| | |  |  |  |  |
 
சூரியகாந்தி
 
முக்கியத்துவம்
சுத்திகரிப்பு சாதனங்கள்
சுத்திகரிப்புத்தளங்கள்
 

சூரியகாந்திவிதை

தரமான விதை உற்பத்திக்கு சில வழிமுறைகள்

விதை நிலம் தேர்வு செய்தல்
     
எல்லா மண் வகையிலும் சூரியகாந்தி பயிரிடலாம். விதை நன்கு முளைக்க, பயிர் வீரியமாக வளர, இடப்படும் உரங்களை சரியான முறையில் பயிருக்குக் கொடுக்க மண் ஈரம், காற்று ஆகியவை பயிருக்கு அளித்திட நல்ல நிலமாக தேர்வு செய்தல் வேண்டும். எனவே,

  • நிலம் வளமானதாக இருத்தல் வேண்டும்.
  • வடிகால் வசதியுடன் இருத்தல் வேண்டும்.
  • கார அமில நிலமாக இருத்தல் கூடாது.
  • மண் அரிமானம் உள்ள நிலமாக இருக்கக் கூடாது.

தேர்வு செய்த நிலத்தை நன்கு கட்டி இல்லாமல் புழுதியாக தயார் செய்து, நிலத்தில் நீர் தேங்காவண்ணம் சமன் செய்து கொள்ள வேண்டும்.

பயிர் விலகு தூரம்
     
இந்த தூரம் மற்ற இரக சூரியகாந்திப் பயிரிலிருந்து நாம் பயிரிடப்போகும் பயிருக்கும் இடைப்பட்ட தூரம் ஆகும். ஏனெனில் சூரியகாந்தி ஒரு அயல் மகரந்தச் சேர்க்கைப் பயிராகும். இருவேறு இரகங்கள் அருகில் இருந்தால் ஒன்றுடன் ஒன்று மகரந்தச் சேர்க்கை ஏற்பட்டு பயிரின் இனத்தூய்மை பாதிக்கப்பட்டுவிடும். எனவே பயிரிடப்படும் விதைப் பயிரானது பிற இரகப் பயிரிலிருந்து சான்று விதை உற்பத்திக்கு குறைந்தது 200 மீட்டர் தூரம் தனிமைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். இதுவே ஆதார விதை உற்பத்தி செய்வதென்றால் 400 மீட்டர் தனிமைப்படுத்தி இருக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் விதைகளின் இனத்துய்மையைப் பாதுகாக்க முடியும்.

விதைப்புப் பருவம்
     
உரிய பட்டத்தில் விதைக்கும் பயிரே அதிக விளைச்சலைத் தரவல்லது. பொதுவாக பூக்கும் தருணத்தில் பெரு மழை பெய்தால் பூக்கள் பாதிப்பு ஏற்பட்டு மகசூல் குறையும். தொடர்ச்சியாக மேகமூட்டமும் வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்தால் பூச்சி பூஞ்சாணங்களின் தாக்குதல் அதிகமாகும். ஆகவே பருவம் தவறினால் பலன் குன்றும். சூரியகாந்தி விதை உற்பத்திக்கு ஏப்ரல் மாதம் முதல் ஆகஸ்ட் வரை சிறந்த பட்டமாகும்.

விதைத் தேர்வு மற்றும் விதை நேர்த்தி
     
நன்கு சுத்தப்படுத்திய, தரமான விதைகளை விதைப்புக்காக உபயோகிக்க வேண்டும். 9/64” அளவுள்ள (3.6 மி.மீ) வட்டக் கண் சல்லடை கொண்டு சலித்த விதைகளை உபயோகிக்க வேண்டும். பொக்கு விதைகள், மிகச் சிறிய மற்றும் உடைந்த விதைகளை விதைப்பதற்கு முன்பு நீக்கிவிட வேண்டும்.
      விதைப்பதற்குத் தேர்வு செய்த விதைகளை ஒரு கிலோவிற்கு 2 கிராம் திராம் மருந்தை விதைப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பு கலந்து விதைநேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.

விதை அளவும் பயிர் இடைவெளியும்
     
ஒரு ஏக்கர் பயிரிட 4 கிலோ சூரியகாந்தி விதை தேவைப்படும்.

      
பார் அமைக்கும் கருவியைக் கொண்டோ அல்லது மண்வெட்டி கொண்டோ ஒரு வரிசைக்கும் மற்றொரு வரிசைக்கும் அடி இடைவெளி இருக்குமாறு பார் அமைக்க வேண்டும். செடிக்குச் செடி 1 அடி இடைவெளி இருக்குமாறு 3 செ.மீ. (ஒன்றரை விரற்கடை) ஆழத்தில் பாரின் பக்கவாட்டில் குழிக்கு இரண்டு விதைகள் வீதம் ஊன்ற வேண்டும். விதைத்த 15 நாளில் நன்கு வளர்ச்சி இல்லாத ஒரு செடியை களைத்து குழிக்கு ஒரு நல்ல செடி மட்டும் இருக்குமாறு பயிரை பராமரிக்க வேண்டும்.

உரமிடுதல்

மேலுரம்
     
பொதுவாக மண் பரிசோதனை முடிவிற்கேற்ப உரமிடுவது நல்லது. இருப்பினும் பேåட்டச் சத்துக்களான தழை, மணி, சாம்பல் சத்தை 60:45:45 கிலோ ஒரு எக்டேருக்கு என்ற அளவில் தரவல்ல உரம் இடவேண்டும். இச்சத்துக்களை பயிருக்கு அளிக்க கீழ்க்கண்ட இரசாயன உரங்களை பயன்படுத்தலாம்.

உரத்தின் பெயர்                உர அளவு (எக்டருக்கு)

யூரியா                             130 கிலோ
சூப்பர் பாஸ்பேட்                   275 கிலோ
பொட்டாஷ்                        72 கிலோ

இதில் 30 கிலோ தழைச்சத்தைக் கொடுக்கவல்ல 65 கிலோ யூரியாவை அடியுரமாக இடவேண்டும்.

