organic farming
அங்கக வேளாண்மை :: அங்கக இடு பொருட்கள் மற்றும் உத்திகள்

பண்ணை கழிவுகளை உரமாக்குதல்

பண்ணை கழிவுகளை மக்கவைத்தல்

பண்ணைக்கழிவு என்பது அறுவடைக்குபின் வயலில் எஞ்சியுள்ள (மீதமுள்ள) இலாபம் தர இயலாத ஒரு பகுதி ஆகும். வெவ்வேறு பயிர்களிலிருந்து பெறப்படும் வைக்கோல், பயிர் கட்டைகள் மற்றும் பிற கழிவுகள் அறுவடையின்போது கழிவாக கிடைக்கும். கதிர் அடித்தல் மற்றும் அடித்தலுக்கு பின் செய்யப்படும் செய்முறைகளின் போது கிடைக்கும் தேவையற்ற பொருட்கள் முறையே, நிலக்கடலைத் தொலி, புண்ணாக்கு, நெல் உமி, சோளம், கம்பு  மற்றும் மக்காச்சோளம் ஆகியவற்றின் கதிர்கள் மக்கவைத்தலுக்கு பயன்படுத்தப்படுகின்றன. அதிகப்படியான உயிர் திடக்கழிவுப்பொருட்களுக்கு ஆதரவாக தோன்றுபவை வயலில் இருந்து நிராகரிக்கப்படும் சோளம், மக்காச்சோளம், மொச்சை, பருத்தி மற்றும் கரும்புகளின் மிகுதிகள் ஆகியனவாகும். தமிழ் நாட்டில் 190 இலட்சம் டன் பண்ணைக் கழிவுகள் மக்கவைத்தலுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. இதிலிருந்து தழைச்சத்து 1.0 இலட்சம் டன்னும், மணிச்சத்து 0.5 இலட்சம் டன் மற்றும் சாம்பல்சத்து 2.0 இலட்சம் டன்கள் பெறப்படுகின்றன. எனினும் பண்ணைக்கழிவுகளை உரமாக பயன்படுத்துவதற்கு முன் அதனை நன்றாக மக்கவைத்தல் அவசியம்.

பண்ணைக்கழிவுகளை சேகரித்தல்

பல்வேறு இடங்களில் இருந்து சேகரிக்கப்படும் பண்ணைக்கழிவுகள் மக்கச்செய்யும் இடத்திற்கு கொண்டுவரப்படுகின்றன. இந்த பண்ணைக்கழிவு மக்கும் இடம் பண்ணையில் ஏதாவது ஒரு மூலையில் நல்ல சாலைப்போக்குரத்துக்கு ஏதாவது இருக்க வேண்டும். நீர் ஆதாரம் போதுமான அளவு இருக்க வேண்டும்.
பண்ணைக்கழிவுகளை மக்கும் இடத்தின் ஒரு பகுதியில் குவிக்கப்பட்டு, அதற்கு பின் பிற மக்கும் வேலைகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன.

கழிவுகளை சிறுசிறு துண்டுகளாக்குதல்

மக்குவித்தலின் போது கழிவுகளின் துகள்களின் அளவு முக்கிய பங்கு வகிக்கும். அதனால் அக்கழிவுகளை மக்குவிப்பதற்கு முன்பு அவற்றை சிறு சிறு துகள்களாக்க வேண்டும். அவற்றை கையினால் செய்யும் போது வேலை ஆட்கள் அதிகமாக தேவைப்படுவார்கள். அதனால் இப்பணிக்கு, துகள்களாக்கும் இயந்திரத்தை பயன்படுத்தலாம். துகள்களின் பரிந்துரைக்கப்பட்ட அளவு 2 முதல் 2.5 செ.மீ ஆகும்.

பச்சைநிறக் கழிவுகளையும் பழுப்பு நிறக் கழிவுகளையும் ஒன்றாக கலக்குதல்

கரிமச்சத்து மற்றும் தழைச்சத்து விகிதம் தான், மக்கும் முறையை முடிவெடுக்கும். கரிமச்சத்து மற்றும் தழைச்சத்தின் விகிதத்தின் அளவு அதிகமாக இருந்தால், மக்குதல் நடைபெறாது. கரிமச்சத்து மற்றும் தழைச்சத்தின் விகிதத்தின் அளவு சிறியதாக இருந்தால் மட்டுமே மக்குதல் நடைபெறும் அந்த விகிதம் கிடைப்பதற்கு, கரிமச்சத்து மற்றும் தழைச்சத்து அதிகமுள்ள கழிவுகளை நன்கு கலக்க வேண்டும். க்லைரீஸீடியா இலைகள், பார்த்தீனியம் களைகள், அகத்தி இலைகள் ஆகியவை பசுமைக் கழிவுகளாகும். வைக்கோல், காய்ந்த இலைகள், காய்ந்த புல் ஆகியவை கரிமச்சத்து அதிகமுள்ள பழுப்பு நிறக் கழிவுகளாகும் . இவ்விரண்டு கழிவுகளையும் சேர்த்து மக்க வைத்தால், அக்கழிவுகள் விரைவாக மக்கிவிடும். விலங்குகளின் கழிவுகளிலும் தழைச்சத்து அதிகம் இருக்கும். மக்குவித்தலின்போது, அதிகம் கரிமச்சத்து, அதிகம் தழைச்சத்து உள்ள கழிவுகளை மாற்றி மாற்றி போடும் போது, விரைவாக அவை மக்கிவிடும்.

