Seed Certification
பரங்கி

பரங்கி - தரமான விதை உற்பத்தி முறைகள்

விதை உற்பத்திக்கு ஏற்ற நிலத் தேர்வு

நிலத் தேர்வு செய்யும் போது முந்தைய பருவத்தில் வேறு இரக பரங்கி பயரிடப்படாத வயலைத் தேர்ந்தெடுத்தல் மிக அவசியம். இவ்வாறு செய்வதால் தான் தோன்றிப் பயிர்களால் ஏற்படும் இனக் கலப்பை தவிர்க்கலாம்.

இனத் தூய்மையை பராமரிக்க பயிர் விலகு தூரம்

பரங்கியில் ஆண், பெண் பூக்கள் தனித்தனியே பூத்து மகரந்த சேர்க்கை ஏற்படுகின்றன. எனவே, பயிரிடப்படும் விதைப் பயிரானது பிற இரக வயல்களிலிருந்து குறைந்தது 500 மீட்டர் தூரம் தனித்துப் பயிரிட வேண்டும். இவ்வாறு தனித்துப் பயிரிடுவதால் இரகங்களின் பாரம்பரியத் தன்மை அல்லது மரபுத்தன்மை கெடாமல் பாதுகாக்க முடியும்.

விதை உற்பத்திக்கு ஏற்ற பருவம்

“பருவத்தே பயிர் செய்” என்பது பழமொழி. விதைப்பயிருக்கு இது மிகவும் பொருந்தும். விதைகளின் தரம் அது பயிரிடப்படும் சூழ்நிலைக்கு ஏற்ப அமைகிறது. பரங்கி பல பருவங்களில் பயிரிடப்பட்டாலும், விதை உற்பத்திக்கு ஏற்ற சரியான பருவத்தை தேர்ந்தெடுப்பதுதான் மிக அவசியம். பயிரில் காய்கள் மற்றும் விதைகள் முதிரும் பொழுது குளிர்ந்த மற்றும் உலர்ந்த சூழ்நிலை இருத்தல் அவசியம். பொதுவாக ஆடிப்பட்டம் தேடி விதை என்பார்கள். அதே போல கொடி வகை காய்கறிப் பயிர்களுக்கு சிறந்த பருவம் ஆடி மற்றும் தைப் பட்டங்களே. அப்பருவங்களே பரங்கி விதை உற்பத்திக்கும் ஏற்ற பருவம், அதாவது ஜ¤ன், ஜ¤லை மற்றும் ஜனவரி - பிப்ரவரி மாதங்களாகும்.

விதைத் தேர்வு

“விளையும் பயிர் முளையிலே” என்ற பழமொழி. நாற்றுக்களை எவ்வாறு பராமரிக்கிறோமோ அதைப் பொறுத்தே பயிர் மகசூலும் அமையும். விதை உற்பத்தி பயிரில் மகசூலுடன் இரகத்தினுடைய பாரம்பரிய தன்மைகளையும் பராமரிப்பது, விதைக்கும் விதையின் தரத்தை பொறுத்தே இருக்கும். எனவே, விதை உற்பத்தி பயிர் விதைப்புக்கு தேர்ந்தெடுக்கும் விதைகள் வல்லுநர் விதைகள் அல்லது ஆதார நிலை விதைகளாக இருப்பது மிக முக்கியம்.

நடவு பாத்தி தயார் செய்தல் மற்றும் பராமரிப்பு

விதை உற்பத்தி செய்யத் தேர்ந்தெடுத்த நிலத்தை நன்கு உழுது பண்படுத்திக் கொள்ள வேண்டும். அதன்பின் 2.5 மீட்டருக்கு மீட்டருக்கு 2 மீட்டர் என்ற இடைவெளியில் 45 செ.மீ நீள, அகல ஆழமுள்ள குழிகளை தோண்ட வேண்டும்.  இவ்வாறு குழிகள் எடுத்த ஒரு வாரத்திற்குப்பின் குழி ஒன்றுக்கு 10 கிலோ மக்கிய தொழுவுரத்துடன் யூரியா 13 கிராம், சூப்பர் பாஸ்பேட் 72 கிராம் மற்றும் பொட்டாஷ் 19 கிராம் ஆகிய உரங்களை குழி மண்ணுடன் நன்கு கலந்து குழிகளை நிரப்பி சமப்படுத்தி விடவும்.

