organic farming
அங்கக வேளாண்மை :: அங்கக முறையில் நூற்புழு மேலாண்மை

நூற்புழு மேலாண்மை

மேலாண்மை முறைகள்

பயிர்களை சேதப்படுத்தும் நூற்புழுக்களை முழுமையாகக் கட்டுப்படுத்த இயலாது. நமது முக்கிய நோக்கமே முடிந்தவரை அவைகளின் அடர்த்தியைக் குறைப்பதற்கும் நூற்புழுக்களைக் கட்டுப்படுத்திட ஒருங்கிணைந்த தொழில்நுட்பங்கள் அவசியமாகின்றது. அவைகள் முறையே

  1. அங்கக இடுபொருட்களை அதிக அளவில் பயன்படுத்துதல்
  2. பயிர் சுழற்சி, ஊடுபயிர் முறைகளைக் கடைப்பிடித்தல்
  3. நூற்புழுவிற்கு எதிர்ப்புத்திறன் பெற்ற பயிர் ரகங்களைத் தேர்ந்தெடுத்துப் பயிரிடுதல்
  4. கவர்ச்சிப்பயிர்கள் மூலமாக நூற்புழுக்களைக் கவர்ந்து அழித்தல்
  5. பசுந்தாளுரப் பயிர்களைப் பயன்படுத்துதல்
  6. உயிரியல் நூற்புழு மேலாண்மை முறைகளைக் கடைப்பிடித்தல்
அங்கக இடுபொருட்கள்

அங்கக இடுபொருட்களான தொழு உரம், சாண எரிவாயுக்கழிவு, மக்கிய குப்பை, புண்ணாக்கு வகைகள், மண்புழு உரம், மக்கிய தாவரக் கழிவுகள் போன்றவற்றைத் தேவையான அளவில் மண்ணிற்கு இட வேண்டும். அவ்வாறு அங்கக இடுபொருட்களை மண்ணிற்கு இடும்போது அவை மண்ணின் இயற்-வேதியியல் பண்பில் சிறிய மாற்றத்தினை ஏற்படுத்துவதால் அவை நூற்புழுக்களின் பெருக்கத்தைக் குறைத்திட வழிவகை செய்கின்றது. அங்கக இடுபொருட்களிலிருந்து வெளிப்படும் பயிர் வளர்ச்சி ஊக்கிகள் பயிர்களின் ஊட்டத்தினை அதிகரித்திடச் செய்வதாலும் நூற்புழுக்களின் தாக்கம் குறைந்து விடுகிறது. அங்கக இடுபொருட்கள் நூற்புழுக்களின் எதிர் நுண்கிருமிகளின் பெருக்கத்தைத் தூண்டி நூற்புழுக்களின் அடர்த்தியைக் குறைத்திட வழிவகை செய்கின்றது. மேலும், அங்கக இடுபொருட்கள் தண்ணீரில் கரையும் போது பீனால், அங்கக அமிலம் போன்ற திரவங்களை வெளியிட்டுத் தீமை செய்யும் நூற்புழுக்களைக் கட்டுக்குள் வைத்திருக்கின்றன.

நூற்புழு மேலாண்மையில் அங்கக இடுபொருட்கள்
இடுபொருட்கள் பயிர் அளவு(ஹெக்டர்) கட்டுப்படுத்தப்படும் நூற்புழு
புண்ணாக்கு வகைகள் எல்லா வகைப் பயிர்களுக்கும் 2.5 டன் வேர் முடிச்சு நூற்புழு
வேப்பம் புண்ணாக்கு வெற்றிலை 1 டன் வேர் முடிச்சு மற்றும் ரெனிபார்ம் நூற்புழு
வேப்பம் புண்ணாக்கு வாழை 2 டன் வேரழுகல் நூற்புழு, வேர் குடையும் நூற்புழு, வேர் முடிச்சு நூற்புழு, சுருள் வடிவ நூற்புழு
கரும்பாலைக்கழிவு வாழை 15 டன் வாழையைத் தாக்கும் அனைத்து  நூற்புழுக்கள்
வேப்பம் புண்ணாக்கு கரும்பு 750 கிலோ வேர்க்கருகல் நூற்புழு, குட்டை நூற்புழு, சுருள் வடிவ நூற்புழு
ஆமணக்கு, புண்ணாக்கு ஆரஞ்சு 400 கிராம்/ மரம் ஆரஞ்சு நூற்புழு
யூகலிப்டஸ் தழைகள் உருளைக்கிழங்கு 2.5 டன் முட்டைக்கூடு நூற்புழு

