தோட்டக்கலை :: நறுமணப் பயிர்கள் :: கொத்தமல்லி |
|||||||||||||||||||||||
இரகங்கள் : கோ 1, கோ 2, கோ 3, கோ (சி.ஆர்) 4, ஜி ஏ யூ 1, யூ டி 1, யூ டி 2, யூ டி 20 மற்றும் யூ டி 21. மண் மற்றும் தட்பவெப்பநிலை : நல்ல வடிகால் வசதி உள்ள இரு மண்பாட்டு நிலம் பயிரிட மிகவும் ஏற்றது. மண்ணின் அமில காரத் தன்மை 6-8 வரை இருக்கவேண்டும். மானாவாரியாகப் பயிரிட ஈரமான கரிசல் மண் ஏற்றது, வெப்பநிலை சராசரியாக 20-25 செல்சியஸ் இருந்தால் பயிரின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். காலநிலை : குளிர் மற்றும் உலர்ந்த, பனி இல்லாத பகுதி கொத்தமல்லி சாகுபடிக்கு ஏற்றது. பருவம் :ஜூன் - ஜூலை மற்றும் அக்டோபர் - நவம்பர். விதையளவு : 10-12 கிலோ / எக்டர் (இறவைக்கு) 20-25 கிலோ / எக்டர் (மானாவாரிக்கு) கொத்தமல்லி விதைகளை இரண்டாக உடைத்து விதைக்கவேண்டும். உடைக்காமல் முழு விதைகளை நடவு செய்தால் விதை முளைக்காது. விதை நேர்த்தி : விதைகளை நீரில் 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். நன்றாக பயிர் உருவாவதற்காக விதைகளை ஹெக்டருக்கு 1.5 கிலோ அசோஸ்பைரில்லத்துடனும், வாடல் நோயினை கட்டுப்படுத்த எக்டருக்கு 50 கிலோ டிரைக்கோடெர்மா விரிடியுடன் சேர்த்து விதை நேர்த்தி செய்ய வேண்டும். மானாவாரி பயிர்களின் விதைப்பிற்கு முன்பு ஒரு லிட்டர் நீரில் 10 கிராம் பொட்டாசியம் டைஹெட்ரஜன் பாஸ்பேட் கொண்டு 16 மணி நேரம் விதையைக் கடினமாக்குதல் அவசியமாகும். நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை உழுது பண்படுத்திய பிறகு இறவைப் பயிராக இரந்தால் பாத்திகள் அமைத்துக் கொள்ளவேண்டும். விதை விதைப்பான் மூலம் 20 x 15 செ.மீ இடைவெளியில் விதைக்கவேண்டும். விதைகள் 8-15 நாட்களுக்குள் முளைத்துவிடும். மானாவாரி சாகுபடியில் விதைகளைத் தூவும் முறையில் விதைத்து விட்டு நாட்டுக் கலப்பைக் கொண்டு மூடிவிடவேண்டும்.
ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை அடியுரம் : எக்டருக்கு 10 கிலோ தொழு உரம் கடைசி உழவின் போது இடவேண்டும். விதைப்பதற்கு முன் இறவை மற்றம் மானாவாரிப் பயிர்களுக்கு 10 கிலோ தழைச்சத்து, 40 கிலோ மணிச்சத்து, 20 கிலோ சாம்பல்சத்து கொடுக்கக்கூடிய இரசாயன உரங்களை இடவேண்டும். மேலுரம் : இறவைப் பயிருக்கு மட்டும் விதைத்த 30வது நாள் எக்டருக்கு 10 கிலோ தழைச்சத்து கொடுக்கக்கூடிய உரத்தை அளிக்கவேண்டும். நீர் நிர்வாகம் விதைத்தவுடன் மற்றும் மூன்றாம் நாள் அதன் பின்னர் 7 முதல் 10 நாட்களுக்குள் ஒரு முறை நீர்ப் பாய்ச்சவேண்டும்.
களைக் கட்டுப்பாடு மற்றும் பின்செய்நேர்த்தி களைகள் முளைக்கும் முன்னர் புளுக்குளோரலின் எக்டருக்கு 700 மில்லி மருந்தை 500 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவேண்டும். விதைத்த 30 நாட்கள் கழித்து பயிர் களைதல் வேண்டும். தேவைப்படும் போது களை எடுக்கவேண்டும். மானாவாரிப் பயிருக்கு விதைத்த 30 நாட்கள் கழித்து 250 பிபிஎம் சிசிசி என்ற பயிர் ஊக்கி தெளித்தால் பயிர் வறட்சியைத் தாங்கி வளரும். ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு அசுவினிப்பூச்சி : இப்பூச்சியைக் கட்டுப்படுத்த மீதைல் டெமட்டான் 20 இசி மில்லி மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவேண்டும். நோய்கள் சாம்பல் நோய் : ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனஸ் பீளுரசன்ஸ் (Pf1) கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும் மற்றும் லிட்டர் நீருக்கு 2 கிராம் Pf1 என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும். அல்லது ஹெக்டருக்கு 1 கிலோ நனையும் கந்தகம் அல்லது 250 மிலி டைனோகேப் இரண்டுமுறை நோய் தோன்றும் போதும் அதன் பின் 10 நாட்களுக்கு பிறகும் தெளிக்க வேண்டும். 5% வேப்பங்கொட்டை சாறினை மூன்று முறை தெளிக்க வேண்டும் (முதல் தெளிப்பு - நோய் தோன்றியவுடன், 2 வது மற்றும் 3வது தெளிப்பு – 10 நாள் இடைவெளியில்). வாடல் நோய் :ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனஸ் ப்ளுரசன்ஸ் கொண்டு விதை நோ்த்தி செய்ய வேண்டும். அதன்பின் ஹெக்டருக்கு 5 கிலோ Pf1 யை மண்ணில் இட வேண்டும். தானிய பூஞ்சை நோய் : ஹெக்டருக்கு 0.1% (500 கிராம்) கார்பென்டாசிம்மை தானியம் உருவாகிய 20 நாள் கழித்து தெளிக்க வேண்டும்.
அறுவடை : விதைத்த 30வது நாளில் செடிகளைக் கலைத்து விடுவதன் மூலம் கீரைகளாக அறுவடை செய்யலாம். சாதாரணமாக விதைத்த 90 முதல் 110 நாட்களில் விதைகளை அறுவடை செய்யலாம். காய்கள் நன்கு பழுத்தவுடன், காயின் நிறம் பச்சை நிறத்திலிருந்து மஞ்சள் கலந்த பழுப்பு நிறமாக மாறும் போது அறுவடை செய்யவேண்டும்.
மகசூல் (எக்டருக்கு) : மானாவாரி சாகுபடியில் 300-400 கிலோ விதைகள், இறவையில் 500-600 கிலோ விதைகள் கீரையாக 6-7 டன்கள். சந்தை தகவல்கள் :
|
|||||||||||||||||||||||
முதல் பக்கம் | நாற்றங்கால் தொழில்நுட்பங்கள் | நுண்ணூட்டச்சத்து பற்றாக்குறை & குறைபாடுகள் | உர அட்டவணை | பயிர் பாதுகாப்பு | புகைப்படங்கள் | தொடர்புக்கு |