விதைப்பு

ஒரு ஏக்கருக்கு தேவையான 400 கிராம் விதைகளை கேப்டான் அல்லது பெவிஸ்டின் பூஞ்சாணக்கொல்லி மருந்து கொண்டு விதை நேர்த்தி செய்து கொள்ளவும். பின் மேலே குறிப்பிட்டவாறு தயார் செய்த குழிகளில் குழி ஒன்றுக்கு ஐந்து விதைகள் வீதம் சம இடைவெளி விட்டு நட வேண்டும்.

நீர் நிர்வாகம்

விதை நடவு செய்தபின் பூவாளி கொண்டு தண்ணீர் ஊற்ற வேண்டும். அவ்வாறு தண்ணீர் ஊற்றும் போது மண்ணை நீர் அரிக்காமலும், விதைகள் வெளியில் தெரியாமலும் கவனமாக ஊற்ற வேண்டும். செடிகள் முளைத்து நன்கு வளர்ந்த பின்பு வாரம் ஒருமுறை நீர் பாய்ச்சுவது முக்கியம்.

நடவு பாத்தி பராமரிப்பு

செடிகள் முளைத்த 10 நாட்களில் ஒவ்வொரு குழியிலும் திடமான மூன்று செடிகளை மட்டும் விட்டு, அதிகமாக உள்ள செடிகளை அகற்றி விட வேண்டும். அவ்வாறு செய்வதால் அளிக்கும் உரம் மற்றும் நீர் போன்றவைகளுக்கு பற்றாக்குறையில்லாமலும் செடிகளுக்குள் போட்டியில்லாமலும் நன்கு வளர ஏதுவாகும்.

களை கட்டுப்பாடு

குழிகளில் களைகள் இல்லாமல் பராமரிப்பது மிக முக்கியம். ஏனெனில், களைச் செடிகள் பரங்கி செடிகளுக்கு போட்டியாக இடுபொருட்களை எடுத்துக் கொள்ளுவதால் விதை மகசூல் குறைவதுடன் அவற்றின் தரமும் குறைகின்றன. எனவே, செடிகள் படருவதற்குள குழிகளில் இரண்டு அல்லது மூன்று முறை கைக்களை எடுத்துவிட வேண்டும்.

வளர்ச்சி ஊக்கி தெளித்தல்

பொதுவாக கொடிவகைக் காய்கறிகளில் ஆண், பெண் பூக்கள் தனித்தனியாக பூக்கின்றன. செடிகளில் பெண் பூக்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால்தான் நல்ல மகசூல் கிடைக்கும். எனவே எத்திரல் என்னும் வளர்ச்சி ஊக்கியை 200 பி.பி.எம் என்ற அளவில் செடிகளில் 2 இலைகள் தோன்றும் தருணத்தில் இருந்து ஒரு வார இடைவெளியில் நான்கு முறை தெளிக்க வேண்டும்.

மேலுரம்

விதைப்பயிர் காய்கறிப் பயிரில் இருந்து மாறுபடுவதால் காய்கறி விதைப் பயிர்களுக்கு மேலுரம் இடுவது மிகவும் அவசியமாகிறது. ஏனெனில், காய்கள் நன்கு முதிர்ச்சி அடைந்தால்தான், அவற்றினுள்ளே உள்ள விதைகள் நன்றாக முதிர்ச்சி அடைந்த நல்ல தரமுள்ள விதையாக நமக்கு கிடைக்கும். எனவே, மேலும் இடுவது மிக முக்கியம். பரங்கிக் விதைப்பயிர்க்கு 22 கிராம் யூரியாவை நட்ட 30வது நாளில் மேலுரமாக இடவேண்டும்.

பயிர் பாதுகாப்பு

“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்பது போல விதைப் பயிர்களையும் நோய் தாக்குதல் இன்றி பாதுகாப்பது தரமான விதை உற்பத்திக்கு மிகவும் அவசியம். எனவே, அவ்வப்போது தென்படுகின்ற பூச்சி மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்த பரிந்துரைக்கப்பட்ட பயிர் பாதுகாப்பு முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.

