|| | ||||
எங்களைப் பற்றி :: வேளாண் அறிவியல் நிலையங்கள்
 
தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம், பேச்சிப்பாறை


வளர்ச்சிப் பணிகள்
முன்பு ‘ஸ்ரீ அன்னாசிப் பழப்பண்ணை’ என  அழைக்கப்பட்ட இந்நிலையம் தமிழ்நாடு தோட்டக் கலைத் துறையின் கீழ் இருந்து வந்தது. 1989 – ஆண்டு முதல் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. 1992- ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28 - ஆம் தேதி  வரை இந்நிலையம் 8.3 எக்டர் பரப்பளவு கொண்ட மத்தியப் பண்ணையை மட்டுமே கொண்டிருந்தது. பின்னர் 12.4 எக்டர் பரப்பளவை வனத்துறையிடமிருந்து குத்தகைக்குப் பெற்றுக் கொண்டது. தமிழ்நாடு தோட்டக்கலைத் துறையின் கீழ் இருந்தபோது அன்னாசி, நல்ல மிளகு மற்றும் பூச்செடிகள் ஆகியவையே முக்கியப் பயிர்களாக இருந்தது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் வந்த பின்பு தோட்டக்கலைப் பயிர்களான  பழப்பயிர்கள், காய்கறிகள், வாசனை மற்றும் மூலிகைப் பயிர்களில்  ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கிராம்பு, ஜாதிக்காய், இலவங்கப்பட்டை, சர்வசுகந்தி ஆகியவற்றின் வகைத் தேர்வுகள் மற்றும் பல்வேறு நல்ல மிளகு வகைகள் இங்கு பயரிடப்படுகின்றன. மேலும் தோட்டக்கலைப் பயிர்களில் மண்வளம், விதைநுட்பம், பயிர்ப் பாதுகாப்பு மற்றும் வேளாண் விரிவாக்கம் ஆகியவற்றை நோக்கங்களாக்க் கொண்டு பல ஆராய்ச்சித் திட்டங்கள் இந்நிலையத்தில் செயல்பட்டு வருகின்றன.

ஆராய்ச்சி நிலையத்தில் செயல்படும்  திட்டங்கள்

  1. ஒருங்கிணைந்த வாசனைப் பயிர்கள் உற்பத்தி மற்றும் மேம்பாட்டுத்திட்டம்

இந்தத் திட்டத்தின் கீழ் தரமான நல்ல மிளகு, கிராம்பு, சர்வசுகந்தி மற்றும் ஜாதி ஒட்டுச் செடிகள் / கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு நியாய விலையில் விநியோகம் செய்யப்படுகிறது.

  1. .இ.ஐ.சி.ஆர்.பி – வாசனைப் பயிர்களில் அகில இந்திய ஒருங்கிணைந்த ஆராய்ச்சித் திட்டம்

            இந்தத் திட்டத்தின் கீழ் உலகின் பல பகுதிகளிலிருந்து கிராம்பு(25 எண்), ஜாதிக்காய்(25 எண்), இலவங்கப்பட்டை(12 எண்), நல்ல மிளகு ஆகிய பயிர்களின் இரகங்கள் தருவிக்கப்பட்டு அவற்றில் இந்தப் பகுதிக்கேற்ற அதிக மகசூலுடன் நோய், பூச்சிகள் தாக்காத இனங்களைத் தேர்வு செய்து விவசாயிகளுக்கு புதிய இரகங்களாக வெளியிடும் ஆராய்ச்சி தொடர்ந்து நடைபெறுகிறது.

  1. முனைப்பு முதலீட்டுத்திட்டம்-1

இந்தத் திட்டத்தின் கீழ் சுமார் 10,000 மா ஒட்டு கன்றுகள், 10,000 ரம்புட்டான், முட்டைபழம் போன்ற மிதவெப்ப மண்டல பழப் பயிர் 1000 கன்றுகளும், பேச்சிப் பாறை – 1 பலாக்கன்றுகள் மற்றும் 15 கிலோ பி.பி.ஐ -1 கத்தரி விதை உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.

  1.  முனைப்பு முதலீட்டுத்திட்டம்-2

வருடா வருடம் சுமார் 10 டன்கள் மண்புழு உரம் தயரிக்கப்பட்டு பண்ணை மற்றும் விவசாயிகள் உகயோகத்திற்கு விநியோகம் செய்யப்படுகிறது.

வானிலை ஆய்வு மையம்

 

புது டில்லியில் உள்ள இந்திய வானொலி மையத்தின் நிதியுதவியுடன் 1999 – முதல் வானிலை ஆய்வு மையம் பேச்சிப் பாறை தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தில் இயங்கி வருகிறது. இம்மையத்தில் இருந்து தட்ப வெப்பநிலை , மழை முன்னறிவிப்பு மற்றும் விவசாயிகளுக்கான வானிலை சார்ந்த பயிர் பராமரிப்பு மற்றும் பயிர்ப் பாதுகாப்புத் தொழில் நுட்பங்கள் ஆகியவை இம்மாவட்ட விவசாயிகளுக்கு வானொலி மற்றும் செய்தித்தாள்கள் மூலம் வாரந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த வருடத்திலிருந்து தானியங்கி வானிலை ஆய்வு மையம் செயல்படத் துவங்கியுள்ளது.

