Seed Certification
பருத்தி

பருத்தி - தரமான விதை உற்பத்தி முறைகள்

நிலத்தேர்வு

நிலம் தேர்வு செய்யும் போது முந்திய பருவத்தில் வேறு இரக பருத்தி பயிரிடப்படாத நிலத்தை தேர்ந்தெடுத்தல் மிக அவசியம். இவ்வாறு செய்வதால் தானாக முளைத்த பயிர்களால் ஏற்படும் இனக் கலப்பைத் தடுக்கலாம். விளை நிலத்தில் கலவன்கள் வருவதைத் தடுக்க முந்திய பயிர், பருத்தி பயிராக இல்லாதிருத்தல் வேண்டும். ஏற்கனவே பருத்தி பயிர் செய்த நிலமாக இருந்தால், நீர்பாய்ச்சி அதில் புதைந்துள்ள விதைகளை முளைக்க வைத்து பின்னர் ஒரு வாரம் கழித்து உழுது விடுவதால் பிற இரக பருத்திச் செடிகளை அழித்து விடலாம். நல்ல வடிகால்
வசதி கொண்ட மண் வளம் கொண்ட நிலத்தினை தேர்ந்தெடுப்பதன் மூலம் வளமான செடிகளைப் பெறலாம்.

பயிர் விலகு தூரம்

பருத்தி தன் மகரந்த சேர்க்கை மற்றும் அயல் மகரந்த சேர்க்கையுடைய பயிராகும். ஆதார நிலை விதை உற்பத்தி செய்யும் போது பயிரிடப்படும் விதைப் பயிரானது பிற இரகங்களிலிருந்து குறைந்தது 50 மீட்டர் தூரத்திற்கும், சான்றிதழ் நிலை விதை உற்பத்தி செய்யும் போது 30 மீட்டர் தூரத்திற்கும் தனிமைப் படுத்தப்பட்டிருக்க வேண்டும்.

இவ்வாறு செய்வதன் மூலம் ஒரு இரகம் மற்றொரு இரகத்துடன் கலந்துவிடாமல் விதைகளின் பாரம்பரியத் தூய்மையைப் பாதுகாக்க முடியும்.

விதை உற்பத்திக்கு ஏற்ற பருவம்

“பருவத்தே பயிர் செய்” என்பது பழமொழி. விதைப்பயிருக்கு இது மிகவும் பொருந்தும். விதைகளின் தரம் அது பயிரிடப்படும் சூழ்நிலைக்கு ஏற்ப அமைகிறது. பருத்தி விளைவிக்க பல பருவங்கள் இருந்த போதிலும் விதை உற்பத்திக்கு ஏற்ற சரியான பருவத்தை தேர்ந்தெடுப்பது மிக அவசியம். விதைகள் செடியில் முதிரும் போது குளிர்ந்த மற்றும் உலர்ந்த தட்பவெப்பம் இருத்தல் அவசியம்.

பருவத்திற்கேற்ற இரகங்கள் தேர்வு

பருவங்கள் மாவட்டங்கள்                            பயிரிட ஏற்ற
                                        இரகங்கள்            வீரிய ஒட்டு இரகங்கள்
குளிர்கால            இறவைப் பயிர் (ஆடி/ஆவணி) (ஆகஸ்ட்/செப்டம்பர்)
  கோவை எம்.சி.யு.5, எம்.சி.யு.9  
  ஈரோடு எம்.சி.யு.11, சுவின் ஜெயலஷ்மி
  மதுரை சவிதா டி.சி.எச்.பி.213
எச்.பி.224
  தர்மபுரி எம்.சி.யு.5, எம்.சி.யு.11, சவிதா ஜெயலஷ்மி,
டி.சி.எச்.பி.213, எச்.பி.224
  சேலம் எம்.சி.யு.5, எம்.சி.யு.9,
எம்.சி.யு.11, சுவின், சவிதா
ஜெயலஷ்மி
டி.சி.எச்.பி.224, டி.சி.எச்.பி.213
  தென் ஆற்காடு எம்.சி.யு.5, எம்.சி.யு.9, எம்.சி.யு.11, சவிதா ஜெயலஷ்மி
எச்.பி.224, டி.சி.எச்.பி.213
கோடை இறவை (மாசி - பங்குனி / பிப்ரவரி - மார்ச்)
  ஈரோடு எம்.சி.யு.5, எம்.சி.யு.9, எம்.சி.யு.11, எல்.ஆர்.ஏ.5166 ஜெயலஷ்மி
டி.சி.எச்.பி.213, எச்.பி.213
  மதுரை எம்.சி.யு.5, எம்.சி.யு.5, எம்.சி.யு.11, எல்.ஆர்.ஏ.5166 ஜெயலஷ்மி எச்.பி.224,
டி.சி.எச்.பி.213
  ராமநாதபுரம்,
விருதுநகர்
கடலூர்
எம்.சி.யு.5, எம்.சி.யு.9 ஜெயலஷ்மி
டி.சி.எச்.பி.213,
குறுகிய காலம் (தை - மாசி / ஜனவரி – பிப்ரவரி)
  ஈரோடு, எம்.சி.யூ.7  
  மதுரை    
  திருச்சி    
  தஞ்சாவூர்    
  தென் ஆற்காடு    
  ராமநாதபுரம்    
மத்தியகாலம் (தை-மாசி/ஜனவரி-பிப்ரவரி)
  ஈரோடு எம்.சி.யூ.7  
  மதுரை    
  திருச்சி    
  தஞ்சாவூர்    
  தென் ஆற்காடு    
  ராமநாதபுரம்    
மத்தியகாலம் (தை-மாசி / ஜனவரி-பிப்ரவரி)
  திருச்சி, எல்.ஆர்.ஏ.5166  
  தஞ்சாவூர்    
  தென்ஆற்காடு    
  ஈரோடு    
குளிர்கால மானாவாரி (புரட்டாசி - ஐப்பசி)
  மதுரை எம்.சி.யூ.10 எல்.ஆர்.ஏ.5166
    கே.10 கே.11
  திண்டுக்கல் பையூர்.1  
  இராமநாதபுரம் எம்.சி.யூ.10 எல்.ஆர்.ஏ.5166
    கே.10 கே.11
  திண்டுக்கல் பையூர்.1  
  இராமநாதபுரம் எம்.சி.யூ.10 எல்.ஆர்.ஏ.5166
  கடலூர் கே.11.   கே.9, கே.10, பையூர் 1
  திருநெல்வேலி எம்.சி.யூ.10 எல்.ஆர்.ஏ.5166
  விருதுநகர் பையூர்.1  
  தர்மபுரி    
  தூத்துக்குடி    
நெல்தரிசுப்பயிர்
  தஞ்சாவூர் ஏ.டி.டி.1  
  நாகப்பட்டினம்    
  திருச்சி    
  தென் ஆற்காடு    

பருத்தி விதை உற்பத்திக்கு உகந்த பருவங்கள்

விதை அளவு

பருத்தியின் விதை அளவானது இரகம், பஞ்சுடன் மற்றும் பஞ்சு நீக்கப்பட்ட விதைகள் முதலியவற்றைப் பொறுத்து மாறுபடும். விதையளவை கீழ்க்கண்ட அட்டவணை கொண்டு அறியலாம்.

