடன் சேர்க்கவும். இந்த கீரை முந்திரிப்பருப்புடன் கலந்து பரிமாறலாம்.

() கோந்தை

சீவிய நுங்கைத் தோண்டி எடுத்தவுடன் சதைப் பற்றுள்ள மீதிப் பாதிக்குக் கோந்தை என்று பெயர். சீவும் பொழுது மேலே இருந்து கிடைக்கும் பகுதி மெல்லியதாய் இருக்கும். இந்தக் கோந்தையைச் சிறுசிறு துண்டாக நறுக்கி, மாட்டுத் தீவனமாகப் பயன்படுத்தலாம். கோந்தையின் ரூசி இலேசான இனிப்புடன் துவர்ப்பாக இருக்கும்.
கோந்தையைக் காயவைத்து அடுப்பெரிக்கலாம். பச்சைக் கோந்தை இரண்டின் நடுவில் ஒரு குச்சியை இணைத்து விளையாட்டு வண்டி செய்து கிராமத்துக் குழந்தைகள் விளையாடுவர்.

() குலைஞ்சி

பெண்பனையில் இருந்து காய்களைக் களைந்த உடன் மீதமுள்ள பகுதிக்குக் “குலைஞ்சி” என்று பெயர். இதைக் காய வைத்து அடுப்பெரிப்பார்கள்.

பனம் பழம்

கிட்டி வளர்ந்து நுங்காகிப் பிறகு பழமாகும். பனம்பழம் இனிப்பாக இருக்கும். கண்ணில் உள்ள மெல்லிய வெண்மையான பகுதி பிறகு வெள்ளையான பருப்பாக விளைகிறது. இந்த கண்கள் உள்ள நுங்கு வளர வளர அதைச் சுற்றி தோல் இறுகிக் கொட்டையாகும். அதே சமயத்தில் கொட்டைக்கு வெளியே உள்ள சதைப்பற்று, பழுத்து மஞ்சள் நிறத்துடன் இனிய பழமாகிறது.

ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் பனம்பழம் கிடைக்கும். கன்னியாகுமரி மாவட்டத்தில் பிப்ரவரி, மார்ச் ஆகிய மாதங்களில் பனம்பழம் கிடைக்கும். நன்கு பழுத்த பழம் நல்ல மணமுடையதாக இருக்கும். பழத்தை மூன்று கொட்டைப் பகுதியாகப் பிரித்து உண்ணலாம். பனம்பழத்தை நெருப்பிலிட்டுச் சுட்டோ, அல்லது சதைப்பற்றைத் தனியாக அறுத்து எடுத்து வேகவைத்தோ உண்ணலாம்.

பனம்பழம் முழுவதும் பழுக்குமுன், பனையிலிருந்து வெட்டிக் கீழேயிறக்கி, கொட்டையை விட்டுவிட்டு, சுற்றியுள்ள சதைப்பகுதியை மூன்று பகுதிகளாக அறுத்தெடுக்கிறார்கள். பழம் ஒன்றுக்கு ஒரு கிலோ எடையுள்ள சதைப்பகுதி கிடைக்கும். இந்தப் பகுதியைக் கிராமங்களில் “கொளக்கட்டை” என்று அழைக்கின்றனர்.
பழங்களில் பல தரமுண்டு. சில பழங்கள் அதிக சுவையுள்ளதாகவும், மணமுள்ளதாகவும் இருக்கும். தங்க நிறமுள்ள, மணமுள்ள கொளக்கட்டையைப் பானைகளில் வைத்து, கொஞ்சம் நீர் கலந்து, வேக வைக்க வேண்டும். வேக வைக்காத பழத்தை பச்சைக் கொளக்கட்டை என்றும், மற்றதை வேக வைத்த கொளக்கட்டை என்றும் கூறுகிறோம்.
சில கொளக்கட்டை நல்ல நிறமற்றதாய் இருக்கும். இதில் இனிப்பு சற்றுக்குறைவாய் இருக்கும். கொளக்கட்டையை “மோர்க்காய்” என்று அழைக்கிறோம். மோர்க்காயை சீவிக் கிடைக்கும் கொளக்கட்டையை வேக வைக்கும் பொழுது சிறிது பனைவெல்லமும் சேர்த்து வேக வைக்க வேண்டும். அப்பொழுது அது சுவையுள்ள கொளக்கட்டையாய் மாறும்.