மேலுரம்
     
மீதமுள்ள 65 கிலோ யூரியாவை விதைத்த 30-35வது நாள் களை எடுத்த பிறகு மேலுரமாக இட்டு மண் அணைக்க வேண்டும்.

களை நிர்வாகம்
     
விதை உற்பத்தி வயலில் ஆரம்பத்திலிருந்தே களைகளைக் கட்டுப்படுத்துவது மிக அவசியம். புளுகுளோரலின் களைக் கொல்லியை ஒரு ஏக்கருக்கு 800 மில்லி என்ற அளவில் 200 லிட்டர் தண்ணீரில் கலந்து விதைத்த மூன்று நாட்களுக்குள் கைத் தெளிப்பான் கொண்டு அகலவாய் தெளிப்பு முனை பொருத்தி பின் நோக்கி நடந்து, மாலை வேளைகளில் தெளிக்க வேண்டும். களைக் கொல்லி தெளிக்கும் வயலில் ஈரம் இருக்கவேண்டும். பிறகு விதைத்த 30-35 வது நாளில் ஒரு கொத்துக்களை எடுக்க வேண்டும்.

நீர் நிர்வாகம்

விதைத்த உடன் பயிருக்கு முதல் நீர் பாய்ச்ச வேண்டும். விதைத்த 3வது நாள் உயிர் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பின்பு நிலத்தின் தன்மைக்கு ஏற்ப வாரம் ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும். பூக்கும் தருணம் மற்றும் விதை முற்றும் தருணத்தில் பயிருக்கு நீர் மிக அவசியம் ஆகும். இக்காலங்களில் நீர் பற்றாக்குறை இருந்தால் பொக்கு விதைகள் அதிகமாகிவிடும். இவ்வாறு முறையாக நீர் பராமரிப்பு செய்து சூரியகாந்தியில் அதிக விதை மகசூல் பெறலாம்.

கலவன்கள் நீக்குதல்
      
விதை உற்பத்தியில் கலவன்கள் அகற்றுவது மிக முக்கியமான பணியாகும். ஏனெனில் கலவன்களால் விதைப்பயிரின் இனத்தூய்மை மிகவும் பாதிக்கப்பட்டு, அந்த வயல் விதை உற்பத்திக்கே தகுதியற்றதாக ஆகும் வாய்ப்பு ஏற்படுகிறது. மேலும் களை மற்றும் சில நோய் தாக்கிய செடிகளாலும் விதையின் தரம் வெகுவாக குறைந்துவிட ஏதுவாகிறது.
     
எனவே விதை உற்பத்தி வயலில் பயிரிடப்பட்ட சூரியகாந்தி இரகத்தின் குணாதிசயங்களிலிருந்து மாறுபட்டுத் தெரிகின்ற எல்லா செடிகளையும், களைச்செடி மற்றும் நோய் வாய்ப்பட்ட பயிர்களையும் அவைகள் பூக்கும் முன்பே நீக்கிவிட வேண்டும்.
     
இவ்வாறு செய்வதால் பிற இனக்கலப்பில்லாத தரமான விதைகளை உற்பத்தி செய்ய முடியும்.

உங்கள் கவனத்திற்கு

பயிர் வளர்ச்சிப் பருவம்

நீக்கப்பட வேண்டிய கலவன்கள்

பூக்கும் முன்

மிக உயரமான மற்றும் மிகக் குட்டையான செடிகள், மிக சீக்கிரம் பூக்கும் செடிகள்

பூக்கும் தருணம்

மிகவும் காலதாமதமாக பூக்கும் செடிகள், கிளைப்பூக்கள் உள்ள செடிகள்

அறுவடையின் போது

பூக்கொண்டையின் அளவு, விதையின் நிறம் ஆகியவற்றைக்கொண்டு கலவன்களை அகற்ற வேண்டும்.

விதைப் பிடிப்பு
     
மற்ற பயிர்களைப் போல் அல்லாது விதைப் பிடிப்பை அதிகரிக்க சூரியகாந்தியில் தனிக் கவனம் செலுத்த வேண்டும். சூரியகாந்தி ஓர் அயல் மகரந்தச் சேர்க்கை பயிர் என்று நாம் நன்கு அறிவோம். தேனீக்கள் மூலமே அயல் மகரந்தச் சேர்க்கை நடைபெறுகின்றது. காற்றின் மூலம் மகரந்தச் சேர்க்கை நடப்பதில்லை என்றே கூறலாம். ஒரு பூக்கொண்டையில் மலர்கள் அனைத்தும் மலர்வதற்கு 7 முதல் 9 நாட்கள் வரை ஆகிறது. பூக்கொண்டையின் விதைப் பிடிப்புத் திறனை கொண்டுதான் சூரியகாந்தி விதை உற்பத்தி அதிகமாகிறது. ஆனால், பல்வேறு காரணங்களால் பூக்கொண்டை முழுவதும் விதைப் பிடிப்பு ஏற்படுவதில்லை. கொண்டையின் நடுப்பகுதியில் பெரும்பாலும் விதைப்பிடிப்பு இல்லாமல் அல்லது பாலை விதைகளாக இருக்கும்.

தேனீக்கள் அதிகமாக இருந்தால் விதைப்பிடிப்பை அதிகரிக்க ஏக்கருக்கு 2 தேனீப் பெட்டிகள் வீதம் வைக்கலாம். தேனீக்கள் குறைவாக உள்ள இடங்களில் பூக்கொண்டையின் விதைப்பிடிப்பை அதிகரிக்க பூக்களை காலை நேரங்களில் (8 மணி முதல் 11 மணி வரை) ஒரு மெல்லிய துணி கொண்டு (படத்தில் உள்ளது போல்) ஒவ்வொரு பூவாக மெதுவாக தடவியும் அல்லது இரண்டு பூக்களை ஒன்றோடொன்று சேர்த்து மெதுவாக தேய்த்து விடவேண்டும்.
    
