புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியிலுள்ள நிலையூரில் விவசாயக் குடும்பத்தில் மே 1, 1948 அன்று தோன்றிய இவர், தமது பள்ளிக் கல்வியை திருவாரூரில் உள்ள வேலுடையார் உயர்நிலைப்பள்ளி மற்றும் அறந்தாங்கி போர்டு உயர்நிலைப்பள்ளியில் படித்து, பின் இளமறிவியல், மூதறிவியல் (வேளாண்மை) பட்டங்களை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பெற்றார். அதன்பின் நொதித்தல் தொழில்நுட்பத்தில் மூதறிவியல் பட்டப்படிப்பு (MS), தொழிற்சாலை நுண்ணுயிரியலில் முனைவர் பட்டப்படிப்பு ஆகியனவற்றை பெல்ஜியம் நாட்டின் லூவன் கத்தோலிக்க பல்கலைக்கழகத்தில் பயின்றார். அதே பல்கலைக்கழகத்தில் தமது சிறப்பு முதுமுனைவர் அனுபவத்தை (Post – Doctoral experience) மின்னனு நுண்ணோக்கியலிலும் பின்னர் அமெரிக்க நாட்டின் மிக்சிகன் மாநில பல்கலைக்கழகத்தில் மரபணு நகலியலிலும் (Gene Cloning) பெற்றார். இவர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 1970 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்து 36 ஆண்டுகளுக்கும் மேலாக மண்ணியல், பயிர் நோயியல், நுண்ணுயிரியல், உயிர் ஆற்றல், சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் உயிரியல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் பல்வேறு நிலைகளில் பணியாற்றிய அனுபவம் பெற்றவராவார்.
முனைவர் கு.இராமசாமி அவர்கள் தமிழ்நாடு, கேரளா, கோவா, மகாராஷ்டிரா ஆகிய மாநில பல்கலைக்கழகங்களில் உயிர் ஆற்றல், சுற்றுச்சூழல் அறிவியல், சுற்றுச்சூழல் உயிர்தொழில்நுட்பம், நுண்ணுயிரியல் தொழில்நுட்பம், உயிர் வேதியியல் தொழில்நுட்பம் போன்ற பாடத்திட்டங்கள் தொடங்குவதற்கு காரணமானவராவார். மேலும், இவர் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக் குழுமம், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமம் மற்றும் பல்கலைக்கழக நல்கை ஆணையம் ஆகியவற்றிற்கு தேசிய அளவிலான பாடத்திட்டங்களை வகுத்துள்ளார். இவர் தேசிய வேளாண் உயிர்தொழில்நுட்பம், சொட்டுநீர்ப் பாசனம் வழியாக உரமிடுதல் மற்றும் சாண எரிவாயு கொள்கை திட்டமிடுதல் அமைப்பின் உறுப்பினராக செயல்பட்டார். தற்சமயம், தமிழ்நாடு மாநில திட்டக்குழுவின் (வேளாண்மை மற்றும் பாசனம்) உறுப்பினராக பணியாற்றி வருகிறார்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், நிர்வாகப் பொறுப்பாக, சுற்றுச்சூழல் அறிவியல் துறையின் தலைவராகவும், தாவர மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரியல் தொழில்நுட்ப மையத்தின் இயக்குநராகவும் பணியாற்றியவர். இவர் சென்னை எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தின் உயிர் அறிவியல் மற்றும் உயிர் பொறியியல் புலத்தின் முதன்மையராகவும், கோயம்புத்தூர் கற்பகம் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் பணியாற்றியவர்.
துணைவேந்தர் அவர்கள் ஒரு சிறந்த ஆராய்ச்சியாளர். 1982 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து மத்திய அரசின் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை, உயிர் தொழில்நுட்பத் துறை, அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக் குழுமம், அணுசக்தி மையம், மரபுசாரா எரிசக்தி அமைச்சகம் மற்றும் சர்வதேச அளவில் ஆஸ்திரேலியாவின் சர்வதேச வேளாண் ஆராய்ச்சிக் குழுமம், சர்வதேச உணவு மற்றும் வேளாண் நிறுவனம், அமெரிக்கா நாட்டின் வேளாண் துறை மற்றும் ஐரோப்பிய யூனியன் (EU) ஆகியவற்றின் நிதியுதவியோடு 30க்கும் மேற்பட்ட ஆராயச்சித் திட்டங்களை மேற்கொண்டுள்ளார்.
முனைவர் இராமசாமி அவர்கள் கழிவு மறுசுழற்சி மற்றும் மேலாண்மைத் தேவையைப் பூர்த்தி செய்யும் தீர்வினைக் கண்டறிந்து ஸ்பிக், தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம், சேஷசாயி, எஸ்.ஐ.வி, சக்தி, பண்ணாரி நிறுவனங்களோடு இணைந்து சுற்றுச் சூழல் பிரச்சனைகளைக் களையும் ஆய்வினை மேற்கொண்டவராவார். இவர் 7 புத்தகங்கள், 23 கையேடுகள், 120க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி வெளியீடுகளை வெளியிட்டுள்ளார். மேலும், 18 பயிற்சிகள் மற்றும் சர்வதேச கருந்தரங்குகளையும் நடத்தியுள்ளார். இவர் தமது பணிக்காலத்தில், கல்வி மற்றும் ஆராய்ச்சிப் பணிக்காக 18 விருதுகளையும், இரு பதக்கங்களையும், நான்கு தேசிய மற்றும் இரு சர்வதேச கல்வி ஊக்கத் தொகைகளையும் பெற்றவர்.
கல்வி மற்றும் ஆராய்ச்சிப் பணிகளின் தொடர்பாகவும், சிறப்புநிலை பேராசிரியராகவும் பெல்ஜியம், இங்கிலாந்து, ஜெர்மனி, சுவீடன், பிரான்சு, நெதர்லாந்து, அமெரிக்கா, ஜப்பான், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, பிரேஸில் போன்ற பலநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
தமிழ்நாடு அரசின் வேளாண் வளர்ச்சிக்கான தொலைநோக்கு பார்வைக்கேற்ப தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண் கல்வி, ஆராய்ச்சி, விரிவாக்கம் மற்றும் வேளாண் வர்த்தகம் ஆகியனவற்றை மேம்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட திட்டமிட்டுள்ளார். |