organic farming
அங்கக வேளாண்மை :: அங்கக இடு பொருட்கள் மற்றும் உத்திகள்

பண்ணை இடுபொருட்களிலிருந்து  வெற்றிகரமான அங்கக வேளாண்மை

ஜவிக் ஜபுத்ரா (மண் சமையறை) மூலம், ஒரு விவசாயி எளிதில்  கிடைக்கக்கூடிய, புதுப்பிக்கத் தக்க வளங்கள் மற்றும் பண்ணையில் கிடைக்கக்கூடிய பொருட்களைக் கொண்டு நிலத்திற்குத் தேவையான இடுபொருட்களை தயாரித்து வைத்துக் கொள்ள முடியும். வயலின் ஒரு ஓரத்தில் கூட அமைத்து கொள்ளலாம். வயலின் ஒரு ஓரத்தில் 15×15 அடி என்ற அளவில் பண்ணை இடுபொருள் உற்பத்தி கூடத்தை அமைக்க வேண்டும். இதில் இரண்டு அல்லது மூன்று 100 லிட்டர் கொள்கலன், இரண்டு அல்லது மூன்று 50 லிட்டர் கொள்கலன், இரண்டு அல்லது மூன்று 20-30 லிட்டர் பிளாஸ்டிக் மூடி உள்ள வாளிகள், 20 லிட்டர் அளவு கொண்ட இரண்டு அல்லது மூன்று மண்பானைகள், இரண்டு உயிராற்றல் குழிகள், ஒரு அக்னிகோத்தரா காப்பர் பிரமிடுகள் ஆகியவற்றை வைக்க வேண்டும். இந்த ஜவிக் ஜபுத்ரா மென்மையான முறையில் அங்கக உற்பத்தி திட்டம் செய்ய உதவுகிறது. மேலும்  இது நான்கு பரிமாணங்களின் அடிப்படையில் அமைந்துள்ளது.

மண் ஊட்டமளிப்பு (பூமி உப்கார்)

வீரிய ஒட்டு ரக பயிர்கள்/கலப்பின பயிர்கள், அதிக அளவில் ஊட்டச்சத்துக்களை எடுத்துக்கொள்ளும் திறன் கொண்டுள்ளதால், அவற்றை பயிர்திட்டத்தில் தொடர்ந்து பயிரிட்டு வந்தால் மண்ணில் உள்ள பெரு ஊட்டச்சத்துக்கள் மற்றும் சிறு ஊட்டச்சத்துக்களின் பற்றாக் குறை ஏற்படும். எனவே கலப்பின ரகங்களை அங்கக முறை பயிர் உற்பத்தி திட்டத்தில் பயன்படுத்துவது இல்லை. இவ்வாறான மண் ஊட்டச்சத்துக் குறைபாட்டை பூமி உப்கார் கொண்டு சரி செய்ய முடியும்.

  • செறிவூட்டப்பட்ட பஞ்சகாவ்யா (ஒரு ஏக்கர் நிலத்திற்கு 200 கிலோ)
  • சாணம் (மாடு /எருமை/காளை): 40 கிலோ
  • சிறுநீர் (மாடு/எருமை/காளை) :40 கிலோ
  • வெண்ணெய்/கடுகு எண்ணெய்- ½ லிட்டர்
  • பால்: 2 ½ லிட்டர்
  • லெஸ்சி /நீர்த்த தயிர் – 8 லிட்டர்
  • பருப்பு மாவு மற்றும் மெத்தி மாவு : 1 கிலோ (ஓவ்வொன்றும்)
  • பழைய வெல்லம் : 2 கிலோ
  • அழுகிய வாழைப்பழம் – 1கிலோ
  • கடகு பின்னாக்கு – 2 கிலோ
  • ஆலமரம் மற்றும் வாழை மரம் நடவு செய்யப்பட்ட நிலத்தின் மண் – 2 கிலோ (ஓவ்வொன்றும்)