இரகங்கள்/வீரிய ஒட்டு விதை அளவு (கிலோ / ஹெக்டேர்)
  பஞ்சு பஞ்சு பஞ்சு
                      உள்ளவை நீக்கியவை
இல்லாதவை      
எம்.சி.யூ.5, எம்.சி.யூ.9 5.00 7.50 -
எம்.சி.யூ.7, எம்.சி.யூ.11 - - -
சுவின் - - 6.00
ஜெயலட்சுமி. எச்.பி.224 3.75 2.50 -
டி.சி.எச்.பி.213 1.00 - -

பருத்தி இரகங்கள் மற்றும் வீரிய ஒட்டு விதை அளவு

தரமான விதைகளை தேர்ந்தெடுத்தல்

“வித்தின்றி விளைவில்லை” என்பது பழமொழி. வளமான, ஒரே சீரான வளர்ச்சியுடைய செடிகளைப் பெற தரமான பருத்தி விதைகளையே பயன்படுத்த வேண்டும். ஒரு வருடத்திற்கு மேல் பழையதாகி விட்ட விதைகளை உபயோகிப்பதை தவிர்த்தல் நல்லது. ஏனென்றால் ஒரு வருடத்திற்கு மேற்பட்ட விதைகளில் முளைப்புத்திறன் குறைந்து போகிறது. இவ்வாறு தேர்ந்தெடுத்த விதைகளின் தரத்தை உறுதி செய்து கொள்ள வேண்டும். அதற்காக கீழ் கண்ட முறையைப் பயன்படுத்தலாம்.

பஞ்சு நீக்கிய விதைகளை இரு மடங்கு தண்ணீரில் 3 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின் ஊறிய விதைகளை நிழலில் உலர்த்தி முன்பு இருந்த ஈரப்பதத்திற்கு உலர வைக்க வேண்டும். பின் திரும்பவும் உலர வைத்த விதைகளை நீரில் போட்டால் இறந்த விதைகள் மிதக்கும். இவ்வாறு மிதக்கும் விதைகளை நீக்கிவிட வேண்டும். அடியில் தங்கிய விதைகள் தரமான விதைகள் ஆகும். எவ்வாறு ஒரு குழந்தை பிறக்கும்போது உள்ள எடை பின்னால் உடல் நலத்தை சீரடையச் செய்கிறதோ அதே போல் அடர்த்தியான தரமான விதைகள் வளமான செடிகளைப் பெறுவதற்கு மூல காரணமாகும்.

விதை நேர்த்தி முறைகள்
அமில முறையில் பஞ்சு நீக்கம் செய்தல்

ஒரு கிலோ விதையினை பஞ்சு நீக்கம் செய்வதற்கு சுமார் 100 மி.லி. அடர் கந்தக அமிலம் தேவைப்படுகிறது. ஒரு உலர்ந்த பிளாஸ்டிக் வாளியில் ஒரு கிலோ பஞ்சு விதையை எடுத்து அதில் 100 மி.லி அடர் கந்தக அமிலத்தை ஒரே சீராக ஊற்ற வேண்டும். பின் ஒரு குச்சி கொண்டு 2 அல்லது 3 நிமிடங்களுக்கு விடாமல் ஒரே மாதிரியாக நன்கு கலக்கும் போது விதைகளின் மேல் உள்ள பஞ்சு நீங்கி விதைகள் காப்பிக்கொட்டை நிறத்திற்கு வரும். பின்னர் விதைகளை தண்ணீர்விட்டு 5 அல்லது 6 முறை அமிலம் நீங்கும்படி நன்கு கழுவ வேண்டும். கடைசி முறை கழுவும் போது நீரை நன்கு கலக்கி சிறிது நேரம் அப்படியே விட்டு விடவும். நீரின் மேலாக மிதக்கும், பொக்கு விதைகள், உடைந்த, பூச்சி தாக்குதலுக்கு ஆளான, மிகச்சிறிய, சரியாக முற்றாத விதைகள் முதலானவற்றை அரித்து எடுத்து விடவும். பின்பு அடியில் தங்கிய தரமான, நன்கு முற்றிய விதைகளை மட்டும் நிழலில் உலர்த்தி பின் வெய்யிலில் உலர்த்த வேண்டும். இப்படி மேலே மிதந்து நீக்கிய விதைகளில் சில/ நல்ல விதைகளும் இருக்கும். அவற்றை பொறுக்கி எடுத்து நல்ல விதைகளுடன் கலந்து கொள்ளலாம்.

அமில முறையில் பஞ்சு நிக்கம் செய்வதால் பல நன்மைகள் உள்ளன.
அமில முறையில் பஞ்சு நீக்கம் செய்வதால் பல நன்மைகள் உள்ளன.

  1. விதை மூலம் பரவக்கூடிய நோய் தாக்கும் கிருமிகள் அகற்றப்படுகின்றன.
  2. விதை உறையின் மேல் உள்ள காய்ப்புழுக்களின் முட்டைகள், புழு மற்றும் கூட்டுப்புழுக்கள் அழிக்கப்படுகின்றன.
  3. உடைந்த, முதிராத, வற்றி வதங்கிய விதைகள் பிரித்தெடுக்கப்படுகின்றன.
  4. விதை நேர்த்தி செய்வது எளிது.
  5. கையாளுதல் மற்றும் விதைப்பது எளிது.
  6. முளைப்புத்திறன் அதிகரித்துக் காணப்படும்
  7. சீரான முளைப்பு

விதை நேர்த்தி

இவ்வாறு பிரித்தெடுத்த விதைகளை நோய்களிலிருந்து பாதுகாத்திட விதை நேர்த்தி செய்வது மிக அவசியம். ஒரு கிலோவுக்கு 2 கிராம் பவிஸ்டின் அல்லது திராம் அல்லது காப்டான் பூஞ்சாணக் கொல்லியைக் கலந்து ஒரு நாள் வைத்திருந்து பின்னர் விதைகளை விதைக்கலாம்.

