தோட்டக்கலை :: நறுமணப் பயிர்கள் :: கிராம்பு


கிராம்பு (சிஜியம் அரோமேடிகம்)
மிர்டேசியே

கிராம்பு மரம் திறக்கப்படாத மலர் மொட்டு (பயன்பாட்டு பகுதி)

இரகங்கள் : உள்ளூர் வகைகள்

மண் மற்றும் தட்பவெப்பநிலை : கிராம்பு தமிழ்நாட்டில் நீலகிரி, கன்னியாகுமரி, ஏற்காடு, திருநெல்வேலி மற்றும் கீழ்பழனி மலைப்பகுதிகளில் பயிரிடப்படுகிறது. வெப்பமண்டலப் பயிரான கிராம்பு நல்ல வெதுவெதுப்பான ஈரப்பதமுள்ள சூழ்நிலையில் நன்கு வளரும். மழையளவு ஆண்டிற்கு 150-200 செ.மீ வரையிலும் தேவை. வெப்பநிலை 20லிருந்து 30 டிகிரி செல்சியஸ், கடல் மட்டத்திலிருந்த 1000 மீட்டர் உயரம் வரை நன்கு வளரும். நல்ல வடிகால் வசதி கொண்ட ஈரம் காக்கும் தன்மை கொண்ட இலைமக்கு நிறைந்த மணல் கலந்த களிமண், கிராம்பு சாகுபடி செய்ய மிகவும் ஏற்றது.

பருவம் : ஜுன் - டிசம்பர்

இனவிருத்தி : கிராம்பை விதை மூலம் இனப்பெருக்கம் செய்யலாம். இதைத்  தவிர பதியன் மூலமும், மென்திசு ஒட்டு முறையிலும் உற்பத்தி செய்யலாம்.

நாற்றாங்கால் : நன்கு பழுத்த பழங்களை அறுவடை  செய்து, பழங்களை 12 மணி சேரம் தண்ணீரில் ஊறவைத்து, சதைப் பகுதியை அகற்றிவிட்டு விதைகளைப் பிரித்தெடுக்கவேண்டும். அறுவடை செய்யப்பட்ட ஒரு வார காலத்திற்குள் விதைகள் அவற்றின் முளைப்புத் திறனை இழந்துவிடும். எனவே உடனே விதைக்கவேண்டும். நிழற்பாங்கான இடங்களில் திறனை இழந்து விடும். எனவே உடனே விதைக்கவேண்டும். நிழற்பாங்கான இடங்களில் உயர்ந்த மேட்டுப்பாத்திகள் அமைத்து பாத்திகளில் 2.5 செ.மீ ஆழத்திலும், 12 முதல் 15 செ.மீ இடைவெளியில் விதைகளை விதைக்கவேண்டும். விதைகள் 5-6 வாரங்களில் முளைத்துவிடும். செடிகள் மெதுவாக வளரத் தொடங்கும் போதிய அளவு நீர் விட்டுப் பாதுகாக்கவேண்டும். கன்றுகளை நாற்றாங்காலில் ஆறுமாத காலம் வைத்திருக்கவேண்டும். பிறகு நாற்றுக்களைத் தொழு எரு, மண் மற்றும் மணல் சம அளவில் நிரப்பிய 35 x 22 செ.மீ அளவுள்ள பாலித்தீன் பைகளில் நட்டு இரண்டு வருடம் வரை பாதுகாக்க வெண்டும். இவ்வாறு தயாரிக்கப்பட்ட நாற்றுக்களை நடவிற்கு உபயோகப்படுத்தவேண்டும்.

நடவு : 30 செ.மீ நீளம், அகலம், ஆழம் உள்ள குழிகளை 6 மீட்டர் இடைவெளியில் எடுத்து, ஒவ்வொரு குழியிலும் 10 கிலோ மக்கிய தொழு உரம், 50 கிராம் அசோஸ்பைரில்லம் இட்டு, குழிகளின் மத்தியில் செடிகளை நடவேண்டும். நட்டவுடன் வேர்ப்பகுதிகளில், மழைநீர் தேங்காமல் நல்ல வடிகால் வசதி செய்யவேண்டும்.

