பயிர் பாதுகாப்பு
தென்னையைத் தாக்கும் பூச்சி மற்றும் நோய்கள் பனையையும் தாக்குகின்றன. பனை மெதுவாக வளரும் தன்மையைப் பெற்றுள்ளதால் தெளிக்கும் வேதிப்பொருள் நீர்மத்தின் அளவும் குறைவாகவே இருக்கும். பனை வளருகின்ற பொழுது தேவைப்படும் கரைசலின் அளவு அதிகரிக்கும் என்பதால் பயிர் பாதுகாப்புக்கு ஆகும் செலவும் கூடும். பனையின் வயதைப் பொருத்து பூச்சிக் கொல்லிகளை தெளிப்பதற்கான செலவு மாறுபடும்.
அ. பனையைத் தாக்கும் பூச்சிகள்
விதை முளைத்தலின் போது காண்டாமிருக வண்டின் இளம்புழுக்கள் மற்றும் கரையான்களால் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. கீழே விழும் பனைகளை உண்ணும் பூச்சிகளாக காண்டாமிருக வண்டுகளும் சிவப்புக் கூன் வண்டுகளும் உள்ளன. இப்பூச்சிகள் படிப்படியாக வளர்நிலையில் உள்ள பனைகளையும் தாக்கி அழிக்கின்றன. பூச்சிகளின் எண்ணிக்கை அதிகமாகும் பொழுது பனையோலைகளை உண்டு அவற்றிலேயே முட்டைகளை இடுகின்றன. பனந்தொகுப்புகளைத் தூய்மையாக வைத்திருப்பதன் மூலமே இவற்றின் தாக்குதலைத் தடுக்க முடியும். கீழே விழுந்த பனைகளை அழுக விடாமல் தடுத்து உடனே அப்புறப்படுத்தி விடுவது நல்லது.
திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வுகளில் இருந்து காண்டா மிருக வண்டுகள் (ஒரைசிடஸ் ரைனோசரஸ்) மற்றும் இலை உண்ணும் கம்பளிப் புழுக்கள் (ஒபிசினா அரினோசெல்லா) ஆகிய பூச்சியினங்கள் பனையைத் தாக்கியதாகக் கண்டறியப்பட்டுள்ளது. காண்டாமிருக வண்டுகளின் தாக்குதல் 5.0-16.5 விழுக்காடாகவும் ஓலை தின்னும் கம்பளிப் புழுக்களின் தாக்குதல் 3.3-27.1 விழுக்காடாகவும் காணப்பட்டது.
காண்டாமிருக வண்டு (ஒரைசிடஸ் ரைனோசரஸ்)
ஓலையின் அடிப்புறம், நுனி ஓலை, இளம் ஓலை மற்றும் ஓலைத் தண்டு போன்றவற்றை முதிர்ந்த வண்டுகள் தாக்கும். பாளை மற்றும் மஞ்சரிகளும் பாதிக்கப்படுகின்றன.
ஓலை அச்சுக்கும் தண்டுக்கும் இடைப்பட்ட பகுதியில் 250 கிராம் மாலத்தியான் 4 விழுக்காடு தூள் மற்றும் மணல் ஆகியவற்றை சம அளவில் கலந்து பூச வேண்டும். முதிர்ந்த வண்டுகளை கொக்கி போட்டு இழுத்தும் கட்டுப்படுத்தலாம். இளம் பனைகளில் ஓலை அச்சுகளில் மூன்று பாசிமணி உருண்டைகளை 45 நாட்களுக்கு ஒரு முறை வைத்தும் கட்டுப்படுத்தலாம். முதிர்ந்த வண்டுகளில் பாக்கிலோ நச்சுயிரியை செலுத்துவதன் மூலம் ஓலைகள் பாதிப்படைவதைத் தடுக்கலாம். ஆமணக்கு பிண்ணாக்கினை பானைகளில் ஊற வைத்து ஆங்காங்கு வைப்பதன் மூலம் முதிர்ந்த வண்டுகளை கவர்ந்து அழிக்கலாம். பனை ஓலைத் தண்டுகளை இரண்டாகப் பிளந்து அவற்றை பதநீரில் நனைத்து நச்சு உணவை வைப்பதன் மூலம் வண்டுகளை அழிக்கலாம். நன்கு வளர்ந்த பனைகளில் அதிகம் காணப்படும். பொதுவாக பனைகளை சுத்தம் செய்யும்பொழுது பூச்சிக் கொல்லிகளை தெளிக்க வேண்டும்.
