Seed Certification
பெரிய வெங்காயம்

பெரிய வெங்காயம் - தரமான விதை உற்பத்தி முறைகள்

Veg50

விதை உற்பத்திக்கு ஏற்ற நிலத் தேர்வு

நிலத் தேர்வு செய்யும் போது முந்தைய பருவத்தில் வேறு இரக வெங்காயம் பயரிடப்படாத வயலைத் தேர்ந்தெடுத்தல் மிக அவசியம். இவ்வாறு செய்வதால் தான் தோன்றிப் பயிர்களால் ஏற்படும் இனக் கலப்பை தவிர்க்கலாம்.

இனத் தூய்மையை பராமரிக்க பயிர் விலகு தூரம்

வெங்காய இரகங்களில் வெங்காயத்தின் நிறம் மாறுபட்டிருந்தாலும், படத்தில் காண்பது போல தேனீக்கள் மற்றும் வேறு பல நன்மை செய்யும் பூச்சிகளால் அயல் மகரந்தச் சேர்க்கை ஏற்படுவதாலும் வெங்காயத்தில் இனத்தூய்மையை பாதுகாப்பது மிக அவசியம். எனவே, இப்பயிர்களில் பயிரிடப்படும் விதைப்பயிரானது பிற இரக வயல்களிலிருந்து குறைந்தது 500 மீட்டர் தூரம் தனித்துப் பயிரிட வேண்டும். இவ்வாறு தனித்துப் பயிரிடுவதால் இரகங்களின் பாரம்பரியத் தன்மை கெடாமல் பாதுகாக்க முடியும்.

விதை உற்பத்திக்கு ஏற்ற பருவம்

“பருவத்தே பயிர் செய்” என்பது பழமொழி. விதைப்பயிருக்கு இது மிகவும் பொருந்தும். விதைகளின் தரம் அது பயிரிடப்படும் சூழ்நிலைக்கு ஏற்ப அமைகிறது. வெங்காய விதை உற்பத்தி மற்ற காய்கறி பயிர்கள் விதை உற்பத்தியில் இருந்து மாறுபட்டது. ஏனெனில், வெங்காய விதை உற்பத்தி இரண்டு வெவ்வேறு பருவங்களில் செய்ய வேண்டியுள்ளது. ஒரு பருவத்தில் வெங்காயம் உற்பத்தி செய்யப்பட்டு, அவ்வெங்காயங்கள் மறுபடியும் நடவு செய்யப்பட்டு உண்மையான விதைகள் உற்பத்தி செய்யப்படுகின்றது. நாம் தேர்ந்தெடுக்கும் முதல் பருவம், நன்கு திரண்ட வளர்ச்சியுடன் வாழிப்பான நல்ல வெங்காயங்கள் உற்பத்திக்கு ஏற்றதாக இருக்க வேண்டும். இரண்டாவது பருவம் நட்ட வெங்காயங்கள் மேலும் வளர்ச்சி பெற்று பூக்களை உருவாக்கவும் அப்பூக்களில் தரமான விதைகள் உருவாகவும் மிகவும் ஏற்றதாக இருக்கவேண்டும். இவ்விரு நிலைகளை கருத்தில் கொண்டு பார்க்கும் போது ஜ¤ன் - செப்டம்பர் வெங்காய உற்பத்திக்கும் அக்டோபர் - மார்ச் வெங்காய விதை உற்பத்திக்கும் ஏற்ற பருவங்களாகும். இப்பயிரில் பருவங்கள் மாறி சாகுபடி செய்தால் உணமையான விதைகள் உற்பத்தி செய்வது மிகவும் கடினம்.

வளமான நாற்றுக்களைப் பெறும் வழிமுறைகள்

“விளையும் பயிர் முளையிலே” என்ற பழமொழிக்கு ஏற்ற நல்ல தரமான விதைகளைத் தேர்ந்தெடுப்பதுடன் அவ்விதைகளை நல்ல வீரியமுள்ள நரற்றுக்களாக உண்டாக்குவது முக்கியம். நடவு வயல்களில் நல்ல வீரியமுள்ள நாற்றுக்களை நடுவதால் அந்நாற்றுக்கள் நன்றாக தழைத்து பூச்சி மற்றும் நோய்களின் தாக்குதல்களை எதிர்த்து வளர உதவுகிறது. அத்துடன் நாற்றுக்கள் நடவு வயல்களில் அடியுயரமாக இடப்பட்ட உரங்களை வெகுவாக பயன்படுத்தி வளர உதவுகின்றன. நாற்றக்களை வீரியத்துடன் நடுவது நடவு வயல் பராமரிப்பில் அதிக நாற்றுக்கள் வீணாகாமல் தழைக்க ஏதுவாகிறது. அதனால், நாற்றுக்களை வீரியத்துடன் வளரச் செய்ய நாற்றங்கால் பராமரிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