இதனால் ஒரு பூவிலிருந்து மகரந்தம் மற்றொரு பூவிற்கு சென்றடைந்து அயல் மகரந்தச் சேர்க்கை ஏற்பட ஏதுவாகிறது. இவ்வாறு ஒருநாள்விட்டு ஒருநாள் ஐந்தாறு முறை செய்வதால் பூக்கொண்டையில் உள்ள எல்லா மலர்களிலும் மகரந்தச் சேர்க்கை ஏற்பட்டு கிட்டத்தட்ட 20 முதல் 22 சதம் அதிக விதைப் பிடிப்பு ஏற்பட்டு விதை உற்பத்தி அதிகரிக்கிறது.

பயிர் பாதுகாப்பு
     
தரமான விதை உற்பத்தியில் பயிர்களை பூச்சி மற்றும் நோய் தாக்குதலிலிருந்து பாதுகாப்பதும் ஒரு முக்கிய வழிமுறைகளில் ஒன்றாகும். ஏனெனில், பூச்சி மற்றும் பூஞ்சாணங்களின் தாக்குதலால் விதையின் தரம் வெகுவாக குறைந்துவிட வாய்ப்புகள் உள்ளன. இப்பொழுது சூரியகாந்தியை தாக்கும் சில முக்கிய பூச்சிகள், நோய்கள் மற்றும் அவற்றின் தடுப்பு முறைகளை பற்றி காண்போம்.

பூச்சிகளும் தடுப்பு முறையும்

சாறு உறிஞ்சும் பூச்சிகள்
     
தத்துப்பூச்சி, அசுவினி, வெள்ளை ஒட்டுப்பூச்சி மற்றும் பேன்கள் இலையின் சாறுகளை உறிஞ்சிக்குடிக்கின்றன. இதனால் இலைகள் மஞ்சள் நிறமாக மாறுகின்றன. இச்சாறு உறிஞ்சும் பூச்சிகள் இலைகளுக்கு அடியில் இருந்து சாற்றை உறிஞ்சுவதால் செடிகளின் வளர்ச்சிக் குன்றி இலைகள் சுருங்கி வாடி காய்ந்து விடுகின்றன. கீழ்க்கண்ட மருந்துகளில் ஏதாவது ஒன்றைத் தெளித்து சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.
     
ஏக்கருக்கு எண்டோசல்பான் 400 மிலி அதாவது ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மிலி மருந்து அல்லது ஏக்கருக்கு பென்தியான் 200 மிலி அதாவது ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஒரு மிலி மருந்து என்ற அளவு கலந்து தெளிக்க வேண்டும்.

கொண்டை துளைப்பான் (அல்லது) ஹிலியாதிஸ்
    
இப்பூச்சியின் புழுக்கள் செடியின் பூக்கொண்டையிலுள்ள இளம் விதைகளைத் துளைத்து தின்று பதராக்கி மிகுந்த சேதத்தை உண்டாக்குகின்றன. புழுவின் உடலின் முன்பாகம் விதையினுள்ளும் மற்ற பாகம் வெளியிலும் காணப்படும்.
     
இதனைக் கட்டுப்படுத்த பின் வரும் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளைக் கையாளவேண்டும்.

கட்டுப்படுத்தும் முறைகள்

  • கையால் புழுக்களை சேகரித்து அளித்தல்
  • இனக் கவர்ச்சிப் பொறிவைத்து ஆண் அந்துப்பூச்சிகளை கவர்ந்து அழித்தல்
  • எண்டோசல்பான் 5 சத தூள் ஒரு ஏக்கருக்கு 10 கிலோ அல்லது பாசலோன் 4 சத தூள் ஒரு ஏக்கருக்கு 10 கிலோ என்ற அளவில் தூவி கொண்டைப் புழுக்களை கட்டுப்படுத்தலாம்.

 

நோய்களும் தடுப்பு முறைகளும்
     
சூரியகாந்தி பல்வேறு பூஞ்சாண நோய்களால் தாக்கப்படுகின்றன. இதனால் மகசூல் மிகவும் பாதிக்கப்படுகிறது.

இலைப்புள்ளி, தண்டு அழுகல் நோய்
     
முதலில் இலைகளின் ஓரங்களும் பின்னர் இலைகள் முழுவதும் கருகும். இலைக் காம்புகளும், தண்டுகளும் கருப்பாகி பின் அழுக ஆரம்பிக்கும்.

பூ அழுகும் நோய்
     
பூக்கள் தோன்றி மலர ஆரம்பிக்கும் போது சில பூச்சிகள் பூக்களின் பின்புறத்தில் துவாரங்கள் செய்கின்றன. இத் துவாரங்கள் வழியாக பூஞ்சாணம் பூவுக்குள் புகுந்து, பூவின் உட்புறத்தையும் விதைகளையும் தாக்கி கருப்பு நிறம் கொண்ட பொடியாக்கி விடுகின்றன.

வாடல் நோய்
     
இந் நோய் செடிகளின் வேர்களை தாக்குவதால் இலைகளும் காம்புகளும் முதலில் வாடும். பின்னர் தண்டுகள் தாக்கப்பட்டு செடி முழுவதும் வாட இறுதியாக செடிகள் செத்து மடிகின்றன.
     
சூரியகாந்தியில் தோன்றும் நோய்களைக் கட்டுப்படுத்த மான்கோசெப் என்ற மருந்தை ஒரு ஏக்கருக்கு 400 கிராம் என்ற அளவில் விதைத்த 20, 30, 40 வது நாட்களில் தெளிக்க வேண்டும்.

பறவை இடையூறுகள்
     
சூரியகாந்தி விதைகள் உருவாகும் காலகட்டத்தில் பறவைகள் குறிப்பாக கிளிகள் மிகுந்த சேதாரத்தை உண்டுபன்னுகின்றன. எனவே தனிக் கவனம் செலுத்தி சேதத்தை தடுக்க வேண்டும்.