சிவப்புக் கூன் வண்டு (ரைன்கோபோரஸ் பெர்ருஜீனஸ்)
இளம் புழுக்கள் தண்டின் மெல்லிய பகுதியையும் ஓலைத் தண்டின் அடிப்பகுதியையும் உண்பதால் பனைகள் காய்ந்துவிடுகின்றன. கூன் வண்டு தாக்கிய பகுதியில் இருந்து பசை போன்ற நீர்மம் வெளியாகும்.
ஓலை மற்றும் ஓலை காம்படிகளை அகற்றும் பொழுது தண்டுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். வாடிய மற்றும் பாதிக்கப்பட்ட பனைகளை அகற்றி எரிப்பதன் மூலம் வண்டுகளின் பெருக்கத்தைத் தடுக்கலாம். தண்டில் காயங்கள் ஏதேனும் இருப்பின் மாலத்தியான் 50 விழுக்காடு நனையும் தூள் மற்றும் தார் ஆகியவற்றை கலந்து பூச வேண்டும். பதநீர் மற்றும் பழ விளைச்சல் இல்லாத காலங்களில் 10 மிலி மோனோ குரோட்டாபாஸ் பூச்சிக் கொல்லியை 30 மிலி நீரில் கலந்து பாலித்தீன் பைகளில் நிரப்பி வேர்களை அதனுள் செலுத்தி வேர்வழியே அளிக்கலாம். நுகர்வோர் நலம் கருதி பதநீர் எடுப்பதற்கு 45 நாட்களுக்கு முன்பே பூச்சிக் கொல்லியை வேர் வழி செலுத்துவதை நிறுத்தி விட வேண்டும்.
கருந்தலை கம்பளிப் புழு (ஒபிசினா அரினோசெல்லா)
இளம் பனைகளை கருந்தலை கம்பளிப்புழு வெகுவாகப் பாதிக்கும் புழுக்கள் ஓலைகளின் பச்சையத்தைச் சுரண்டி உண்பதால் ஓலை நரம்பு மட்டுமே மிஞ்சும். ஓலைகளின் அடிப்புறத்தில் அறைகளை அமைத்து அவற்றில் புழுக்கள் வாழும்.
கடுமையான பாதிப்புகளுக்கு ஆளான ஓலைகளை வெட்டி அப்புறப்படுத்தி விட வேண்டும். புழு ஒட்டுண்ணிகளையும் (பிராகோனிடுகள், பெத்திலிடுகள்) கூட்டுப்புழு ஒட்டுண்ணிகளையும் (யூலோபிடுகள்) இரை விழுங்கிகளையும் உரிய கால இடைவெளிகளில் விடுவதன் மூலம் இத்தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம். புழு ஒட்டுண்ணிகளான பிராகோனிடுகள் மற்றும் பெதிலிடுகள் ஆகியவற்றை பனையொன்றுக்கு 5 என்ற வீதத்திலும் கூட்டுப்புழு ஓட்டுண்ணியான யூலோபிடு ஒட்டுண்ணியை பனையொன்றுக்கு 10 என்ற வீதத்திலும் அளிக்க வேண்டும். பூச்சி தாக்குதலின் தீவிரத்தைப் பொருத்து 20 நாட்கள் இடைவெளியில் இரண்டு முதல் மூன்று முறைகள் ஒட்டுண்ணிகளை விடலாம். இளம் நாற்றுகளில் இப்பூச்சிகளைக் கட்டுப்படுத்த மாலத்தியான் அல்லது மானோகுரோட்டாபாஸ் பூச்சிக்கொல்லியை லிட்டருக்கு 1 மிலி என்னும் வீதத்தில் கலந்த தெளிக்க வேண்டும்.