விதை தேர்ந்தெடுத்தலின் நன்மை
         
வளமை நாற்றுக்களைப் பெற தரமான வெங்காய விதையை பயன்படுத்த வேண்டும். “விளையும் பயிர் முளையிலே” என்பது பழமொழி. அதுபோல நாம் பயிரிடும் பயிர் மகசூல் விதையின் தரத்தை பொறுத்தே அமையும். விதை உற்பத்தி செய்யும் பயிரில் மகசூலுடன் இரகத்தினுடைய பாரம்பரிய குணாதிசயங்களையும் பராமரிப்பது மிக முக்கியம். அது விதைக்கும் விதையின் தரத்தை பொறுத்தே இருக்கும். எனவே விதை உற்பத்தி பயிர் விதைப்பிற்கு தேர்ந்தெடுக்கும் விதைகள் வல்லுனர் அல்லது ஆதார நிலை விதைகளாக இருப்பது மிக முக்கியம்.

நாற்றங்கால் தேர்வு மற்றும் பராமரிப்பு

நாற்றங்கால் அமைப்பு

நல்ல தரமான விதைகளை பெற்ற பின் நல்ல நாற்றுக்களை தயாரிப்பது மிக முக்கியம். ஆதலால் நல்ல வீரியமுள்ள நாற்றுக்களைப் பெற நன்கு பண்படுத்திய ஒரு சென்ட் நிலத்திற்கு 200 கிலோ வரை மக்கிய தொழு உரம் அல்லது கம்போஸ்ட் போட்டு படத்தில் உள்ளது போல அமைத்த மேட்டுப் பாத்திகளில் நாற்றுவிட வேண்டும்.

விதைப்பு

Veg52

Veg53

         
ஒரு ஏக்கருக்கு தேவையான 2.5 - 3 கிலோ விதையை விதைக்க 3 சென்ட் நாற்றங்காலில் விதைப்பு போதுமானது. மேட்டுப்பாத்திகளில் படத்தில் உள்ளது போல 10 செ.மீ இடைவெளியில் கோடுகள் போட்டு விதைகளை பரவலாக விதைக்க வேண்டும். பின் கோடுகளில் போட்ட விதைகளை மணல் அல்லது நாற்றங்கால் மண் கொண்டு மூடி விட வேண்டும். அதன் பிறகு மேட்டுப்பாத்திகள் நன்கு மூழ்கும் அளவிற்கு நீர் பாய்ச்ச வேண்டும். நாற்றங்கால் பராமரிப்பில் பெண்களின் பங்கு மிக அதிகம்.

நாற்றங்காலுக்கு உரம் இடுதல்

நாற்றங்காலுக்கும் உரம் அவசியம். இதற்கு ஒரு சென்ட் நாற்றங்காலுக்கு இரண்டு கிலோ டி.ஏ.பி உரம் இடுவதால் நாற்றுகள் நன்கு ஊட்டச்சத்துடன் வளர்கின்றன. மேலும் நாற்றுக்களைப் பிடுங்கும் போதும் வேர் அறுபடாமல் சுலபமாக வரும். டி.ஏ.பி. உரம் இல்லாவிட்டால், 6 கிலோ யூரியாவும் 12 கிலோ சூப்பர் பாஸ்பேட்டும் சேர்த்து இடலாம். வேர் அறுபடாத நாற்றுக்களை வயலில் நடும்போது எளிதில் அவை நிலத்தில் பிடிப்பு கொள்கின்றன.  இதைத்தான் கிராமங்களில் பச்சை திரும்பி விட்டது என்று கூறுகிறோம்.

நாற்றின் வயது

விதைப் பயிர் செழித்து வளர்வதில் நாற்றின் வயது முக்கிய பங்கு வகிக்கிறது. வயது குறைந்த நாற்றையோ  அல்லது அதிகமான நாற்றையோ நடுவதால் மகசூல் குறைகின்றது. வெங்காய நாற்றுக்களை, நாற்றுவிட்ட 35 - 40 நாட்களில் எடுத்து நட வேண்டும்.

தரமான வெங்காயம் உற்பத்தி செய்தல்

வெங்காய விதை உற்பத்தியில் முதல் பருவத்தில் தரமான வெங்காயம் உற்பத்தி செய்வது மிக முக்கியம். நாம் உற்பத்தி செய்யும் வெங்காயத்தைப் பொறுத்தே விதை உற்பத்தித் திறன் மற்றும் தரம் அமையும். எனவே, தரமான வெங்ாய உற்பத்திக்கான தொழில் நுட்பங்களை அறிந்து கொள்ளலாம்.