கட்டுப்படுத்தும் முறை

  • ஆட்கள் கொண்டு தகரத்தால் ஒலி எழுப்பியும், நாட்டு வெடி வைத்தும், பரன் அமைத்து கல்லெறிந்தும் கிளித்தொல்லையை கட்டுப்படுத்தலாம்.
  • ‘அக்னி’ என்ற பளபளக்கும் சிவப்பு வெள்ளை நாடாவை வயலைச் சுற்றி கட்டுவதன் மூலம் கிளிகள் வராமல் தடுக்கலாம்.
  • ஒரு பகுதியில் விவசாயம் செய்யும் அனைத்து விவசாயிகளும் ஒரு இடத்தில் சூரியகாந்திவிதைப்பு செய்வதால் கிளித் தொந்தரவு வெகுவாக குறையும்.
  • தானே ஒலி எழுப்பும் சாதனம் பயன்படுத்தியும் பறவை தொல்லையை கட்டுப்படுத்தலாம்.

 

அறுவடை
     
விதைப் பயிரை சரியான தருணத்தில் அறுவடை செய்வது மிக முக்கியம். தக்க தருணத்திற்கு முன்பே அறுவடை செய்து விட்டால் உலர வைக்கும் போது விதைகள் சிறுத்து விடுவதுடன் முளைப்புத்திறன் வெகுவாகக் குறைந்துவிடும். கால தாமதம் ஆகி அறுவடை செய்வதால் விதைகள் பூச்சி பூஞ்சாணங்களின் தாக்குதலுக்கு ஆளாகி தரம் குறைந்து விடும். எனவே சரியான தருணத்தில் அறுவடை செய்து அதிக மகசூலும் தரமான விதைகளையும் பெறலாம்.

உங்கள் கவனத்திற்கு

 

பூக்கொண்டைகளின் அடிப்பாகம் எலுமிச்சை மஞ்சள் நிறம் அடைவதே சூரியகாந்தி விதை அறுவடைக்கு சரியான தருணம் ஆகும். எனவே பூக்கொண்டைகள் எலுமிச்சை நிறமானவுடன் அறுவடை செய்ய வேண்டும்.

விதைகளை உலர்த்துதல்
     
பிரித்தெடுத்த விதைகளை நன்கு வெயிலில் உலர வைக்க வேண்டும். உலர்த்தும்போது தினமும் காலை 8 முதல் 12 மணி வரையிலும் பின்னர் மாலை 3 மணி முதல் 5 மணி வரையிலும் உலர்த்த வேண்டும். பகல் 12 மணியிலிருந்து 3 மணி வரை உள்ள காலத்தில் சூரியனின் புற கதிர்களின் தாக்கம் அதிகமாக இருப்பதாலும் வெப்பநிலை உச்சத்தில் இருப்பதாலும் விதையின் தரம் வெகுவாக பாதிக்கப்படுகிறது.
     
எனவே, காலை முதல் மாலை வரை தொடர்ந்து விதைகளை உலர வைக்கக் கூடாது. விதைகளை சீராக பரப்பி அவ்வப்போது நன்கு கிளரிவிட வேண்டும். இவ்வாறு விதைகளை உலர்த்தி விதையின் ஈரப் பதம் 7 - 8 சதம் வந்தவுடன் உலர்ந்த விதைகளை மூட்டை பிடிக்க வேண்டும்.

விதைத் தரம்

அறுவடை செய்யப்பட்ட விதைகளின் தரம் பூக்கொண்டைகளின் அளவைப் பொருத்து மாறுபடுகிறது. மிகச் சிறிய அளவு விட்டம் கொண்ட பூக் கொண்டையிலிருந்து (5-10 செ.மீ) பெறப்பட்ட விதைகளின் முளைப்புத்திறன் மற்றும் வீரியம் குறைந்து காணப்படுவதால் அவற்றிலிருந்து விதைகள் எடுக்கக் கூடாது. எனவே நடுத்தர அளவு விட்டமுள்ள (11-18 செ.மீ) பூக் கொண்டையிலிருந்து விதைகள் எடுத்து அவற்றைப் பயன்படுத்த வேண்டும்.
     
மேலும் விதைகளின் பருமனைப் பொருத்தும் தரம் வேறுபடுகின்றன. ஒரு பூக் கொண்டையிலிருந்து பெறப்பட்ட விதைகளிலேயே மாறுபட்ட அளவுள்ள விதைகள் காணப்படுகின்றன. இதனால் முளைப்புத்திறனும், வீாியமும் பாதிக்கின்றது. எனவே, விதைகளை 9/64 அங்குலம் (3.6 மி.மீ) அளவுள்ள வட்டக் கண் கொண்ட சல்லடை கொண்டு விதை சுத்திகரிப்பு செய்து தரம் பிரித்து விதைப்புக்காக உபயோகிக்க வேண்டும்.

விதை உறக்கம்
     
ஒரு சில சூரியகாந்தி இரக விதைகள் 30-40 நாட்கள் வரை விதை உறக்கம் கொண்டுள்ளன. விதை முளைப்பதற்கு தேவையான சூழ்நிலைக்கலான தகுந்த நிலம் மற்றும் தண்ணீர் வசதிகள் இருந்தும் கூட விதைகள் முளைக்காமல் அப்படியே இருக்கும் நிலையைத்தான் விதை உறக்கம் என்கிறோம்.
    
சரி, 30-40 நாட்கள் உறக்கத்திலிருக்கும் விதைகளை எப்படி விதைப்புக்காக பயன்படுத்த முடியும் என்று சந்தேகப்படுகிறீர்களா? கவலை வேண்டாம். விதை உறக்கம் உள்ள சூரியகாந்தி விதைகளைப் பயன்படுத்தவும் சில வழிகள் உள்ளன. அவைகள் என்ன என்பதைத் தெரிந்து கொள்வோமா?
     