விதை நிலத்தை தயார் செய்தல்

விதை நிலத்தை மூன்று அல்லது நான்கு முறை நன்கு உழ வேண்டும். கடைசி உழவிற்கு முன் ஒரு ஹெக்டருக்கு நன்கு மக்கிய தொழு உரத்தை 12.5 டன் என்ற அளவில் நன்கு பரவலாக இட்டு உழ வேண்டும். பின் நிலத்தை மேடு பள்ளம் இல்லாமல் நன்கு சமப்படுத்த வேண்டும். இல்லாவிடில் நீர்ப்பாய்ச்சம் போது பள்ளங்களில் நீர் தேங்கி மேடுகளில் தண்ணீர் இல்லாமல் போவதால் பூ பிடிப்பதில் வித்தியாசம் ஏற்பட்டு விதை மகசூல் குறைந்து விடும். இவ்வாறு தயார் செய்த நிலத்தில் பருவத்திற்கு ஏற்றவாறு இரகங்களை தேர்ந்தெடுத்து கீழ்க்கண்டவாறு இடைவெளி விட்டு விதைக்க வேண்டும். விதைகளை விதைக்கும் போது 3 செ.மீ. ஆழத்தில் விதைக்க வேண்டும்.

இரகங்கள்/வீரிய ஒட்டு பாருக்கு பார்
செ.மீ.
செடிக்குச் செடி
செ.மீ.
எம்.சி.யூ.5, எம்.சி.யூ.9 75 30
எம்.சி.யூ.5வீ.டி, எம்.சி.யூ11,
எஸ்.வீ.பி.ஆர்.1,எல்.ஆ.ஏ.5166
ஜெயலட்சுமி, பி.சி.எச்.பி.213, 120 60
எச்.பி.224
சுவின் 90 45
எம்.சி.யூ. 7, ஏ.டி.டி.1 60 30

பருத்தி இரகங்கள், வீரிய ஒட்டு இரகங்களுக்கு ஏற்ற இடைவெளி

எவ்வாறு வளரும் குழந்தைகளுக்கு ஊட்டம் அவசியமோ அதே போல் நிலத்திற்கு உரமிடுதல் அவசியம். பருத்திக்குத் தேவையான உரஅளவு  கீழ் உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி உரம் இடுவதனால் செடிகள் நன்கு ஊட்டத்துடன் வளர்கின்றன.

உரமிடுதல்

இரகங்கள் / வீரிய ஒட்டு உரங்கள் (கிலோ/ஹெக்டர்)
தழை மணி சாம்பல்
எம்.சி.யூ.7 60 30 30
எம்.சி.யூ.5வீ.டீ, எம்.சி.யூ.9, 80 40 40
எம்.சி.யூ.11, சுவின்,
ஜெயலட்சுமி, பி.சி.எச்.பி.213,
எச்.பி.224
120 60 60

பருத்தி இரகங்கள்/வீரிய ஒட்டு இரகங்களும் உர அளவும்

மேற்கூறிய அட்டவணையிலுள்ள உரத்தினை கீழ் கண்டபடி பிரித்து இரகத்திற்கு ஏற்றவாறு இடவேண்டும்.

இரகங்கள்

உரத்தின் அளவு (கிலோ/ஹெக்டர்

  அடி உரம்(விதைத்த 18/20
நாட்கள் கழித்து)
முதல் மேல் உரம் (விதைத்த 40/45 நாட்கள் கழித்து) இரண்டாம் மேல் உரம்(விதைத்த 60/65 நாட்கள் கழித்து)
  சா சா சா
எம்.சி.யூ.7 30 30 30 30 - - - - -
எம்.சி.யூ.5வீ.டி                  
எம்.சி.யூ.9                  
சுவின்                  
எம்.சி.யூ.11 40 40 40 40 - - - - -
ஜெயலட்சுமி,                  
எச்.பி.224                  
டி.சி.எச்.பி.213 40 60 60 60 - - 40 - -

அட்டவணை 5:           பருத்தி இரகங்கள்/வீரிய ஒட்டு இரகங்களும் பிரித்து இடும் உர அளவுகளும்
குறிப்பு: விதைக்கும் முன் அடியுரம் இடமுடியாத சமயத்தில், விதைத்த 25 நாட்கள் கழித்து அடி உரத்தை இடலாம்.

களைக் கட்டுப்பாடு

களைகளை ஆரம்பத்திலிருந்தே கட்டுப்படுத்துவது மிகவும் அவசியம். இதற்காக விதைத்த, மூன்று நாட்களுக்குள் ஒரு எக்டேருக்கு 3.3 லி. பென்டிமெத்தாலின் அல்லது 2 லி.ப்ளுகுளோரலின் என்ற களைக் கொல்லியை மணலுடன் கலந்து தெளித்து விடவேண்டும். பின் 35 முதல் 40 நாட்களில் ஒரு கைக்களை எடுக்கவேண்டும். விதைத்த மூன்று நாட்களுக்குள் களைக்கொல்லி தெளிக்காவிட்டால் முதல் களையை 18 முதல் 20 நாட்களுக்குள் எடுக்கவேண்டும்.

