கரும்பின் அங்கக வேளாண்மை
ரகங்கள்
தமிழ்நாட்டில் கரும்பிற்கு அங்கக வேளாண்மை பரிந்துரைக்கப்படும் ரகங்கள் கோ 8021, கோ 86032, கோ 86249, கோசி 90063, கோசி 93076, கோசி 94077, கோ எஸ் ஐ 95071.
நிலம் தயார் செய்தல்
ஆழ உழவு ஒரு முறை அல்லது சட்டிக் கலப்பை கொண்டு இரு முறை இவற்றை தொடர்ந்து மூன்று முறை இரும்ப கலப்பை அல்லது நான்கு முறை சாதாரண முறையில் உழவு செய்ய வேண்டும்.
இடைவெளி
இரு வரிசைகளுக்கு இடையே குறைந்தபட்சம் 90 செ.மீ இடைவெளி இருக்க வேண்டும். ரகங்களை பொருத்து 150 செ.மீ வரை இடைவெளி கொடுக்கலாம். ஆனால் பார்களின் ஆழம் 20-30 செ.மீ இருக்க வேண்டும்.
இயற்கை உரம்
தொழுஉரம் அல்லது மக்கிய உரம் அல்லது நன்கு மக்கி வைக்கப்பட்ட ஆலை கழிவுகள் 80 டன் ஏக்கர் என்ற அளவில் கடைசி உழவின் பொழுதோ அல்லது, நடவிற்கு முன் பார்களின் மீதோ போட வேண்டும். எனினும் இந்த அங்கக உரத்தின் மூலம் நிலத்திற்கு 280 கிலோ/ஏக்கர் என்ற அளவில் தலைச்சத்து கிடைக்க வேண்டும். இலைகளின் ஒன்றோ அல்லது அனைத்தும் சேர்ந்தோ தொழுவுரம், மக்கிய உரம், ஆலைக் கழிவு போன்றவை இணைந்தோ தலைச்சத்து தேவையை பூர்த்தி செய்ய வேண்டும்.
நடவு கரணைகள்
கரணைகளை நோய் இல்லாத 6-8 மாத நடவு கரும்பில் இருந்து தேர்வு செய்ய வேண்டும். மூன்று பரு கரணைகளை விட இரு பரு கரணைகள் சிறப்பானவை. மேலும் கரணைகளை நடவு கரும்பு பயிர்களில் இருந்தே தேர்வு செய்ய வேண்டும்.
கரணைகளின் எண்ணிக்கை மாற்றம் நடவு.
ஒரு ஏக்கருக்கு 75,000 இரு பரு கரணைகள் தேவைப்படும். இவற்றை 90 செ.மீ இடைவெளியில் நடவு செய்ய வேண்டும்.
ஊடுபயிராக பசுந்தாள் உரம்
கரும்பு நடவு செய்த 3ம் நாள் அல்லத 4ம் நாள் பசுந்தாள் உரங்களான சணப்பை அல்லது தக்க பூண்டினை பாரின் மேலே ஊடுபயிராக விதைக்க வேண்டும். விதைத்த 45ம் நாள் பசுந்தாள் செடிகளை அறுவடை செய்து மண்ணில் போட்டு விட வேண்டும்.
களை மேலாண்மை
நடவு செய்த நாளில் இருந்து 30,60 மற்றும் 90 ம் நாளில் களை எடுக்க வேண்டும். களைகளை கட்டப்படுத்த இராசயனம் இல்லாத தொழில் நுட்பமான கையினால் மற்றும் இயந்திரங்களை கொண்டு களை எடுத்தல் போன்ற தொழில்நுட்பங்களை பின்பற்ற வேண்டும்.
உயிர் உரங்கள்
கரும்பு நடவு செய்த 30 மற்றும் 60 வது நாள்களில் 5 கிலோ அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போபாக்டீரியாவை 500 கிலோ /ஹெக்டர் என்ற அளவில் தொழுஉரத்துடன் கலந்து உயிர் உரத்தின் அளவினை அதிகரித்து வயலில் இடவும். பிறகு லேசான மண்அணைப்பு செய்து உடனடியாக நீர்பாய்ச்சவும்.
தோகை உரித்தல்
5 வது மற்றும் 7வது மாதத்தின் காய்ந்த மற்றும் பழுத்த தோகைகளை உரித்து அகற்றி ஒரு பார்விட்டு ஒரு பாரின் நடுவில் போடவும்.
நீர் பாசன அட்டவணை
முளைக்கும் பருவம் (35 ம் நாள்வரை) |
7 |
கிளைக்கும் பருவம் ( 36 – 100 நாள்கள்) |
10 |
வளரும் பருவம் (101 – 270 நாள்கள்) |
7 |
முதிர்ந்த பருவம் ( 27 நாள்கள் – அறுவடைவரை) |
15 |
மேற்கண்ட அட்டவணை நடுத்தரவகை மண்ணுக்கு ஏற்றது. இளகிய மண்ணுக்கு பாசன இடைவெளியை குறைத்தும் இறுகிய மண்ணுக்கு அதிகரித்தும் பாசனம் செய்யவும் மேலும் மழையின் அளவு மற்றும் பொழியும் காலத்தை பொறுத்தும் நீர் பாசன இடைவெளி மாறும். பார் அமைத்து பாசனம் செய்வது மிகவும் சிக்கனமான ஒன்றாகும். நீரை வயலுக்கு குழாய்கள் மூலம் எடுத்து வருவது நீர் சேதாரமாவதை தடுக்கும்.