உறக்கத்தில் உள்ள விதைகளை 300 பிபிஎம் எதிரால் என்ற இரசாயனக் கரைசலில் ஒரு பிளாஸ்டிக் பாத்திரத்தில் இட்டு காற்றுப்புகாமல் எட்டு மணி நேரம் ஊறவைக்க வேண்டும் அல்லது 0.5 சத பொட்டாசியம் நைட்ரேட் இரசாயனக் கரைசலில் 16 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அல்லது 0.5 சத பொட்டாசியம் நைட்ரேட் இராசயனக் கரைசலில் 16 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
     
பின்பு விதைகளை வெளியே எடுத்து தண்ணீரில் நன்கு கழுவி நிழலில் உலர்த்தி பின்பு விதைத்தால் முளைப்புத் திறன் அதிகரிக்கும்.
     
அறுவடை செய்த உடனேயே விதைப்பு செய்வதாக இருந்தால்தான் இந்த விதை உறக்கத்தால் விதை முளைப்புத்திறன் குறைந்து காணப்படும் பிரச்சினை ஏற்படுகிறது. பொதுவாக நாம் தரமான விதைகள் வாங்கி விதைக்கும் போது இயற்கையிலேயே விதையின் உறக்கம் நீங்கி விதைகள் நல்ல முளைப்புத்திறன் அடைந்துவிடும். எனவே விதை உறக்கம் பற்றி அதிகம் கவலைப்பட வேண்டியதில்லை.

விதை சேமிப்பு
     
விதை உற்பத்தியில் விதை சேமிப்பு ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது. சரியான முறையில் விதைகளை சேமிப்பதன் மூலம்தான் விதையின் தரத்தை அடுத்த விதைப்பு பருவம் வரை நன்கு பாதுகாக்க முடியும்.
     
விதையின் ஈரப் பதத்தைப் பொறுத்து விதையின் தரம் சேமிப்பில் மாறுபடுகின்றது. எனவே விதைகளை குறைந்த கால அளவான 6 மாதம் வரை சேமிக்க ஈரப் பதத்தை 7 - 8 சதமாக குறைத்து துணிப்பைகளில் சேமிக்கலாம்.
     
விதையின் ஈரப் பதத்தை 5 - 6 சதமாக உலர வைத்து 700 காஜ் அடர்வுள்ள பாலிதின் பைகளில் போட்டு 10 மாதங்கள் வரை சேமித்து வைக்கலாம்.

விதை நேர்த்தி
     
விதைகளை சேமிப்புக்கு முன் பூஞ்சாணக் கொல்லி கொண்டு விதை நேர்த்தி செய்யுங்கள். இதற்கு திராம் அல்லது கேப்டான் மருந்தை ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் என்ற விகிதத்தில் கலந்து வையுங்கள். இதற்குப் பதிலாக விதைகளை குளோரினேற்றம் செய்தும் சேமிக்கலாம். குளோரினேற்றம் என்றால் கால்சியம் ஆக்ஸி குளோரைடு (அதாவது பிளீச்சிங் பவுடர்) என்ற இரசாயன பொருளை கால்சியம் கார்பனேட் என்ற பொருளுடன் சம விகிதத்தில் கலந்து காற்றுப் புகா பாட்டிலில் ஒரு வாரம் அடைத்து வைத்திருந்து பின்னர் அந்தக் கலவையிலிருந்து ஒரு கிலோ விதைக்கு 5 கிராம் என்ற அளவில் எடுத்து கலந்து பின்பு சேமியுங்கள். குளோரினேற்றம் ஒரு சுற்றுப்புற சூழல் மாசுபடாத விதைநேர்த்தி முறையாகும்.

இடைக்கால விதை நேர்த்தி
     
உங்கள் தேவைக்கென சேமித்து வைத்திருக்கும் குறைந்த அளவு விதைகளை 5 மாத கால சேமிப்புக்குப் பின் “ஊறவைத்து உலர வைக்கும் முறை” மூலம் விதை நேர்த்தி செய்யுங்கள். இதற்கு டை-சோடியம் பாஸ்பேட் என்ற இரசாயன மருந்தை 100 லிட்டர் நீருக்கு 3.6 கிராம் என்ற விகிதத்தில் கரைத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்தக் கரைசலில் (ஒரு பங்கு விதைக்கு இரு பங்கு கரைசல்) விதைகளை 3 மணி நேரம் ஊற வைத்து பின்பு பழைய ஈரப்பதத்திற்கு காய வைத்து விடுங்கள். இவ்வாறு செய்வதால் விதைகளின் சேமிப்புத்திறன் அதிகமாகிறது.

தரமான விதை உற்பத்திக்கு விதைச்சான்று
     
விதை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு உற்பத்தி செய்யப்படும் விதையின் இனத்தூய்மை பற்றியும் விதைத்தரம் பற்றியும் உத்திரவாதம் அளிப்பதே விதைச் சான்றளிப்பு ஆகும். விதைச் சான்று பயிர் வளர்ச்சியின் பல்வேறு நிலைகளில் செய்யப்படுகின்றது. ஆய்வின்போது பரிந்துரைக்கப்பட்ட வயல் மற்றும் விதைத் தரம் இருந்தால் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்ட விதைகளுக்கு சான்றளிக்கப்பட்டு அவை விற்பனைக்கு தயாராகிறது.
     