பாடுவாசி செய்தல்

பாடுவாசி செய்வதற்கு விதைகளை நேரடியாக உபயோகிப்பதற்கு பதிலாக நாற்றுகளை நடவேண்டும். பருத்தியில் நாற்று நடுவதா என்று ஆச்சரியமாக உள்ளதா? ஆம் நிலத்தில் முதலில் விதைப்பு செய்யும்போதே பாடுவாசி செய்வதற்காக விதைகளை 15 செ.மீ. (நீளம்) 10 செ.மீ (அகலம்) அளவுள்ள 150 கேஜ் பாலிதீன் பைகளில் விதைக்க வேண்டும். பாலிதீன் பையின் அடிப்பாகத்தில் நுனிகளில் தண்ணீர் வடிய சிறிய துவாரங்கள் செய்யவும். பாலிதீன் பைகளில் ஒரு பங்கு மக்கிய தொழு உரம் மற்றும் மூன்று பங்கு மண் இரண்டையும் 1:3 என்ற விகிதத்தில் கலந்து நிரப்பி பின் விதைகளை நிலத்தில் நடும் போதே பைகளிலிலும் விதைத்து விடவேண்டும். இப்பைகளை நேரடியான வெய்யிலில் வைக்காமல் நிழலில் நெருக்கமாக வைத்து, பின் நீர் ஊற்றி பாதுகாக்க வேண்டும். இவ்வாறு பாதுகாத்த நாற்றுக்களை விதை நிலத்தில் பாடுவாசி செய்ய உபயோகிக்கலாம். பாடுவாசி செய்யப்படும் இடத்தில் பாலிதீன் பைகள் வைத்து கிழித்து எடுத்துவிட்டு பின் அதில் உள்ள மண்ணுடன் அப்படியே நடவேண்டும். விதைத்த 10 நாட்களுக்குள் பாடுவாசி செய்தல் வேண்டும்.

செடிகளை களைத்துவிடுதல்

விதைத்த 15 நாட்களுக்குள் செடிகளை களைத்து ஒரு குத்துக்கு ஒரு செடி என்ற அளவில் நன்கு செழிப்பாக வளர்ந்த செடியை விட்டு பிற செடிகளை அகற்றி விடவேண்டும்.

தரமான விதை உற்பத்தியில் கலவன்களை நீக்குதலின் முக்கியத்துவம்

சாதரணமாக பருத்திச் செடிகள் ஒரே சீரான உயரம் இல்லாமல் குட்டையாகவும், நெட்டையாகவும் இருப்பதை பார்த்திருப்பீர்கள். சில செடிகள் மிகவும் சீக்கிரமாகவே பூத்திருப்பதையும், சில செடிகள் தாமதமாக பூப்பதையும் நீங்கள் உங்கள் நிலத்திலேயே பார்திருப்பீர்கள். ஒரே இரகத்தை சேர்ந்த பயிராக இருந்தால் அந்த நிலத்தில் எப்படி வேறுபாடுகள் வந்திருக்க முடியும்? விதை உற்பத்தி செய்யப்படுகிற பருத்திப் பயிரில் ஏதோ ஒரு வேறு இனக்கலப்பு இருப்பதையே இது நமக்குத் தெரிவிக்கிறது அல்லவா? இதனால் நாம் உற்பத்தி செய்யும் பருத்தி இரகத்தில் இனத் தூய்மை மற்றும் பருத்தியின் தரமும் குறைந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நிலமானது விதை உற்பத்திக்கே தகுதியற்றதாக ஆகிவிடுகிறது.

மேலும் ஒரு சில களைகள் பயிருடன் போட்டி போட்டுக்கொண்டு வளர்ந்து அறுவடையின்போது விதைகளுடன் கலந்து விடுகிறது. இதனால் விதையின் சுத்தத் தன்மை மிகவும் பாதிக்கப்பட்டு தரம் குறைந்துவிடும். அதே போல் சில பூஞ்சாணங்கள் விதைகளைத் தாக்குவதால் விதையின் தரம் தாய்ச் செடியிலேயே குறைந்து விட அதிக வாய்ப்பு உள்ளது.

இவை யாவும் பருத்தி விதையின் இனத்தூய்மையையும், சுத்தத் தன்மையையும் முழுமையாகப் பராமரிக்க வேண்டியதன் அவசியத்தை நமக்கு நன்கு புலப்படுத்துகின்றன. இதை நாம் எப்படி செய்வது?

விதைக்காக பயிரிடப்பட்ட பருத்தியில் அந்தக் குறிப்பிட்ட இரகத்தின் குணாதிசயங்களிலிருந்து மாறுபட்டுத் தெரிகின்ற செடிகளையும், களைகளையும் மற்றும் நோய்வாய்ப்பட்ட செடிகளையும் தக்க தருணத்தில் அதாவது அவைகள் பூக்கும் தருணத்திற்கு முன்பே நீக்குதல் மூலம் இனக்கலப்பில்லாத சுத்தமான நல்ல விதைகளை நீங்களும் உற்பத்தி செய்ய முடியும்.

பயிரின் தருணமும் நீக்கப்படவேண்டிய கலவன்களும்

பயிரின் தருணம்

நீக்கப்பட வேண்டிய கலவன்கள்

பூக்கும் முன் அதிக உயரம் மற்றும் குட்டையான செடிகள், மாறுபட்ட இலைத் தண்டு, நிறம், மிகவும் சீக்கிரமாக பூக்கும் செடிகள் மற்றும் இலையின் வடிவம்.
பூக்கும் தருணம் மிகவும் கால தாமதமாக பூக்கும் செடிகள், மாறுபட்ட பூவின் நிறம் மகரந்தத்தூளின் நிறம். பூக்காம்பின் வடிவம். அல்லி வட்டத்திலுள்ள நிறப் புள்ளிகள்.
அறுவடைக்கு முன்பு காய்களின் வடிவம், நிறம், காய்களின் மூக்கு, காயிலுள்ள குழிகள்.

இலைவழி உரமும் விதைத்தரமும்

தரமான விதை உற்பத்திக்கு பயிரின் ஒவ்வொரு வளர்ச்சிப் பருவத்திலும் தக்க தொழில் நுட்பம் தேவைப்படுகிறது. எனவே பருத்தி விதைப் பயிருக்கு தேவையான உரம் இட்டால் மட்டும் போதாது. அதிக பருமனுள்ள வீரியமுள்ள விதைகளைப் பெற வேண்டுமானால் இலைவழி ஊட்டம் மிகவும் பயனுள்ளதாகிறது. பருத்தி விதை செடிகளுக்கு ஒரு சத டி.ஏ.பி உரத்தினை விதைத்த 70, 80 மற்றும் 90 வது நாட்களில் இலை வழி உரமாக தெளிக்க வேண்டும். இவ்வாறு தெளிப்பதால் விதைப்பிடிப்பு நன்றாகவும், விதை எடை அதிகமாகவும் இருக்கும். இதனால் விதை மகசூல் கணிசமாக உயர்கிறது.

டி.ஏ.பி. கரைசல் தயாரிக்கும் முறை

5 கிலோ டி.ஏ.பி உரத்தினை 25 லிட்டர் தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். பின் அடுத்த நாள் மேலாக தேங்கி இருக்கும் நீரை வடித்து பின் அதனை ஒரு ஹெக்டேருக்குத் தேவைப்படும் 475 லிட்டர் தண்ணீருடன் கலந்து அதிகாலையில் தெளிக்க வேண்டும்.

