தோட்டக்கலை :: காய்கறிப் பயிர்கள் :: டின்டா

இரகங்கள் : அண்ணாமலை மற்றும் அர்கா டின்டா

மண் : நல்ல வடிகால் வசதியுடைய வண்டல் மண் சாகுபடிக்குச் சிறந்ததாகும். சிறந்த வளர்ச்சி மற்றும் மகசூலுக்கு கார அமிலத்தன்மை 6.5-7.5 இருத்தல்வேண்டும். மிதமான வெப்பம் இதன் வளர்ச்சிக்கு ஏற்றது.

விதையளவு : ஒர எக்டருக்கு 3.5 கிலோ விதை

விதைப்பு மற்றும் பருவம்

வாய்க்கால் ஓரங்களில் ஜனவரி - பிப்ரவரி மாதங்களில் விதைக்கவேண்டும். விதைக்கும் முன் விதை நேர்த்தியாக ஒரு கிலோ டைக்கோடெர்மா விரிடி 4 கிராம் (அ) சூடோமோனாஸ் புளோரசன்ஸ் 10 கிராம் (அ)கார்பன்டாசிம் 2 கிலோ என்ற அளவில் நேர்த்தி செய்து விதைகளை விதைக்கவேண்டும். விதைத்த 15வது நாளில் ஒரு குழிக்கு 2 செடிகள் வைத்துக் கொண்டு மீதிச் செடிகளைக் களைதல்வேண்டும்.

நிலம் தயாரித்தல்

நிலத்தை நன்கு உழுது பண்படுத்தல்வேண்டும். பின்பு 1.5 மீ இடைவெளியில் வாய்க்கால் அமைக்கவேண்டும்.

நீர் நிர்வாகம்

விதைக்கும் முன் நீர்ப்பாய்ச்சவேண்டும். அதன் பின்னர் வாரம் ஒரு முறை நீர்ப்பாசனம் செய்யவேண்டும்.

களைக்கட்டுப்பாடு

களைக்கொத்து கொண்டு களைகளை நீக்கவேண்டும்.

ஊட்டச்சத்து நிர்வாகம்

ஒரு எக்டருக்கு 10 டன் தொழு உரம், 10 கிலோ தழைச்சத்து, உரத்தை அடியுரமாக இடவேண்டும். மேலும் நடவு செய்த 30வது நாளில் 20 கிலோ தழைச்சத்து இடவேண்டும்.

பயிர்ப்பாதுகாப்பு

வண்டு

வண்டுகளைக் கட்டுப்படுத்த மாலத்தியான் 50 இசி ஒரு மில்லி மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து வாரம் ஒரு முறை தெளிக்கவேண்டும்.

பழஈ

  1. பழஈ தாக்கப்பட்ட பழங்களை சேகரித்து அழித்துவிடவேண்டும்.
  2. கோடைக்காலங்களில் பழ ஈக்களின் எண்ணிக்கை குறைந்தும் மழைக்காலங்களில் அதன் எண்ணிக்கை மிகுந்தும் காணப்படுகின்றது. எனவே அதற்கேற்றாற் போல் நடவு காலத்தை முடிவு செய்யவேண்டும்.
  3. கூண்டுப் புழுக்களை  உழவு செய்து அழித்துிவிடலாம்.
  4. மாலத்தியான் மருந்தை 1 லிட்டர் நீரில் 2 மில்லி என்ற அளவில் கலந்து தெளிக்கவேண்டும்.

வெள்ளை ஈ

வேப்பங்கொட்டை சாறு 5 சதவிகிதம் தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.
டிடிபீ,பிஎச்சி, தாமிரம் மற்றும் கந்தகப் பவுடர் போன்ற மருந்துகளை உபயோகப்படுத்தக்கூடாது.

அறுவடை

விதைப்பு செய்த 90வது நாளில் ஒரு எக்டரிலிருந்து 10 டன் அறுவடை செய்யலாம்.