எனவே உங்கள் விதை உற்பத்தி வயல்களை விதைச் சான்றளிப்புக்கு உட்படுத்தி இனக்கலப்பற்ற தரமான விதைகளை நீங்களும் உற்பத்தி செய்ய முடியும். விதைச்சான்று பெறுவதற்கு நீங்கள் உங்கள் அருகாமையில் உள்ள விதைச் சான்றளிப்பு அலுவலர்களை அணுகி மேலும் விவரங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

  • வயல் தரம்

காரணிகள்
கலவன்கள்
ஆட்சேபிக்கப்பட்ட களைச்செடிகள்
அடிச்சாம்பல் நோய் தாக்கிய செடிகள்

அதிகபட்சம் (சதம்)
0.10     0.20
இருக்கக்கூடாது
0.05     0.50

  • விதைத்தரம்

காரணிகள்

ஆதார நிலை

சான்று நிலை

சுத்தமான விதைகள் (குறைந்த பட்சம்)

98 சதம்

98 சதம்

கல்,மண்,தூசி (அதிகபட்சம்)

2 சதம்

2 சதம்

உமிநீக்கப்பட்ட விதைகள் (அதிகபட்சம்)

2 சதம்

2 சதம்
(எண்ணிக்கையில்)

பிற பயிர் விதைகள் (அதிகபட்சம்)

 

இருக்கக்கூடாது

களை செடிவிதைகள் (அதிகபட்சம்)

5/கிலோ

10/கிலோ

முளைப்புத்திறன் (குறைந்தபட்சம்)

70 சதம்

70 சதம்

ஈரப்பதம் (அதிகபட்சம்)

 

 

காற்றுப்புகும் பைகள்

9 சதம்

9 சதம்

காற்றுப்புகா பைகள்

7 சதம்

7 சதம்

 

விரிய ஒட்டு சூரியகாந்தி விதை உற்பத்தி முறைகள்

விதை உற்பத்திக்கு சில வழிமுறைகள்   
      
நமது முக்கிய நோக்கமே நல்ல முளைப்புத்திறனும் வீரியமும் உள்ளதரமான விதைகளை உற்பத்தி செய்வது ஆகும். ஒரு ஆண் மலட்டுத்தன்மை உடைய பெண் இரகத்தையும் மற்றொரு ஆண் இரகத்தையும் இயற்கையில் ஒட்டுச்சேர்த்து கிடைக்கப்பெறும் முதல் சந்ததிதான் வீரிய ஒட்டுரக விதையாகும். ஒவ்வொரு முறையும் இவ்வாறு ஒட்டு சேர்த்து புதிதாக உற்பத்தி செய்த வீரிய விதைகளைத்தான் விதைப்புக்காகப் பயன்படுத்த வேண்டும்.

நிலம் தேர்ந்தெடுத்தல்
     
எல்லா மண் வகையிலும் சூரியகாந்தி நன்கு வளரும் தன்மையுடையது. இருப்பினும் நல்ல வடிகால் வசதி உடையதும் காரஅமிலத் தன்மை இல்லாததுமான நல்ல வளமான நிலத்தையே தேர்ந்தெடுக்க வேண்டும். முன் பருவத்தில் வேறு இரக சூரியகாந்தி பயிர் செய்யப்படாத நிலமாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் தன்னிச்சையாக முளைத்துவரும் சூரியகாந்தி செடிகளைக் கட்டுப்படுத்தி இனத்தூய்மையை பராமரிக்க முடியும்.

பயிர் விலகு தூரம்
     
சான்று நிலை வீரிய ஒட்ட இரக சூரியகாந்தி விதை உற்பத்தி செய்ய 600 மீட்டர் பயிர் விலகு தூரம் வேண்டும். அதாவது வீரிய விதை உற்பத்தி வயலைச் சுற்றி 600 மீட்டர் தூரத்திற்கு வேறு எந்த இரக சூரியகாந்தி பயிரும் இருத்தல் கூடாது.

நிலம் தயாரிப்பு
     
விதைக்காக தேர்ந்தெடுத்த நிலத்தை நன்கு உழுது பக்குவப்படுத்த வேண்டும். அவ்வாறு உழுது பக்குவப்படுத்தப்பட்ட நிலத்தில் விதைகள் நன்றாக முளைப்பதற்கும், களைகள் இல்லாதவாறும் நீர் தேங்காவண்ணம் சமன் செய்து கொள்ள வேண்டும்.

ஏற்ற பருவம்
      
தரமான விதை உற்பத்திக்கு தகுந்த பருவத்தை தேர்ந்தெடுத்தல் மிக அவசியமகும். விதை உற்பத்திக்கு ஜ¤ன் - ஜ¤லை, அக்டோபர் - நவம்பர் மற்றும் டிசம்பர் - ஜனவரி மாதங்கள் ஏற்ற பருவங்கள் ஆகும்.

விதை அளவு
                       பெண் விதை 4 - 4.5 கிலோ/ ஹெக்டர்
                       ஆண் விதை 1 - 1.5 கிலோ/ ஹெக்டர்
விதை நேர்த்தி
     
விதைகளை கேப்டான் அல்லது திரம் போன்ற பூஞ்சாணக்கொல்லி மருந்தை ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் என்ற விகிதத்தில் 24 மணி நேரத்திற்கு முன்பு கலந்து பின்னர் விதைக்க வேண்டும்.
     
விதை நேர்த்தி ஆண் பெண் விதைகளுக்கு தனித்தனியே செய்ய வேண்டும்.

விதை விதைப்பு
     
வீரிய ஒட்டு விதை உற்பத்தியில் இரண்டு தாயாதி இரகங்களை ஒட்டுச் சேர்ப்பதால் அவ்விதைகளை சரியான விகித்தில் விதைப்பதன் மூலம்தான் விதை உற்பத்தியை அதிகரிக்க முடியும்.
     
பெண் மற்றும் ஆண் விதைகளை 3:1 என்ற விகிதத்தில் அதாவது 3 பெண் வரிசைக்கு ஒரு ஆண் வரிசை இருக்குமாறு விதைகளை விதைக்க வேண்டும்.
     
மேலும் விதை உற்பத்தி செய்யும் வயலைச் சுற்றிலும் எல்லை வரிசையாக 4 வரிசை ஆண் விதைகளை விதைக்க வேண்டும். இதனால் விதை உற்பத்திக்கு அதிக மகரந்தம் கிடைப்பதோடு மற்ற இரக மகரந்தம் ஏற்படுத்தும் இனக்கலப்பையும் கட்டுப்படுத்த முடியும்.