நுண்ணூட்டக் குறைபாடு
         
தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல்சத்து, சுண்ணாம்புச்சத்து, கந்தகச் சத்து மற்றும் தாமிரச் சத்து குறைபாடு இருப்பின் அவற்றைக்கண்டறிந்து இலை வழி மூலம் ஏற்ற உரங்களைத் தெளித்து நிவர்த்தி செய்யலாம்.

பார்களை சீராக்குதல்

யூரியாவை மேலுரமாக இட்ட பின் பார்களை சீராக்கி நன்கு மண் அணைத்துவிடவேண்டும்.

பூ மற்றும் பிஞ்சு உதிர்வதை தடுக்கும் முறை

பருத்தியில் பூ மற்றும் இளம் பருத்திக்காய் பிஞ்சுகள் உதிர்வது ஒரு பெரிய பிரச்சனையாகும். இதனை தடுப்பதற்கு 40 பி.பி.எம். நாப்தலின் அசிடிக் ஆசிட் என்ற ஊக்கியை இரண்டு முறை தெளிக்க வேண்டும். முதலில் பூ பூக்கும் தருணத்திலும், இரண்டாம் முறை முதல் தெளிப்பிலிருந்து ஒரு மாதம் கழித்தும் தெளிக்க வேண்டும்.

நாப்தலின் அசிடிக் ஆசிட் கரைசல் தயாரிக்கும் முறை
         
40 மில்லிகிராம் நாப்தலின் அசிடிக் ஆசிட் ஊக்கியை ஒரு லிட்டர் தண்ணீரில் கரைக்க வேண்டும்.

100 பி.பி.எம் போரிக் அமிலத்தை (அதாவது 100 மி. கிராம் போரிக் அமிலத்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கரைக்க வேண்டும். விதைத்தலிலிருந்து 75 மற்றும் 90 நாட்கள் கழித்து தெளிப்பதன் மூலம் மகரந்தத்தூள்களின் உற்பத்தியையும் மற்றும் வாழ்நாளையும் அதிகரிக்கச் செய்யலாம்.

நுனியரும்பு கிள்ளுதல்
         
நுனியரும்பு கிள்ளுதல் என்பத பருத்தியில் கையாள வேண்டிய ஒரு முக்கிய தொழில் நுட்பம் ஆகும். சில இரகங்களில் பயிர்கள் அதிக உயரம் வளரும்போது பூ பிடிக்கும் திறன் பாதிக்கப்பட்டு காய்கள் பிடிப்பது வெகுவாக குறைந்து விடும். இத்தகைய இரகங்களில் செடியின் வளரும் நுனியினை கிள்ளி விடுவதால் உயரம் தடைப்பட்டு பக்க கிளைகள் அதிகம் வளரும். அதனால் பூ மற்றும் காய் பிடிப்பு அதிகரிக்கும். எனவே, கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணைப்படி இரகங்ளுக்கு ஏற்றவாறு நுனிகளை கிள்ளி விட வேண்டும்.

வ.எண் இரகங்கள் விதைத்ததிலிருந்து (நாட்கள்) இலைக்கணுவின் எண்ணிக்கை
1. எம்.சி.யூ.5 70-80 15
  எம்.சி.யூ.9 70-80 15
  எம்.சி.யூ.11 70-80 15
2. சுவின், ஜெயலட்சுமி
டி.சி.எச்.பி.213
90 20

நீர் நிர்வாகம்
         
பருத்தி விதை உற்பத்திக்கு நீர் நிர்வாகத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். நீர் பாசனம் எனப்படுவது நிலத்தின் தன்மையைப் பொருத்தது. களிமண் பூமியானால் இடைக்காலம் அதிகமாகவும், மண் பாங்கான பூமியானால் அடிக்கடியும் தண்ணீர் கட்ட வேண்டும். விதைத்தவுடன் நீர்ப்பாய்ச்சுதல் அவசியம். பின் உயிர் தண்ணீர் கட்டவேண்டும் மற்றும் பயிரின் முக்கிய வளர்ச்சிப் பருவங்களில் நீர் நிர்வாகத்தை திறம்பட செய்ய வேண்டும். இதனால் வேரின் வளர்ச்சி கூடி செடிகள் நன்கு வளரும். பூ, பிஞ்சுகளாக இருந்த காய்கள் முதிர்ச்சியடையும் போது பருத்திப் பயிருக்கு அதிக தண்ணீர் தேவை. ஆரம்ப காலத்திலிருந்து இந்நிலை எய்தும் வரை ஒரு தண்ணீராக கட்டுதலும், பூவும், பிஞ்சுமாக இருக்கும் போது கட்டத்தண்ணீராகக் கட்டுதலும் சிறந்த முறை. பருத்தி எடுப்புக்கு முன்னால் தண்ணீர் கட்டுவது கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டும். ஏனெனில் இம்மாதிரி செய்தால் பருத்தியின் தரம் குறையும். மண்ணின் ஈரப்பதம் 40/50 சதமாக இருந்து கொண்டே இருக்கும் வரை நல்ல பலனை எதிர் பார்க்க முடியும். எக்காரணத்தை கொண்டும் கீழ்க்கண்ட வளர்ச்சிப் பருவங்களில் (அட்டவணை 7) நீர் தட்டுப்பாடில்லாமல் கவனித்து வரவேண்டும். இல்லையேல் விதைகளின் எடை குறைந்து மகசூல் பாதிக்கப்படும்.

வளர்ச்சிப் பருவங்கள் விதைத்ததிலிருந்து (நாட்கள்)
விதைப்பிற்குப் பின் 0
உயிர்த் தண்ணீர்/முளைப்புத் தண்ணீர் 3
பூப்பூக்கும் வரை 20-21
  35-36
பூக்கும் தருணம் 48
  60
  70
  84
  96
முதிர்ச்சிப் பருவம் 108
  120
  130
  140

பருத்தியின் வளர்ச்சிப் பருவங்களும் நீர் நிர்வாகமும்           
குறிப்பு:150 நாட்களுக்கு மேல் நீர் கட்டுவதை நிறுத்திவிட வேண்டும்.