உபயோகப்படுத்தும் முறைகள்/நடைமுறைப்படுத்துதல்

  • அனைத்து பொருட்களையும் டிரம்மில் போட்டு, முப்பது முறை கடிகார  திசையிலும், முப்பது முறை கடிகார எதிர் திசையிலும், ஒரு நாளுக்கு இரண்டு முறை கலக்கி விட வேண்டும்.
  • கொள்கலனை மூடி வைக்க வேண்டும்.
  • செறிவூட்டப்பட்ட பஞ்சகவ்யா 7வது நாளில் தயாராகி விடும். இதனுடன் 100 லிட்டர் தண்ணீர் கலந்து நன்கு கலக்கி விட வேண்டும்.
  • இந்த கலவையை மண்புழு உரம் அல்லது சாம்பல் அல்லது வளமான மண்ணுடன் கலந்து, விதைப்பதற்கு முன் நிலத்தில் பரப்பி விட வேண்டும்.
  • நீர்பாசனத்தின் பொழுது, கொள்கலனின் அடிப்பகுதிக்கு மேலே ஒரு சிறு துளையிட்டு, செறிவூட்டப்பட்ட பஞ்சகாவ்யாவை சொட்டு சொட்டாக விழும்படி செய்தால், மொத்த நிலமும் செழிப்பாக மாறி விடும்.
  • விதைப்பின் பொழுதும், நீர் பாசனத்தின் பொழுதும் இதனை தெளித்தால், மண்ணின் வளம் பராமரிக்கப்படும்.
  • மண்ணின் வளத்தை பாதுகாத்து, கனிசமான விளைச்சல் பெற முடியும்.
  • பயிர்கள் ஆரோக்கியமாகவும், பூச்சிகளின் தாக்குதலில் இருந்து விடுபட்டும் காணப்படும்.
  • பயிர்கள் குறித்த காலத்தில் முதிர்ச்சி நிலையை அடையும்.

விதை ஊட்டமளிப்பு/விதை நேர்த்தி: (பிஜ்சன்ஸ்கார்)

எல்லா பொருட்களையும் புதிதாக எடுத்து உபயோகிக்க வேண்டும். விதைகளை இயற்கையான பொருட்களைக் கொண்டு ஊட்டமளித்தால் முளைப்புத்திறன் அதிகரித்து, அதிக தூர்கள் உருவாகி நல்ல மகசூல் கிடைக்கும். விதை ஊட்டமளிப்பு ஊசி, விதைப்பதற்கு அரைமணி நேரம் முன் இட வேண்டும்.
லஸ்ஸி (மோர்), நீர்த்துப்போன தயிர் அல்லது மண்புழு கழுவிய நீர் அல்லது மாட்டு சிறுநீர் அல்லது புதிய பாலுடன் (10 பகுதி ) 1 பகுதி பழைய வெல்லம் அல்லது தேன் சேர்க்கவும்.

எ-கா:

ஒரு ஏக்கர் கோதுமை விதைப்பிற்கு, 40 கிலோ விதை தேவைப்படுகிறது. மேலும் 2 லிட்டர் மோர் மற்றும் 200 கிராம் வெல்லம் போதுமானது. பிளாசன்டா ஊசி அல்லது ஜெர் காடு (1 கிலோ விதைக்கு 10-15 கிராம் ) தேவைப்படுகிறது. இதனுடன் 5 கிராம் வெல்லம் அல்லது தேன் சேர்க்க வேண்டும். விலங்குகளின் பிரசவ காலத்தில் விழும் நஞ்சுக்கொடியை, ஒரு மட்பாண்டத்தில் வைத்து மூடி அதை 2 அடி ஆழம் கொண்ட குழியில் வைத்து பண்ணை போட்டு மூடி வைக்க, 76ம் நாளில் ஜெர் காட் தயாராகி விடும்.

பயிர் ஊட்டமளிப்பு

பயிர் வளர்ச்சியின் பொழுது வெவ்வேறான ஊட்டச்சத்துகளை எடுத்து கொள்கிறது. பயிருக்கு தேவையான சத்துக்கள் மண்ணிலிருந்து கிடைக்கப்பெறுகிறது. பயிர்கள் இலைகளின் வழியே சத்துக்களை எடுத்துக்கொள்கிறது.