பயிர் இடைவெளி
     
ஒரு வரிசைக்கும் மற்றொரு வரிசைக்கும் 2 அடி இடைவெளி இருக்குமாறு பார் அமைக்க வேண்டும். செடிக்குச் செடி 1 அடி இடைவெளி இருக்குமாறு 3 செ.மீ (ஒன்றரை விரற்கடை) ஆழத்தில் பாரின் பக்கவாட்டில் குழிக்கு இரண்டு விதைகள் வீதம் ஊன்றவும். விதைத்த 15 வது நாளில் ஒவ்வொரு குழியிலும் உள்ள இரண்டு செடிகளில் வளர்ச்சி இல்லாத ஒரு செடியை களைந்து குழிக்கு ஒரு நல்ல செடி மட்டும் இருக்குமாறு பெண் மற்றும ஆண் வரிசையில் பயிரை பராமரிக்க வேண்டும்.

உரமிடுதல்
     
ஏக்கருக்கு 5 டன் மக்கிய தொழு உரம் அடியுரமாக கடைசி உழவில் இட்டு நன்கு உழ வேண்டும். தேவையான உரங்கள் இடுவதால் அதிக மகசூலும் தரமான விதைகளும் பெற முடியும். பேåட்டச் சத்துக்களான தழை, மணி, சாம்பல் சத்தை 36:36:16 கிலோ ஒரு ஏக்கருக்கு என்ற அளவில் இடவேண்டும். முதலில் பாதி அளவான 18 கிலோ தழைச்சத்து மற்றும் முழுவதுமான மணி மற்றும் சாம்பல் சத்தை அடியுரமாக இடவேண்டும்.
     
மேற்கூறிய சத்துக்கள் அளிக்கவல்ல இரசாயன உரங்களை கீழே குறிப்பிட்ட அளவில் இட்டு பயிர் செய்தல் வேண்டும்.

 

உரத்தின் பெயர்

உரஅளவு ஏக்கருக்கு அடியுரம்

(கிலோ)
மேலுரம்

யூரியா

40

40

சூப்பர் பாஸ்பேட்

219

-

பொட்டாஷ்

26

-

     
விதைத்த 30ம் நாள் களை எடுத்த பிறகு மீதமுள்ள 18 கிலோ தழைச் சத்தை மேலுரமாக இட்டு மண் அணைக்க வேண்டும்.

கலவன் நீக்குதல்
     
ஆண் மற்றும் பெண் பயிர்கள் இரண்டிலும் கலவன்களை முற்றிலும் நீக்கி இனத்தூய்மையைப் பராமரிக்க வேண்டும். இந்த இரண்டு தாயாதி இரகங்களிலும் அவற்றின் குணாதிசயங்களிலும் மாறுபட்ட குணத்தை உடைய செடிகளை அவை பூப்பதற்கு முன்பே பிடுங்கி அப்புறப்படுத்த வேண்டும்.ஆண் மலட்டுத் தன்மைகொண்ட பெண் இரகத்தையே வீரிய ஒட்டு இரக உற்பத்திக்கு பயன்படுத்துகிறோம். எனவே, பெண் வரிசையில் மகரந்தக் கொட்டிகள் இருந்தால் உடனே அவற்றை நீக்கி விட வேண்டும். மேலும் ஆண் இரகச் செடிகள் கிளைப் பூக்கள் கொண்டவை. எனவே, இந்த இரகத்திலிருந்து மாறுபட்ட செடிகளை, அவைகள் பூப்பதற்கு முன்பே பிடுங்கி அப்புறப்படுத்த வேண்டும்.
     
இவ்வாறு இரண்டு மூன்று முறை விதை உற்பத்தி வயலை நன்கு சுற்றிப்பார்த்து கலவன்களை அகற்றி தரமான இனத்தூய்மையான விதைகள் உற்பத்தி செய்யலாம்.

விதைப்பிடிப்பு
     
சூரியகாந்தி ஓர் அயல் மகரந்த சேர்க்கைப் பயிர் ஆகும். விதைப் பிடிப்பை அதிகரிக்கவும் நல்ல விதை மகசூல் பெறுவதற்கும் பூக்களை நன்கு தடவி விட வேண்டும். அதாவது ஒரு மெல்லிய துணி கொண்டு ஆண் பூக்களை மெதுவாக தடவி பின்பு உடனே பெண் பூக்களை தடவி விட வேண்டும். இவ்வாறு மாறிமாறி ஆண் பூக்களையும் பெண் பூக்களையும் தடவி விட வேண்டும். இவ்வாறு மாறிமாறி ஆண் பூக்களையும் பெண் பூக்களையும் தடவி விடுவதால் நன்கு மகரந்தச் சேர்க்கை ஏற்பட்டு விதைப்பிடிப்பு கணிசமான அளவு அதிகரிக்கிறது. ஒரு நாள் விட்டு ஒரு நாள் காலை 8 மணி முதல் 11 மணி வரை இவ்வாறு ஐந்தாறு முறை பூக்களை துடைத்துவிட்டு விதைப் பிடிப்பை அதிகரிக்கச் செய்ய வேண்டும்.

பறவை இடையூறுகள்
     
சூரியகாந்தி விதைகள் உருவாகும் காலகட்டத்தில் கிளிகள் மிகுந்த சேதத்தை விளைவிக்கின்றன. முதல் பாடத்தில் கூறிய முறைகளைப் பின் பற்றி கிளிகளால் ஏற்படும் சேதத்தை கட்டுப்படத்த வேண்டும். விதைப்பிடிப்பு காலத்திலிருந்து விதை முற்றும் சமயம் வரை தனிக் கவனம் செலுத்தி விதை இழப்பை தடுக்க வேண்டும்.

