organic farming
அங்கக வேளாண்மை :: அங்கக முறையில் பூச்சி மேலாண்மை

இயந்திரத் தொழில்நுட்பங்கள்

அங்கக வேளாண்மையில் பயன்படுத்தப்படும் பொறிகள் - புகைப்படத் தொகுப்பு
பூச்சிக்கட்டுப்பாட்டில் பயன்படுத்தப்படும் இனக்கவர்ச்சிப்பொறிகள் - புகைப்படத் தொகுப்பு

இயந்திர முறைகள்

இயந்திரக்கருவிகளின் உதவியுடன் பூச்சிகளை சேகரித்து அழிப்பது இயந்திரமுறைப்பூச்சி மேலாண்மையாகும். கீழ்க்காணும் இயந்திரங்களைப்பயன்படுத்தி அங்கக வேளாண்மையில்பூச்சிகளின் தாக்குதலைக்குறைத்திடலாம்.

விளக்குப்பொறி

பெரும்பாலான விட்டில் பூச்சிகள் மற்றும் வண்டுகள் வெளிச்சத்தால் கவரப்படுபவை. எனவே, இரவு 7.00 மணி முதல் 11.00 மணி வரை வயல்களில் விளக்குப்பொறிகளை வைப்பதன் மூலம் அந்துப்பூச்சிகள் மற்றும் வண்டுகளால் கவரப்பட்டு அழிக்கப்படுகின்றன. இவற்றால் பூச்சிகளின் இனப்பெருக்கம் தடுக்கப்படுகிறது. பல்வேறு வகையான விளக்குப்பொறிகள் பூச்சிக்கட்டுப்பாட்டில் பயன்படுத்தப்பட்டாலும் மண்ணெண்ணை விளக்குப்பொறி, மின்சார விளக்குப்பொறி, சோலார் விளக்குப்பொறி மற்றும் புற ஊதாக்கதிர் விளக்குப்பொறி போன்றவை பூச்சிக்கட்டுப்பாட்டில் சிறந்து விளங்குகின்றன. அந்துப்பூச்சிகள் பயிரில் தென்பட்டவுடனேயோ அல்லது அவைகள் முட்டையிடும் முன்போ விளக்குப்பொறிகளைப்பயன்படுத்துவது முக்கியமானதாகும். விளக்குப்பொறி கொண்டு வயல்களில் ஒரு குறிப்பிட்ட வகைப்பூச்சியின் செயல்பாட்டினைக் கண்காணித்திடலாம்.

  • இரவு 11 மணிக்கு மேல் விளக்குப்பொறிகளைப் பயன்படுத்தக்கூடாது. அவ்வாறு பயன்படுத்தினால் அவை நன்மை செய்யும் பூச்சிகளுக்குத் தீங்காக அமைந்திடும்.

வண்ண ஒட்டும் பொறிகள்

காற்றினால் எளிதில் அடித்துச்செல்லப்படும் சிறிய உடலமைப்பினைக் கொண்ட பூச்சிகள் பலவித வண்ணங்களால் கவரப்படும் குணமுடையவை. வண்ண அடைகளில் ஒட்டும் பசை(ஆமணக்கு எண்ணெய், வாசலின், கிரீஸ்) தடவப்பட்டுப் பூச்சிக் கட்டுப்பாட்டிற்காகவும், பூச்சிகளின் நடமாட்டத்தினைக் கண்காணிக்கவும் பயன்படுத்தப்படுகின்றது.