  • வேளாண் பட்டயப் படிப்பு

2008-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட வேளாண்  பட்டயப் படிப்பு தறபொழுது முதலாம் ஆண்டில் 30 மாணவர்களும் 20 மாணவிகளும் பயின்று வருகின்றனர். இரண்டாம் ஆண்டில் 35 மாணவர்களும் 5 மாணவிகளும் பயின்று வருகின்றனர். இதுவரை 3 அணி(Batch) மாணவ மாணவிகள் இந்த வேளாண்பட்டயப் படிப்பைப் பயின்று முடித்துள்ளனர். படிப்பை முடித்த மாணவர்களும் மாணவிகளும் பற்பல உரக் கம்பெனிகளிலும், பூச்சி மற்றும்  நோய் மருந்து கம்பெனிகளிலும் தமிழக அரசு வேளாண்மைத் துறையின் ‘ஆத்மா’ திட்டத்திலும் வேலைகளில் அமர்ந்துள்ளனர். இந்தப் பட்டயப் படிப்பு படிக்க +2 வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்தப் பட்டயப் படிப்பை 4 பருவங்களாக படிக்க வேண்டும். இந்த 4 பருவங்களிலும் உழவியல் , நோயியல், பூச்சியியல், விதைத் தொழில்நுட்பவியல், வேளாண் பொருளியல், வேளாண்விரிவாக்கம், வேளாண் பொறியியல் ஆகியவை  மாணவர்களுக்குப் பயிற்றுவிக்கப்படும். பயிற்றுவிக்கப்படும் மொழி தமிழ் ஆகும். இந்தப் பட்டயப் படிப்பு கிராமிய கிராமிய இளைஞர்களின் வேலைவாய்ப்புகளுக்கு ஒரு வரப்பிரசாதம் ஆகும்.
இவ்வாறாக பேச்சிப்பாறை தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் முப்பெரும் பணிகளான கல்வி, ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கப் பணிகள் சிறப்புற நடைபெற்று வருகின்றது.

ஆராய்ச்சி முடிவுகள்
பலாபிபிஐ – 1

புதிய வருக்கைப் பலா இரகம் பிபிஐ – 1, 1996 – ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்த இரகம் மொட்டு ஒட்டுதல் மூலம் பயிர்ப்பெருக்கம் செய்யப்பட்டுள்ளது. கார்கால மற்றும் பருவகால காலங்களிலும் காய்க்கும். இந்த இரகம் மரத்திற்கு 107 பழங்கள் மகசூல் கொடுக்கும். இதன் சுளைகள் மஞ்சள் நிறத்திலும், சதைப்பற்று உள்ளதாகவும் காணப்படும். இந்த இரகத்தின்  பழங்கள் நல்ல மணம் மற்றும் அதிக இனிப்புச் சுவை கொண்டது. மரங்கள் வீட்டில் சாகுபடி செய்யவும் வியாபார ரீதியாக சாகுபடி செய்யவும் பயன்படுகிறது.


 

கத்தரி பிபிஐ -1

புதிய கத்தரி இரகம் பிபிஐ-1, 2002-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. வெளிர் பச்சை நிறத்தில் இருக்கும். இதன் மகசூல் எக்டருக்கு 45 முதல் 50 டன் வரையிலும் கிடைக்கும். ஒரு செடியிலிருந்து 30 முதல் 35 காய்கள் வரை கிடைக்கும். இதன் காய்கள் கசப்பு மற்றும் துவர்ப்பு குணங்கள்  இல்லாதவை. இதன் காய்களில் விதைகளின் எண்ணிக்கையும் குறைவாக இருக்கும்.



இலவங்கப்பட்டை பிபிஐ
-1

புதிய இலவங்கப்பட்டை இரகம் பிபிஐ-1, 2003-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. வறட்சி மற்றும் பூச்சி நோய் எதிர்ப்புத் தன்மை கொண்டதாக உள்ளது. ஒரு எக்டரில் இருந்து வருடத்திற்கு 980 கிலோ பட்டை மகசூலாகக் கிடைக்கும்.  இந்த இரகங்கள் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியவை. இலைகளில் 33% எண்ணெய்ச் சத்தும், பட்டைகளில் 2.9% எண்ணெய்ச் சத்தும் கிடைக்கும். அதிகமழை பெறும் பகுதிகளில் சாகுபடி செய்ய சிறந்தவை. அதாவது 100 முதல் 500 மீட்டர் வரை உயரமுள்ள இடங்களில் பயரிட ஏற்றவை.

 
 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2017