பூண்டு அங்கக பயிர் சாகுபடி
இரகங்கள்:
உள்ளூர் இரகம், ஊட்டி1, பார்வி, இராஜேயே, காடி மற்றும் சிங்கப்பூர்
பருவம்: ஜீன் -ஜீலை, அக்டோபர்-நவம்பர்
மண் மற்றும் வானிலை:
நன்கு நீர் வடியும், களிமண் கலந்த வண்டல் மண்
சாகுபடிக்கு உகந்தது. குளிர்ந்த வானிலை இருந்தாலே சாகுபடி செய்ய போதுமானது.
விதை மற்றும் விதைப்பு:
நிலத்தை நன்கு உழ வேண்டும். 15 செ.மீ. இடைவெளியில் ஆழம் குறைந்த பள்ளம் தோண்ட வேண்டும். விதைக் குமிழ்களான குளோங்களை 10 செ.மீ. இடைவெளியில் விதைக்க வேண்டும்.
விதையளவு: 500-600 கிலோ /ஹெக்டேர்
விதை நேர்த்தி
3 சதவிகித தசகாவ்யாவை 30 நிமிடங்கள் விதையுடன் கலந்து வைத்து விதை நேர்த்தி செய்ய வேண்டும். அதைத் தொடர்ந்து சூடோமோனஸ் ப்ளோரோங்சென்ஸ் 5% உடன் விதை நேர்த்தி செய்ய வேண்டும். அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா 500 கிராம் /ஹெக்டேர் என்ற அளவில் எடுத்து அரிசிக் கஞ்சியுடன் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
உரமிடுதல்
- லுபினுடன் பசுந்தாள் உரத்தை பயிரிடும் 15 நாட்களுக்கு முன்பு அளிப்பதால் மண்ணில் தழைச்சத்து அளவை அதிகரிக்கலாம்.
- நன்கு சிதைந்த தொழு உரம் 30 டன் /ஹெக்டேர் என்ற அளவில் நிலம் தயார் செய்யும் பொழுது அளிக்க வேண்டும்
- கம்போஸ்ட் 5 டன் /ஹெக்டேர் என்ற அளவில் நிலத்தை தயார் செய்யும் பொழுது அளிக்க வேண்டும்.
- மண்புழு உரம் 2.5 டன் /ஹெக்டேர் என்ற அளவில் நிலத்தை தயார் செய்யும் பொழுது அளிக்க வேண்டும்
- உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா 5 கிலோ / ஹெக்டேர் என்ற அளவில் நிலத்தை தயார் செய்யும் பொழுது அளிக்க வேண்டும்
- மாட்டு குழம்பு உரம் 75 கிராம் /ஹெக்டேர் என்ற அளவில் எடுத்து 40 லிட்டர் நீரில் கரைத்து நிலத்தைத் தயார் செய்யும் பொழுது தெளிக்க வேண்டும்.
வளர்ச்சி ஊக்கிகள்
- 10% மண் புழு உர தெளிப்பை விதைத்து ஒரு மாதம் கழித்து 15 நாட்கள் இடைவெளியில் 5 முறை தெளிக்க வேண்டும்
- மாட்டு சாணக்குழிக்குப்பையை 5 கிலோ /ஹெக்டேர் என்ற அளவில் எடுத்து 300 லிட்டர் நீரில் கரைத்து, விதைத்து 45,60,75 வது நாளுக்கு பிறகு தெளிக்க வேண்டும்
- மாட்டுக் கொம்பு சிலிக்கா: 2.5 கிலோ /ஹெக்டேர் என்ற அளவில் எடுத்த 50 லிட்டர் நீரில் கரைத்து பயிரிட்ட 65வது நாளுக்குப் பிறகு தழைத் தெளிப்பாக தெளிக்க வேண்டும்
- மஞ்சூரியன்தேயிலை சாற்றை (5%) விதைத்து ஒரு மாதம் கழித்து 15 நாட்கள் இடைவெளியில் 5 முறை தழைத் தெளிப்பாகத் தெளிக்க வேண்டும்
பாசனம்:
பூண்டு சாகுபடி பாசன சாகுபடியாகவும், மானாவாரி சாகுபடியாகவும், செய்யப்படுகிறது. பாசன சாகுபடியில், பயிரிட்ட அன்றும், அதற்கு பிறகு 3 நாட்களில் கழித்தும் பாசனம் செய்ய வேண்டும்.
