organic farming
அங்கக வேளாண்மை :: உயிராற்றல் வேளாண்மை

உயிராற்றல் வழிமுறைகளை கடைபிடித்து வாழை பயிரிடும் முறை

  • நடவு வயல்-உழவு, தொழுஉரம் உழவுக்கு முன்பு பலதான்ய விதைப்பு பல தான்ய பயிர்களை மடக்கி உழும்போது CPP+BD 500 தெளிப்பு
  • கன்றுகள் தேர்வு, இரகங்கள், நோய்கள் இல்லாத வயல்களில் கன்றுகள் சேகரித்தல் (சமவயதுடையவையாக)
  • நடவு -நட வேண்டியநாள்
  • பலதான்ய விதைப்பு - விதைகள் சேகரிப்பு மற்றும் அளவு, விதை நேர்த்தி
  • B.D.501 (கொம்பு சிலிக்கா உரம் தெளிப்பு)
  • C.P.P. (சாணமூலிகை உரம் B.D.500 (கொம்புசாண உரம்) தெளிப்பு
  • B.D.501 தெளிப்பு
  • பல தான்ய பயிர்களை அறுவடை செய்து பரப்பிவிடுதல்
  • C.P.P+ B.D.500  தெளிப்பு
  • மீண்டும் பலதான்ய விதைப்பு
  • B.D.501 தெளிப்பு
  • C.P.P+ B.D.500  தெளிப்பு
  • பலதான்ய பயிர்கள் அறுவடை
  • C.P.P+ B.D.500  தெளிப்பு
  • திரவ உரங்கள் மண்ணில் விடுதல்
  • மீண்டும் பலதான்ய விதைப்பு அல்லது மொச்சை, தட்டைப்பயறு நடவு
  • B.D.501 தெளிப்பு
  • சுமார் 7 மாத வயதில் பலதான்ய பயிர்கள் அறுவடை மற்றும் பரப்பிவிடுதல்
  • களை எடுத்து கன்றுகளுக்கு மண் கட்டுதல்
banana
  • திரவ உரங்களுடன் CPP கலந்து மண்ணில் விடுதல்
  • 9 மாதவயதில் B.D.501 தெளித்தல்
  • 11 மாதத்திற்குள் மீண்டும் தேவையெனில் திரவ உரங்களுடன் CPP சேர்த்து தெளித்தல்
  • அறுவடைக்கு 20 முதல் 30 நாட்களுக்குள் B.D.501 தெளிப்பு மேலே குறிப்பிட்டுள்ளவாறு நமது பண்ணை வேலைகளை பிரித்துக் கொண்டு பயோ டைனமிக் காலண்டரில் உள்ளவாறு குறிப்பிட்ட தினங்களில் அந்தந்த வேலைகளை திட்டமிட்டு செய்தால் நல்ல பலன்களைப் பெறமுடியும்.
நவதான்ய விதைப்பு:

நடவு வயல் ஏற்பாடுகளை செய்யும் போது கால அவசகாசம் நாற்பது நாட்கள் கிடைக்கும் தறுவாயில் பலதான்ய பயிர்களுக்குண்டான விதைகளை சேகரித்து விதைத்து நாற்பது முதல் நாற்பத்தைந்து நாட்கள் வளர்ந்தவுடன் மடக்கி உழவு செய்யலாம். பல தான்ய விதைகளை விதைப்பதற்கு முன்பாக தொழு உரம் 20 முதல் 30 டன்கள் அளவு வரை இட்டு உழவு செய்து விதைத்தல் மேலும் நன்மை தரும் பலதான்ய விதைகள் சேகரிக்க பின்வரும் பட்டியல் உபயோகமாக இருக்கும்.  இது  அவரவர் வசதிக்கேற்ப ஓரளவு மாற்றிக்கொள்ளலாம்.

