Horticulture
||| | | | | |
தோட்டக்கலை :: மலைத்தோட்டப் பயிர்கள் :: பனை

ஊட்டச்சத்து மற்றும் மருத்துவக் குணங்கள்

மலர்கள், பழங்கள், விதைகள் என அனைத்தும் மருத்துவத் தன்மை கொண்டவையாக உள்ளன. பனம்பாளை மற்றும் வேர்களும் மருத்துவக் குணங்களைப் பெற்றுள்ளன. பாளைகளை எரித்துப் பெறப்படும் சாம்பல் மண்ணீரல் வீக்கத்தைத் தடுக்கப் பயன்படுகிறது.
பதநீர்
தமிழ்நாடு மற்றும் கேரளாவில் பதநீர் முதன்மையான உணவுப் பொருளாகக் கருதப்படுகிறது. நாள்தோறும் ஒரு குவளை வீதம் 45 நாட்களுக்கு தொடர்ச்சியாக பதநீர் பருகிவந்தால் உடல் எடை கூடும். மூச்சு இழுப்புக் குறைபாடு உள்ளவர்களைக் குணப்படுத்த பதநீர் உதவுகிறது. செரித்தலை மேம்படுத்தவும் உடற்சூட்டைத் தணிக்கவும் பதநீர் பயன்படுகிறது. காலை பதநீர் குடிப்பதை விட மாலை பதநீரைச் குடித்தால் உடல் குளிர்ச்சியாகும். மாலை பதநீரில் எப்பொழுதும் சுண்ணாம்பு அதிகமாக இருக்கும். பதநீர் குடிக்க விரும்புபவர்கள் சுண்ணாம்பின் காரத்திற்குப் பயப்படுகிறார்கள். பதநீரில் இளம் நுங்கைத் தோண்டிப் போட்டால், அதிகமாக உள்ள சுண்ணாம்புச் சத்தை உறிஞ்சிக் கொள்ளும். பதநீரும் குடிப்பதற்கு மணமுள்ளதாக இருக்கும். இது குடல் மற்றும் வயிற்றுப் புண்களை குணப்படுத்துகிறது. நாள்தோறும் காலைவேளைகளில் பதநீர் பருகிவந்தால் மலச்சிக்கல் நீங்கும்.

தொழுநோய் உள்ளவர்கள் பதநீர் பருகினால் உடல்நிலை மேம்படும். வைட்டமின் பற்றாக்குறையால் தோன்றும் பெரிபெரி, ஸ்கர்வி போன்றவற்றை பதநீர் பருகி வருவதன் மூலம் குணப்படுத்தலாம். இரத்த சோகையால் பாதிக்கப்பட்டோரின் இரத்த சிவப்பணுக்களின் (ஹீமோகுளோபின்) எண்ணிக்கையை அதிகரிக்க பதநீர் பயன்படுகிறது. குழந்தைகளின் வளர்ச்சியை மேம்படுத்துவதோடு குழந்தைப் பருவத்தில் ஏற்படும் பல்வேறு நோய்களை பதநீர் குணமாக்கும். ஆண் மற்றும் பெண் பனைகளில் பெறப்படும் பதநீரின் பண்புகள் வேறுபட்டக் காணப்படும். ஆண் பனைகளில் இருந்து பெறப்படும் பதநீரில் சாம்பல் சத்து, அஸ்கார்பிக் அமிலம், கால்சியம் போன்றவற்றின் அளவு பெண் பனைகளைக் காட்டிலும் அதிகமாகக் காணப்படுகிறது.

பண்பு ஆண் பனை பெண் பனை
தூய சாறு (விழுக்காடு) 93.28 90.80
கரையும் திடப்பொருள் (விழுக்காடு) 13.72 14.03
சுக்ரோஸ் (விழுக்காடு) 12.45 12.20
குறுக்கும் சர்க்கரை (விழுக்காடு) 0.8 0.16
பெக்டின் (விழுக்காடு) 0.04 0.04
தாது உப்பு (விழுக்காடு) 0.55 0.33