நிழல் ஏற்படுத்துதல் : நாற்றாங்காலுக்கு நிழல் ஏற்படுத்துவது அவசியம் ஆகும். இளஞ்செடிகளுக்கு ஆரம்பகாலத்தில் சிறு பந்தல் அமைத்தும், வாழை பயிரிட்டும் நிழல் ஏற்படுத்திக் கொடுக்கலாம்.

உர மேலாண்மை :
ஒரு வயதான, இளஞ்செடிகளுக்கு, செடி ஒன்றிற்கு 15 கிலோ மக்கிய தொழு எரு தழைச்சத்து  20 கிராம், மணிச்சத்து 20 கிராம், சாம்பல் சத்து 60 கிராம் கொடுக்கக்கூடிய இரசாயன உரங்களை இரண்டு பகுதிகளாகப் பிரித்து, ஒரு பகுதியை ஜுன் - ஜுலை மாதத்திலும், மற்றொரு பகுதியை செப்டம்பர் - அக்டோபர் மாதத்திலும் இடவேண்டும். பின்னர் சிறிது சிறிதாக உர அளவுகளை அதிகரித்து 7 வயதான மரத்திற்கு மரம் ஒன்றிற்கு தொழு எரு 50 கிலோ, தழைச்சத்து 300 கிராம், மணிச்சத்து 300 கிராம் மற்றும் சாம்பல் சத்து 960 கிராம் கொடுக்கக்கூடிய இரசாயன உரங்களை இடவேண்டும். உரம் இட்ட ஒரு மாதம் கழித்து, 50 கிராம் அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா இடவேண்டும்.

அளிக்க வேண்டிய காலம்

தழை

மணி

சாம்பல்

(கிராம்/செடி)

ஒரு வயதான இளஞ்செடிகளுக்கு

20

20

60

7 வயதான மரத்திற்கு

300

300

960

நீர் நிர்வாகம்

மழை இல்லாத காலங்களில் இளஞ்செடிகளுக்குத் தேவை ஏற்படும் போது நீர் பாய்ச்சுவது அவசியம் ஆகும். கோடைக்காலத்தில் நீர் பாய்ச்சவேண்டும். வளர்ந்த மரங்களுக்கு நீர் பாயச்சுவதால் காய்ப்புத்திறன் அதிகரிக்கும். ஜனவரி - மே மாதங்களில் சொட்டு நீர் மூலமாக அல்லது பாத்திகள் மூலமாக நீர் பாய்ச்சுவதாக இருந்தால் ஒரு நாளைக்கு சுமார் 8 லிட்டர் அளவில் நீர் கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும்.

களைக் கட்டுப்பாடு மற்றும் பின்செய்நேர்த்தி

பின்செய்நேர்த்தி : கிராம்பு மரத்தில் நிறைய பக்கக் கிளைகள் தோன்றும். எனவே காய்ந்த குச்சிகளையும், அடர்ந்து வளரும் கொம்புகளில் சிலவற்றையும் தக்க நேரத்தில் கவாத்து செய்யவேண்டும். மரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் களையெடுத்து காய்ந்த இலைச்சருகுகளை மேலாகப் பரப்பி மண்ணின் ஈரத்தைக் காக்கவேண்டும்.

ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு

பூச்சிகள் :

தண்டுத் துளைப்பான் : இரண்டு கிராம் கார்பரில் நனையும் தூள் 50 சதத்தை ஒரு லிட்டர் நீரில் கரைத்து, பாதிக்கப்பட்ட தண்டுப்பகுதியில் தடவிவிடவேண்டும். ஒரு லிட்டர் நீரில் 1 மிலி குயினால்பாஸை துளையில் ஊற்ற வேண்டும். ஒரு மரத்திற்கு 60 கிராம் போரேட்டை மண்ணில் இட வேண்டும்.