நன்கு பழுத்த பழங்கள் இனிய மணம் கொண்டவையாகவும் முற்றிலும் பழுத்த நிலையில் பனையிலிருந்துவிழும் தன்மை கொண்டவையாகவும் இருக்கும். சதைப்பகுதி நார்த்தன்மை கொண்டவையாக இருக்கும். பொதுவாக வேக வைத்தோ சூரிய ஒளியில் உலர வைத்தோ சேமித்து வைத்தோ பயன்படுத்தப்படுகிறது. பனம்பழத்தில் காணப்படும் பசை போன்ற பொருளை அரிசிமாவுடன் கலந்து கடுகு எண்ணெயில் பொறித்து உண்ணும் வழக்கத்தை வங்காளிகள் மேற்கொண்டு வருகின்றனர். பணம் பழச் சாறிலிருந்து பெறப்படும் பசை இதர உணவுப் பண்டங்களுடன் சேர்த்து பயன்படுகிறது. நார்களை பிரித்தெடுத்து விட்டு பல்வேறு சுவையான உணவுப் பண்டங்களை பெறலாம். பழநார் நிரப்புப் பொருளாகப் பயன்படுகிறது. பனம் பழத்தில் இருந்து பல்வேறு மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.

வழக்கமாக பெண் பனையொன்று 5-6 குலைகளையும் 50-60 பழங்களையும் அளிக்கும். இருந்த போதிலும் பருவம் ஒன்றுக்கு 200-300 பழங்களை அளிக்கும் பனைகளும் காணப்படுகின்றன.

அட்டவணை 1. பனம் பழத்தின் பகுதிப் பொருட்கள்

பகுதிப் பொருட்கள் எடை (கிராம்) விழுக்காடு
மொத்த அளவு 2790 100.00
பூ விதழ் மடிப்பு 175 6.27
புறத்தோல் 120 4.30
நடுப்பகுதி நார் 60 2.37
நடுப்பகுதி உண்ணும் சாறு 1425 51.07
விதைகள் 1000.40 35.99
விதை ஓடு 964 14.12
விதை உட்பகுதி 609 21.83
கரு 1 0.04

பனம் பழத்திலிருந்து சுவையுள்ள, ‘பன்னாட்டு’ என்ற தின்பண்டம் இலங்கையில் செய்யப்பட்டு வந்தது. தமிழ்நாட்டிற்கு வருகிறது. நன்கு பழுத்த பழத்தை மூன்றாகப் பிரிக்கலாம். ஆனால் சதைப்பற்றைத் (கொளக்கட்டை) தனியாகச் சீவி எடுக்க முடியாது. எனவே சதையில் உள்ள கூழ் போன்ற பகுதியை எடுக்கிறார்கள். இந்தக் குழம்பை ஓலைப்பாயில் ஊற்றி வெய்யிலில் உலரவிடுகின்றனர். இறுகிய கூழ் சூரிய ஒளியில் நன்கு காய்கிறது. மறுபடியும் ஒரு அடுக்குக் கூழை அதன்மேல் ஊற்றி ¼  அங்குல கனம் வரை உறைய விடுகின்றனர். இரண்டு மூன்று நாட்கள் ஓலைப்பாயில் காய்ந்த உடன் அளவாக நறுக்கித் திண்பண்டமாக விற்கின்றனர். இதற்கு “பன்னாட்டு” என்று பெயர். சூரிய வெப்பத்தில் காய்வதால் பழங்களில் உள்ள காரல் சுவை நீங்கிவிடுகிறது.

பனம்பழச்சாறு எடுக்கும் முறை

நார்ச்சத்து அதிகம் உள்ள பனம்பழத்தை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி 500 கிராம் துண்டுகளை ஒரு லிட்டர் சுடு நீரில் அமிழ்த்தி வைக்கவும். குளிர்ந்தவுடன், பழத்தைப் பிழிந்து நாரைத் தனியாக எடுத்துவிடவும். மீதி உள்ள அடர் பழக்கூழை ஒரு முறை நன்றாக கிளறி ஓரிரண்டு நார்களையும் எடுத்துவிடவும். நார் நீக்கம் செய்யப்பட்ட பனம் பழச்சாற்றை குளிரூட்டப்பட்ட சூழலில் படிகங்களாக சேமித்து வைக்கலாம். இப்படிகங்களை பாலித்தீன் பைகளில் பொதித்து வைப்பதன் மூலம் சுவை குறையாமல் 30 நாட்களுக்கு சேமித்து வைக்கலாம். நாரில்லாத இப்பனங் கூழைக்கொண்டு பல மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயாரிக்கலாம். மூன்று விதையுள்ள ஒரு பனம்பழத்தில் சராசரியாக 20 விழுக்காடு பனம்பழச்சாறு கிடைக்கும்.

