தோட்டக்கலை :: நறுமணப் பயிர்கள் :: வெள்ளைப்பூண்டு


வெள்ளைப்பூண்டு (அல்லியம் சட்டைவம்)
அல்லியேசியே

பூண்டு செடி பூண்டு

இரகங்கள்
ஊட்டி 1, ராஜாளி, தபிதி, சிரோல், மட்ராஸி காடி மற்றும் சிங்கப்பூர் சிகப்பு.

ஊட்டி 1

மண் மற்றும் தட்பவெப்பநிலை
பூண்டு கடல் மட்டத்திலிருந்து 1200 முதல் 2000 மீ வரை உயரமுள்ள பகுதிகளில் வளரும். பூண்டின் தழை வளர்ச்சி பருவத்திற்கு குறுகிய நாட்களும், குளிர்ந்த (12-180 செ), ஈரமான காலம் மிகவும் ஏற்றது. நல்ல வடிகால் வசதியுடைய அதிக அங்கக தன்மை மற்றும் 6 முதல் 7 வரை கார அமிலத் தன்மை கொண்ட மண் சிறந்தது. அதிக அமிலத் தன்மை மற்றும் கடினமான மண்ணில் பூண்டு சரியாக வளராது.

பருவம்
மலைப் பகுதியில் பூண்டு இரண்டு பருவத்தில் பயிரிடலாம்.
முதல் பருவம் : ஜ%ன் - ஜ%லை
இரண்டாம் பருவம் : அக்டோபர் – நவம்பர்

விதையளவு
500-600 கிலோ / எக்டர்

விதையும் விதைப்பும்
நிலத்தை முதலில் நன்றாக உழுது மண் நல்ல மிருதுவாக இருக்கும்படி தயாரிக்க வேண்டும். பின்னர் 30 செ.மீ இடைவெளியில் சால் அல்லது தகுந்த அளவில் படுக்கை அமைக்க வேண்டும். பூண்டு பற்களை 15 x 10 செ.மீ இடைவெளியில் நட வேண்டும்.

நீர் நிர்வாகம்
நடவு செய்தவுடன் நீர்ப்பாய்ச்சவேண்டும். பிறகு மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்து 7 முதல் 15 நாட்கள் இடைவெளியில் நீர்ப்பாய்ச்சவேண்டும்.

ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை

அடியுரம் : மக்கிய தொழு உரம் 50 டன் / எக்டர், எக்டருக்கு அசோஸ்பைரில்லம் 2 கிலோ மற்றும் பாஸ்போபாக்டீரியா 2 கிலோ இட வேண்டும். மேலும் ஒரு எக்டருக்கு 40 கிலோ தழைச்சத்து. 75 கிலோ மணிச்சத்து, 75 கிலோ சாம்பல் சத்து + ஒரு டன் வேப்பம் புண்ணாக்கு + 50 கிலோ மெக்னீசியம் சல்பேட் அடியுரமாக இடவேண்டும். எக்டருக்கு 35 கிலோ தழைச் சத்தை நட்ட 45 நாட்கள் கழித்து மேலுரமாக இட வேண்டும்.

இரப்பர் நோயை கட்டுப்படுத்தும் முறைகள் 
பூண்டுகள் இரப்பர் போன்று காணப்படும். இவ்வாறான குறைபாட்டின் மூலம் பூண்டுகள் மெலிந்து உண்பதற்குரிய பண்புகளற்று காணப்படும்.

கட்டுப்பாடு

  1. தழைச்சத்து  பயன்பாட்டினை குறைத்துக் கொள்ளவேண்டும்.
  2. யூரியா பயன்பாட்டினை மாற்றி அம்மோனியம் சல்பேட் இடவேண்டும்.
  3. நடவு செய்த 30வது நாள் 1500 பிபிஎம் சிசிசி (அ) மேலிக் ஹைட்ராக்சைடு தெளிக்கவேண்டும்.
  4. நீர் பாய்ச்சும் இடைவெளியினை அதிகப்படுத்தவேண்டும்.
  5. நடவு செய்த 30,60 மற்றும் 90 நாட்களில் போரான் 0.1 சதவீதம் மற்றும் சோடியம் மாலிபடேட் இடவேண்டும்.

களைக்கட்டுப்பாடு மற்றும் பின்செய்நேர்த்தி : நடவு செய்த 30 மற்றும் 60 ஆம் நாளில் கைக்களை எடுக்க வேண்டும்.

ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு

இலைபேன்கள் :
இதனைக் கட்டுப்படுத்த மீதைல் டெமட்டான் 25 இசி மருந்தினை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மில்லி என்ற அளவில் கலந்து தெளிக்கவேண்டும்.

நூற்புழு :
இதனைக் கட்டுப்படுத்த நடவிற்கு முன் பூண்டுகளைத் தண்ணீரில் ஊறவைக்கவேண்டும். அதன் பின்னர் பாஸ்போமிடான் 40 எஸ்.எல் (2 மில்லி மருந்து ஒரு லிட்டர் தண்ணீருக்கு) என்ற அளவில் கலந்து 15 நிமழடம் ஊறவைத்து நடவு செய்வதன் மூலம் நூற்புழு தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்.

நோய்கள் :

பூண்டு அழுகல் நோய்

நடவிற்கு முன் ஒரு கிலோ பூண்டிற்கு 2 கிலோ கார்பன்டாசிம் கொண்டு நேர்த்தி செய்து (அ) இதனை 1 கிராம் / லிட்டர் தண்ணீரில்  கலந்து வேர்ப்பாகம் நனையுமாறு ஊற்றவேண்டும்.

இலைத்தீயல் நோய்
இந்நோயினைக் கட்டுப்படுத்த ஒரு எக்டருக்கு 500 கிரர்ம கார்பன்டாசிம் கலந்து தெளிக்கவேண்டும்.

அறுவடை
இலைகள் மஞ்சளாக மாறியவுடன், பயிரை அறுவடை செய்யலாம். பொதுவாக 120 முதல் 130 நாட்களுக்குள் அறுவடைக்கு தயாராகிவிடும். அறுவடை செய்வதற்கு 10 நாட்களுக்கு முன்பே நீர்ப் பாய்ச்சுதலை நிறுத்திவிட வேண்டும். வேரையும் பொய்த் தண்டையும் அறுத்துவிட்டு பூண்டை காயவைத்து பிறகு விற்பனை செய்ய வேண்டும்.

அறுவடை செய்யப்பட்ட பூண்டுகள்

மகசூல்
ஒரு எக்டருக்கு 8 - 12 டன்.