நடவு பாத்தி தயார் செய்தல் மற்றும் பராமரிப்பு

நடவு செய்ய தேர்ந்தெடுத்த நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை நன்கு உழுது விடவும். கடைசி உழவில் ஒரு ஏக்கருக்கு 20 வண்டி மக்கிய தொழுவுரத்தை போட்டு நன்கு உழுது விடவும். அதற்கு பின் நடவு பாத்திகளில் 20 செ.மீ இடைவெளிகளில் பார்கள் அமைத்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு பார்கள் அமைத்த பின்பு, பார்களின் கீழ் பகுதியில் யூரியா, சூப்பர் பாஸ்பேட் மற்றும் பொட்டாஷ் உரங்களை அடியுரமாக இடவேண்டும். நடவு பாத்திகளில் அடியுரம் இடுவது செடிகளின் முன் பருவ வளர்ச்சிக்கு மிக முக்கியமான ஒன்றாகும். செடிகள் ஆரம்ப காலத்தில் நன்கு தளிர்த்து வீரியத்துடன் வளர மிகவும் அவசியமாகிறது. இவ்விதை பயிர்க்கு ஒரு ஏக்கருக்கு கீழ்க்கண்ட அளவு அடியுரம் இடவும்.


யூரியா

26 கிலோ

சூப்பர்

144 கிலோ

பொட்டாஷ்

19 கிலோ

நடவு
         
நன்கு பராமரிக்கப்பட்ட நாற்றங்கால்களில் இருந்து எடுக்கப்பட்ட வீரிய நாற்றுக்களையே நடவிற்கு பயன்படுத்துங்கள். பார்கள் முழுவதும் நன்கு நனையும் அளவிற்கு நீர் பாய்ச்சி 10 செ.மீ இடைவெளிகளில் நாற்றுக்களை நடவேண்டும். நாற்று நடவில் பெண்களின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. நட்ட பின்பு மூன்றாவது நாள் மறுபடியும் நீர் பாய்ச்ச வேண்டும். அதை உயிர் தண்ணீர் என்போம். இவ்வாறு நீர் பாய்ச்சுவதால் நட்ட நாற்றுக்கள் நன்கு வேர்விட்டு தளிர்க்க ஏதுவாக இருக்கிறது.

களைக்கட்டுப்பாடு
         
வெங்காய உற்பத்தியில் களைகளை ஆரம்பத்திலிருந்தே கட்டுப்படுத்துவது மிக அவசியம். ஏனெனில், வெங்காய வளர்ச்சிக்கு களைகள் போட்டியாக இருந்தால் தரமான வெங்காய அறுவடை செய்வது கடினம். நடவு பாத்திகளில் நட்ட 20 - 25 நாட்களில் ஒரு முறையும் 40 - 45 நாட்களில் ஒரு முறையும் ஆட்களைக் கொண்டு கைக்களை எடுக்க வேண்டும். வெங்காய நடவு பாத்திகளில் களைகள் இல்லாமல் பராமரிப்பது தரமான விதை வெங்காயம் பெற உதவுகின்றன.

மேலுரம்

வெங்காயப் பயிருக்கு மேலுரம் இடுவது மிக அவசிம். ஏனெனில், நாம் அறுவடை செய்யும் வெங்காயம் தரமானதாக இருக்க வேண்டும். இல்லையெனில், விதைப்பயிர் செய்வதற்கு அவ்வெங்காயத்தை பயன்படுத்த இயலாது. எனவே, 26 கிலோ யூரியாவை நாற்று நட்ட 30வது நாளில் மேலுரமாக இடவேண்டும். இவ்வாறு மேலுரம் இடுவதால் இலைகள் நன்கு தளிர்த்து வெங்காயம் நல்ல வளர்ச்சி பெற்று தரமானதாக இருக்க உதவுகின்றது.

பயிர் பாதுகாப்பு

“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்பது போல விதைப் பயிர்களையும் நோய் தாக்குதல் இன்றி பாதுகாப்பது தரமான விதை உற்பத்திக்கு மிகவும் அவசியம். எனவே, அவ்வப்போது தென்படுகின்ற பூச்சி மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்த பரிந்துரைக்கப்பட்ட பயிர் பரதுகாப்பு முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.

கலவன்களை நீக்குதல்

விதை உற்பத்திக்காக நடவு செய்யப்பட்ட வெங்காய உற்பத்தி செய்யும் பாத்திகளில் அந்த குறிப்பிட்ட இரகத்தின் குணாதிசியங்களிலிருந்து மாறுபட்டு தெரிகின்ற எல்லாப் பயிர்களையும் மற்றும் களைகளையும் நீக்கிவிட வேண்டும். இவ்வாறு நீக்குவதால் உண்மையான விதை உற்பத்திக்கு நடவு செய்ய நல்ல தரமான வெங்காயம் கிடைப்பதுடன் இரகத்தின் பாரம்பரிய தன்மைகளை மேலும் பாதுகாப்பது எளிதாகும்.