பயிருக்கு தேவையான பொருட்கள்

1 லிட்டர் புதிய மாட்டு சிறுநீர் /மண்புழு கழிவுநீர்/ பயோசால்/கம்போஸ்ட் டீ எடுத்துக் கொள்ளவும். இதனுடன் 14 லிட்டர் தண்ணீர் கலந்து, பயிர்களுக்கு தெளிக்கவும்.

பானை உரம் தயாரிப்பு:

  • முதலில் 5 கிலோ புதிய சாணம், 5 லிட்டர் புதிய சிறுநீர் மற்றும் அரை கிலோ பழைய வெல்லத்தை எடுத்துக் கொள்ளவும். இவை அனைத்தையும் ஒரு மட்பானையில் போட்டு, 3 அடி குழி தோண்டி அதில் இதை வைத்து மண்ணை போட்டு மூடி விட வேண்டும்.
  • இந்த உரம் 7வது நாளில் தயாராகிவிடும்

மண்புழு கழுவும் முறைகள்

  • அதிக அடர்த்தி கொண்ட மண்புழு குவியலில் இருந்து 10 கிலோ மண்புழு உரத்தை எடுக்க வேண்டும்.
  • இதை சணல் பையில் போட்டு, ஒரு பாத்திரத்தில் 10 லிட்டர் தண்ணீர் எடுத்துக்கொண்டு அதில் இந்த சணல்பையை மெதுவாக 5 முறை நனைத்து எடுக்கவும். இந்த பாத்திரத்தில் உள்ள தண்ணீரை பயிர்களுக்கு தெளிக்கவும்.

குறிப்பு: பிளாஸ்டிக் பைகளை உபயோகிக்க வேண்டாம்.

பயிர் பாதுகாப்பு:

  • ஒரே மாதிரியான பயிர்திட்டத்தைக் கடைபிடித்தால் பூச்சிகள் மற்றும் நோய்களின் தாக்கம் அதிகரிக்கும்.
  • பல்வேறான கலப்பு பயிர்திட்டத்தில் பல்லுயிர்ப் பெருக்கம், நிலையாக இருக்கும். ஒளி பொறி, மஞ்சள் நிற ஒட்டும் பொறி மற்றும் தாவர சாறுகளைப் பயன்படுத்தினால் பூச்சிகளின் தாக்கத்தை தடுக்க முடியும்.

சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் முறை:

  • 35 நாள் வயதுள்ள புகையிலை சாற்றை 1 லிட்டர் எடுத்து அதை மாட்டு சிறுநீர்/தண்ணீர் 14 லிட்டரில் கலந்து பின் பயிர்களுக்கு தெளிக்கலாம்.

வெட்டும் மற்றும் பயிர்களை கடிக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்தும் முறை:

  • வேம்பு இலைகள் 4 கிலோ எடுத்து அவற்றை 10 லிட்டர் மாட்டு சிறுநீரில் 35 நாட்கள் வரை ஊறவைக்க வேண்டும். (அல்லது)
  • கசப்புத் தன்மை கொண்ட இலைகளை (வேம்பு, ஊமத்தை, ஆமணக்கு) சிறு துண்டுகளாக நறுக்கி அவற்றை 20 லிட்டர் தண்ணீர் மற்றும் 20 லிட்டர் மாட்டு சிறுநீரில் 35 நாட்கள் வரை ஊற வைக்க வேண்டும். இவற்றை துணியால் வடிகட்டி 1 லிட்டர் சாறுடன் 14 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்க வேண்டும்.

கரையானைக் கட்டுப்படுத்தும் முறை:

ஹீங்: 25-00 கிராம் அதை ஒரு மெலிதான துணியில் வைத்து சுற்றி, வாய்க்காலில் வைத்துவிட பயிர்களுக்கு நீர் பாய்ச்சும் பொழுது, இது தண்ணரில் கரைந்து பயிர்களை சென்றடையும்.