ஆ. பனையைத் தாக்கும் நோய்கள்
பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு வகையான நோய்கள் பனையைத் தாக்கி வந்த போதிலும் பனையில் மிகுதியாகக் காணப்படும் தாவர எதிர் வேதிகளின் (Phytoalexin) காரணமாக நோய் எதிர்ப்புத் தன்மையைப் பெற்று விடுகின்றன.
நோய் |
பூஞ்சாணம் |
காணப்படும் இடங்கள் |
ஓலைப்புள்ளி |
பெர்டாலினியா ரெரிலாடியாய்டஸ் |
கேரளா |
ஓலைப்புள்ளி |
கிளாடோஸ்பொரியம் பொராசி |
மராட்டியம் |
ஓலைப்புள்ளி |
கிராபியோலா பொராசி |
மேற்கு வங்காளம், பீகார், உத்திரப் பிரதேசம், மராட்டியம், ஆந்திரப் பிரதேசம் |
வேர் மற்றும் தண்டழுகல் |
மெருளியஸ் சிமிலிஸ் |
மேற்கு வங்காளம் |
ஓலைப்புள்ளி |
பேசலோசியா அல்நீரியன்சிஸ் |
மத்தியப் பிரதேசம் |
ஓலைக் கருகல் |
பேசலோசியால்சிஸ் பால்மாரம் |
மேற்கு வங்காளம், பீகார், மராட்டியம், தமிழ்நாடு |
குருத்தழுகல் |
பைட்டோதோரா பால்மிவோரா |
ஆந்திரப் பிரதேசம், மேற்கு வங்காளம், கர்நாடகம் |
கிழங்கழுகல் |
ரைசோக்டானியா சொலானி |
தமிழ்நாடு |
ஓலைப்புள்ளி |
ஸ்டிக்மினா பால்மிவோரா |
தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் |
பனையில் கண்டறியப்பட்ட நோய்கள்
கடந்த 1994 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வுகளில் இலைக்கருகல் (பேஷலோசியா பால்மாரம்) மற்றும் இலைப்புள்ளி (ஸ்டிக்மினா பால்மிவோரா) நோய்கள் காணப்பட்டதை அறிய முடிந்தது. இலைக்கருகலின் பாதிப்பு 12 - 62.6 விழுக்காடாகவும் இலைப்புள்ளி நோயின் பாதிப்பு 13.7 - 50.9 விழுக்காடாகவும் காணப்பட்டது.
கிழங்கு அழுகல் (ரைசாக்டானியா சொலானி)
நோய் தாக்கிய கிழங்குகள் தங்க நிறத்தில் இருந்து கருமையாக மாற்றம் அடையும். நீர்மம் வெளியேறும். தோண்டும் பொழுது எளிதில் நொறுங்கி விடும். நோய் தாக்கிய கிழங்குகளில் வெள்ளை – சாம்பல் நிற இழைம வளர்ச்சி காணப்படும்.
பழங்களில் இருந்து பிரித்தெடுத்த பனங்கொட்டைகளை கார்பன்டாசிம் 0.1 விழுக்காடு கரைசலில் 24 மணி நேரம் ஊற வைத்து பிறகு விதைக்கும் பொழுது கிழங்கு அழுகலின் தாக்குதல் 61.0 விழுக்காடு குறைவதோடு முளைப்புத் திறன் 20.1 விழுக்காடு அதிகரிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. டிரைகோடெர்மா விரிடி என்னும் உயிரியல் பூஞ்சாணக் கொல்லியைப் பயன்படுத்தி கிழங்கு அழுகலைக் கட்டுப்படுத்தலாம்.
இலைப்புள்ளி நோய் (ஸ்டிக்மினா பால்மிவோரா)
இளம் நாற்றுகளும் வளர் நிலை பனைகளும் வெகுவாகப் பாதிக்கப்படும். செம்பழுப்பு நிறப் புள்ளிகள் ஓலை முழுவதும் காணப்படும். பல புள்ளிகள் ஒன்றிணைந்து பழுப்பு நிறமாகி காய்ந்து விடும்.