  • பூச்சிகளைக்கண்காணிக்க ஏக்கருக்கு 5 என்ற அளவிலும் ஒட்டும் பொறிகள் பரிந்துரைக்கப்படுகின்றன.
  • ஒட்டும் பொறிகளின் அடிப்பாகம் பயிர்களின் நுனிப்பாகத்தில் பொருந்துமாறு வயல்களில் பொருத்த வேண்டும். பூச்சிகளுக்கு ஒத்த வண்ண ஒட்டும் பொறிகள்.
பொறியின் நிறம் கவரப்படும் பூச்சியினம்
மஞ்சள் வெள்ளை ஈ, அசுவினி, இலைப்பேன், திராட்சை உண்ணி வண்டு, பழ ஈ, முட்டைகோசு ஈ, சுருள் பூச்சி 
நீளம் இலைப்பேன், முட்டைகோசு ஈ, பருத்திக்காய் கூண் வண்டு
ஊதா இலைப்பேன், பூப்பேன்
பச்சை பழ ஈ, பருத்திக்காய் கூண் வண்டு
வெள்ளை இலைப்பேன், பருத்திக்காய் கூண் வண்டு
ஆரஞ்சு தத்துப் பூச்சிகள்

வண்ண ஒட்டும் பொறிகளை 10 நாட்களுக்கு ஒரு முறை கண்காணித்து தேவைப்படின் ஒட்டும் திரவத்தினை மீண்டும் தடவிட வேண்டும். சிறிய பிளாஸ்டிக் குடம், பெயின்ட் காலி டப்பா, பிளாஸ்டிக் விரிப்புகள் மற்றும் தார்ப்பாலின்களைத் தேவையான அளவிற்கு எடுத்துக்கொண்டு ஒட்டும் திரவம் தடவி ஒட்டும் பொறிகளாகப் பயன்படுத்தலாம்.

இனக்கவர்ச்சிப்பொறிகள்

பூச்சிகள் ஒன்றோடொன்று தொடர்பினை ஏற்படுத்திக்கொள்ளவும், எதிரிகளிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், இனப்பெருக்கத்திற்காகவும், ஒரு விதமான வாசனை திரவத்தினை சுரந்து காற்றில் பரப்பி விடுகின்றன. இந்த திரவம் இனக்கவர்ச்சி திரவம் என்று அழைக்கப்படுகின்றது. பூச்சிகளால் சுரக்கப்படும் இனக்கவர்ச்சி திரவத்தின் தன்மை மற்றும் அவற்றின் பண்புகள் கண்டறியப்பட்டு, அவை செயற்கை முறையில் தயாரிக்கப்பட்டு பூச்சிகளைக்கவர்ந்து அழித்திட பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் ஆண், பெண் பூச்சிகளைத்தனித்தனியாகவோ அல்லது இரண்டினையும் கூட்டாகவோ கவர்ந்து அழித்திடலாம். இனக்கவர்ச்சிப்பொறிகளைப்பயன்படுத்தி ஒரு குறிப்பிட்ட பயிரில் பூச்சிகளின் தாக்குதல் இருக்கிறதா, இல்லையா எனக்கண்டறிந்திடலாம். மேலும், பூச்சிகளைக்குழப்பமடையச்செய்து இனச்சேர்க்கை நடைபெறாமல் தடுத்திடலாம்.

            இனகவர்ச்சிப்பொறிகள் பல்வேறு உருவங்களிலும், வண்ணங்களிலும் சந்தைகளில் கிடைக்கின்றன. அவற்றுள்

  • “ஜாக்சன்” மற்றும் “மெக்பாலி” வகைப்பொறிகள் பழ ஈக்களுக்காகவும்,
  • ராம்ஸ் வகை வண்டுகள் மற்றும் கூண்வண்டுகளுக்காகவும்,
  • புணல்வகைப்பொறி தண்டுத்துளைப்பான், காய்த்துளைப்பான் மற்றும் கொட்டைத்துளைப்பான்களுக்காகவும்,
  • இறக்கை மற்றும் ஸிலஸவ் வகைப்பொறிகள் அந்துப்பூச்சிகளுக்காகவும் பயன்படுத்தப்படுகின்றன.