பயிர் சுழற்சி மற்றும் ஊடுபயிர்

ஒரு பயிரில் தொன்று தொட்டுத் தோன்றும் நூற்புழுக்களைக் கட்டுப்படுத்திட அந்தப்பயிரினைத் தொடர்ந்து நூற்புழுக்களால் விரும்பத்தகாத பயிர்களைத் தேர்ந்தெடுத்து சுழற்சி முறையில் பயிரிட வேண்டும். அவ்வாறு மூன்று முதல் நான்கு வருடங்கள் வரை தொடர்ந்து செய்து வந்தால் நூற்புழுக்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து விடும்.

நூற்புழு கட்டுப்பாட்டில் சுழற்சி பயிர்கள்

பயிர் சுழற்சிப் பயிர் நூற்புழு
நிலக்கடலை மக்காச்சோளம், பருத்தி வேர் முடிச்சு நூற்புழு
நெல் வாழை வேர் முடிச்சு மற்றும் வேர் நூற்புழு
வாழை உளுந்து, நெல், சணப்பை, கரும்பு வேரழுகல் நூற்புழு, வேர் குடையும் நூற்புழு, வேர் முடிச்சு நூற்புழு, சுருள் வடிவ நூற்புழு
சோயாமொச்சை மக்காச்சோளம், பருத்தி, நிலக்கடலை, புகையிலை சோயாமொச்சை முடிச்சு நூற்புழு
உருளைக்கிழங்கு முட்டைக்கோசு, பூகோசு, முள்ளங்கி, பூண்டு முட்டைக்கூடு நூற்புழு

முக்கிய பயிர்களுக்கு இடையில் ஓரிரு வரிசையில் விரும்பத்தகாத பயிர்களை ஊடுபயிராகப் பயிரிடும் நூற்புழுக்களைக் கட்டுப்படுத்திடலாம்.

நூற்புழு கட்டுப்பாட்டில் ஊடுபயிர்கள்

பயிர் ஊடு பயிர் நூற்புழு
கரும்பு செண்டுமல்லி, தக்கைப்பூண்டு வேர்க்கருகல் நூற்புழு, சுருள் வடிவ நூற்புழு
வாழை செண்டுமல்லி, சாமந்தி, கொத்தமல்லி, தட்டைப்பயறு, பச்சைப்பயறு, சேனை லீசன் நூற்புழு
உருளைக்கிழங்கு கடுகு முட்டைக்கூடு நூற்புழு

எதிர்ப்புத்திறன் கொண்ட பயிர் இரகங்கள்

பொதுவாக நூற்புழு எதிர்ப்புத்திறன் அல்லது தாங்கு திறன் கொண்ட இரகங்கள் என்பது அவற்றில் இயற்கையாகவே காணப்படும் மரபணு சார்ந்த குணாதிசயமாகும். அவ்வாறு எதிர்ப்புத்திறன் கொண்ட பயிர் ரகங்களை நூற்புழுக்கள் அண்டுவதில்லை. மேலும், அவ்வாறான ரகங்களைப் பயிரிட்டுள்ள மண்ணில் நூற்புழுக்கள் தங்குவதில்லை. அவ்வாறு தங்கினாலும் அவைகளின் பரவுத்திறன் மிகவும் குறைவே. எனவே, நூற்புழுக்களுக்கு எதிர்ப்புத்திறன் அல்லது தாங்குதிறன் பெற்றுள்ள பயிர் ரகங்களைத் தேர்வு செய்து பயிரிட வேண்டும்.

