அங்கக வேளாண்மை :: அங்கக முறையில் பூச்சி மேலாண்மை |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உயிரியல் கட்டுப்பாடு முறைகள் இரை விழுங்கிகள் - புகைப்படத் தொகுப்பு உயிரியல் முறைப்பூச்சி மேலாண்மை பயிர்களில் தீங்கு செய்யும் பூச்சிகளின் எண்ணிக்கையைக் கட்டுக்குள் வைத்திருக்கும் பொருட்டு இயற்கை தந்த நன்கொடை பூச்சிகளின் “ இயற்கை எதிரிகள்”. இவ்வாறு உயிருள்ள இயற்கை உயிரினங்களைக் கொண்டு தீங்கு செய்யும் பூச்சியினங்களைக் கட்டுப்படுத்துவதற்கு உயிரியல் முறை பூச்சி மேலாண்மை என்று பெயர். உயிரியல் காரணிகளை சாறுண்ணிகள், ஒட்டுண்ணிகள், நோய்க்கிருமிகள் என மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். சாறுண்ணிகள்இவற்றைக் கொண்ணிகள் (அல்லது) இரை விழுங்கிகள் என்றும் அழைப்பர். இவை பெரும்பாலும் உருவில் பெரியவை. சுறுசுறுப்பாக வேகமாக நகரும் குணம் கொண்டவை. இவைகள் கூர்மையான பார்வைத்திறனைக் கொண்டிருக்கும். இவற்றைவிட உருவில் சிறிய பூச்சிகளை அதிக எண்ணிக்கையில் உண்ணும் திறன் படைத்தவை. நாம் அன்றாடம் பார்க்கும் தட்டான், ஊசித்தட்டான் போன்றவை சாறுண்ணி வகையைச் சார்ந்தவையே. பூச்சிக் கட்டுப்பாட்டில் பயன்படுத்தப்படும் சாறுண்ணிகள்
ஒட்டுண்ணிகள் குளவி மற்றும் ஈ இனத்தைச்சேர்ந்த பூச்சிகள் மற்ற பூச்சிகளில் வளர்ந்து தன் இனத்தைப் பெருக்கிக் கொள்ளும் குணம் படைத்தவை. இவற்றை ஒட்டுண்ணிகள் என்று அழைப்பர். ஒட்டுண்ணிகள் உருவில் சிறியவை, இரையைத்தேடிச்சென்று அவற்றுள் முட்டையிடும் திறன் படைத்தவை. சாறுண்ணிகளைப்போன்று இவை இரையை உடனடியாகக் கொன்று உண்பதில்லை. இவை இவற்றின் இறைக்குள் (முட்டை, புழு, கூட்டுப்புழு) முட்டையிடும்.முட்டை பொரித்து, புழு வளர்ந்து, ஒட்டுண்ணியாக வெளிவரும் வரை இவற்றின் இரை உயிருடனேயே இருக்கும். ஒட்டுண்ணிகளை முட்டை ஒட்டுண்ணி, புழு ஒட்டுண்ணி, கூட்டுப்புழு ஒட்டுண்ணி என மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். முட்டை ஒட்டுண்ணி பூச்சியின் முட்டைகளைத்தேடிப் பிடித்து அதன் மீது தன் சிறிய முட்டையை இடுகின்றது.இவற்றில் பூச்சியின் முட்டை முற்றிலுமாக அழிக்கப்படுகிறது. உதாரணமாக டிரைக்கோகிரம்மா முட்டை ஒட்டுண்ணியைக்கூறலாம். புழு ஒட்டுண்ணி நேரடியாகப் பூச்சிகளின் புழுக்களினுள் தன் முட்டைகளை இடும். நாளடைவில் புழுக்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஒட்டுண்ணியின் வளர்ச்சியால் பாதிக்கப்பட்டு மடிந்து விடுகின்றன. பிரக்கான், பெதிலிட் போன்றவை புழு ஒட்டுண்ணிகளாகும். கூட்டுப்புழு ஒட்டுண்ணி பூச்சிகளின் கூட்டுப்புழுக்களினுள் தன் முட்டைகளை இடுகின்றன. இதனால் பூச்சிகள் கூட்டுப்புழு பருவத்திலேயே அழிக்கப்படுகின்றன. இதற்கு உதாரணமாக ஈலோபிட் கூட்டுப்புழு ஒட்டுண்ணியைக் குறிப்பிடலாம். பூச்சிக் கட்டுப்பாட்டில் பயன்படுத்தப்படும் ஒட்டுண்ணிகள்
நோய்க்கிருமிகள் இவை பூச்சிகளில் நோயை ஏற்படுத்தி அழித்திடும் நுண்கிருமிகளாகும். பூஞ்சை, பாக்டீரியா, வைரஸ் போன்றவை இவற்றுள் அடங்கும். பிவேரியா, வெர்டிசிலியம், மெட்டாரைசியம் வகையைச் சார்ந்த பூஞ்சையினங்களும், பேசில்லஸ் வகையைச்சார்ந்த பூஞ்சையினங்களும், பேசில்லஸ் வகையைச்சார்ந்த பாக்டீரியாக்களும், நியூக்ளியர் மற்றும் கிரெனலோசிஸ் வகையைச்சார்ந்த வைரஸ்களும் பூச்சிக்கட்டுப்பாட்டில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. பூஞ்சையினங்கள், தத்துப்பூச்சி, வெள்ளை ஈ, தண்டுத்துளைப்பான் மற்றும் இலையை உண்ணும் பூச்சிகளைக் கட்டுப்படுத்திடும் திறன் வாய்ந்தவை. பூஞ்சையினங்கள் குறைந்த வெப்பநிலை மற்றும் அதிக காற்றீரப்பதமாக சூழ்நிலைகளில் அதிக அளவில் பூச்சிகளைத்தாக்கி அழித்திடும் குணமுடையன. பாக்டீரியாக்களில் பேசில்லஸ் வகைப்புழுக்களை அழிப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றன. இவை தாக்கிய புழுக்களால் அதிகமாக நடமாட முடியாது. வாயிலிருந்தும் உடலின் பின்பகுதியிலிருந்தும் ஊண் போன்ற திரவம் வெளியேறிக்கொண்டே இருக்கும். உடல் கரும்பு நிறமாகி இறுதியில் பூச்சி இறந்து விடும். பச்சைக்காய்ப்புழு, புருட்டூனியாப்புழு, சிவப்பு கம்பளிப்புழு, எலுமிச்சை வண்ணத்துப்பூச்சி, காவடிப்புழு போன்றவை இந்த வகை பாக்டீரியாக்களால் சிறந்த முறையில் கட்டுப்படுத்தப்படுகின்றன. பெரும்பாலான புழுக்களை அழிப்பதில் வைரஸ் பெரும்பங்கு வகிக்கின்றன. வைரஸ் நோய்க்கிருமிகளுடைய இலைகளைப்புழுக்கள் உண்ணும் போது நோய் தொற்று ஏற்படுகின்றன. இவற்றால் பாதிக்கப்பட்ட புழுக்களால் வேகமாக நகரமுடியாது. புழுக்கள் உணவு உண்ணும் தன்மையை இழந்து விடும்.தாக்கப்பட்ட புழுக்கள் வெண்மையாக பின்னர் கரு நிறத்தினை அடைந்து பயிர்களில் தலைகீழாகத் தொங்கும். |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
முதல் பக்கம் | திட்டங்கள் | பயிர்ச்சிகள் | மற்றவை | புகைப்படங்கள் | தொடர்புக்கு| பொறுப்புத் துறப்பு © தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016 |