பசுந்தழை உரப்பயிர்கள்
  வாசனை திரவியபயிர்கள்
சணப்பு – 5 கிலோ தக்கைப்பூண்டு – 5 கிலோ     சோம்பு 100 கிராம் சீரகம் 100 கிராம் கொத்தமல்லி 1கிகி
sunhemp dinancha     funnel seed cumin coriander
பயறுவகைப்பயிர்கள்
  தான்யப்பயிர்கள்
தட்டைபயிறு – 3 கிலோ பச்சைபயறு – 1 கிலோ உளுந்து -1 கிலோ   சோளம் -2 கிலோ கம்பு – 1 கிலோ ராகி – 1கிலோ
cow pea greengram blackgram   sorghum cumbu ragi
நரிப்பயறு – 3 கிலோ கொள்ளு 5 கிலோ சோயா பீன்ஸ் – 5 கிலோ   தினை – 1 கிலோ சாமை – 1 கிலோ நெல் – 1 கிலோ
naripyaru horsegram soyabean   thenai samai paddy
எண்ணெய் வித்துப்பயிர்
   
எள் – 1 கிலோ கடுகு – 1 கிலோ சூர்யகாந்தி – 3 கிலோ        
seseam mustrad sunflower        
நிலக்கடலை விதை -2 கிலோ ஆமணக்கு – 3கிலோ          
groundnut castor          

இவ்வாறு தேர்வு செய்து சுமாராக 25 முதல் 35 கி.கி. வருமாறு சேகரித்து விதைக்கவும். இவற்றில் மக்காச்சோளம், ஆமணக்கு, நிலகடலை போன்றவற்றை ஆங்காங்கே நடவு செய்தல் நல்லது. சோம்பு, சீரகம், கொத்தமல்லி போன்றவற்றை இடையில் வரப்புகளில் ஆங்காங்கே நடவு செய்யலாம். விதைகளை நான்கு மணிமுதல் 8 மணி நேரம்  அல்லது ஒரு இரவு மட்டும் ஊறவைத்து பின்பு நீரை வடிகட்டி விதைகளை பரப்பிவிட்டு CPP என்று கூறப்படும் சாண மூலிகை உரத்தை ஒரு கிலோ விதைக்கு 50 கிராம் என்ற அளவில் விதைகளின் மேல் தூவி விட்டு விதைகளுடன் நன்றாகக்கலந்து விதைகளுடன் நன்றாகக்கலந்தவுடன் மீண்டும் ஒன்றிரண்டு மணிநேரம் ஆறவிட்டு பின்பு விதைக்கவும்.

விதைப்பதற்கு ஏற்ற நாட்கள்

  1. மேல் நோக்கு நாட்கள்
  2. சந்திரன் எதிர் சனி அமையும் மணிக்கு முன்புள்ள 48 மணிநேரம்
  3. பெளர்ணமி நாள். இவ்வாறு விதைத்த பின்பு நீர்பாய்ச்சவும், விதைத்த 7 நாட்கள் முதல் 15 நாட்களுக்குள் B.D.501 ஸ்பிரே செய்யவும்.

CPP (சாண மூலிகை உரம்) B.D.500 (கொம்புசாண உரம்) B.D.501 (கொம்பு சிலிக்கா) இவற்றின் கரைசல்கள் தயாரிக்கும் முறை பின்னால் கூறப்பட்டுள்ளது மேலே கூறப்பட்டுள்ள பல தான்யப்பயிர்கள் வளர்ந்து 40 முதல் 45 நாட்கள் வயதாகும் போது முதலில் எள், கடுகு போன்றவை பூக்கத் தொடங்கும் இந்தச் சமயத்தில் இவற்றை மடக்கி உழவு செய்யவும் மடக்கி உழவு செய்த பின்பு ஒருமுறை C.P.P+ B.D.500  கரைசல் தயாரித்து வயல் முழுவதும் தெளித்து விட்டு மீண்டும் உழவு செய்யவும். பின்பு கன்றுகளை நடவு செய்ய குழிகள் அமைத்துக்கொள்ளலாம். கன்றுகளை தேர்வு செய்யும்போது கன்றுகள் சேகரிக்கும் வாழைகள் நோய் தாக்குதல்கள் இல்லாத வயல்களாக தேர்வு செய்யவும் மற்றும் நூற்புழுத்தாக்குதல் இல்லாத வயல்களாகவும்இருத்தல் வேண்டும். இயன்றவரை சமவயதுடைய கன்றுகளாக தேர்வு செய்து சேகரிக்கவும். இவ்வாறு சேகரிக்கப்பட்ட கன்றுகளை மூன்று வகையாக பிரித்து வைக்கவும். பெரியகிழங்குகள், நடுத்தரக்கிழங்குகள், சிறிய கிழங்குகள் என்று பிரித்துக் கொள்ளவும். பிரித்துக்கொண்ட கிழங்குகளை 0.5 செ.மீ. கணத்திற்கு குறைவான அளவில் செதுக்கி கிழங்குக்குமேல் தண்டு ஒரு அடி உயரம் வரை உள்ளவாறு நுனியை வெட்டவும். கிழங்குடன் சேர்த்து 1.5 அடி உயரம் இருக்குமாறு பார்த்து தேர்வு செய்யவும்.