கருப்பு செதில்பூச்சி : ஒரு லிட்டர் நீரில் மோனோகுரோட்டோபாஸ் 1.5 மிலி அல்லது டைமிதோயேட் 1 மிலி கலந்து தெளிக்கவும்.

நோய்கள்

சிவப்பு வேரழுகல் நோய் : நோய் தாக்கிய மரங்களை வேரோடு தோண்டி அழிக்கவேண்டும். நோய் தாக்கிய மரத்தின் அருகில் ஒரு சதவீத போர்டோக்கலவையை 5 லிட்டர் வீதம் ஊற்றவேண்டும்.

இலைப்புள்ளி நோய் : சூடோமோனாஸ் ப்ளுரசன்ஸ் (PfPPB) @ 0.2 %  + லாசோனியா இலை சாற்றினை (5 %) கலந்து பருவத்திற்கு முன்பு தெளிக்கவும் அல்லது காப்பர் ஆக்ஸி குளோரைடை @ 0.25 % தெளிக்கவும்.

திடீர் மடிவு நோய் : இந்நோய் கிராம்பு மரத்தினைத் தாக்கும் மிக முக்கியமான நோய் ஆகும். பாதிக்கப்பட்ட மரங்கள் திடீரென்று காய்ந்து விடும். நீண்ட காலத்திற்கு ஏற்படும் வறண்ட சூழ்நிலையும், மழையினால் ஏற்படும் நீர்த்தேக்க நிலையும், வேர்களை நலிவடையச் செய்வதால் இந்நோய் ஏற்படுகிறது.

கட்டுப்பாடு

  1. கார்பென்டாசிம் அல்லது மான்கோசெப் 1 கிராம் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து வேர்ப்பாகம் நன்கு நனையும்படி ஊற்றவேண்டும்.
  2. வாடிக் கொண்டிருக்கும் மரங்களுக்கு நிழல் கொடுத்து உடன் நீர்ப் பாய்ச்சவேண்டும்.
  3. மலைப்பகுதி சரிவுகளில் சொட்டு நீர்ப்பாசனம் அமைப்பது மிகுந்த பலன் தரும்.
  4. மரத்தைச் சுற்றி இலைச் சருகுகளைப் பரப்பி மண்ணின் ஈரத்தைப் பாதுகாக்க வேண்டும்.
  5. தோட்ட எல்லைப் பகுதியில் விரைவாக வளரக்கூடிய காற்றுத் தடை மரங்களை வளர்க்கவேண்டும்.

அறுவடை

முதிராத கிராம்பு அரும்பு

நட்ட 7-8 ஆண்டுகளில் பலன் தரத்துவங்கும். பூக்கள் நவம்பர் முதல் ஜனவரி மாதம் வரை தோன்ற ஆரம்பிக்கும். பூ பூத்த 4-6 மாதங்களில் பூ மொக்குகள் பச்சையிலிருந்து இளம் சிவப்பு நிறமாக மாறும் பொழுது, அதே சமயம் பூக்கள் இதழ் விரியத் தொடங்குவதற்கு முன்னர் பறிக்கவேண்டும். கொத்து கொத்தாகத் தோன்றும் மொட்டுக்களை கைகளினால் அறுவுடை செய்யவேண்டும். அறுவடைக்கு அடுத்த நாள் இளம் வெய்யிலில் 4-5 நாட்கள் நன்கு உலரும் வரை காய வைக்கவேண்டும்.

உலர்ந்த காம்பு அரும்பு

மகசூல் : மரம் ஒன்றிற்கு 2 முதல் 3 கிலோ உலர்ந்த கிராம்பு கிடைக்கும்.