மற்ற பயிர்களுக்கான விதைநேர்த்தி தொழில்நுட்பங்கள்
கிழங்கு வகை பயிர்கள்
- பருத்தி துணியில் பீட்ரூட் மற்றும் முள்ளங்கி விதைகளை எடுத்து அதை நன்கு இறுக்கமாக கட்டி இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். (அ) இளஞ்சூடு தண்ணீரில் 30 நிமிடங்கள் ஊற வைத்து விதைக்க வேண்டும். இது முளைப்புத் தன்மையை அதிகரிப்பதோடு அல்லாமல் வளர்ச்சியை துரிதப்படுத்தி நல்ல ஆரோக்கியமான பயிர்களை பெற வழிவகுக்கிறது.
- விதைகளை மாட்டுக் கோமியத்தில் (1 பகுதி மாட்டுக் கோமியம் மற்றும் 5 பகுதி தண்ணீர்) கொண்டு 30 நிமிடங்கள் ஊற வைத்து பின் விதைக்க வேண்டும். இதனால் விதை மூலம் பரவும் நோய்களை தடுக்கலாம்.
- விதைகளை டிரைகோடெர்மா விரிடி (4 கிராம்/1கி விதை) கொண்டு விதை நேர்த்தி செய்து பின் 24 மணிநேரம் கழித்து விதைக்க வேண்டும்.
வாழை
- வாழை கன்றை வெப்ப நீரில் ½ மணி நேரம் நனைத்து வைத்து பின் நடவு செய்ய வேண்டும். இதன் மூலம் வேர் அழுகல் நோய் மற்றும் வேர் துளைப்பான் தாக்குதலிலிருந்து பாதுகாக்கலாம்.
- பஞ்சகாவ்யா 1.5 லிட்டரை 50 லிட்டர் தண்ணீரில் கலந்து வாழை கன்றுகளை நேர்த்தி செய்ய வேண்டும். இக்கரைசலில் வாழைக்கன்றுகளை விதைப்பதற்கு முன் ½ மணி நேரம் நனைத்து கலக்கவும்.
கரும்பு
கரும்பு கரணைகளை கிழாநெல்லி, பூவரசு மற்றும் புங்கம் (1 கிலோ அலைகளை எடுத்து காய்வைத்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, 2 நாள் கழித்து வடிகட்டி பின் உபயோகிக்க வேண்டும்) சாற்றில் நனைத்து ஈர சாக்குப்பை கொண்டு மூடி பின் அடுத்து நாள் எடுத்து நட வேண்டும். இது விதை மூலம் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்தும்.
பருத்தி
- 1 சதவிகித புங்கம் மற்றும் வேலி இலைச்சாறு (10மிலி சாறு / 980 மிலி தண்ணீர்) எடுத்து விதைகளை மானாவாரி மற்றும் கோடை விதைப்பிற்கு தகுந்தவாறு கடினப்படுத்த வேண்டும். இம்முறை நீர் வறட்சியை கட்டுப்படுத்துகிறது.
- விதைகளை கரையான் மண் கொண்டு விதை நேர்த்தி செய்வதால், அதிவேக வளர்ச்சியை பெறலாம். இதற்கு முன் விதைகளை 6 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். கரையான் மண் மற்றும் தண்ணீர் சமஅளவு எடுத்து கலந்துகொண்டு அதில் விதைகளை சேர்த்து 1 மணிநேரம் ஊற வைத்து பின் விதைக்க வேண்டும்.
- விதைப்பதற்கு முன் விதைகளை உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரிய (ஒவ்வொன்றையும் 60 கிராம் கலந்து 60 மிலி அரிசிக் கஞ்சி/ 1 கிலோ விதை)யில் கலந்து பின் 30 நிமிடங்கள் நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும்.
ஏலக்காய்
பஞ்சகாவ்யா 100 மிலி / சூடோமோனாஸ் 100 கி மற்றும் தண்ணீர் 5 லி மூன்றையும் கலந்து அதில் 1 கிலோ விதைகளை போட்டு 30 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். அதனுடன் சாம்பலைக் கலந்து நிழலில் உலர்த்தி பின் விதைக்க வேண்டும்.
சீரகம்
வாடல் நோயைக் கட்டுப்படுத்த 25 கி சீரக விதைகளை 2லி நல்லெண்ணெய் கொண்டு பூசி பின் விதைக்க வேண்டும். விதைப்பதற்கு முன் விதைகளை உப்பு நீரில் (250 கி உப்பு + 2 லிட்டர் தண்ணீர் – 10 கிலோ விதை) கலக்க வேண்டும். இந்த விதை நேர்த்தி மகசூலை அதிகப்படுத்தும் என நம்பப்படுகிறது.
பூக்கள் மற்றும் மரங்கள்
சூரிய காந்தி மற்றும் புளிய மர விதைகளை கோதுமை மாவு, அரிசி மாவு, உளுந்து மாவு மற்றும் எள் ஆகியவற்றுடன் பால் கலந்து விதைகளை ஓரிரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும் (1லி கரந்த பாலில் ஒவ்வொரு 50கி மாவையும் கலக்க வேண்டும்). விதைப்பதற்கு முன் இதனை நிழலில் உலர்த்தி மஞ்சள் தூள் கொண்டு புகைமூட்டம் செய்து விதைக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் முளைப்பு விகிதம் மற்றும் வளர்ச்சி விகிதம் அதிகரிக்கும்.
பொதுவான விதை நேர்த்தி தொழில்நுட்பங்கள்
- விதைப்பதற்கு முன் எல்லா விதமான விதைகளையும் சாம்பல் மற்றும் தண்ணீர் கலந்த பசையை கொண்டு பூசி பின் விதைக்க வேண்டும். இம்முறை விதை மூலம் பரவும் நோய்களை கட்டுப்படுத்தி விதை வீரியம் மற்றும் முளைப்புத் தன்மையை அதிகரிக்கிறது.
- விதைகளை மோர் கொண்டு (125 மிலி/1 கிலோ விதை) விதை நேர்த்தி செய்வதால் பயிர்களை தாக்கும் பூஞ்சான நோய்களிலிருந்து பாதுகாக்கலாம்.
- தானியங்கள், பயறு வகைகள் மற்றும் பருத்தி விதைகளை (100 மிலி /1 லி தண்ணீர்) கள்ளிப்பாலில் கலந்து பின் 8 மணிநேரம் இருளில் உலர்த்தி பின் விதைக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் தண்டு துளைப்பான், கரையான் மற்றும் வேறு பூச்சிகளிலிருந்தும் பாதுகாக்கலாம்.
|