cpp
CPP (சாண மூலிகை உரம்)

என்றைக்கு நடவு மேற்கொள்கிறோமோ அன்றைக்கே கிழங்குகளை செதுக்கி சுத்தம் செய்வது மிகவும் நன்மைதரும் ஏனெனில் வெட்டுக்காயங்களில் அதிகமான நோய் தாக்குதல்கள் இல்லாமல் தவிர்க்க முடியும். செதுக்கிய கிழங்குகளை பஞ்சகவ்யக்கரைசல் தயாரித்து முழுவதுமாக நனைத்து நடவு செய்யலாம். அல்லது சூடோமோனஸ் ப்ளோரசன்ஸ் கரைசலிலும் நனைக்கலாம். அவ்வாறு நனைக்கும் போது ஒவ்வொறு கன்றாக எடுத்து நனைப்பதால் மஞ்சள், சிவப்பு வண்ணமாக நோய் தாக்கிய கிழங்குகளை நடுவதில் இருந்து தவிர்க்கலாம். 3% பஞ்சகவ்யகரைசல் தயாரிக்க 3 லிட்டர் பஞ்சகவ்யத்தை 100 லிட்டர் நீரில் கலக்க வேண்டும்.

அதாவது 1 லிட்டர் பஞ்சகவ்யத்துடன் சுமார் 30 லிட்டர் நீர் சேர்த்து நன்றாகக் கலக்கி பின்பு உபயோகிக்கவும். சூடோமோனஸ் கரைசலாக இருப்பின் ஒரு லிட்டர் நீருக்கு 20 கிராம் அளவுக்கு சூடோமோனஸ் ப்ளோரசன்ஸ் சேர்த்து கலந்து கொள்ளவும். இனி நடவு செய்யும் போது நிச்சயமாக தவிர்க்க வேண்டிய நாள், அபோஜி, பெரிஜி என்று குறிப்பிட்டுள்ள நாட்களை தவிர்க்க வேண்டும்.

rizhome
  1. மேல்நோக்கு நாட்களில் விதைகள் பழங்கள் என்று காலண்டரில் குறிப்பிட்டுள்ள நாட்கள் (அதாவது நெருப்பக்குண்டான இராசிகளில் சந்திரன் பயணிக்கும் மேல் நோக்கு நாட்கள்)
  2. பெளர்ணமிக்கு முதல் நாளும் பெளர்ணமி நாளும்
  3. சந்திரன் எதிர் சனி என்று காலண்டரில் குறிப்பிடப்பட்டிருக்கும் மணிக்கு முன்பு 48 மணி நேரம் இந்த நாட்களில் நடவு செய்தல் மிகவும் நல்லது.

நடவுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள குழிகளில் மூன்று இரகங்களாக பிரிக்கப்பட்டுள்ள கிழங்குகளை தனித்தனியாக நடவு வயலின் ஒவ்வொரு பகுதியில் நடவு செய்யவும். கன்றுகளை நடவு செய்யும்போது கிழங்குகள் மண்ணில் அசையாமல் மண்ணை நன்றாக மிதித்து இறுக்கி விடவும். பின்பு பலதான்ய விதைகளை விதைத்து விட்டு நீர்பாய்ச்சவும். ஊடு பயிர்கள் பயிரிடுவதாக இருந்தால் வெங்காயம், புகையிலை, மக்காச்சோளம், தட்டைப்பயிறு, நிலக்கடலை, அவரை, கொத்தமல்லி, சோயாபீன்ஸ், வெண்டை, முள்ளங்கி, பீட்ரூட், கீரை வகைகள், பச்சைபயறு, உளுந்து என்று அவரவர் ஆட்கள் வசதி, விற்பனை வசதி, பொருளாதார வசதிக்கேற்றவாறு பயிரிடலாம்.

வாழைக்கன்றுகள் நடவு செய்து பலதான்ய விதைகள் விதைத்து விட்டாலும் அல்லது ஊடுபயிராக பயிரிட்டாலும் நடவு முடிந்த 15 நாட்களுக்குள் B.D.501 எனப்படும் கொம்பு சிலிக்கா உரம் ஸ்பிரே செய்யவும். மீண்டும் 30 நாட்கள் வயதுக்குள் C.P.P. (சாணமூலிகை) + B.D.500  (கொம்பு சாண உரம்) கரைசல் தெளிக்கவும் 40 முதல் 45 நாட்களுக்குள் பலதான்யம் விதைப்பாக இருந்தால் அவற்றை நிலத்தின் மட்டத்தில் இருந்து அறுத்தோ அல்லது வேறுடன் பிடுங்கியோ பரப்பிவிடவும்.

அவ்வாறு பரவலாக இடும் போது வரப்பு மற்றும் வாய்க்கால்களை தவிர்த்து வாழைகளுக்கு இடையிலேயே பரப்பிவிடவும். இதில் கவனிக்க வேண்டியது முதலில் விதைத்த பலதான்ய விதைகள் 20 நாட்கள் வயதாக உள்ளபோது வாழைக்கன்றுகளை சூரிய வெளிச்சம் படாமல் மறைத்து மூடி வளரும். அந்தச் சமயத்தில் வாழையை சுற்றிலும் உள்ள செடிகளை காலால் மிதித்துவிட்டு வாழைகளுக்கு வெயில்படும்படி செய்யவும். ஊடுபயிராக ஏதேனும் பயிரிடப்பட்டிருந்தால் களை எடுத்தல் போன்ற வேலைகள் நடைபெறும். அறுவடையும் துவங்கும். தேவை ஏற்பட்டால் பூச்சி, நோய்தடுப்பு முறைகளை கடைபிடிக்கவும். இந்த சமயத்தில் பஞ்சகவ்யம் கரைசலை தயாரித்து ஸ்பிரே செய்தால் விளை பொருட்கள் மிகவும் தரமானதாக இருக்கும். பல தான்ய பயிர்களாக இருப்பின் பிடுங்கி  பரப்பியதும் உடனே நீர்பாய்ச்சவும் இந்த சமயம் மறுபடியும் CPP+B.D. 500 கரைசலை தெளிக்கவும். நீர்பாய்ச்சி நான்கு முதல் ஐந்து நாட்களில் மண்ணில் ஈரப்பதம் களைஎடுக்கும் பக்குவத்தில் உள்ள போது முன்பு போலவே பலதான்ய விதைகளை விதை நேர்த்தி செய்து விதைத்து லேசாக கொத்தி மண்ணைக்கிளறி விடவும். பின்பு மறுபடியும் நீர்ப்பாய்ச்சவும். இரண்டாவது முறை விதைத்து பத்து நாட்களில் B.D.501  ஸ்பிரே செய்யவும் தற்போது வாழைக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு சுமாராக அறுபது நாட்கள் முடிந்திருக்கும். தற்போது மறுபடியும் CPP+B.D. 500 மற்றும் B.D.501   கரைசல்களை தவறாமல் தெளிக்கவும்.