செடிகளின் உயரம், இலைகளின் நிறம் மற்றும் வடிவங்கள் கொண்டு கலவன்களை நீக்கலாம்.

வெங்காய அறுவடைக்கு ஏற்ற தருணம்
         
பாத்திகளில் வெங்காயத் தாழ்கள் (இலைகள்) 50 சதவீதம் மடங்கி விழுந்த ஒரு வாரம் அல்லது நட்ட 110 - 115 நாட்களில் வெங்காயத்தை பிடுங்கி எடுக்க வேண்டும். அச்சமயத்தில் வெங்காயம் முதிர்ச்சி அடைந்திருக்கும்.  பிடுங்கிய வெங்காயத்தை தாழ்களுடன் (இலைகளுடன்) வயல்களிலேயே  3 - 5 நாட்கள் பரப்பிப் பதப்படுத்த வேண்டும். அதன்பின் சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப நிழலிலோ அல்லது அறுவடை செய்த வயல்களிலோ பதப்படுத்த வேண்டும். பின்னர் வெங்காயத்தின் கழுத்துப் பகுதியில் 2.5 செ.மீ விட்டு தழைகளை வெட்டி எடுத்துவிடவும்.

தரமான உண்மை விதை உற்பத்தி

வெங்காய விதை உற்பத்தியில் இரண்டாவது பருவத்தில்தான் உண்மையான விதை உற்பத்தி செய்கின்றோம். இப்பருவத்தில் அக்டோபர் - நவம்பர் மாதத்தில் உற்பத்தி செய்த வெங்காயத்தை நடவிற்கு பயன்படுத்துகிறோம். இப்பருவத்தில் கையாளும் தொழில் நுட்பங்களே விதை உற்பத்தித் திறன் மற்றும் தரத்தை நிர்ணயிக்கும். எனவே, தரமான விதை உற்பத்தி செய்வதற்கான தொழில் நுட்பங்களை அறிந்து கொள்ளலாம்.

வெங்காயத் தேர்வு மற்றும் தரம் பிரித்தல்

Veg54

Veg55


உங்கள் கவனத்திற்கு
                  வெங்காயம் நட்டபின் குளிர்ந்த சீதோஷ்ண சூழ்நிலை வெங்காயத்தில்                             இருந்து நிறைய பூக்காம்புகள் தோன்ற ஏதுவாக இருக்கும். செடிகள்                             பூத்திருக்கும் தருணத்தில் நல்ல சூரிய ஒளியுடன் கூடிய நாட்களாக                             இருப்பது நன்மை தரும் பூச்சிகள் வந்து போக ஏதுவாக இருக்கும்.                             அப்படி இருப்பதால்  நல்ல மகரந்தச் சேர்க்கை ஏற்பட                                வாய்ப்புண்டாகும். அதனால் விதைகள் நன்கு உருவாகும். மேலும் விதை ள                   வளர்ச்சி தருணத்தில் காற்றில் ஈரப்பதம் குறைவாக இருப்பது நல்லது.                           இச்சூழ்நிலைகள் நாம் பயிரிடும் அக்டோபர் - நவம்பர் மாதங்களுக்குப்பின்                 அமைகின்றன.

            

படத்தில் உள்ளது போல வெங்காயத்தின் நிறம், அளவு மற்றும் வடிவம் கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட இரக வெங்காயங்களைத் தேர்வு செய்ய வேண்டும். அவ்வாறு தேர்வு செய்த வெங்காயங்களை 15 நாட்கள் பதப்படுத்த வேண்டும். மேலும் இரகத் தேர்வு செய்த வெங்காயத்தில் 40 -50 கிராம் எடையுள்ள படத்தில் உள்ளது போன்ற நோயற்ற வெங்காயங்களை மட்டுமே விதைப்புக்கு பயன்படுத்த வேண்டும். மீதமுள்ள வெங்காயங்களை காய்கறிக்காக விற்று விடலாம்.

            

வெங்காய விதை நேர்த்தி

தரம் பிரிக்கப்பட்ட வெங்காயத்தின் மேல் (அல்லது) காம்பு பகுதியில் படத்தில் உள்ளது போல கால் பகுதியை சீவி எடுத்து விட வேண்டும். அதன்பின் அவ்வெங்காயங்களை கார்பன்டசிம் அல்லது மேன்கோசெப் என்ற பூஞ்சாணங் கொல்லி மருந்தில் நேர்த்தி செய்ய வேண்டும். அதற்கு மேற்கூறிய ஏதாவது ஒரு மருந்தை 10 லிட்டர் தண்ணீருக்கு 20 கிராம் என்ற விகிதத்தில் கலந்து 5 - 10 நிமிடங்கள் வரை ஊற வைக்க வேண்டும். அவ்வாறு செய்வதால் சீவிய வெங்காயங்களை நட்டபின் முளைக்கும்வரை எந்தவொரு பூஞ்சாணங்களும் தாக்காமல் பாதுகாக்க முடியும்.

