|
தேனிக்களும் பயிர் மகசூலும்:
அயல் மகரந்தச் சேர்க்கை மூலம் பயிர் மகசூலைக் கூட்டுவதில் தேனீக்கள் முக்கியப் பங்காற்றுவதால் தேனீக்களை மேலை நாட்டினர் வேளாண் தேவதைகள் எனப் போற்றுகின்றனர். தேனீக்களால் மகரந்தச் சேர்க்கை நடைபெறும் பயிர்களின் பூக்கள், தேனீக்களைக் கவர்வதற்காக கவர்ச்சிகரமான நிறமும் நல்ல மணமும் பெற்றுள்ளன. மேலும் இவை தேனீக்களுக்கு மதுரத்தையும் மகரந்தத்தையும் உணவாகத் தருகின்றன. உணவிற்காக மலரை நாடி வரும் தேனீக்களின் உடம்பில் மகரந்தப் பொடி ஒட்டிக் கொள்கின்றது. பின்னர் தேனீக்கள் மற்றொரு மலருக்கு உணவு தேடிச் செல்லும் பொழுது உடம்பில் ஒட்டிக் கொண்ட மகரந்தத்தூள் சூல்முடியைச் சென்று அடைகின்றது. இதனால் பயிரில் அயல் மகரந்தச் சேர்க்கை அமைப்பும் சில சுபாவங்களும் தேனீக்களால் தனித் தன்மை வாய்ந்த உடல் அமைப்பும் சில சுபாவங்களும் தேனீக்களால் பயிரில் அதிக அளவில் அயல் மகரந்தச் சேர்க்கை நடைபெற பெரிதும் உதவுகின்றன.
தேனீக்களின் சிறப்பியல்புகள்:
- உடம்பு முழுவதும் உள்ள கிளையுடன் கூடிய ரோமங்களில் மகரந்தத் தூள் எளிதாக ஒட்டிக் கொள்கின்றது
- தேனீக்களின் கால்கள் மகரந்தத் தூளைச் சுமந்து வரவும் அவைகளின் நீளமான நாக்கு மதுரச் சுரப்பிகளிலிருந்து வெளிப்படும் மதுரத்தை நக்கி, உறிஞ்சவும் ஏற்றவாறு உள்ளன
- தேனீக்கள் விசுவாசத்துடன் ஒரு பயிர் இனத்தைச் சார்ந்த மலர்களை, பூக்கும் காலம் முடியும் வரை தொடர்ந்து நாடிச் சென்று உணவு திரட்டுகின்றன
- புரதம் மிகுந்த மகரந்தம் வளரும் புழுக்களுக்கும், இளந்தேனீக்களுக்கும் உணவாகப் பயன்படுகின்றது. எனவே வயல் வெளித் தேனீக்கள், தேவை கருதி ஆர்வத்துடன் அதிக அளவு மகரந்தத்தைத் தேடிச் சேமிக்கின்றன. அவ்வாறு செயல்படும் பொழுது தேனீக்கள் அதிக அளவில் பயிரில் அயல் மகரந்தச் சேர்க்கை நடைபெற வழி வகுக்கின்றன
- கதிரவன் தோன்றியதிலிருந்து மறையும் வரை தேனீக்கள் பல மணி நேரம் உணவிற்காக மலரை மீண்டும் நாலடி வருகின்றன. இதனால் தேனீக்கள் பயிரில் கூடுதலாக மகரந்தச் சேர்க்கை நடைபெறத் துணை புரிகின்றன
- தேனீக் கூட்டங்களை எளிதில் தேவையான இடத்திற்கு தேவையான எண்ணிக்கையில் எடுத்துச் சென்று வைத்துப் பயிர்களில் மகரந்தச் சேர்க்கை நடைபெறப் பயன்படுத்தலாம்
- அனுபவம் மிக்க வயல் வெளித் தேனீக்கள் உணவு கிடைக்கும் இடம் பற்றிய தகவல்களைப் பிற பணித் தேனீக்களுக்கு நடன மொழி மூலம் அறிவிப்பதால் தகவலறிந்த தேனீக்களும் அதிக எண்ணிக்கையில் பயிரை நாடிச் சென்று மகரந்த சேர்க்கை நடைபெற உதவுகின்றன
பராமரிக்கும் முறைகள்:
- மகரந்தச் சேர்க்கை ஏற்படுத்துவதற்காகப் பயன்படுத்தப்படும் தேனீகு் கூட்டங்கள வலுவானதாக இருக்க வேண்டும்
- போதிய அளவு தேன் மற்றும் மகரந்த இருப்பு இருக்க வேண்டும்
- புழு அடையில் தேனீயின் வளர்ச்சிப் பருவங்கள் அனைத்தும் இருத்தல் அவசியம்
- மொத்த அடைப் பரப்பில் குறைந்தது கால் பகுதியிலாவது புழுக்கள் வளரும் நிலையில் இருக்க வேண்டும். புழுக்களின் உணவுத் தேவைக்காகப் பணித் தேனீக்கள் மிகுந்த ஆர்வத்துடன் அதிக அளவு மகரந்தம் திரட்டி வரும். அதனால் அயல் மகரந்தச் சேர்க்கை பயிரில் கூடுதலாக நடைபெறும்