மூன்றாவது மாத முடிவில் இரண்டாவதாக விதைத்த பலதான்ய பயிர்களாக இருந்தாலும் அல்லது  ஊடு பயிர்களாக இருப்பினும் கிட்டத்தட்ட பிடுங்க வேண்டிய நிலையில் இருக்கும். வசதிகளுக்கு ஏற்றவாறு இவற்றை பிடுங்கி பரப்பி நீர்பாய்ச்சவும். மீண்டும் CPP+B.D. 500 கரைசல் தெளித்து விடவும். மீண்டும் நான்கைந்து நாட்களில் மண்பக்குவம் வந்தவுடன் முன்பு போலவே பலதான்ய விதைகளை விதை நேர்த்தி செய்து மூன்றவாது முறையாக விதைத்து கொத்தி விட்டு பரப்புகளை ஒழுங்கு படுத்தவும். அல்லது அவரை, கருப்பு மொச்சை போன்ற விதைகளை ஒரு அடிக்கு ஒரு விதையாக நடவு செய்யவும் மீண்டும் ஒருமுறை விதைத்த 10 நாட்களுகு்ள் B.D.501     ஸ்பிரே செய்யவும் இனி வசதி இருந்தால் ஒவ்வொரு மாதமும் முன்னர் போலவே CPP+B.D. 500  மற்றும்  B.D.501 தெளிக்கலாம். இயலாத பட்சத்தில் இரு மாதங்களுக்கு ஒரு முறை தெளித்தால் போதுமானது. பல தான்ய விதைப்பயிர்கள் வளர்ந்தவுடன் அல்லது அவரை, மொச்சை, தேவையான வளர்ச்சி அடைந்தவுடன் அவற்றையும் பிடுங்கி பரப்பி விடவும் இவ்வாறு பரவலாக இட்டவுடன் நீர்பாய்ச்சிவிட்டு CPP+B.D. 500   தெளிக்கவும்.

inter cropping

நான்கைந்து நாட்களில் மண்பக்குவம் வந்தவுடன் தேவைப்பட்டால் களைஎடுத்து வரப்புகளை அமைக்கவும் பின்பு வளர்ச்சியை பொருத்து தேவையெனில் சாணம், மூத்திரம், சாம்பல், கோழி உரம் சேர்த்து கரைசலாகவோ அல்லது திடக்கழிவுகளாகவோ ஒரு வாழைக்கு 3 கி.கி. வரை இடலாம் அல்லது மண்புழு உரம், புண்ணாக்கு வகைகள் ஏதாவது 200 கிராம் வரை இட்டு மண் அணைக்கலாம். இவற்றுடன் CPP+B.D. 500   கலந்தும் இடலாம். மீண்டும் 9வது மாதம் B.D. 501 தெளிக்கவும் 11வது மாதம் கிட்டத்தட்ட 90 சதவிகித வாழைகள் வரை குலைதள்ளி இருக்கும் தேவை எனில் திரவ உரங்குடன்  CPP கலந்து மண்ணில் ஊற்றிவிடலாம் அல்லது திரவ உரங்களை கலந்து வடிகட்டி அதிக அளவு நீர்சேர்த்து ஸ்பிரே செய்யலாம்.

அறுவடைக்கு முன்பு 30 முதல் 20 நாட்களுக்குள்  B.D. 501 ஸ்பிரே செய்தல் வேண்டும். இதன் மூலம் மீண்டும் காய்களின் எடை குறிப்பிட்டு கூறக்கூடிய அளவில் அதிகரிக்கிறது. சுவையும் அதிகமாகும். தாங்கக்கூடிய திறனும் அதிகரிக்கும் காய்கள் வெடிப்பதை நல்ல முறையில் தடுக்கிறது.