நடவு பாத்தி தயார் செய்தல் மற்றும் பராமரிப்பு
         
நடவு செய்ய தேர்ந்தெடுத்த நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை நன்கு உழுது விடவும். கடைசி உழவில் ஒரு ஏக்கருக்கு 20 வண்டி மக்கிய தொழுவுரத்தை போட்டு நன்கு உழுது விடவும். அதற்கு பின் நடவு பாத்திகளில் 50 செ.மீ இடைவெளிகளில் பார்கள் அமைத்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு பார்கள் அமைந்த பின்பு, பார்களின் கீழ் பகுதியில் யூரியா, சூப்பர் பாஸ்பேட் மற்றும் பொட்டாஷ் உரங்களை அடியுரமாக இடவேண்டும். நடவு பாத்திகளில் அடியுரம் இடுவது செடிகளின் முன் பருவ வளர்ச்சிக்கு மிக முக்கியமான ஒன்றாகும். செடிகள் ஆரம்ப காலத்தில் நன்கு தளிர்த்து வீரியத்துடன் வளர மிகவும் அவசியமாகிறது. இவ்விதை பயிர்க்கு ஒரு ஏக்கருக்கு கீழ்கண்ட அளவு அடியுரம் இடவும்.

யூரியா
சூப்பர்
பொட்டாஷ்

26 கிலோ
144 கிலோ
19 கிலோ

நடவு
         
மேற்கூறியபடி நேர்த்தி செய்யப்பட்ட வெங்காயங்களையே நடவிற்கு பயன்படுத்துங்கள். பார்கள் முழுவதும் நன்கு நனையும் அளவிற்கு நீர் பாய்ச்சி 10 செ.மீ இடைவெளிகளில் வெங்காயங்களை நடவேண்டும். நட்ட பின்பு மூன்றாவது நாள் மறுபடியும் நீர் பாய்ச்ச வேண்டும். அதை உயிர் தண்ணீர் என்போம். இவ்வாறு நீர் பாய்ச்சுவதால் நட்ட நாற்றுக்கள் நன்கு வெங்காயங்கள் தளிர்க்க ஏதுவாக இருக்கிறது.

களைக்கட்டுப்பாடு

Veg57
         

வெங்காய உற்பத்தியில் களைகளை ஆரம்பத்திலிருந்தே கட்டுப்படுத்துவது மிக அவசியம். ஏனெனில் வெங்காயத்தில் பூக்கள் தோன்றுவதற்கும் விதைகளின் வளர்ச்சிக்கும் களைகள் போட்டியாக இருந்தால் தரமான வெங்காய விதை அறுவடை செய்வது கடினம். நடவு

பாத்திகளில் நட்ட 20 - 25 நாட்களில் ஒரு முறையும் 40 - 45  நாட்களில் ஒரு முறையும் ஆட்களைக் கொண்டு கைக்களை எடுக்க வேண்டும். வெங்காய நடவு பாத்திகளில் களைகள் இல்லாமல் பராமரிப்பது தரமான விதை பெற உதவுகின்றன.

மேலுரம்
         
வெங்காயப் பயிருக்கு மேலுரம் இடுவது மிக அவசியம். ஏனெனில், அறுவடை செய்யும் வெங்காய விதை தரமானதாக இருக்க வேண்டும். எனவே, 26 கிலோ யூரியாவை நாற்று நட்ட 30 வது நாளில் மேலுரமாக இடவேண்டும். இவ்வாறு மேலுரம் இடுவதால் இலைகள் நன்கு தளிர்த்து பூக்காம்புகள் தோன்றி விதைகள் உருவாகி நல்ல வளர்ச்சி பெற்று தரமானதாக இருக்க உதவுகின்றது.

கலவன்களை நீக்குதல்
         
விதை உற்பத்திக்காக நடவு செய்யப்பட்ட வெங்காய விதை உற்பத்தி செய்யும் பாத்திகளில் அந்த குறிப்பிட்ட இரகத்தின் குணாதிசியங்களிலிருந்து மாறுபட்டு தெரிகின்ற எல்லாப் பயிர்களையும் மற்றும் களைகளையும் நீக்கிவிட வேண்டும். செடிகளின் உயரம், இலைகளின் நிறம் பூங்கொத்துக்களின் நிறம், அமைப்பு மற்றும் பூக்களின் தன்மைகளை கொண்டு கலவன்களை நீக்கலாம். இவ்வாறு நீக்குவதால் உண்மையான விதை நல்ல தரமானதாக கிடைப்பதுடன் இரகத்தின் பாரம்பரிய தன்மைகளை மேலும் பாதுகாப்பது எளிதாகும்.