அங்ககப்பூச்சி மேலாண்மையில் இனக்கவர்ச்சிப்பொறிகள்

பூச்சி இனக்கவர்ச்சி திரவம் பயிர்
தண்டுத்துளைப்பான் சிர்போலூர் நெல்
பச்சைக்காய்ப்புழு ஹெலிலூர் பருத்தி, தக்காளி, துவரை, வெண்டை, சூரியகாந்தி, மிளகாய், மக்காச்சோளம், கொண்டக்கடலை, செண்டுமல்லி
புருட்டூனியாப்புழு ஸ்போடோலூர் தக்காளி, வெண்டை, ஆமணக்கு, நிலக்கடலை, பருத்தி, நெல், முட்டைகோசு, வெங்காயம், சம்பங்கி, புகையிலை
பழஈ படோர்லூர் மா, வாழை, ஆரஞ்சு
இலைக்குடையும் பூச்சி டிஎல்எம்லூர் தக்காளி
குருத்து மற்றும் காய்ப்புழு லூசிலூர் கத்தரி
புள்ளிக்காய்ப்புழு எர்விட்லூர் அவரை, வெண்டை, பருத்தி
முள்ளுள்ள காய்ப்புழு எர்வின்லூர் அவரை, வெண்டை, பருத்தி
பழ ஈ பேகுலூர் புடலை, பாகல், பீர்க்கு
வைரமுதுகுப்பூச்சி டிபிஎம்லூர் முட்டைக்கோசு, பூக்கோசு, நூல்கோல், முள்ளங்கி, கடுகு
சுருள்பூச்சி ஜிஎல்எம்லூர் நிலக்கடலை
காண்டாமிருகவண்டு ரைனோலூர் தென்னை, பனை, எண்ணெய்ப்பனை
சிவப்புக்கூண்வண்டு பெரோலூர் தென்னை, பனை, எண்ணெய்ப்பனை
இளஞ்சிவப்புக்
காய்ப்புழு
பெக்டினோலூர் பருத்தி
இளங்குருத்துப்புழு ஈஎஸ்பிலூர் கரும்பு
இடைக்கணுப்புழு ஐஎன்பிலூர் கரும்பு
நுனிக்குருத்துப்புழு எஸ்டிபிலூர் கரும்பு

இனக்கவர்ச்சிப்பொறிகளை பயிர்களின் இலைப்பரப்பிற்கு மேல் இருக்கும் படி பொருத்துவது மிகவும் அவசியமானதொன்றாகும்.

தீனிப்பொறி

பூச்சிகளைக்கவர்ந்து இழுக்கும் கவர்ச்சிப்பொருள் கவர்ச்சிப்பொறியினுள் வைக்கப்பட்டு பூச்சிகள் கவரப்பட்டு அழிக்கப்படுகின்றன. உதாரணமாக,

  • சோளத்தில் குருத்து ஈக்களைக்கட்டுப்படுத்திட கருவாட்டுப்பொறி பயன்படுத்தப்படுகிறது. இவற்றில் கருவாட்டுத்துகள்கள் பாலித்தீன் பையிலோ(அல்லது) பிளாஸ்டிக் டப்பாவிலோ வைக்கப்படுகிறது. இவற்றால் கவரப்படும் பூச்சிகளைக்கொல்ல டைக்குளோர்வாஸ் பஞ்சு பயன்படுத்தப்படுகிறது. இதைப்போலவே தோட்டக்கலைப்பயிர்களைத்தாக்கும் பழ ஈக்களைக் கவர்ந்தழித்திட மீதைல் யூஜினால் பயன்படுத்தப்படுகிறது.

பறவை தாங்கிகள்

பறவை உட்காரும் இடங்களை செயற்கையாக நிறுவுவதன் மூலம் பறவைகள் உட்கார்ந்து புழுக்களை உண்ணும் சூழ்நிலையை உருவாக்கிடலாம். இவற்றின் மூலம் புழுக்களையும், வயல் எலிகளையும் எளிதில் கட்டுப்படுத்திடலாம்.

 

 
முதல் பக்கம் | திட்டங்கள் | பயிர்ச்சிகள் | மற்றவை | புகைப்படங்கள் | தொடர்புக்கு| பொறுப்புத் துறப்பு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016