நுங்கு
நுங்கில் இனிப்பான நீர் உண்டு. மெல்லியது, ருசியுடையது, இலகுவில் செரிக்கக் கூடியது. இளம் நுங்கைக் கொண்டு சுவைமிகு தயிர்ப்பச்சடி செய்து திருமண பந்திகளில் பரிமாறப்படுகிறது. விருதுநகர் உணவு சமைப்போர் நுங்குப் பச்சடி செய்வதில் பெயர் பெற்றவர்கள். வெப்ப காலத்தில் உடம்பில் உண்டாகும் வியர்க்கூரின் மேல் நுங்கு நீரைத் தடவினால் வியர்க்கூர் மறைந்துவிடும். வெப்பத்தால் கண்விழிகள் கடுக்குமாயின் நுங்கு நீரைக் கண்களில் ஊற்றி வெப்பத்தைக் குறைக்கலாம். நுங்கின் மேல் உள்ள மெல்லிய துவர்புள்ள தோலுடன் நுங்கைச் சாப்பிட்டால் வெப்ப நோய்கள் குறையும். நுங்கின் தோலைச் சிறு குழந்தைகளுக்கு அரைத்துக் கொடுத்து வயிற்றுக் கடுப்பை கிராம மக்கள் தீர்க்கின்றனர்.

பனம்பழம்
நன்கு பழுத்த பழங்கள் தொழுநோயைக் குணப்படுத்த பயன்படுகின்றன.
பனம்பழத்தின் ஊட்டச்சத்து ஒப்பீடு

பழம் ஈரப்பதம் (%) நார்
(கிராம் / 100 கிராம்)
கால்சியம்
(கிராம் / 100 கிராம்)
இரும்பு
(மிகி / 100 கிராம்)
வைட்டமின் சி
(மிகி / 100 கிராம்)
மா 86.1 0.9 0.01 0.3 13
பப்பாளி 89.6 0.8 0.01 0.4 46
பனம்பழம் 77.2 13.5 0.09 - 27

பனை வெல்லம்
பனை வெல்லத்தை நீரில் கரைத்து வடிகட்டி பெறப்படும் நீர்மத்தை டைபாய்டு நோயாளிகளுக்கு அளித்தால் அவர்களின் உடல்வலு கூடும். பனைவெல்லத்தை நீரில் கரைத்து குழந்தைகளுக்கு அளிக்கும்பொழுது மலச்சிக்கல் நீங்கும். பனைவெல்லக் கரைசலை உண்ணும் குழந்தைகளின் எடை கூடும்.

பனங்கற்கண்டு
பனங்கற்கண்டை பாலில் போட்டு உண்டால் சுறுசுறுப்பு அதிகரிக்கும். தொண்டைப் புண்களை குணப்படுத்துவதோடு உடற்சூட்டைத் தணிக்கும். தட்டம்மை மற்றும் பெரியம்மை நோய் தாக்கியவர்களுக்கு உடல் குளிர்ச்சியாகும். மிளகுப் பொடியுடன் பனங்கற்கண்டைச் சேர்த்து உண்டால் வறண்ட இருமல் மற்றும் தொண்டை எரிச்சல் குறையும். சிறுநீர் கோளாறால் அவதிப்படும் கருவுற்ற தாய் மார்கள் பனங்கற்கண்டை சுடுநீரில் கரைத்து உண்டு வந்தால் குறைபாடுகள் சரியாகும். குளிர்ந்த நீரில் பனங்கற்கண்டை கரைத்து உண்டு வந்தால் கண்  எரிச்சல் மற்றும் கண் சிவப்பாகுதல் குறையும். பெரும்பாலான இசைக் கலைஞர்கள் தங்களது குரல் வளத்தை மேம்படுத்த பனங்கற்கண்டை உண்டு வருகின்றனர்.

வேர்
வேர்கள் நறுமணம் கொண்டிருப்பதால் தொழுநொயைக் குணமாக்கவும் மகபேறுக்கு உதவவும் பயன்படுகின்றன. வேர்கள் குளிர்ச்சியை அளிப்பவை. வேர்கள் வயிற்றுக் கோளாறுகளை சரிசெய்யப் பயன்படுகின்றன. வேர்களிலிருந்து பெறப்படும் இளஞ்சிவப்பு நிறக் கரைசலை கொதிக்க வைத்து பால்வினை நோய்களைக் குணமாக்கப் பயன்படுத்தலாம். பனைவேர் பொடியுடன் தேங்காய்ப்பால் மற்றம் மீன் போன்றவற்றைக் கலந்து பெறப்படும் பிண்ணாக்குப் போன்ற பொருளை அன்றாடம் உண்டு வந்தால் உடல் வலிமை மற்றும் வீரியம் பெருகும்.