இனி CPP (சாண மூலிகை உரம்), B.D. 500   (கொம்பு சாண உரம்), B.D. 501   (கொம்பு சிலிக்கா உரம்) பற்றி CPP+B.D. 500   இரண்டும் பசுமாட்டின் சாணம் கொண்டு தயாரிக்கப்படுகிறது. B.D. 501(க்வார்ட்ஸ் கல்தூள் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இவற்றில் CPP உடன் B.D. 500    கலந்து மண்ணில் தெளிக்கலாம். CPP+B.D. 500    மட்டும் தனியாகவோ அல்லது திரவ உரங்களும் கலந்தோ ஸ்பிரே செய்யலாம்.
CPP+B.D. 500    கரைசல் தயாரிக்கும் முறை (ஒரு ஏக்கருக்கு)

biodynamic

CPP-250 கிராம்+B.D. 500   கிராம். இவற்றை எடுத்து 25 முதல் 30 லிட்டர் கொள்ளளவு உள்ள ப்ளாஸ்டிக் டிரம் அல்லது மண் பானை அல்லது வட்ட வடிவ தொட்டியில் 15 லிட்டர் சுத்தமான மருந்து கலக்காத நீர் எடுத்துக்கொண்டு அதில் இட்டு கைகளால் கரைத்து விடவும். பின்பு ஒரு குச்சியில் வலது புறமாக மெதுவாக சுற்றிக் கலக்கவும் நீர் சுற்றத் துவங்கியவுடன் சுற்றும் வேகத்தை அதிகரித்துக் கொண்டே டிரம்மின் மையப்பகுதியை நோக்கி சிறு சுற்றுகளாக சுற்றவும். தற்போது நீரில் ஆழமான சுழி தோன்றும் ஆழமான சுழி ஏற்பட்டவுடன் சுற்றுவதைநிறுத்தி மீண்டும் மெதுவாக முதலில் சுற்றிய திசைக்கு எதிர் திசையில் சுற்றவும் முன்பு போலவே குழி ஏற்பட்டவுடன் மீண்டும் மாற்றி சுற்றவும். இவ்வாறு ஒரு நிமிடத்திற்கு மூன்று முறைகள் என்று மாற்றி மாற்றி சுற்றவும். இவ்வாறு ஒரு மணி நேரம் சுற்றிக் கலக்கவும் கலந்த பின்பு இந்த கரைசலை 1 ஏக்கர் பரப்பில் கைகளால் அல்லது பழைய துடைப்பம் கொண்டும் வயல் முழுவதும் பெரிய துளிகளாக விழும்படி வீசித் தெளிக்கவும். இதற்கு தென்னை ஓலைகளைக்கொண்டு துடைப்பம் போல கட்டி நுனியை வெட்டி விட்டு அதனைக்கொண்டு தெளித்தால் வீசித் தெளிக்க ஏதுவாக உள்ளது. இந்தக்கரைசலை நிச்சயமாக தவிர்க்க வேண்டியநாள், அபோஜி, பெரிஜி நாட்கள் தவிர்த்து கீழ்நோக்கு நாட்கள் அல்லது சந்திரன் எதிர் சனிக்கு முதல் நாள் உரத்தில் தழை, மணி, சாம்பல் சத்துக்களுடன் நுண்ணூட்டச் சத்துக்களும் அதிக அளவில் உள்ளது.

இவ்வாறு ஏதேனும் ஒரு நாளில்  மாலை வேளையில் 2 மணிக்கு மேல் வெயில் குறையத் துவங்கியவுடன் கலந்து உடனே தெளிக்கவும். திடக்கழிவுகளுடன் சேர்த்து இடும்போது அதாவது தொழு உரம், மண்புழு உரம் இவற்றுடன் மண்ணில் இடும்போது 2 முதல் 5 கி.கி. CPP மற்றும் 200 கிராம் வரை B.D. 500 கலந்து இடலாம்.
திரவ உரங்களுடன்  கலந்து ஊற்றும் போதும் முன்னர் கூறிய அளவுகளை கடைபிடிக்கலாம் திரவ உரங்களான மீன் திரவ உரம், சாண மூத்திரக்கரைசல் இவற்றுடன் CPP மட்டும் 100 லிட்டர் நீருக்கு 1.கி.கி. இட்டு கலந்து வடிகட்டி ஸ்பிரே செய்யலாம். சாணமூத்திரக்கரைசல் தயாரிக்க 100 லிட்டர் நீர், சாணம் 5 கிலோ, மூத்திரம் 5 லிட்டர் வெல்லம் 2 கிலோ இவற்றுடன் CPP-1கி.கி. சேர்த்து கலந்து ஒரு இரவு மட்டும் வைத்திருந்து மறுநாள் வடிகட்டி ஸ்பிரே செய்யவும்.