தரமான விதை உற்பத்தியில் கலவன்களை நீக்குதலின் முக்கியத்துவம்

சாதரணமாக, பரங்கி வயல்களில் சில கொடிகள் வேறுபட்ட இலை அமைப்புகளுடன் மிகவும் சீக்கிரமாகவே படர்ந்து பூத்திருப்பதையும், சில கொடிகள் மிதமாகப் படர்ந்து காலதாமதமாகி பூத்திருப்பதையும் காணலாம். அவை, ஒரே இரகத்தைச் சேர்ந்த பயிராக இருந்திருந்தால் அந்த வயலில் வேறுபாடுகள் எப்படி வந்திருக்க முடியும்? விதை உற்பத்தி செய்யப்படுகிற பரங்கி வயலில் ஏதோ ஒரு வேறு இனக்கலப்பு ஆகியிருப்பதையே இது தெரியப்படுத்துகிறது. உற்பத்தி செய்யும் பரங்கி இரகத்தின் இனத்தூய்மை வெகுவாகப் பாதிக்கப்பட்டு, அந்த வயல் விதை உற்பத்திக்கே தகுதியற்றதாக ஆகிவிடுகிறது.

எனவே, பரங்கி விதைக்காக நடவு செய்யப்பட்ட பாத்திகளில் அந்தக் குறிப்பிட்ட பரங்கி இரகத்தின் குணாதிசியங்களிலிருந்து மாறுபட்டுத்  தெரிகின்ற எல்லா பயிர்களையும், களைகள் மற்றும் நோய்வாய்ப்பட்ட முக்கியமாக வைரஸ் நோய் தாக்கப்பட்ட செடிகளையும் தக்க தருணத்தில் அதாவது அவைகள் பூக்கும் தருணத்திற்கு முன்னரே நீக்கிவிடுதல் மூலம் இனக்கலப்பில்லாத சுத்தமான நல்ல விதைகளை நீங்களும் உற்பத்தி செய்யலாம்.

கலவன்கள் நீக்கும் தருணம் நீக்கப்பயன்படும் தன்மைகள்

பூப்பதற்கு முன்                                               செடிகளின் உயரம், படரும் தன்மை, இலை மற்றும் தண்டின்                                                                       அமைப்பு,நிறம்.
பூக்கும் தருணம்                                               பூக்களின் நிறம்
காய்ந்த பின்                                        காய்களின் வடிவம், நிறம், பருமன்

அறுவடை

 

பரங்கியில் விதைக்காக அறுவடை செய்யும் போது படத்தில் உள்ளது போல காய்கள் நன்கு முதிர்ந்து முழுவதும் பளபளப்பாக ஆரஞ்சு/வெளிர் மஞ்சள் நிறமாக மாறிய பின்புதான் எடுக்க வேண்டும். அப்பொழுதான் விதைகள் நன்கு முதிர்ச்சி அடைந்து நல்ல முளைப்பு மற்றும் வீரியத் திறனுடன் இருக்கும்.

அறுவடை, இதர பயிர்கள் போல் ஒரே அறுவடையாக இல்லாமல் பரங்கியில் பல அறுவடைகளாக எடுக்க வேண்டி உள்ளது. அவற்றில் முதல் மற்றும் கடைசி ஓரிரு அறுவடைகளை தவிர்த்து இடைப்பட்ட அறுவடைகளில் இருந்து வரும் காய்களிலிருந்து மட்டுமே விதைகள் எடுக்க பயன்படுத்த வேண்டும். முதல் மற்றும் கடைசி ஓரிரு அறுவடைகளிலிருந்து கிடைக்கும் விதைகளின்   மகசூல் மற்றம் தரம் குறைவாக காணப்படும். எனவே, அவ்வறுவடைகளை காய்கறிக்ககாக எடுத்து விற்றுவிடலாம். மேலும் இடைப்பட்ட அறுவடைகளில் இருந்து நடுத்தரம் முதல் பெரிய காய்களை மட்டுமே விதை எடுப்பதற்காக பயன்படுத்த வேண்டும்.

பொதுவாக காய்கள் நன்கு முதிர்ச்சி அடைந்தபின், அதாவது ஒரு வாரம் முதல் 10 நாட்கள் கழித்தபின்தான் விதைக்காக அறுவடை செய்ய வேண்டும். ஏனெனில், அச்சமயத்தில்தான் விதைகள் நன்கு முதிர்ச்சி அடைந்திருக்கும். பரங்கிக்காய்கள் பளபளப்பாக இருப்பதுடன் காய்களின் நிறம் வெளிர் மஞ்சள் அல்லது ஆரஞ்சு மஞ்சள் நிறத்தில் காணப்படும். அச்சமயங்களில் கொடிகளில் உள்ள காய்களின் காம்பு காய்ந்த காணப்படும்.