- ராணித் தேனீ சிறப்புறப் பணிபுரிய வேண்டும்
- வீட்டுத் தேனீக்களும், வயல் வெளித் தேனீக்களும் அதிக எண்ணிக்கையில் இருக்க வேண்டும்
- மகரந்தம் மற்றும் தேனைச் சேமித்து வைக்கக் காலி அடைகள் தேனீப் பெட்டிகளில் இருத்தல் வேண்டும்
- இரண்டு அல்லது மூன்று தேனீப் பெட்டிகளை ஒரு தொகுதியாகத் தோட்டத்தின் மத்தியில் வைத்தால் தேனீக்கள் குறைந்த அளவு சக்தியைச் செலவழித்து உணவு தேடிக் கொண்டு வரும்
- பயிர்கள் பூக்கத் தொடங்கியதுமே தேனீப் பெட்டிகளைத் தோட்டத்தில் கொண்டு சென்று வைக்க வேண்டும்
- பொதுவாக ஓர் ஏக்கருக்கு ஒரு தேனீப் பெட்டி போதுமானது
- பயிர்களுக்கு பூத்திருக்கும் சமயத்தில் பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தெளிப்பதைத் தவிர்த்தல் வேண்டும். பயிர் பூக்கும் சமயங்களில் பயிர் பாதுகாப்பு அவசியம் என்ற நிலை ஏற்பட்டால் தேனீக்களை அதிக அளவு பாதிக்காத பூச்சிக் கொல்லி மருந்துகளைப் பயன்படுத்தலாம்
- எந்தப் பயிரில் தேனீக்களைக் கொண்டு அயல் மகரந்தச் சேர்க்கை ஏற்படுத்த வேண்டுமோ, அப்பயிரின் மலர்களைச் சர்க்கரைப் பாகில் ஊற வைத்து முந்திய நாள் இரவு தேனீக்களுக்குக் கொடுக்க வேண்டும். இதனால் மறுநாள் தேனீக்களுக்குக் கொடுக்க வேண்டும். இதனால் மறுநாள் தேனீக்கள் அம்மலருள்ள பயிரை நாடி உணவு தேடச் செல்லும்
பயிர் மகசூலில் தேனீக்களின் பங்கு:
- தேனீக்களால் பயிறு வகைப் பயிர்கள் எண்ணெய் வித்துக்கள், காய்கறிப் பயிர்கள் மற்றும் பழ மரங்களில் அயல் மகரந்தச் சேர்க்கை கூடுதலாக நடைபெறுகின்றது. குறிப்பாக ஆப்பிள், பேரிக்காய், தர்பூசணி, முலாம் பழம், எலுமிச்சை போன்ற பயிர்களின் பழ மகசூலும், பழங்களின் தரமும் கூடுவதற்கு தேனீக்களின் வரவு தேவைப்படுகின்றது
- தேனீக்களால் வெள்ளரி மகசூலை இரட்டிப்பாக்க முடியும். மேலும் காரட், பூக்கோஸ், வெங்காயம் போன்ற காய்கறிப் பயிர்களில் தரமான விதைகளைக் கூடுதலாக உற்பத்தி செய்யத் தேனீக்கள் உதவுகின்றன
- சூரியகாந்தி, எள், பேய் எள் மற்றும் கடுகு போன்ற எண்ணெய் வித்துப்பயிர்களில் உயர் மகசூல் பெறத் தேனீக்கள் பெரிதும் உதவுகின்றன. தேனீக்களால் சூரியகாந்திப் பயிரில் விதை மகசூல் கூடுவதுடன் எண்ணெய் சத்தும், புரத அளவும், விதை எடையும், விதைகளின் முளைப்புத் திறனும் கூடுகின்றது
- தென்னந் தோப்புகளில் தேனீப் பெட்டிகளை வைப்பதால் நெட்டை ரகத் தென்னையில் குரும்பை உதிர்வது குறைந்து காய் மகசூல் 13 விழுக்காடு கூடுகின்றது
- தேனுக்காக மட்டும் தேனீ வளர்ப்பு என்ற நிலை மாறி, மேலை நாடுகுளில் உள்ளது போல பயிரில் அயல் மகரந்தச் சேர்க்கை ஏற்படுத்துவதற்காகவும் திட்டமிட்டுத் தேனீ வளர்ப்பு நடைபெற்றால் தான் நாம் பயிர் மகசூலைக் கூட்ட இயலும். வீரியக் காய்கறி விதை உற்பத்திக்கும் தேனீக்களைக் கூடுதலாகப் பயன்படுத்த வேண்டும். ஒருங்கிணைந்த பண்ணையத்திலும், இயற்கை விவசாயத்திலும் தேனீ வளர்ப்பை மேற்கொள்ளுவதன் மூலமாகவும் இந்த நோக்கை எட்ட இயலும்.
|
|