அறுவடைக்கு ஏற்ற தருணம்

Veg58

விதைகள் நன்கு முதிர்ந்த பின் அறுவடை செய்ய வேண்டும். படத்தில் உள்ளது போல வெங்காயத்தில் விதை அறுவடை தருணத்தில் பூங்கொத்தில் 50 சதவீத கறுப்பு விதைகள் வெளியே தெரியும். அச்சமயத்தில் பூங்கொத்துக்களை மட்டும் அறுவடை செய்த பூங்கொத்துக்களை சாக்குப் பைகளின்மீது பரப்பி நன்கு உலர வைக்க வேண்டும்.

விதைத் தரம் பராமரிக்க சில வழிமுறைகள்

பூங்கொத்துக்களில் இருந்து விதைகளை பிரித்தெடுத்து அதன் தரத்தினை மேம்படுத்துதல் அவசியம். விதை பிரித்தெடுக்கும் பொழுது விதை காயப்படாமல் பிரித்தெடுக்க வேண்டும். பின்பு சரியான முறையில் உலர வைத்து பாதுகாக்க வேண்டும்.

விதை பிரித்தெடுக்கும் முறை

Veg59


நன்கு உலர வைத்த பூங்கொத்துக்களை துணிப்பைகளில் போட்டு கைகளால் கசக்கியும் அல்லது வளையும் தன்மை கொண்ட மிருதுவான குச்சிகள் கொண்டு தட்டியும் விதைகளை பிரித்தெடுக்கலாம்.  அவ்வாறு பிரித்தெடுத்த விதைகளுடன் கூடிய தூசிகளை காற்றில் தூற்றி பிரித்தெடுத்துவிட வேண்டும்.

விதை உலர்த்துதல்

பிரித்தெடுத்த விதைகளை உடனே முறைப்படி உலர வைக்க வேண்டும். பிரித்தெடுத்த விதைகளை சேகரித்து கித்தான்  சாக்குகளின் மேல் லேசாக பரப்பி நிழலில் 8 முதல் 10 மணி நேரம் வரை உலரவைக்க வேண்டும். விதைகளை வெய்யிலில் உலர்த்தும் போது தினமும் காலை 8 முதல் 12 மணி வரையிலும், பின்னர் 3 முதல் 5 மணி வரையிலும் உலர்த்துவது நல்லது. 12 முதல் 3 மணி வரை உள்ள காலத்தை தவிர்ப்பது அவசியம். ஏனெனில், அந்த இடைக்கால நேரத்தில் சூரியனின் புற ஊதாக் கதிர்களின் வீச்சு அதிகமாக இருப்பதாலும் வெய்யிலின் வெப்பநிலை உச்சத்தில் உள்ளதாலும் விதையின் தரம் மிகவும் பாதிக்கப்படுகிறது.

விதை சுத்திகரிப்பு

விதை சுத்திகரிப்பின் போது முற்றாத, உடைந்த, கெட்டுப்போன விதைகளையும், விதையுடன் கலந்திருக்கும் மற்ற விதைகள், கல், மண், தூசி முதலியவற்றையும் அகற்றிவிட வேண்டும். பின்பு, விதைகளின் உருவம், பரிமாணம், கன அடர்த்தி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு விதைகளின் தரத்தை உயர்த்தலாம். வெங்காய விதைத் தரம் உயர்த்த பிஎஸ்எஸ் 10 நம்பர் கம்பி வலை சல்லடைகளை உபயோகிக்க வேண்டும். விதைகளை சலித்து மேலே தங்கும் தரமான, அடர்த்தியான விதைகளை மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும்.

விதை சேமிப்பு

விதை உற்பத்தி செய்வதில் எவ்வளவு கவனம் தேவையோ அதே அளவு கவனம் விதைகளை அடுத்த விதைப்புப் பருவம் வரை சேமித்து வைப்பதிலும் தேவைப்படுகிறது.

விதையின் ஈரப்பதம்

விதையின் ஈரப்பதத்தைப் பொறுத்து விதையின் தரம் மாறுபடுகிறது. விதையின் ஈரப்பதம் அதிகமாக இருந்தால் விதைகள் முளைப்புத்திறனை விரைவில் இழக்கின்றன. குறைந்த கால சேமிப்புக்கு விதைகளை 7 - 8 சத ஈரப்பதத்திற்கு காய வைத்து துணிப்பைகளில் நிறைத்து சேமியுங்கள். நீண்ட காலம் விதைகளை சேமிக்க விதைகளின் ஈரப்பதத்தை 6 சத அளவிற்குக் குறைத்து காற்றுப்புகாத பாலித்தீன் பைகளில் சேமித்து வையுங்கள்.