அறுவடைக்கு ஏற்ற தருணம்

பருத்திக் காய்களை சரியான முதிர்ச்சியில் பறிக்க வேண்டும். தக்க தருணத்திற்கு முன்பே பறித்துவிட்டால் விதைகள் சுருங்கி சிறுத்து முளைப்புத்திறனில் பாதிப்பு ஏற்படும். கால தாமதமாகி, அதாவது நன்கு வெடித்தவுடன் பறித்தால் சுற்றுப்புற சூழ்நிலையினால் விதையில் உள்ள எண்ணெய் மற்றும் விதைகளின் முளைப்புத்திறன் பாதிக்கப்படுகிறது. பருத்தி மகரந்தச் சேர்க்கை நடைபெற்ற 45-55 நாட்களில் முதிர்ச்சி அடைந்துவிடும்.

ஒவ்வொரு வார இடைவெளியில், நான்கு அல்லது ஐந்து முறை நன்கு வெடித்த பருத்தி காய்களை பறிக்க வேண்டும். ஒரு வாரத்திற்கும் மேல் காலதாமதம் செய்தால் விதையின் தரம் பாதிக்கப்படுகிறது. குளிர்காலப் பயிரில் முதல் ஐந்து பறிப்புகள் மற்றும் கோடைக்கால பயிரில் முதல் நான்கு பறிப்புகளை மட்டுமே விதைப்பருத்திக்காக உபயோகப்படுத்த வேண்டும். ஏனெனில், அதற்குப்பின் பறித்த காய்களின் விதைகள் தரம் குறைந்து காணப்படும். பறித்த பருத்தி காய்களை உடனேயே நிழலில் 2-3 நாட்கள் உலர்த்த வேண்டும். வெயிலில் உலர்த்தக்கூடாது. பருத்தி காய்களை அதிகாலை வேளையில் பறித்தல் நல்லது. ஏனெனில், இலைச்சருகுகள், தூசி, துப்பு முதலியவை ஒட்டாமல் இருக்கும். பறிக்கும் போது பருத்தியை மட்டுமே பறிக்க வேண்டும்.

விதைத்தரம் பராமரிக்க சில வழிமுறைகள்

நிறம் மாறிய, கொட்டுப்பருத்தி, நன்றாக விரியாத பருத்தி, நோய் மற்றும் பூஞ்சாணம் தாக்கிய காய்களை நீக்கி விட வேண்டும். இல்லையென்றால் பருத்தியின் விற்பனை விலை குறையும், மற்ற நல்ல காய்களையும் சேதமாக்கும். இவ்வாறு பிரித்தெடுத்த பின் நிழலில் உலர்த்த வேண்டும். மேலும் காய்ந்த மணலைச் சற்று உயரமாக (அதாவது ஒரு அங்குல கனத்திற்கு) கொட்டி அதன் மேல் பருத்தியை காய வைப்பது நல்லது.

காயில் இருந்து விதையைப் பிரித்தெடுத்தல்
         
பருத்தி காய்களில் இருந்து விதைகளைப் பிரித்தெடுத்து அதன் தரத்தினை மேம்படுத்துதல் அவசியம். விதைகளை காயப்படாமலும் சரியான முறையில் காய வைத்தும் பாதுகாக்க வேண்டும்.

விதைக்காயமின்றி விதைகளைப் பிரித்தெடுத்தல்
         
பருத்தி காய்களில் இருந்து விதைகளை பிரித்தெடுக்கும்போது விதையின் ஈரப்பதம் 15 முதல் 18 சதம் இருத்தல் வேண்டும். இந்த ஈரப்பதமானது மெத்தைப்போல் செய்யப்பட்டு விதைகளுக்கு உள் அல்லது வெளிக்காயங்கள் ஏற்படாதவாறு பாதுகாக்கிறது. ஈரப்பதம் மேற்கூறிய அளவிற்கு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருப்பின் விதைகளில் காயம் ஏற்படுகிறது. இந்த விதைக் காயங்களினால் விதையின் தரம் விரைவில் குறைவதோடு பூஞ்சாணங்களின் தாக்குதலுக்கு ஏதுவாகிறது.

விதையின் சரியான ஈரப்பதம் ஒவ்வொரு செயலின்போதும் மிக முக்கியமாகிறது. பஞ்சு நீக்கம் செய்யும் இயந்திரத்தை உபயோகிக்கும்போது உருளையின் வேகம், உருளைக்கும் கட்டுக்கும் உள்ள இடைவெளி ஆகியவற்றை தக்க முறையில் சரி செய்து உபயோகிக்க வேண்டும். அப்பொழுதுதான் விதைகளை காயங்கள் ஏற்படுவதிலிருந்து தடுக்க முடியும்.

பஞ்சு நீக்கும் இயந்திரத்தில் 21 உருளைகளுக்கு மேல் இருக்கக் கூடாது. இயந்திரம் வெப்பமடைவதை முடிந்த வரை தவிர்க்க வேண்டும். எனவே தொடர்ந்து இயந்திரம் உபயோகிப்பதை தவிர்த்து, சிறிது இடைவெளி விட்டு பஞ்சு நீக்கம் செய்யவும். பஞ்சு நீக்கம் செய்யும் போது ஒரு மணி நேரத்திற்கு 4.5 முதல் 5.5 கிலோ பஞ்சு பிரித்தெடுக்கும்படி இயந்திரத்தை இயக்க வேண்டும். இப்படிச்செய்வதால் விதைகளில் காயங்கள் ஏற்படுவதை வெகுவாகத் தவிர்க்கலாம்.

முக்கிய குறிப்பு: எக்காரணம் கொண்டும் ஒரு முறை பஞ்சு நீக்கம் செய்த விதைகளை இரண்டாம் முறை பஞ்சு நீக்கம் செய்ய உட்படுத்தக்கூடாது.

காய வைத்தல்
         
பிரித்தெடுத்த விதைகளை உடனே முறைப்படி உலர வைக்காவிட்டால் விதைகள் சூடேறி  அவற்றின் முளைப்புத்திறன் குறைய ஏதுவாகும். விதைகளை வெய்யிலில் உலர்த்தும் போது 8 முதல் 12 மணி வரையிலும் பின் மாலை 3 முதல் 5 மணி வரையிலும் உலர்த்துதல் வேண்டும். 12 மணி முதல் 3 மணி வரை உள்ள காலத்தை தவிர்ப்பது அவசியம். இக்கால நேரத்தில் சூரியனின் புற ஊதாக் கதிர்களின் வீச்சு அதிகமாக இருப்பதினாலும் வெப்பநிலை உச்சத்தில் உள்ளதாலும் விதையின் தரம் மிகவும் பாதிக்கப்படும்.