விதைத்தரம் பராமரிக்க சில வழிமுறைகள்

காய்களை அறுவடை செய்தபின் விதை பிரித்தெடுக்கும் முன்பு தேர்ந்தெடுத்த இரகத்திலிருந்து வேறுபட்ட காய்களையும் சிறிய பழங்களையும் நோய் மற்றும் பூச்சிகள் தாக்கிய காய்களையும் அகற்றிவிட்டு நல்ல தரமான கரய்களையே விதை எடுக்க பயன்படுத்த வேண்டும்.

விதை பிரிந்தெடுக்கும் முறைகள்


தேர்ந்தெடுக்கப்பட்ட இரகத் தன்மை கொண்ட நன்கு முதிர்ந்த காய்களையே விதை எடுக்க பயன்படுத்த வேண்டும். மேலும் 1.5 கிலோ எடைக்கும் குறைவாக உள்ள காய்களை விதை எடுக்கப் பயன்படுத்தக் கூடாது. அக்காய்களை காய்கறிக்காக விற்று விடலாம். பரங்கிக் காய்களில் விதை பிரித்தெடுப்பது மிக எளிது. விதை எடுக்க தேர்ந்தெடுக்கப்பட்ட காய்களை முதலில் இரண்டாக வெட்டிக் கொள்ள வேண்டும். பின் காய்களின் உள்ளே நடுவில் உள்ள விதைகளை சுரண்டிஎடுத்துக் கொள்ள வேண்டும். அதன்பின் தண்ணீரில் கலந்து கசக்கி விதைகளை பிரித்து எடுத்து விடவேண்டும்.

விதையை உலர்த்துதல்



பிரித்தெடுத்த விதைகளை உடனே முறைப்படி உலர வைக்க வேண்டும். நன்கு கழுவிய விதைகளை சேகரித்து கித்தான் சாக்குகளின் மேல லேசாக பரப்பி நிழலில் ஓரிரு நாட்கள் உலரவைக்க வேண்டும். பின் சூரிய ஒளியில் உலர வைக்க வேண்டும். விதைகளை வெய்யிலில் உலர்த்தும் போது தினமும் காலை 8 முதல் 12 மணி வரையிலும், பின்னர் 3 முதல் 5 மணி வரையிலும் உலர்த்துவது நல்லது. 12 முதல் 3 மணி வரை உள்ள காலத்தை தவிர்ப்பது அவசியம். ஏனெனில், அந்த இடைக்கால நேரத்தில் சூரியனின் புற ஊதாக் கதிர்களின் வீச்சு அதிகமாக இருப்பதாலும் வெய்யிலின் வெப்பநிலை உச்சத்தில் உள்ளதாலும் விதையின் தரம் மிகவும் பாதிக்கப்படுகிறது.

விதை சுத்திகரிப்பு

விதைகளை நன்கு உலர்த்திய பின்பு விதைகளை சுத்திகரிப்பது மிக முக்கியம். அவ்வாறு விதை சுத்திகரிப்பு செய்வதால் முதிராத பொக்கு மற்றும் சிறிய விதைகளை அகற்றுவதால் விதைகளின் வீரியம் மற்றும் சேமிப்புத் திறன் கூடுகின்றன.

விதை சேமிப்பு

விதை உற்பத்தி செய்வதில் எவ்வளவு கவனம் தேவையோ அதே அளவு கவனம் விதைகளை அடுத்த விதைப்புப் பருவம் வரை சேமித்து வைப்பதிலும் தேவைப்படுகிறது.

விதையின் ஈரப்பதம்

விதையின் ஈரப்பதத்தைப் பொறுத்து விதையின் தரம் மாறுபடுகிறது. விதையின் ஈரப்பதம் அதிகமாக இருந்தால் விதைகள் முளைப்புத்திறனை விரைவில் இழக்கின்றன. குறைந்த கால சேமிப்புக்கு விதைகளை 6 -7 சத ஈரப்பதத்திற்கு காய வைத்து துணிப்பைகளில் நிறைத்து சேமிக்கவேண்டும். நீண்ட காலம் விதைகளை சேமிக்க விதைகளின் ஈரப்பதத்தை 6 சத அளவிற்குக் குறைத்து காற்றுப்புகாத பாலித்தீன் பைகளில் சேமித்து வைக்கவேண்டும்.