கரும்பு சாய்வதை தடுத்தல்
7 வது மாதம் தோகை உரித்த பின்பு சேற்றுப்பார் எடுத்து மண் அணைப்பது கரும்பு சாய்வதை தடுக்கும். மேலும் கரும்பு தோகை களை கொண்டு கரும்பு களை கட்டுகட்டாக கட்டி வைப்பதன் மூலமும் கரும்பு சாய்வதை தடுக்க முடியும்.
குருத்து துளைப்பான்
35ம் நாளில் தோகைகளை உரிப்பது மற்றும், அடிக்கடி நீர் பாய்ச்சுவது மற்றும் மண் அணைப்பு செய்வது நோய் தாக்குதலை குறைக்கும். 45ம் 60ம் நாள்களில் 125 பெண் ஸ்டர்மியாப்சின் ஒட்டுண்ணியை விடவும்.
இடைக்கனு துளைப்பான்
ட்ரைக்கோகிரைமா கைலோனிஸ் ஒட்டுண்ணி அட்டையை ஒட்டுண்ணி இனபெருக்க மையத்திலிருந்து வாங்கி வந்து ஒரு ஹெக்டருக்கு 25 அட்டைகள் என்ற அளவில் சரிசமமாக பிரித்து 25 இடத்தில் 15 நாள்களுக்கு ஒரு முறை கட்டிவிட வேண்டும். இது பயிரின் 4 மாதத்தில் இருந்து 11ம் மாதம் வரை கடைபிடிக்க வேண்டும். இதோடு பயிரின் 5 வது மாதத்தில் 20 மீட்டருக்கு ஒன்று என்ற அளவில் ஒரு ஹெக்டருக்கு 25 இன கவர்ச்சி பொறிகளை வைத்து வேண்டும். இது ஆண் இடைக் கணு துளைப்பானின் ஆண் பூச்சிகளை கவர்ந்து அழிக்கும். இந்த இனகவர்ச்சி பொறியின் மாத்திரைகளை 7 மற்றும் 9வது மாதத்தில் மாற்ற வேண்டும்.
செவ்வழுகல் நோய்
செவ்வழுகல் நோய் ஆனது இந்நோய் அதிகம் தாக்கக் கூடிய ரகங்களான கோ 8021, கோ 85019, கோ 86010, கோ 86032, கோ 86249, கோ 93009 மற்றும் கோ 94008, ஆகியவற்றை தாக்கும். இதற்கு மாற்றாக வேறு ரகங்களை பயிர் செய்ய வேண்டும். மேலும் கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்ற வேண்டம்.
- நோய் தாக்காத கரணைகளை தேர்வு செய்ய வேண்டும்.
- நோயுற்ற கரும்பின் பகுதிகளை சேகரித்து அகற்ற வேண்டும்.
- நோய் தாக்கிய பகுதியின் வழியாக பயிர் நன்றாக இருக்கும் நிலத்திற்கு நீர்பாய்ச்சுதல் மற்றும் மழைநீர் செல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
- நோய் தாக்கிய பின்பு தட்டைபயிர் வளர்ப்பதை தவிர்க்க வேண்டும்.
- நோய் தாக்கிய பயிரை அறுவடை செய்தபின், நெல் பயிரை பயிரிட வேண்டும். மேலும் மண்ணில் உள்ள நோய் கிருமிகளை அழிக்க வேண்டும்.
கருகல் நோய்
இந்நோயை கட்டுப்படுத்த
- நோய் தாக்காத கரும்பிலிருந்து கரணையை தேர்வு செய்ய வேண்டும்.
- பாதிக்கப்பட்ட பயிரை அகற்றி அழித்துவிட வேண்டும்.
- மறுகட்டைப்பயிர் விடுவதை தவிர்க்க வேண்டும்.
- இந்நோய் எதிர்ப்பு திறன் உள்ள ரகங்களை பயிர் செய்ய வேண்டும்.
பயிரை குள்ளமாக்கும் நோய்
கரணைகளை நீராவி பிடிக்கும் இயந்திரத்தில் வைத்து 50º செல்சியஸ் வெப்பநிலையில் ஒரு மணி நேரம் வைத்திருக்கும் பொழுது இந்நோய் கிருமிகள் ஒழிக்கப்பட்டு விடும். விதை கரணைகளை இத்தகைய விதை நேர்த்தி செய்யப்பட்ட வயல்களிலிருந்து எடுக்கப்பட வேண்டும்.
கரும்பு அறுவடை
கரும்பு நன்கு முதிர்ந்த பின்பு அறுவடை செய்ய வேண்டும். நன்கு முதிர்ந்த கரும்பு சாறில் சுக்ரோசின் அளவு 16% இருக்கும். மேலும் சாறின் தெளிவு 85% வரை இருக்கும். பொதுவாக 12 மாதத்தில் அறுவடை செய்வது பொறுத்தமாக இருக்கும். மண்ணிலிருந்து 2 முதல் 3 செ.மீ வரை விட்டு கத்தி கொண்டு வெட்டி எடுக்க வேண்டும். கரும்பின் நுனிபகுதியை வெட்டி விட வேண்டும்.
மகசூலின் அளவு
அனைத்து வழிமுறைகளையும் சரியான சமயத்தில் பின்பற்றம் பொழுது கரும்பின் மகசூல் தோராயமாக 150 டன்/ ஹெக்டர் கிடைக்கும் நல்ல வடிகால் வசதியுள்ள வளமான நிலத்தில் மகசூல் சுமார் 250 டன் /ஹெக்டர் கிடைக்கும்.
கரும்பு கட்டை பயிர் மகசூல்
கரும்பு கட்டை பயிர் அனைத்து வழிமுறைகளையும் சரியான முளையில் முறையாக பராமரிக்கப்பட்டால் கட்டை பயிர் முந்தைய பயிர்/நடவு பயிர் அளவிற்கு அல்லது 5% குறைவாக பெறலாம்.
|