நூற்புழுவிற்கு எதிர்ப்புத்திறன் பெற்றுள்ள பயிர் இரகங்கள்
பயிர் எதிர்ப்புத்திறன் கொண்ட இரகம் நூற்புழு
உருளைக்கிழங்கு குப்ரி ஸ்வர்ணா, குப்ரி தென்மலை முட்டைக்கூடு நூற்புழு
தக்காளி பி.என்.ஆர்.7 வேர் முடிச்சு நூற்புழு
மிளகாய் பூசா ஜவலா வேர் முடிச்சு நூற்புழு
வாழை கற்பூரவள்ளி, மொந்தன், நாட்டுப் பூவன், குன்னம், பேய்குன்னம், பிடிமொந்தன் வேரழுகல் நூற்புழு, வேர் குடையும் நூற்புழு, வேர் முடிச்சு நூற்புழு, சுருள் வடிவ நூற்புழு

பொறிப் பயிர்கள் மற்றும் பாதகமான பயிர்கள்

நூற்புழுக்களால் மிகவும் விரும்பத்தக்க பயிரினை முக்கிய பயிர்களினூடே ஊடுபயிராகவோ, வரப்பு ஓரங்களிலோ, பொறிப் பயிராக பயிரிட்டு நூற்புழுக்களைக் கட்டுப்படுத்திடலாம். நூற்புழுக்கள் பொறிப் பயிரினை முதலில் தேர்ந்தெடுத்து உண்ணும். அவ்வாறான பயிர்களை தாய் நூற்புழுக்கள் முட்டையிடும் முன்பே அழித்து விட வேண்டும். இதனால் நூற்புழுக்களின் பெருக்கத்தினையும், தாக்குத்திறனையும் குறைத்திடலாம். இதற்கு நூற்புழுக்களையும் அவற்றின் வாழ்க்கை முறைகளையும் தெரிந்து வைத்திருத்தல் அவசியம். பொறிப்பயிர்கள் பசுந்தாளுரப்பயிராகவோ, தீவனப்பயிராகவோ இருந்தால் சிறந்ததாகக் கருதப்படுகின்றது. உதாரணமாக மல்பரியில் செண்டுமல்லியை பொறிப்பயிராகப் பயிரிட்டு மல்பரி வேர் முடிச்சு நூற்புழுவைக் கட்டுப்படுத்திடலாம்.

சிலவகை பயிர்கள் நூற்புழுக் கொல்லிகளைச் சுரக்கும் தன்மை கொண்டவை. உதாரணமாக காய்கறி தோட்டங்களில் தோன்றும் நூற்புழுக்களைக் கட்டுப்படுத்திட வெங்காயம், பூண்டு போன்ற நூற்புழுவிற்கு பாதகமான பயிர்களை ஊடுபயிராகப் பயிரிடலாம். இவற்றின் வேர்களால் சுரக்கப்படும் திரவம் நூற்புழுக்களைக் கட்டுப்படுத்திட வகை செய்கின்றது.

உயிரியல் முறைகள்

நாம் நிலங்களில் அங்கக இடுபொருட்களை இடும்போது அவை நன்மை செய்யும் இரைவிழுங்கி நூற்புழுக்களான மோனோன்கஸ், டிப்லோகாஸ்டர், டிரைபைலா போன்றவற்றை ஊக்குவிக்கின்றன. இரைவிழுங்கு நூற்புழுக்கள் தீமை செய்யும் நூற்புழுக்களை அப்படியே விழுங்கி விடும் வகையில் சிறப்பான வாய் அமைப்பினைப் பெற்றுள்ளன.

 
முதல் பக்கம் | திட்டங்கள் | பயிர்ச்சிகள் | மற்றவை | புகைப்படங்கள் | தொடர்புக்கு| பொறுப்புத் துறப்பு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016