அறுவடை மற்றும் சேமிப்பு

அறுவடை
     
தக்க தருணத்தில் அறுவடை செய்வது விதையின் தரத்தை பராமரிப்பதற்கு மிகவும் முக்கியமானதாகும். விதைகள் நன்கு முற்றியதும் ஆண் இரகத்தை முதலில் அறுவடை செய்து முழுவதுமாக அப்புறப்படுத்திவிட வேண்டும். பின்பு பெண் அதாவது வீரிய ஒட்டு இரக விதைகளை அறுவடை செய்ய வேண்டும். ஆண் பெண் இரண்டு வரிசையிலும் பூக்கொண்டையின் பின்புறம் எலமிச்சை மஞ்சள் நிறமாக மாறியதும் அறுவடை செய்தல் வேண்டும்.

விதை சேமிப்பு
    
அறுவடை செய்த பூக்கொண்டைகளை பரவலாகப் போட்டு நன்கு உலர்த்தி தடி கொண்டு அடித்து விதைகளைப் பிரித்தெடுக்க வேண்டும். பிரித்தெடுத்த விதைகளை நன்கு காயவைத்து (7-8 சதம் ஈரப்பதம்) சுத்தம் செய்து கோணிப் பைகளில் நிரப்பி சேமிக்க வேண்டும்.

விதை நேர்த்தி
    
விதைகளை சேமிப்புக்கு முன் பூஞ்சாணக் கொல்லி கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும். இதற்கு திராம் அல்லது கேப்டான் மருந்தை ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் என்ற விகிதத்தில் கலந்து வையுங்கள். இதற்குப் பதிலாக விதைகளை குளோரினேற்றம் செய்தும் சேமிக்கலாம். குளோரினேற்றம் என்றால் கால்சியம் ஆக்ஸி குளோரைடு (அதாவது பிளீச்சிங் பவுடர்) என்ற இராசயன பொருளை கால்சியம் கார்பனேட் என்ற பொருளுடன் சம விகிதத்தில் கலந்து காற்றுப் புகா பாட்டிலில் ஒரு வாரம் அடைத்து வைத்திருந்து பின்னர் அந்தக் கலவையிலிருந்து ஒரு கிலோ விதைக்கு 5 கிராம் என்ற அளவில் எடுத்து கலந்து பின்பு சேமியுங்கள். குளோரினேற்றம் ஒரு சுற்றுப்புற சூழல் மாசுபடாத விதை நேர்த்தி முறையாகும்.

விதைச் சான்றளிப்பு
     
விதை உற்பத்திக்கு தரக்கட்டுப்பாட்டுக்கென்று சட்டபூர்வமாக ஏற்படுத்தப்பட்ட முறையே சான்றளிப்பு ஆகும். பரிந்துரைக்கப்பட்ட வயல் தரம் மற்றும் விதைத் தரம் பற்றி பல்வேறு நிலைகளில் ஆய்வு செய்யப்பட்டு தேவையான தரம் இருந்தால் மட்டும் உற்பத்தி செய்யப்பட்ட விதைகளுக்கு சான்று அளிக்கப்படுகிறது.
    
எனவே உங்கள் விதை உற்பத்தி வயலை விதைச் சான்றுக்கு உட்படுத்தி தரமான விதை உற்பத்தி செய்து அதிக லாபம் பெறலாம். விதைச் சான்று பற்றி நன்கு விபரங்கள் தெரிந்து கொள்ள உங்கள் அருகாமையிலுள்ள விதைச்சான்று அலுவலர்களை அணுக வேண்டும்.

1.வயல் தரம்

 

காரணிகள்

அதிகபட்சம் (சதம்)
ஆதாரநிலை           சான்றுநிலை

கலவன்கள் (பெண் செடியில்)

   0.20                 0.50

கலவன்கள் (ஆண் செடியில்)

   0.20                 0.50

மகரந்தம் கொட்டிகள் (பெண் செடியில்)

   0.50                 1.00

ஆட்சேபிக்கப்பட்ட களைச்செடிகள்

          இருக்கக்கூடாது

அடிச்சாம்பல் நோய் தாக்கிய செடிகள்

   0.50                 0.50

2.விதைத்தரம்

காரணிகள்

ஆதார நிலை

சான்று நிலை

சுத்தமான விதைகள் (குறைந்த பட்சம்)

98 சதம்

98 சதம்

கல்,மண்,தூசி (அதிகபட்சம்)

2 சதம்

2 சதம்

உமிநீக்கப்பட்ட விதைகள் (அதிகபட்சம்)

2 சதம்
(எண்ணிக்கையில்)

2 சதம்
(எண்ணிக்கையில்)

பிற பயிர் விதைகள் (அதிகபட்சம்)

இருக்கக்கூடாது

களை செடிவிதைகள் (அதிகபட்சம்)

5/கிலோ

10/கிலோ

முளைப்புத்திறன் (குறைந்தபட்சம்)

70 சதம்

70 சதம்

ஈரப்பதம் (அதிகபட்சம்)

காற்றுப்புகும் பைகள்

9 சதம்

9 சதம்

காற்றுப்புகா பைகள்

7 சதம்

7 சதம்

 

 
முன்னுரை
செÂல்படும் திட்டங்கள்
விதை உற்பத்தி
ப¢ற்சி
விதை ஆய்வு
இரசாயன பொருள்கள்
பூச்சிக்கொல்லி மற்றும்
பூïச¡Ωக்கொல்லி
விதை மேலாñமை
 
முக்கிÂத்துவம்
தகுதி வரம்புகள்
பதிவு முறை
ஆய்வு
தரக்கட்டுப்பாடு
அங்ககச் சான்றளிப்பு
கட்டΩ விபரம்
விñΩப்ப படிவங்கள்
தொடர்பு கொள்ள

 
நோக்கம்
விதை அடைப்பு கொள்கலன்கள்
சேமிப்பு கார½¢கள்
அமைப்புகள்
சேமிப்பு கிடங்கு சுகாதாரம்
 
 

| Home | Seasons & Varieties | Tillage | Nutrient Management | Irrigation Management | Weed Management | Crop Protection | Cost of Cultivation |

© All Rights Reserved. TNAU-2008.

Fodder Cholam