நூற்புழுக்களைக் கட்டுப்படுத்தும் முறை:

  • எல்லாப் பொருட்களையும் புதியதாக எடுத்துக் கொள்ள வேண்டும். இரண்டு முறை தெளிக்க வேண்டும்.
  • 20 கிலோ மாட்டு சாணம், 20 கிலோ மாடு/எருமை சிறுநீர், 7 லிட்டர் மோர், 2 ½  லிட்டர் பால், அரை கிலோ வெண்ணெய் எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • அனைத்து பொருட்களையும் ஒரு கொள்கலனில் அடைத்து கடிகார திசையில் இருமுறை, கடிகார திசைக்கு எதிர்திசையில் இருமுறையும் கலக்கி 35 நாட்கள் வரை வைத்திருக்க வேண்டும்.
  • இதனுடன் சம அளவு தண்ணீர் கலந்து தெளிக்க வேண்டும்.

மாட்டு சாண குவியலில் இருந்து 40 நாட்களில் உரமேற்றிய மட்குஎரு தயாரிப்பு

கிராமப்புற விலங்குகளின் சாணத்தைக் கொண்டு தயாரிக்கப்படும் மட்கு எரு குறைந்த தரம் கொண்டுள்ளதாக இருக்கும். இதற்குக் காரணம் சாண குவியல் பல வருடங்களுக்கு அதிக வெப்பநிலையில் இருப்பதால் சிதைவு செயல்முறை சரியாக நடைபெறுவதில்லை. முழுவதுமாக முதிர்நிலையை  அடைந்த மட்கு எரு, அயனி கூறுகளின் சேமிப்பு கூடமாக திகழும். இவற்றை தாவரங்கள் எளிதாக எடுத்துக் கொள்ளும்.

மாட்டு சாண குவியல் மட்குஎரு:

  • களைகளின் விதைகள் மட்காமல் அப்படியே இருக்கும்.
  • மண் மற்றும் தாவர நோய்களின் இருப்பிடமாக விளங்கும்.
  • குறைந்த நுண்ணுயிரிகள் இருக்கும்.
  • ஊட்டச்சத்துகள் பற்றாக்குறையாக இருக்கும்.
  • 5-7 ஆண்டுகள் ஆன பிறகும் கூட  மட்காமல் இருக்கும்.

ஊட்டமேற்றிய மட்கு எரு:

  • களைகள் முற்றிலுமாக இருக்காது.
  • மண் மற்றும் தாவரங்களுக்கு தேவையான ஊட்டசத்தினை அளிக்கும்.
  • மண் மற்றும் தாவரங்களுக்கு நன்மை செய்யும் நுண்ணுயிரிகளை பெருக்குகின்றன.
  • மண்ணில் நன்மை செய்யும் நுண்ணுயிரிகளை பெருக்கி, 40 நாட்களில் மட்கு எரு தயாராகி விடுகின்றது.

மட்குஎரு தயாரிக்கும் முறை:

  • மாட்டு சாண குவியலை 2 ½ அடி உயரத்தில் சமன் செய்து கொள்ளவும் (தேவையான அளவு நீளம் மற்றும் அகலம் இருக்கும்படி செய்யவும்).
  • மாட்டு சாண குவியல் முழுவதும், 60 டிகிரி கோணத்தில் சாய்வாக ஒரு துளை (7.5 செ.மீ) இடவும். துளைக்கு இடையேயான இடைவெளி 1 அடி இருக்க வேண்டும். துளை, குவியலின் அடிப்பகுதி வரை செல்ல வேண்டும். இதை அப்படியே 7 நாட்கள் வரை திறந்த வண்ணம் வைத்திருந்து, குவியலின் வெப்பத்தைக் குறைக்க வேண்டும்.
  • 8 வது நாள் ஒவ்வொரு துளை வழியே 1 லிட்டர் இயற்கையாக மட்க வைக்கக்கூடிய நோய்க்காரணி பொருளை மெதுவாக ஊற்ற வேண்டும்.
  • துளையை புல் அல்லது வைக்கோல் கொண்டு மூட வேண்டும். 15 வது நாள், மறுபடியும் 1 லிட்டர் நோய்க் காரணி பொருளை ஒவ்வொரு துளை வழியே ஊற்றி துளையை மூடி வைக்கவம்.
  • 21வது நாள் இதனை மறுபடியும் திரும்ப செய்ய வேண்டும்.
  • 40வது நாள் ஊட்டமேற்றிய மட்குஎரு தயாராகி விடும். இதனை நேரடியாக வயலில் பரப்ப செய்யலாம்.