ஓலை
வறட்சியான காலகட்டங்களில் பசுமையான ஓலைகள் கால்நடைத் தீவனமாகவும் பயன்படுகின்றன. சாரோலையிலுள்ள ஈர்க்கை சுத்தம் செய்யும் போது ஈர்க்கை ஒட்டியுள்ள சாரோலை அகற்றப்படுகிறது. இதை இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பால் மாடுகளுக்குக் கொடுக்கிறார்கள். இவற்றைப் பால் மாடுகள் விரும்பி சாப்பிடுகின்றன. இவற்றைத் தின்பதால் பால் நன்கு சுரக்கிறது என்று திருப்புல்லாணி, கீழக்கரை, தேவிப்பட்டணம் போன்ற கிராம மக்கள் கூறுகிறார்கள். ஓலையோரங்களிலிருந்து பெறப்படும் பஞ்சு போன்ற பழுப்பு நிறப் பொருளைக் கொண்டு புண்களில் ஏற்படும் இரத்தக் கசிவைத் தடுக்கலாம்.

பனைபொருட்களில் ஊட்டச்சத்தக்கள் – ஓர் ஒப்பீடு

ஊட்டச்சத்துகள் பதநீர்
(100கன
செ.மீ)
நுங்கு
(100 கிராம்)
பனம்பழம்
(100 கிராம்)
பனங்கிழங்கு
(100 கிராம்)
பனஞ்சீம்பு
(100 கிராம்)
பனைவெல்லம்
(100 கிராம்)
பி.எச் 6.7-6.9 - - - - -
ஈரப்பதம் (கிராம்) 86.60 92.50 77.84 15.48 80.34 -
மொத்தக் கரையும் திடப்பொருள் (%) 12.50 - - - - -
நைட்ரஜன் (கிராம்) 0.056 - - - - -
புரதம் (கிராம்) 0.35 0.60 0.63 2.90 0.77 0.24
கொழுப்பு - 0.10 0.17 0.56 0.18 0.37
மொத்த சர்க்கரை (கிராம்) 10.93 6.40 20.12 67.06 0.85 -
நார் சத்து (கிராம்) - 0.20 0.60 11.60 - 0.50
தாது உப்பு (கிராம்) 0.54 - - - - 0.50
ஆற்றல்
(கிலோ கலோரி)
28.90 85.73 2684.88 - - 39.80
கால்சியம்
(மி.கி) 35.40
35.40 12.00 8.98 38.00 - 8.00
பொட்டாசியம்  (கிராம்) - 0.20 0.64 2.40 - -
பாஸ்பரஸ் (கிராம்) 0.14 0.21 0.33 - - 6.40
இரும்பு (கிராம்) 0.40 0.30 - - - 0.30

பருப்பு
கிழங்கு முளைப்பதற்குக் கொட்டையிலுள்ள வெண்மையான தேங்காய் போன்ற பருப்பு உதவுகிறது. இந்த வெள்ளைப் பருப்பிலிருந்து ஒரு வித எண்ணெய் தயாரிக்கப்பட்டு எலும்பு முறிவைக் குணப்படுத்த பயன்படுத்தப்படுகிறது. ஆந்திராவில் சத்தியவாடா (தனுக்கு அருகில்) என்னுமிடத்தில் ஒரு நாட்டு மருத்துவர் இந்த எண்ணெயைக் கொண்டுதான் எலும்பு முறிவுக்கு கட்டுப்போட்டு, முறிந்த எலும்பை மறுபடியும் கட்டுகிறார்.

Source:Dr.V.Ponnuswami, PhD, PDF (Taiwan), Former Dean & Professor (Horticulture), Horticultural College & Research Institute, Tamil Nadu Agricultural University, Coimbatore

e-mail:swamyvp200259@gmail.com
Website:www.swamyhortiiech.com

Updated on Jan 2016
 

||| | | | | |

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016