விதை நேர்த்தி
         
விதைகளை சேமிப்புக்கு முன் பூஞ்சாணக் கொல்லி கொண்டு விதை நேர்த்தி செய்யுங்கள். இதற்கு திராம் அல்லது கேப்டான் மருந்தை ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் என்ற விகிதத்தில் கலந்து வையுங்கள். இதற்குப் பதிலாக விதைகளை குளோரினேற்றம் செய்தும் சேமிக்கலாம். குளோரினேற்றம் என்றால் கால்சியம் ஆக்ஸி குளோரைடு (அதாவது பிளீச்சிங் பவுடர்) என்ற இரசாயன பொருளை கால்சியம் கார்பனேட் என்ற பொருளுடன் சம விகிதத்தில் கலந்து காற்றுப் புகா பாட்டிலில் ஒரு வாரம் அடைத்து வைத்திருந்து பின்னர் அந்தக் கலவையிலிருந்து ஒரு கிலோ விதைக்கு 5 கிராம் என்ற அளவில் எடுத்து கலந்து பின்பு சேமியுங்கள். குளோரினேற்றம் ஒரு சுற்றுப்புற சூழல் மாசுபடாத விதை நேர்த்தி முறையாகும்.

விதை சேமிப்புப் பைகள்

விதைகள் காற்றிலுள்ள ஈரத்தை கிரகிக்கும் தன்மை உடையவை. ஆகையால் காற்றின் ஈரத்தன்மை அதிகமுள்ள கடலோரப் பகுதிகள் மற்றும் நதி ஓரங்களில் விதைகளை சேமித்திட ஈரக்காற்று புகா பைகளை உபயோகிக்க வேண்டும். 700 அடர்வுள்ள பாலிதீன் அல்லது அலுமினிய பைகளே காற்று புகாத பைகள். எப்போதும் புதிய பைகளையே உபயோகப்படுத்துங்கள்.

இடைக்கால விதை நேர்த்தி
         
தேவைக்கென சேமித்து வைத்திருக்கும் குறைந்த அளவு விதைகளை 5 அல்லது 6 மாத கால சேமிப்புக்குப் பின் “ஊறவைத்து உலர வைக்கும் முறை” மூலம் விதை நேர்த்தி செய்யலாம். இதற்கு டை - சோடியம் பாஸ்பேட் என்ற இராசயன மருந்தை 100 லிட்டர் நீருக்கு 3.6 கிராம் என்ற விகிதத்தில் கரைத்து வைத்துக் கொள்ளலாம். இந்த கரைசலில் (ஒரு பங்கு விதைக்கு இரு பங்கு கரைசல்) விதைகளை 3 மணி நேரம் ஊற வைத்து பின்பு பழைய ஈரப்பதத்திற்கு காய வைத்து விடலாம். இவ்வாறு செய்வதால் விதைகளின் சேமிப்புத்திறன் அதிகமாகிறது.

விதைச் சான்றளிப்பு
         
பாரம்பரியத்தூய்மையில் இருந்து சிறிதும் குறையாததும், பிற இனக் கலப்பில்லாததும், பிற பயிர்களை விதை கலப்பு இன்றி, தூசு துப்பு இன்றி அதிக சுத்தத்தன்மை உடையதும், அதிக முளைப்புத்திறனும் வீரியமும், மற்றும் நோய் தாக்காத விதைகளையே தரமான விதைகள். விவசாயிகளுக்கு விதையின் இனத்தூய்மை பற்றியும் விதைத் தரம் பற்றியும் உத்திரவாதம் அளிப்பதே விதைச் சான்றளிப்பு ஆகும். விதை உற்பத்திக்கு தரக்கட்டுபாட்டுக்கென்று சட்ட பூர்வமாக ஏற்படுத்தப்பட்ட முறையே விதை சான்றிப்பு ஆகும். இதை “தரமான விதை விநியோகிப்பின் பாதுகாவலன்” என்று கூடச் சொல்லாம். மிக உன்னதமான பயிர் இரகங்களின் விதைகளை மிகுந்த முளைப்புத் திறனும் உள்ள விதைகளாக  விவசாயிகளுக்குக் கிடைக்கச் செய்வதே விதைச் சான்றளிப்பின் முக்கிய நோக்கம் ஆகும்.