இலைக் கருகல் (பேசலோசியா பால்மாரம்)
பனையின் அனைத்து வளர்ச்சி நிலைகளும் இலைக்கருகலால் பாதிக்கப்படும். நீள்வடிவிலும் சாம்பல் நிற விளிம்புகளுடனும் பழுப்பு நிற மையத்துடனும் காணப்படும். பல புள்ளிகள் ஒருங்கிணைந்து ஓலைக்கருகல் ஏற்படுகிறது.
நோய் தாக்கிய திசுக்களை அகற்றி விட்டு தூய்மைப்படுத்த வேண்டும். ஓலையின் அடிப்பகுதியில் போடோ கலவை ஒரு விழுக்காடு அல்லது தாமிர அக்சி குளோரைடு 0.2 விழுக்காடு பூஞ்சாணக் கொல்லியைத் தடவ வேண்டும். ஆரம்பகட்ட நிலையில் நோய் தாக்குதலைக் கண்டறிந்தால் மட்டுமே பனைகளைப் பாதுகாக்க முடியும்.
குருத்து அழுகல் (பைட்டோதோரா பால்மிவோரா)
கிழக்கு மற்றும் தென்னிந்தியாவில் குருத்தழுகல் நோய் பரவலாகக் காணப்படுகிறது. ஆந்திரப் பிரதேசத்தின் கோதாவரி மற்றும் கிருஷ்ணா மாவட்டங்களில் 1907 ஆம் ஆண்டில் 2,15,229 பனைகள் குருத்தழுகல் நோய்க்கு ஆளாகி மடிந்ததாகவும் 1921 ஆம் ஆண்டில் 8,692 பனைகள் மட்டுமே காணப்பட்டதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஓலையின் ஓரங்களிலும் உறைகளிலும் சிறுசிறு புள்ளிகள் தோன்றி ஓலையின் உட்புறமாகப் பரவும். நோய் தாக்குதல் தீவிரமடைந்ததும் குருத்து அழுகி பனைகள் மடிந்துவிடும். இவ்வாறு மடிந்த பனைகளை உடனே எரித்து விடுவதோடு, மற்ற பனைகளின் வெளிப்புற ஓலைகளில் இந்நோயின் தாக்குதல் தென்படும் பொழுது அவற்றையும் அகற்றி எரித்து விடுவதன் மூலம் இந்நோய் மேலும் பரவாமல் தடுக்க முடியும். பனைகளைத் தூய்மையாக வைத்திருப்பதன் மூலம் குருத்து அழுகலைத் தவிர்க்கலாம்.
விலங்குகள் மற்றும் பறவைகளின் தாக்குதல்
இளம் நாற்ற மற்றும் கிழங்குகளை கால்நடைகள் உண்பதைத் தவிர்க்க வேலி அமைக்க வேண்டும். வேலி அமைக்காவிடில் கால்நடைகளால் பாதிப்பு ஏற்பட்டு 20-25 ஆண்டுகள் கழித்து பூக்கும் நிலை உண்டாகும்.
பறவைகள், வெளவால்கள், எலிகள், அணில்கள், குரங்குகள் போன்றவற்றின் உறைவிடமாக பனை உள்ளது. குருத்தழுகல் தாக்கிய 21,000 பனைகளை ஆராய்ந்ததில் 450 பனைகளில் தேள், பாம்பு போன்றவை காணப்பட்டதால் மரமேறிகள் ஏற முடியாத சூழல் ஏற்பட்டதாக மிக்ரே என்னும் அறிவியலார் கூறியுள்ளார்.
Source:Dr.V.Ponnuswami, PhD, PDF (Taiwan), Former Dean & Professor (Horticulture), Horticultural College & Research Institute, Tamil Nadu Agricultural University, Coimbatore
e-mail:swamyvp200259@gmail.com
Website:www.swamyhortiiech.com
|
Updated on Jan 2016 |