மீன் திரவ உரம்

மீன் கழிவுகள் 10 கி.கி. முழு மீன்கள் 5 கி.கி. வெல்லம் 15 கி.கி. இவற்றை 50 கி.கி. டிரம்மில் அல்லது மண் பானையில் இட்டு கலந்து ( நீர் சேர்க்கக் கூடாது) நன்றாக மூடி காற்று புகாமல் செய்து பின்பு மண்ணில் அல்லது எருக்குழியின் ஓரத்தில் புதைக்கவும். இருபத்தைந்து முதல் 30 நாட்களில் இந்த கலவை தேன் போன்ற திரவமாக மாறி இருக்கும். இதனை எடுத்து ஒரு லிட்டர் நீருக்கு 2 மில்லி முதல் 5 மில்லி வரை கலந்து 100 லிட்டர் நீருக்கு 1 கி.கி. CPP சேர்த்து கலந்து வடிகட்டி பின்பு ஸ்பிரே செய்யலாம். இந்த மீன் திரவ உரத்தை சாண மூத்திரைக்கரைசலுடன் ஏக்கருக்கு 20 லிட்டர் வரை கலந்து மண்ணிலும் ஊற்றலாம். மீன் திரவ B.D. 501 கரைசல் தயாரிக்க ஒரு ஏக்கருக்கு B.D. 501-4 கிராம் மட்டும் நீர் -15 லிட்டர் (கிடைத்தால் மழை நீர்) இவற்றை ஒரு டிரம்மில் எடுத்துக்கொண்டு CPP+B.D. 500 கரைசல் தயாரித்தது போலவே ஒரு மணி நேரம் சுற்றி கலக்கவும். கலந்தவுடன் பவர்ஸ்பிரேயர் அல்லது கைகளால் இயக்கும் ஸ்பிரேயர் மூலம் பயிர்கள் எதுவாக இருப்பினும் அவற்றின் உயரத்திற்கு 5 முதல் 10 அடி உயரம் அதிகமான உயரத்தில் காற்றின் வேகத்தை பொருத்து உயரத்தூக்கி புகைபோல காற்றில் கலந்து பயிர்களின் மேல் இறங்கி படும்படி ஸ்பிரே செய்யவும்.

fish
மீன் திரவ உரம்

ஒரு ஏக்கர் பரப்பிற்கு 15 லிட்டர் கரைசல் போதுமானது தானா? என்ற சந்தேகம் வரும் கரைசல் வெளியேறும் அளவு குறைக்கப்பட்டு வேகத்தை அதிகரித்து நடந்தால் சரியாக இருக்கும். வயல்களின் பெரிய வரப்புகளின் ஓரமாகச் சென்று ஸ்பிரே செய்தால் காற்று வாக்கில் புகைபோல வயல் முழுவதும் விழும் அனுபவத்தில் இது தெரியவரும் இதனை ஸ்பிரே செய்ய தவிர்க்கவும், அபோஜி, பெரிஜி, நாட்களை தவிர்த்து மேல் நோக்கு நாட்கள் மற்றும் பெளர்ணமி நாள், சந்திரன் எதிர்சனி அமையும் நாள் இவற்றில் ஏதாவது ஒருநாள் காலை 10.00 மணிக்குள் ஸ்பிரே செய்து முடித்தல் நல்லது வெயில் குறைவாக இருப்பின் காலை 11.00 மணி வரை ஸ்பிரே செய்யலாம். 1 ஏக்கருக்கு ஸ்பிரே செய்ய அதிகபட்சம் 25 நிமிடங்கள் மட்டுமே ஆகும்.


Source :

நவநீத கிருஷ்ணன்
மேட்டுப்பாளையம்

Updated on : Jan 2015

 

முதல் பக்கம் | திட்டங்கள் | பயிர்ச்சிகள் | மற்றவை | புகைப்படங்கள் | தொடர்புக்கு| பொறுப்புத் துறப்பு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2009 - 2016