பனம்பழத்தின் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள்
() அடர் பனம்பழக்கூழ் தயாரிக்கும் முறை

தேவையான பொருட்கள்

பனம்பழச்சாறு -750 கிராம், சர்க்கரை – 2கிலோ, சிட்ரிக் அமிலம்-10 கிராம், பொட்டாசியம் மெட்டாபை சல்பைட் – 0.15 கிராம், நீர் – 3லிட்டர்

செய்முறை

முதலில் சிட்ரிக் அமிலம், சர்க்கரை இவற்றுடன் நீர் சேர்த்து சர்க்கரைப் பாகு தயாரித்துக் கொள்ள வேண்டும். பாகு ஆறியவுடன் பனம்பழச்சாறு மற்றும் பொட்டாசியம் மெட்டா பை சல்பைட் ஆகியவற்றைச் சேர்த்து விடவும். இந்த அடர் கரைசலை நீருடன் 3:1 என்ற விகிதத்தில் கலந்து பரிமாறலாம்.

() தயார் நிலை பானம்

தேவையான பொருட்கள்

பனம்பழக்கூழ் – 1கிலோ, நீர் – 7லிட்டர், சர்க்கரை -2கிலோ, சிட்ரிக் அமிலம் – 10 கிராம், பொட்டசியம் பை சர்பைட் – 0.3 கிராம்

செய்முறை

முதலில் பழத்தில் இருந்து பழச்சாறை பிரித்தெடுத்து இதனுடன் சக்கரைப்பாகு, பொட்டாசிம் மெட்டா பை சல்பைட் ஆகியவற்றை சேர்த்து அடர்பானம் பழக்கூழ் தயாரிக்கும் முறையிலேயே தயாரித்துக் கொள்ளவும். இதனை தூய்மையான பாட்டிலில் நிரப்பி பாதுகாக்க வேண்டும்.

() பனம்பழக்கட்டி

தேவையான பொருட்கள்

பனம்பழக்கூழ் -250கிராம், பனஞ்சர்க்கரை – 250 கிராம், சிட்ரிக் அமிலம் – 5கிராம், பொட்டாசியம் மெட்டா பை சல்பைட் – 0.3 கிராம்

செய்முறை

முதலில் சிறிது நீரைப் பயன்படுத்தி பனம்பழத்தில் இருந்து அடர் பனம்பழச்சாறு தயாரித்துக் கொள்ளவும். இச்சாறுடன் மற்ற பொருட்களைச் சேர்த்து சூடுபடுத்தி கரைத்துக் கொள்ளவும். இக்கலவையைத் தட்டுகளில் ஊற்றி 300 செ வெப்பநிலையில் காயவைத்துக் கொள்ளவும். காய்ந்த பிறகு சிறு சாக்லேட் வடிவ துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். இதனை காற்றுப்புகா காகிதங்களில் சுற்றி சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

() பனங்கொட்டை பொம்மை

பழுத்த பனம்பழத்தை மூன்று அல்லது இரண்டு கொட்டைகளாக வகிர்ந்து உலர்த்திவிட்டால் கொட்டையில் சுமார் 4 அங்குல நீளமுள்ள மெல்லிய உரோமம் போன்ற நார் காணப்படும். கொட்டையைச் சுற்றி நார் முடிமாதிரி அடர்த்தியாக உள்ளது. நார் தூய வெண்மையாக இருக்கும். தனித்தனியே கொட்டைகளை நீரில் ஊறவைத்துப் பழத்தின் கூழ் பகுதியை அகற்றி முற்றிலும் நரைத்த தலைமாதிரி பொம்மை தயாரிக்கின்றனர். பிறகு இந்தக்கொட்டைகளை பலவித ஆண், பெண் உருவங்களாக உருக்கொடுத்து கைவினைப் பொருளாக விற்கின்றனர். வெள்ளை நாருக்குச் செயற்கை முடிச்சாயமிட்டு (hair dye) அழகிய பெண் உருவ பொம்மைகள் செய்யப்படுகின்றன.

Source: Dr.V.Ponnuswami, PhD, PDF (Taiwan), Former Dean & Professor (Horticulture), Horticultural College & Research Institute, Tamil Nadu Agricultural University, Coimbatore

e-mail:swamyvp200259@gmail.com
Website:www.swamyhortiiech.com

Updated on Jan 2016

 

||| | | | | |

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016