பரங்கியில் விதை தரம் பிரிக்க முதலில் படத்தில் உள்ளது போன்ற வெள்ளை மற்றும் வெளிர் மஞ்சள் நிறத்துடன் நல்ல முதிர்ச்சி அடையாமல் உள்ள பொக்கு விதைகளைப் பொறுக்கிவிட வேண்டும். அதன்பின் விதைகளை பி.எஸ்.எஸ்4 நம்பர் கம்பி வலை சல்லடை அல்லது 16/64” வட்டக்கண் சல்லடைகள் கொண்டு சலித்து தரம் பிரிக்க வேண்டும். விதைகளை சலித்து சல்லடை மேலே தங்கும் தரமான, அடர்த்தியான விதைகளை மட்டுமே உபயோகப் படுத்த வேண்டும்.

விதை சுத்திகரிப்பில் முக்கியமாக கவனிக்க வேண்டியவை

விதைப் பிரித்தெடுக்கும் கலங்கள் சுத்தமாக இருக்க வேண்டும். விதைத் தரம் பிரிக்கும் சல்லடைகளை ஒரு இரகத்திற்குப் பயன்படுத்திவிட்டு வேறு இரகத்திற்கு மாற்றும் பொழுது நன்கு சுத்தம் செய்யாவிடில் விதை கலப்பு நேர்ந்து விதைகளின் இனத்தூய்மை பாதிக்கப்படும். எனவே, விதை சுத்திகரிப்பு முறைகளில் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும்.

விதை நேர்த்தி

விதைகளை சேமிப்புக்கு முன் பூஞ்சாணக் கொல்லி கொண்டு விதை நேர்த்தி செய்யலாம். இதற்கு திராம் அல்லது கேப்டான் மருந்தை ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் என்ற விகிதத்தில் கலந்து வைக்கவேண்டும். இதற்குப் பதிலாக விதைகளை குளோரினேற்றம் செய்தும் சேமிக்கலாம். குளோரினேற்றம் என்பது கால்சியம் ஆக்ஸிகுளோரைடு (அதாவது பிளீச்சிங் பவுடர்) என்ற இராசயன பொருளை கால்சியம் கார்பனேட் என்ற பொருளுடன் சம விகிதத்தில் கலந்து காற்றுப் புகா பாட்டிலில் ஒரு வாரம் அடைத்து வைத்திருந்து பின்னர் அந்தக் கலவையிலிருந்து ஒரு கிலோ விதைக்கு 5 கிராம் என்ற அளவில் எடுத்து கலந்து பின்பு சேமித்தலே. குளோரினேற்றம் ஒரு சுற்றுப்புற சூழல் மாசுபடாத விதை நேர்த்தி முறையாகும்.

விதை சேமிப்புப் பைகள்

விதைகள் காற்றிலுள்ள ஈரத்தை கிரகிக்கும் தன்மை உடையவை என்பது உங்களுக்குத் தெரிந்ததே. ஆகையால் காற்றின் ஈரத்தன்மை அதிகமுள்ள கடலோரப் பகுதிகள் மற்றும் நதி தீரங்களில் விதைகளை சேமித்திட ஈரக்காற்று புகா பைகளையே உபயோகிக்க வேண்டும். ஈரக்காற்று புகா பைகள் எவை? 700 அடர்வுள்ள பாலிதீன் அல்லது அலுமினிய பைகளே காற்று புகாத பைகள். எப்போதும் புதிய பைகளையே உபயோகப்படுத்துங்கள்.

விதைச் சான்றளிப்பு

பாரம்பரியத்தூய்மையில் இருந்து சிறிதும் குறையாததும், பிற இனக் கலப்பில்லாததும், பிற பயிர்களை விதை கலப்பு இன்றி, தூசு துப்பு இன்றி அதிக சுத்தத்தன்மை உடையதும், அதிக முளைப்புத்திறனும் வீரியமும், மற்றும் நோய் தாக்காத விதைளே தரமான விதைகள். என்ற சொல்கிறோம்.

விவசாயிகளுக்கு விதையின் இனத்தூய்மை பற்றியும் விதைத் தரம் பற்றியும் உத்திரவாதம் அளிப்பதே விதைச் சான்றளிப்பு ஆகும். விதை உற்பத்திக்கு தரக்கட்டுப்பாட்டுக்கென்று சட்ட பூர்வமாக ஏற்படுத்தப்பட்ட முறையே விதை சான்றளிப்பு ஆகும். இதை “தரமான விதை விநியோகிப்பின் பாதுகாவலன்” என்று கூடச் சொல்லலாம். மிக உன்னதமான பயிர் இரகங்களின் விதைகளை மிகுந்த இனத்தூய்மையும், அதிக சுத்தத்தன்மையும், மிகுந்த முளைப்புத் திறனும் உள்ள விதைகளாக விவசாயிகளுக்குக் கிடைக்கச் செய்வதே விதைச் சான்றளிப்பின் முக்கிய நோக்கம் ஆகும்.