கம்போஸ்ட் குவியல் அமைத்தல்

குறைந்தது, 4 அடி உயரத்திற்கு கழிவுகளைப் போட்டு அவற்றை குவியல் போட வேண்டும். மக்க வைக்கும் இம் சிறிது உயரத்திலும், நல்ல நிழலிலும் இருக்க வேண்டும். கழிவுகள் அனைத்தையும் நன்கு கலக்கிவிட வேண்டும். கரிமச்சத்து மற்றும தழைச்சத்து நிறைந்த கழிவுகளை மாற்றி மாற்றி அமைத்து இடையிடையே கால்நடை கழிவுகளையும் கலக்க வேண்டும். இவ்வாறு செய்த பின், அவற்றை நன்கு ஈரமாக்க வேண்டும்.

மக்குதலுக்கு தேவையான உயிர் உள்ளீடுகள்

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக நுண்ணுயிர் கூட்டுக்கலவை, மக்குதலை வேகமாக செய்யக் கூடிய பலவகை நுண்ணுயிரிகளைக் கொண்டுள்ளது. மக்கக் கூடிய கழிவுகளுடன் இந்த நுண்ணுயிரிகளைச் சேர்க்காதபோது, அப்பொருட்களில் இயல்பாக இருக்கும் நுண்ணுயிரிகளே வளர்ந்து மக்குதலைச் செய்கின்றன. இதனால் மக்குதலுக்கு நீண்ட நாட்கள் ஆகின்றது. அதேசமயம் நுண்ணுயிர்க் கூட்டக்கலவையைச் சேர்க்கும்போது, நுண்ணுயிர் செயல்பாடு முன்னரே தொடங்கி, குறைந்த காலத்தில் மக்குதல் நிறைவடைகிறது. ஒரு டன் பயிர்க்கழிவுக்கு, 2 கிலோ கூட்டுக்கலவை உபயோகப்படுத்த அறிவுறுத்தப்படுகிறது. 2 கிலோ கூட்டுக்கலவையை 20 லிட்டர் தண்ணீரில் கலந்து கரைசலாக்கிக் கொள்ள வேண்டும்.  இக்கரைசலைக் குவித்து வைக்கப்பட்டுள்ள திடக்கழிவில் நன்றாகத் தெளித்து கலக்க வேண்டும். பசுஞ்சாணக் கரைசல், நுண்ணுயிரிகளுக்கு நல்லதொரு ஆதாரமாகும். ஆனால் அதிலுள்ள தேவையற்ற நுண்ணுயிர்கள் தேவையான நுண்ணுயிர்களோடு போட்டியிடுகின்றன. எனினும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் நுண்ணுயிர் கூட்டுக் கலவை கிடைக்காத பொழுது, பசுஞ்சாணக் கரைசல் நல்ல ஆதாரமாகும். ஒரு டன் பயிர்க்கழிவுக்கு, 40 கிலோ பசுஞ்சாணத்தை 100 லிட்டர் தண்ணீரில் கரைத்து, பயிர்க்கழிவின் மேல் தெளிக்க வேண்டும். பசுஞ்சாணக் கரைசலானது, தழைச்சத்திற்கும், நுண்ணுயிர்களுக்கும் சிறந்த ஆதாரமாக விளங்குகிறது.

கம்போஸ்ட் படுக்கையில் காற்றோட்டம் ஏற்படுத்துதல்

திடக்கழிவுக் குவியலில் தேவையான அளவு ஆக்ஸிஜன் இருக்க வேண்டும். இதற்கு அக்குவியல் காற்றோட்டமுடையதாக இருக்க வேண்டும். குவியலைப் பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை கிளறிவிடுவதால், கீழுள்ள பொருட்கள் மேலும், மேலுள்ள பொருட்கள் கீழும் செல்கின்றன. இவ்வாறு கலக்குவதால் நுண்ணுயிரிகளின் செயல்பாடு தூண்டப்பட்டு, மக்குதல் செயல் வேகமாக நடைபெறுகின்றது. சில சமயங்களில் காற்றோட்டம் ஏற்படுத்த பக்கவாட்டில் அல்லது செங்குத்தான நிலையில் குழாய்களைப் பொருத்தலாம். மரத்துகள்களை பயன்படுத்துவதால் கழிவுகள் மேலும் காற்றோட்டம பெறுகின்றன.