விதை சுத்திகரிப்பு
         
விதை சுத்திகரிப்பின் போது முற்றாத, உடைந்த, கெட்டுப்போன விதைகளையும், விதையுடன் கலந்திருக்கும் மற்ற விதைகள், கல், மண், தூசி முதலியவற்றையும் அகற்றிவிட வேண்டும். பின்பு, விதைகளின் உருவம், பரிமாணம், கன அடர்த்தி முதலியவற்றை அடிப்படையாகக் கொண்டு விதைகளின் தரத்தை உயர்த்தலாம். பருத்தி விதையின் அளவைக் கொண்டு தரம் பிரிப்பதைக் காட்டிலும் விதையின் கன அடர்த்தி கொண்டு தரம் பிரித்தல் அதிக பலனைத் தரும்.

விதை சுத்திகரிப்பின் போது முக்கியமாக கவனிக்க வேண்டியவைகள்

உலர்த்தும் கருவிகள், சுத்திகரிப்பு இயந்திரங்கள், மருந்து கலக்கும் இயந்திரங்கள் போன்றவைகளை ஒரு இரகத்திற்கு பயன்படுத்திவிட்டு வேறு இரகத்திற்கு மாற்றும் பொழுது நன்கு சுத்தம் செய்ய வேண்டும். இல்லாவிடின் விதைக் கலப்பு நேர்ந்து விதைகளின் இனத்தூய்மை பாதிக்கப்படும். எனவே, விதை சுத்திகரிப்பு முறைகளில் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும்.

விதைச் சேமிப்பு

விதை உற்பத்தி செய்வதில் எவ்வளவு கவனம் தேவையோ அதே அளவு கவனம் விதைகளை அடுத்த விதைப்புப் பருவம் வரை சேமித்து வைப்பதிலும் தேவைப்படுகிறது.

விதையின் ஈரப்பதம்

விதையின் ஈரப்பதத்தைப் பொறுத்து விதையின் தரம் மாறுபடுகிறது. விதையின் ஈரப்பதம் அதிகமாக இருந்தால் விதைகள் முளைப்புத்திறனை விரைவில் இழக்கின்றன. குறைந்த கால சேமிப்புக்கு விதைகளை 10 சத ஈரப்பதத்திற்கு காய வைத்து துணிப்பைகளிலோ அல்லது சாக்குப் பைகளிலோ நிறைத்து சேமியுங்கள். நீண்ட காலம் விதைகளை சேமிக்க விதைகளின் ஈரப்பதத்தை 6 சத அளவிற்குக் குறைத்து காற்றுப்புகாத பாலித்தீன் பைகளில் சேமித்து வையுங்கள்.

விதை நேர்த்தி

விதைகளை சேமிப்புக்கு முன் பூசணக் கொல்லி கொண்டு விதை நேர்த்தி செய்யுங்கள். இதற்கு திராம் அல்லது கேப்டான் மருந்தை ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் என்ற விகிதத்தில் கலந்து வையுங்கள். இதற்குப் பதிலாக விதைகளை குளோரினேற்றம் என்றால் கால்சியம் ஆக்ஸி குளோரைடு (அதாவது பிளீச்சிங் பவுடர்) என்ற இரசாயன பொருளை கால்சியம் கார்பனேட் என்ற பொருளுடன் சம விகிதத்தில் கலந்து காற்றுப் புகா பாட்டிலில் ஒரு வாரம் அடைத்து வைத்திருந்து பின்னர் அந்தக் கலவையிலிருந்து ஒரு கிலோ விதைக்கு 5 கிராம் என்ற அளவில் எடுத்து கலந்து பின்பு சேமியுங்கள். குளோரினேற்றம் ஒரு சுற்றுப்புற சூழல் மாசுபடாத விதை நேர்த்தி முறையாகும்.

விதை சேமிப்புப் பைகள்
         
விதைகள் காற்றிலுள்ள ஈரத்தை கிரகிக்கும் தன்மை உடையவை என்பது உங்களுக்கு தெரிந்ததே. ஆகையால் காற்றின் ஈரத்தன்மை அதிகமுள்ள கடலோரப் பகுதிகள் மற்றும் நதி கரைகளில் விதைகளை சேமித்திட ஈரக்காற்று புகா பைகளையே உபயோகிக்க வேண்டும். ஈரக்காற்று புகா பைகள் எவை? 700 அடர்வுள்ள பாலிதீன் பைகளே காற்று புகாத பைகள். எப்போதும் புதிய பைகளையே உபயோகப்படுத்துங்கள்.

விதைகளை, கிடங்குகளில் சேமித்து வைக்கும் பொழுது முன்னெச்சரிக்கையாக இருங்கள். சாக்குப் பைகளை ஒன்றின் மேல் ஒன்றாக வைக்கும்பொழுது 6 அல்லது 7 வரிசைக்கு மேல் அடுக்க வேண்டாம். ஏனென்றால், மேலே உள்ள மூட்டைகளின் பாரம் அடியிலுள்ள மூட்டைகளைப் போட்டு அழுத்துவதால் அடி மூட்டையில் உள்ள விதைகளின் முளைப்புத் திறன் பாதிக்க வாய்ப்பு உள்ளது.

விதை மூட்டைகளை வெறும் தரையின் மீது அடுக்கி வைப்பதைத் தவிர்க்க வேண்டும். அதேபோல் சுவற்றின் மீது சாய்த்து அடுக்குதலையும் தவிர்க்க வேண்டும். இதனால் தரை மற்றும் சுவற்றில் உள்ள ஈரப்பதம் விதைகளில் ஊடுருவி அவற்றை பாதிப்பதைத் தடுக்கலாம். விதை மூட்டைகளை மரக்கட்டைகளின்மீது அல்லது தார்பாய்களின்மீது அடுக்கி வையுங்கள்.