குறிப்பு : நீர் பிடிப்புப் பகுதிகளிலில் இந்த குவியலை அமைக்க கூடாது.

உட்செலுத்தக்கூடிய பொருட்கள்:

  • சாணம் (மாடு/எருமை/காளை): 20 கிலோ
  • நீர்த்த தயிர் : 6 லிட்டர்
  • சிறுநீர் (மாடு/எருமை/காளை) : 20 கிலோ
  • பழைய வெல்லம்: 2 கிலோ

நடைமுறைப்படுத்தும் முறைகள்:

  • எல்லாப் பொருட்களையும் புதிதாக எடுத்துக்கொண்டு டிரம்மில் போட்டு முப்பது முறை கடிகார திசையிலும், எதிர்திசையிலும் ஒரு நாளைக்கு இரண்டு தடவை கலக்கி பின் மூடி வைக்க வேண்டும்.
  • 7வது நாள் இது தயாராகி விடும்.
  • அதனுடன் 50 லிட்டர் தண்ணீர் கலந்து நன்கு கலக்கி விடவும்.
  • இது ஒரு நிலையான தயாரிப்பு ஆகும். இதில் ஏதாவது ஒரு பொருள் குறைவாகவோ(அல்லது) கிடைக்காமலோ இருந்தால், மற்றொரு பொருளின் அளவை அதிகரிக்கலாம்.
  • ஊட்டமேற்றிய மட்கு எரு தயாரிக்க, கீழ்கண்ட பொருள்களை ஒரு துளையின் வழியே இட வேண்டும்.
  • 5% தாது கனிமங்கள் குவியலுக்கு ஏற்றவாறு (கண்ணாடி ராக்-பாஸ்பேட்/பைரட்/ஜிப்சம்) எடுத்துக் கொள்ள வேண்டும். இவற்றை தேவையான அளவு தண்ணீர்/மாட்டு சிறுநீருடன் கலக்க வேண்டும்.
  • இந்த கலவையை ஒவ்வொரு மூன்றாவது துளைகளின் வழியே முதன் முறை ஊற்ற வேண்டும்.

முடிவுகள்

ஊட்டமேற்றிய மட்கு எரு, மண்ணின் அங்கக கார்பனை அதிகரித்து, மண்ணில் உள்ள ஊட்டச்சத்துக்களையும் அதிகரிக்கிறது. மேலும் நுண்ணுயிர்களின் எண்ணிக்கை மண்ணில் அதிகரிப்பதால் முந்தைய பயிர்களின் தட்டு எளிதில் சிதைக்கப்படுகிறது. நெல், கோதுமை மற்றும் கரும்பு போன்ற பயிர்கள் அறுவடைக்குப் பின் மீதமுள்ள தட்டுகளை எரிக்கும் நடைமுறை ஹரியானா, பஞ்சாப் மற்றும் உத்திர பிரதேசம் மாநிலங்களில் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த ஊட்டமேற்றிய மட்குஎரு தயாரிப்பு முறை பயிர் தட்டுகள்  எரிப்பதை தடுக்க ஒரு ஊன்றுகோலாக விளங்குகிறது.சாதாரண மட்கு எருவுடன் ஒப்பிட ஊட்டமேற்றிய மட்கு எரு மூன்று மடங்கு அதிக செயல்திறன் கொண்டுள்ளது. நல்ல தரமான மட்கு எருவாக இருப்பதால், மண்புழு உரம் போன்று பயிர்கள் வயலில் இருக்கும் பொழுதே தெளிக்கலாம்.


ஆதாரம்:

முனைவர்.K.சந்திரா, இயக்குநர், தேசிய அங்கக வேளாண்மை மையம், காசிதாபாத்
முனைவர்.ஜெகத்சிங், மண்டல அங்கக வேளாண்மை மையம், பெங்களூரு.

Updated on : March 2015

 
முதல் பக்கம் | திட்டங்கள் | பயிர்ச்சிகள் | மற்றவை | புகைப்படங்கள் | தொடர்புக்கு| பொறுப்புத் துறப்பு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016