ஈரப்பதம் நிலைநிறுத்துதல்

மக்கிய உரம் தயாரிக்கும் போது, 60 சதவிகிதம் ஈரப்பதம் இருக்க வேண்டும். எந்த சூழ்நிலையிலும், மக்கிய உரத்தின் ஈரப்பதத்தை குறையவிடக்கூடாது. கழிவுகளில் ஈரப்பதம் குறைவாக இருந்தால், அவைகளில் உள்ள நுண்ணுயிரிகளானது இறந்துவிட நேரிடும். இதனால் மக்கிய உரம் தயாரித்தல் நிகழ்வு பாதிக்கப்படும்.

மக்கிய உரம் முதிர்வடைதல்

முதிர்வடைந்த மக்கிய உரத்தின் வெளிப்படை தோற்றமானது, அளவு குறைந்தும், கருப்பு நிறமாகவும், மண்ணின் மணமும், ஒவ்வொரு துகளின் அளவும் குறைந்தும் காணப்படும். மக்கிய உரம் முதிர்வடைதல் முடிந்த பிறகு, மக்கிய உரக்குவியலை கலைத்து தரையில் பரப்ப வேண்டும். அடுத்து ஒரு நாள் கழித்து மக்கிய உரமானது ஒரே அளவாக வருமாறு, 4 மி.மி. சல்லடை கொண்டு சலித்து எடுக்க வேண்டும். மக்கிய உரம் சலித்த பிறகு கிடைக்கும் மக்காத கழிவுகளை, மறுபடியும் உரம் தயாரிக்க பயன்படுத்துவதன் மூலம் மக்கிய உரம் தயாரித்தலானது முடிவடைகிறது.

செறிவூட்டப்பட்ட மக்கிய உரம்

அறுவடை செய்யப்பட்ட மக்கிய உரத்தை நிழலில், கடினமான தரையில் குவிக்க வேண்டும். நன்மை தரக்கூடிய நுண்ணுயிரிகளான அசடோபாக்டர், அசோஸ்பைரில்லம், சூடோமோனஸ், பாஸ்போபாக்டீரியா (0.2 சதவீதம்) மற்றும் ராக்பாஸ்பேட் (2 சதவிகிதம்) ஆகியவற்றை ஒரு டன் மக்கிய உரத்துடன் கலக்க வேண்டும். கலக்கப்பட்ட நுண்ணுயிரிகளின் அதிகபட்ச வளர்ச்சியை ஊக்குவிக்க, 40 சதவிகிதம் ஈரப்பதத்தை நிலை நிறுத்த வேண்டும். மக்கிய உரத்தில் இடப்பட்ட நுண்ணுயிரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க, 20 நாட்கள் அப்படியே வைத்திருக்க வேண்டும். இவ்வாறு தயாரிக்கப்பட்ட உரமானது, செறிவூட்டப்பட்ட மக்கிய உரம் எனப்படும். இவ்வாறு தயாரிக்கப்பட்ட மக்கிய உரமானது, சாதாரண மக்கிய உரத்தை விட ஊட்டச்சத்து மற்றும் நன்மை செய்யக்கூடிய நுண்ணுயிரிகள் அளவு அதிகமாக இருப்பதுடன் தாவரத்தின் வளர்ச்சியை தூண்டுவதற்கும் உதவுகிறது.

மக்கிய உரத்தின் சத்துக்களின் அளவு

ஒவ்வொரு மக்கிய உரத்தின் சத்துக்களின் அளவு, அதற்காக எடுக்கப்படும் கழிவுகளை பொருத்தும் வேறுபடும். பொதுவாக மக்கிய உரத்தில் முதன்மைநிலை ஊட்டசத்தும், இரண்டாம் நிலை ஊட்டசத்தும் இருக்கும். இது அட்டவணை - 1 ல் குறிக்கப்பட்டுள்ளது. மக்கிய உரத்தில் சத்துக்களின் அளவு குறைவாக இருந்தாலும், தாவரத்திற்கு தேவையான அளவை, இது பூர்த்தி செய்யும்.

மக்கிய உரத்தின் நன்மைகள்

  • தாவர மற்றும விலங்குகளின் கழிவுகளில் இருந்து தயாரிக்கப்பட்ட உயர்தர மற்றும் செறிவூட்டப்பட்ட உரமானது பண்ணையிலேயே கிடைக்கிறது.
  • மக்கிய உரத்தை கலப்பதன் மூலம் மண்ணின் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பண்புகள் மேம்படுகிறது.
  • தாவரக் கழிவுகள் மண்ணின் தரத்தை மேம்படுத்துவதால் விளை பொருட்களின் தரம் உயர்கிறது.