விதைச் சான்று பல்வேறு நிலைகளில் செய்யப்படுகின்றது. விதைப்புக்கு உபயோகிக்கும் விதைகள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திலிருந்து வாங்கப்பட்டுள்ளதா என்பது முதல், விதைப் பயிருக்கு உரிய தனிமைப்படுத்தும் தூரம், பயிர் வளர்ச்சிப் பருவம், பூக்கும் தருணம், அறுவடை சமயம், விதைச் சுத்திகரிப்பு, மூட்டை பிடித்தல் முதலியவை சரியாக உள்ளனவா என்பன வரையும் ஆய்வு செய்யப்படுகிறது. மேலும் விதைகளை முளைப்புச் சோதனைக்கு அனுப்பி சோதனை முடிவுகளைக் கொண்டு சான்று அட்டைகள் வழங்கப்படுகின்றன. இவ்விதமாக விதை உற்பத்தியின் பல்வேறு நிலைகளில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

ஆய்வின் போது வயல் தரம் மற்றும் விதைத் தரம் குறித்து பரிந்துரைக்கப்பட்ட தரம் இருந்தால் மட்டும் உற்பத்தி செய்யப்பட்ட விதைகளுக்கு சான்றிக்கப்பட்டு அவை விற்பனைக்குத் தயாராகின்றன.

எனவே, விதை உற்பத்திக்கான வயல்களை விதை சான்றளிப்புக்கு உட்படுத்துவதன் மூலம் இனக்கலப்பற்ற, சுத்தத்தன்மை உடைய நல்ல தரமான விதைகளை உற்பத்தி செய்ய முடியும்.
சான்று விதை உற்பத்திக்கு பரிந்துரைக்கப்பட்ட வயல் மற்றும் விதைத் தரம்

வயல் தரம்

  • கலவன்கள்                                                                              0.02 சதம்

(அதிக பட்சம்)

விதைத் தரம்

  • சுத்தமான விதைகள்

(குறைந்த பட்சம்)                                                                    98 சதம்
தூசி (அதிக பட்சம்)                                                                2 சதம்

  • பிற இனப்பயிர் விதைகள்                                                      இருக்கக்கூடாது

(அதிக பட்சம்)

  • களை விதைகள் (அதிக பட்சம்)                                              இருக்கக்கூடாது
  • முளைப்புத்திறன் (குறைந்த பட்சம்)                                       60 சதம்
  • ஈரத்தன்மை (அதிக பட்சம்)   

காற்றுப்புகும் பை                                                                   7.0 சதம்
காற்றுப்புகாத பை                                                                  6.0 சதம்

பரங்கி விதை உற்பத்தி வயல்களை விதைச் சான்றளிப்புக்கு உட்படுத்தி தரமான விதைகளை உற்பத்தி செய்து அதிக லாபம் பெறலாம். தனியார் விதை உற்பத்தியாளர்களும் உற்பத்தி வயல்களை விதைச் சான்றளிப்புக்கு உற்படுத்தி, நல்ல தரமான விதை உற்பத்தி செய்து விநியோகம் செய்யலாம்.

விதைச் சான்று பெறுவதற்கு அருகாமையிலுள்ள விதைச் சான்றளிப்பு அலுவலர்களை அணுகி மேலும் விபரங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

பரங்கியில் சில இரகங்களின் குணாதிசங்கள்

இரகம்                                                காய்களின் தன்மைகள்

கோ1                                                   நீண்ட உருண்டை வடிவம் கொண்டது.                                                                                             காய்களின் எடை அதிகம் (8 - 10 கிலோ).                                                                                         காய்கள் லேசான ஊதா நிறத்துடன் காணப்படும்.
கோ2                                                   காய்கள் சிறியதாக (1.5 கிலோ) தட்டையான                                                                                   உருண்டை வடிவம் கொண்டது. காய்கள் லேசான                                                                            ப்ரவுன் நிறத்துடன் காணப்படும்.

தகவலுக்கு
பேராசிரிய மற்றும் தலைவர்,
விதை மையம்
தமழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்
கோயமுத்தூர்-641003.
தொலைபேசி எண்:0422-661232.
மின்னஞ்சல்: seedunit@tnau.ac.in

 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016.

Fodder Cholam