விதை சேமிப்புக் கிடங்கு பராமரிப்பு
         
சேமிப்புக் கிடங்கை பூச்சிகள் இல்லாமல் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். விதை சேமிப்புக் காலத்தில் விதைகளை பூச்சிகள் தாக்கினால் புகை மூட்டம் போடலாம். காற்று புகாமல் விதை கிடங்கை நன்கு அடைத்து விட்டு, செல்பாஸ் (அலுமினியம் பாஸ்பைடு) நச்சு மாத்திரைகளை ஒரு கன மீட்டருக்கு ஒரு மாத்திரை என்ற அளவில் விதை கிடங்கினுள்ளே 3 நாட்கள் வைத்து விடுங்கள். மூன்று நாட்களுக்குப் பின்னர் நச்சுக்காற்றை வெளியேற்ற நல்ல காற்றோட்டம் இருக்கும்படி விதைக்கிடங்கை திறந்து வையுங்கள். இவ்வாறு செய்வதால் விதைகள் பூச்சி தாக்குதலிலிருந்து பாதுகாக்கப்படும்.

இடைக்கால விதை நேர்த்தி
         
உங்கள் தேவைக்கென சேமித்து வைத்திருக்கும் குறைந்த அளவு விதைகளை 5 அல்லது 6 மாத கால சேமிப்புக்குப் பின் “ஊறவைத்து உலர வைக்கும் முறை” மூலம் விதை நேர்த்தி செய்யுங்கள். இதற்கு டை - சோடியம் பாஸ்பேட் என்ற இரசாயன மருந்தை 100 லிட்டர் நீருக்கு 3.6 கிராம் என்ற விகிதத்தில் கரைத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த கரைசலில் (ஒரு பங்கு விதைக்கு இரு பங்கு கரைசல்) விதைகளை 3 மணி நேரம் ஊற வைத்து பின்பு பழைய ஈரப்பதத்திற்கு காய வைத்து விடுங்கள். இவ்வாறு செய்வதால் விதைகளின் சேமிப்புத்திறன் அதிகமாகிறது.

விதைச் சான்றளிப்பு

தரமான விதைகள் என்பது தன்னுடைய இனத்தூய்மையில் சிறிதும் குன்றாமலும், களைவிதை பிற இரக விதை, நோய்தாக்கிய விதை ஆகியவை இல்லாமலும் இருக்கும். மேலும் தரமான விதை அதிக வீரியத்துடனும், முளைப்புத் தன்மையும் கொண்டிருக்கும். இதனால் விவசாயிகள் தரமான விதைகளை பயன்படுத்தும் போது வயல்களில் அதிக இடைவெளி இல்லாமல் சரியான செடிகளின் எண்ணிக்கை பராமரிக்க முடியும். அதிக வீரித்துடன் வளர்வதால் நோய் மற்றும் பூச்சி எதிர்ப்பு தன்மை கொண்டிருக்கும். எனவே, விவசாயிகள் தரமான விதைகளை பயன்படுத்தும் போது மூட்டுவழி செலவுகளை குறைக்க முடியும்.

விதை உற்பத்தி தரக்கட்டுப்பாட்டுக்கென்று சட்டப்பூர்வமாக ஏற்படுத்தப்பட்ட முறையே விதைச் சான்றளிப்பாகும். இதை “தரமான விதை விநியோகிப்பின் பாதுகாவலன்” என்ற கூட சொல்லாம். மிக உன்னதமான பயிர் இரகங்களின் விதைகளை மிகுந்த இனத்தூய்மையும், அதிக சுத்தத்தன்மையும், மிகுந்த முளைப்புத் திறனும் உள்ள விதைகளாக விவசாயிகளுக்கு கிடைக்கச் செய்வதே விதைச் சான்றளிப்பின் முக்கிய நோக்கமாகும்.

விதைச் சான்று பல்வேறு நிலைகளில் செய்யப்படுகின்றது. விதைப்புக்கு உபயோகிக்கும் விதைகள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திடமிருந்து வாங்கப்பட்டுள்ளதா என்பது முதல், விதைப் பயிருக்கு உரிய தனிமைப்படுத்தும் தூரம், பயிர் வளர்ச்சிப் பருவம் பூக்கும் தருணம், அறுவடை சமயம், விதைச் சுத்திகரிப்பு, மூட்டை பிடித்தல் முதலியவை சரியாக உள்ளனவா என்பது வரை ஆய்வு செய்யப்படுகிறது. மேலும், விதைகளை முளைப்புச் சோதனைக்கு உட்படுத்தி சோதனை முடிவுகளைக் கொண்டு சான்று அட்டைகள் வழங்கப்படுகின்றன. இவ்விதமாக விதை உற்பத்தியின் பல்வேறு நிலைகளில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

ஆய்வின் போது வயல் தரம் மற்றும் விதைத் தரம் குறித்து பரிந்துரைக்கப்பட்ட தரம் இருந்தால் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்ட விதைகளுக்கு சான்றளிக்கப்பட்டு அவை விற்பனைக்குத் தயாராகின்றன.
         
எனவே, விதை உற்பத்திக்கான வயல்களை விதைச் சான்றளிப்புக்கு உட்படுத்துவதன் மூலம் இனக்கலப்பற்ற, சுத்தத்தன்மை உடைய நல்ல தரமான விதைகளை உற்பத்தி செய்ய முடியும். நம் தமிழகத்தில் அரசின் விதைச் சான்றளிப்புத் துறை நன்கு செயல்பட்டு வருகின்றது.

சான்றுவிதை உற்பத்தி செய்யும்போது உற்பத்தி செய்த விதைகளில் கீழ்க்கண்ட விதைத்தரம் இருத்தல் அவசியம்

வயல் தரம்

கலவன்கள் (அதிக பட்சம்)
  1.  

0.2 சதம்

விதைத் தரம்

சுத்தமான விதைகள் (குறைந்த பட்சம்)
  1.  
98 சதம்
தூசி (அதிக பட்சம்)
  1.  
2 சதம்
பிற இனப்பயிர் விதைகள் (அதிக பட்சம்)
  1.  
10/ கிலோ
களை விதைகள் (அதிக பட்சம்)
  1.  
10/ கிலோ
முளைப்புத் திறன் ( குறைந்த பட்சம்)
  1.  
65 சதம்
ஈரத்தன்மை (அதிக பட்சம்)
  1.  
 
காற்றுப்புகாத பை
  1.  
6.0 சதம்
காற்றுப்புகும் பை
  1.  
10.0 சதம்

தகவலுக்கு
பேராசிரிய மற்றும் தலைவர்,
விதை மையம்
தமழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்
கோயமுத்தூர்-641003.
தொலைபேசி எண்:0422-661232.
மின்னஞ்சல்: seedunit@tnau.ac.in

 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016.

Fodder Cholam