அட்டவணை1: பல பயிர்க்கழிவுகளில் இருந்து பெறப்பட்ட மட்கு உரத்தின் சத்துக்களின் அளவு

மட்கு உரம் சத்துக்களின் அளவு (%)
தழைச்சத்து மணிச்சத்து சாம்பல் சத்து
பசுஞ்சாணம் 0.3 - 0.4 0.1 - 0.2 0.1 - 0.3
குதிரை எரு 0.4 - 0.5 0.3 - 0.4 0.3 - 0.4
செம்மறி எரு 0.5 - 0.7 0.4 - 0.6 0.3 - 0.1
மனித கழிவு 1.0 - 1.6 0.8 - 1.2 0.2 - 0.6
கோழிக் கழிவு 1.8 - 2.2 1.4 - 1.8 0.8 - 0.9
வீட்டுக் கழிவு 2.0 - 3.5 - -
கோமையம் 0.9 - 1.2 குறைவு குறைவு
கழிவு நீர் 1.2 - 1.5 குறைவு 0.5 - 1.0
செம்மறியாடு கழிவுநீர் 1.5 - 1.7 0.1 - 0.2 1.3 - 1.5
நிலக்கரி சாம்பல் 0.73 0.45 0.53
மரச்சாம்பல் 0.1 - 0.2 0.8 - 5.9 1.5 - 3.6
வீட்டுக்கழிவு மற்றும் தொழிற்சாலை கழிவு
கிராமப்புற மக்கிய உரம் 0.5 - 1.0 0.4 - 0.8 0.8 - 1.2
நகர்புற மக்கிய உரம் 0.7 - 2.0 0.9 - 3.0 1.0 - 2.0
மட்கிய உரு உரம் 0.4 - 1.5 0.3 - 0.9 0.3 - 1.9
பில்டர் பிஸ் கேக் 1.0 - 1.5 4.0 - 5.0 2.0 - 7.0
வேளாண் கழிவுகள்      
கம்பு (தட்டு) 0.65 0.75 2.50
பருத்தி (குச்சி) 0.44 0.10 0.66
வாழைத்தண்டு 0.61 0.12 1.00
சோளம் (தட்டு,தோகை) 0.40 0.23 2.17
மக்காச்சோளம் (தட்டு) 0.42 1.57 1.65
நெல் (வைக்கோல்) 0.36 0.08 0.71
புகையிலை 1.12 0.84 0.80
துவரை 1.10 0.58 1.28
கரும்பு (தோகை) 0.53 0.10 1.10
கோதுமை 0.53 0.10 1.10
புகையிலை தூள் 1.10 0.31 0.93

மக்கிய உரப் பயன்பாடு

மக்கிய உரமானது, மண்ணின் தன்மையையும், மண்ணின் கரிமச்சத்தையும் அதிகரிக்கும் ஒரு முக்கியப் பொருளாக பயன்படுகிறது. மக்கிய உரத்தை செயற்கை உரத்திற்கு ஈடாக ஒப்பிட முடியாது. ஆனால் மக்கிய உரமானது மண்ணிற்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் குறைந்த அளவு கொடுக்கிறது. ஒரு எக்டேருக்கு 5 டன் செறிவூட்டப்பட்ட மட்கு உரம் தேவைப்படுகிறது. இதையும் பயிரிடப்படுவதற்கு முன்பு நிலத்தில் அடியுரமாக இட வேண்டும்.

மட்கு உரத்தின் வரை முறைகள்

  • மட்கு உரம் தயாரிக்கும் போது, பொருட்கள் முற்றிலும் மக்கி இருக்க வேண்டும்.
  • கழிவுகள், சரியாக மக்கவில்லை என்றால் அதை4 மி.மி சல்லடை கொண்டு சலித்து எடுக்க வேண்டும். சலித்த பின்பு கிடைக்கும் கழிவுகளை மீண்டும் மக்கச் செய்ய வேண்டும்.
  • மட்குஉரம் தயரித்தலில் வெட்டப்பட்ட பெரிய கிளைகள் மற்றும் மற்ற மரபொருட்களை உபயோகப்படுத்தக்கூடாது. இது மக்க அதிக நாள் எடுப்பதுடன் மற்ற பொருட்கள் மக்குவதிலும் தடை ஏற்படுத்துகின்றது.

தகவல்:

மகிமைராசா,S., P. துரைசாமி, A. லட்சுமணன், G. ராஜணன், C. உதயசூரியன், S. நடராஜன், 2008, மட்கு உரம் தயாரிக்கும் தொழில்நுட்பம்  மற்றும் வேளாண்மையில் அங்கக கழிவுகளின் பயன்பாடு, ஏ. இ.வெளீயீடு, பி. என்.புதூர், கோவை
www.fao.org.