விதைச் சான்று பல்வேறு நிலைகளில் செய்யப்படுகின்றது. விதைப்புக்கு உபயோகிக்கும் விதைகள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திலிருந்து வாங்கப்பட்டுள்ளதா என்பது முதல், விதைப் பயிருக்கு உரிய தனிமைப்படுத்தும் தூரம், பயிர் வளர்ச்சிப் பருவம், பூக்கும் தருணம், அறுவடை சமயம், விதைச் சுத்திகரிப்பு, முட்டை பிடித்தல்  முதலியவை சரியாக உள்ளனவா என்பன வரையும் ஆய்வு செய்யப்படுகிறது. மேலும் விதைகளை முளைப்புச் சோதனைக்கு அனுப்பி சோதனை முடிவுகளைக் கொண்டு சான்று அட்டைகள் வழங்கப்படுகின்றன. இவ்விதமாக விதை உற்பத்தியின் பல்வேறு நிலைகளில் ஆய்வு மேற்கெரள்ளப்படுகிறது.

ஆய்வின் போது வயல் தரம் மற்றும் விதைத் தரம் குறித்து பரிந்துரைக்கப்பட்ட தரம் இருந்தால் மட்டும் உற்பத்தி செய்யப்பட்ட விதைகளுக்கு  சான்றளிக்கப்பட்டு அவை விற்பனைக்குத் தயாராகின்றன.

எனவே, விதை உற்பத்திக்கான வயல்களை விதைச் சான்றளிப்புக்கு உட்படுத்துவதன் மூலம் இனக்கலப்பற்ற, சுத்தத்தன்மை உடைய நல்ல தரமான விதைகளை உற்பத்தி செய்ய முடியும்.

சான்று விதை உற்பத்திக்கு பரிந்துரைக்கப்பட்ட வயல் மற்றும விதைத் தரம்

வயல் தரம்

  • மாறுபட்ட இரக வெங்காயங்கள் (அதிக பட்சம்)

0.2 சதம் (எண்ணிக்கை)

  • கலவன்கள் (அதிக பட்சம்)

0.2 சதம்

விதைத் தரம்

  • சுத்தமான விதைகள் (குறைந்த பட்சம்)

தூசி (அதிக பட்சம்)

98 சதம்
2 சதம்

  • பிற இனப்பயிர் விதைகள்

(அதிக பட்சம்)

10/கிலோ

  • களைவிதைகள் (அதிக பட்சம்)

10/கிலோ

  • முளைப்புத்திறன் (குறைந்த பட்சம்)

70 சதம்

  • ஈரத்தன்மை (அதிக பட்சம்)

காற்றுப்புகும் பை
காற்றுப்புகாத பை

 

8.0 சதம்
6.0 சதம்

வெங்காய விதை உற்பத்தி வயல்களை விதைச் சான்றளிப்புக்கு உட்படுத்தி தரமான விதைகளை உற்பத்தி செய்து அதிக லாபம் பெறலாம். தனியார் விதை உற்பத்தியாளர்களும் உற்பத்தி வயல்களை விதைச் சான்றளிப்புக்கு உட்படுத்தி, நல்ல தரமான விதை உற்பத்தி செய்து விநியோகம் செய்யலாம்.

விதைச் சான்று பெறுவதற்கு அருகாமையிலுள்ள விதைச் சான்றிப்பு அலுவலர்களை அணுகி மேலும் விபரங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

சில இரகங்களின் குணாதிசயங்கள்

அக்ரி பவுண்ட் டார்க் ரெட்

வெங்காயம் உருண்டையாக இருக்கும், 4-6 செ.மீ., முதிர்ச்சி - நடவு செய்த பின் 95-110 நாட்கள்

அக்ரி பவுண்ட் லைட் ரெட்

வெங்காயம் உருண்டையாக இருக்கும், 4-6 செ.மீ., முதிர்ச்சி - நடவு செய்த பின் 160-165 நாட்கள்

பூசா ரெட்

வெங்காயம் நடுத்தர அளவில், தட்டை முதல் உருண்டையாக இருக்கும், முதிர்ச்சி - நடவு செய்த பின் 140-145 நாட்கள்

 

பூசா வைட் ப்ளாட்

நடுத்தர அளவு பெரிய அளவில் இருக்கும், முதிர்ச்சி - நடவு செய்த பின் 120-130 நாட்கள்

பூசா வைட் ரவுண்ட்

உருண்டையாக இருக்கும், முதிர்ச்சி - நடவு செய்த பின் 125-130 நாட்கள்

தகவலுக்கு
பேராசிரிய மற்றும் தலைவர்,
விதை மையம்
தமழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்
கோயமுத்தூர்-641003.
தொலைபேசி எண்:0422-661232.
மின்னஞ்சல்: seedunit@tnau.ac.in

 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2015.

Fodder Cholam