பயிரிட்ட பின்னர் செய்யப்படும் சாகுபடி முறைகள்: மாதம் ஒரு முறை களை எடுக்க வேண்டும். ஒவ்வொரு முறைகளை எடுக்கும் போது பூண்டுக் குமிழ்கள் வெயிலில் படுவதைப் பொறுத்து மண் அணைக்க வேண்டும்.
பயிர் பாதுகாப்பு
பூச்சிகள்
இலைப்பேன்
1.வேப்பஎண்ணெய் 3% தெளிக்க வேண்டும்
2.10% வேப்பங்கொட்டை சாற்ற பயிரிட்ட 45,60,75வது நாட்களில் தெளிக்க வேண்டும்
3.10%பூண்டு மிளகாய் சாற்றை தழைத் தெளிப்பாக தெளிக்க வேண்டும்
வெள்ளை வண்டுகள்
- கோடை உழவு செய்வதால் கூட்டுப்புழு மற்றும் தாய் பூச்சியைக் கட்டுப்படுத்தலாம்
- விளக்குப் பொறியை ஏப்ரல்- மே மாதங்களில் இரவு 7 முதல் 9 மணி வரை வயலில் பொருத்த வேண்டும்
- காலை வேளைகளில் வண்டுகளை கையால் எடுத்த அழிக்க வேண்டும்
- 3வது நிலை வண்டுகளை ஜீலை-ஆகஸ்ட் மாதங்களில் கையால் எடுத்து அழிக்க வேண்டும்
- மெட்டாஹார்சியம் அனிசோபிலே 20 கிலோ /ஹெக்டேர் என்ற அளவில் நிலத்தை தயார் செய்யும் பொழுது அளிக்க வேண்டும்
நோய்கள்
கருகல் நோய்
அக்ரி ஹோட்ரா சாம்பலை (200 கிராம் அக்ரி ஹோட்ரா சாம்பலை 1 லிட்டர் மாட்டு கோமியத்துடன் கலந்து 15 நாட்கள் வைத்திருந்து பின் 10 லிட்டர் நீரில் கரைத்து தெளிக்கவும்) பயிரிட்ட ஒரு மாதத்திற்கு பிறகு ஒரு மாத இடைவெளியில் 3 முறை தெளிக்க வேண்டும்.
மண் வழியே பரவும் நோய்கள்
- டிரைக்கோடெர்மா விரிடி 5 கிலோ /ஹெக்டேர் என்ற அளவில் அளிக்க வேண்டும்
- சூடோமோனஸ் ப்ளோராஸ்சென்ஸ் 5 கிலோ /ஹெக்டேர் என்ற அளவில் அளிக்க வேண்டும்
அறுவடை
பூண்டு செடியின் இலைகள் முதலில் மஞ்சள் நிறமாக, பின் இலைகள் முழுவதும் காய்ந்து விடும். இந்த நிலையில் பூண்டுக் குமிழ்களை கைகளால் பிடுங்கி, குவித்த வைக்க வேண்டும். இலையுறைகளை குமிழ்களுக்கு அருகில் 1-2 செ.மீ. அளவு இருக்குமாறு வெட்ட வேண்டும். வேர்களையும் வெட்ட வேண்டும். பிறகு வெயிலில் ஒரு வாரத்திற்கு உலர்த்தி, அளவு மற்றும் எடையைப் பொறுத்து தரம் பிரிக்க வேண்டும்.
விளைச்சல்: 10-15 டன்கள் /ஹெக்டேர் |