டிரெயிலரில் பொருத்தப்பட்ட திருப்பு வடிவமைப்புடன் கூடிய பவர்டில்லர் டிரெயிலர்
விவசாயத்தில் செய்யப்படும் பல்வேறு வகையான வேலைகளாகிய உழவு மற்றும் விளை பொருட்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லுதல் போன்றவற்றை செய்வதற்கு பவர்டில்லர் பயன்படுகிறது. இந்த பவர்டில்லரை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்லும் போது, பவர்டில்லரின் இருக்கையிலேயே அமர்ந்தவாறு பவர்டில்லரையும், அதனுடன் இணைந்துள்ள டிரெயிலரையும் ஒரே சமயத்தில் கட்டுப்படுத்தி ஓட்ட வேண்டியுள்ளது. மிக குறுகிய வளைவில் செல்லும் போது, பவர்டில்லர் ஓட்டுனர் பவர்டில்லரின் இருக்கையிலிருந்து கீழே குதித்து நிலத்தில் இருந்தவாறு அதன் கைப்பிடியை பிடித்து பவர்டில்லரை திருப்பிச் செல்லுகிறார். அவ்வாறு செல்லும் போது பவர்டில்லரின் வேகத்திற்கேற்ப, ஓட்டுனர் திறம்படச் சமாளித்து திரும்பும் வேகத்தை கட்டுப்படுத்த வேண்டியுள்ளது.
இந்த புதிய வடிவமைப்பில், இரண்டு கைப்பிடிகள் பவர்டில்லரின் முன்புறத்தில் ஒரு பகுதியில் நிலையாக இணைக்கப்பட்டுள்ளது. இதனுடன் கிளட்ச் மற்றும் கிளாம்ப் அமைப்பும் கிளட்ச் மற்றும் பிரேக் லீவருடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், இடதுபுற கைப்பிடியுடன் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இரண்டு கேபிள்களும் நீட்டிக்கப்பட்டு, பின் செல்லும் வண்டியின் தாங்கியில் இருப்பக்கங்களின் முன்புறம், இணைக்கும் பாகத்தில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த திரும்பும் வடிவமைப்பானது இரண்டு பகுதிகளைக் கொண்டது, ஒன்று திருப்பும் கிளட்ச் மற்றும் கப்ளிங்குடன், மற்றொன்று கிளாம்ப் மற்றும் கிளிட்ச் லீவருடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த நவீன திருப்பு வடிவமைப்பின்மூலம் கைப்பிடியானது டிரெயிலரில் முன்புறமாக பொருத்தப்பட்டுள்ளது. எனவே, பவர்டில்லர் ஓட்டும் போது கைப்பிடி ஒரே நிலையில் அசையாமல் உள்ளது. மேலும் இந்த நவீன திருப்பு வடிவமைப்பில் பக்கவாட்டில் அங்கும்மிங்கும் அசைவது முற்றிலுமாக தடுக்கப்பட்டு, பவர்டில்லரின் பக்கவாட்டில் இருந்தவாறே வளைவான இடங்களில் திருப்பலாம்.
சிறப்பியல்புகள்
பவர்டில்லர் டிரெயிலரை திருப்பும் போது ஓட்டுனர் இருக்கையிலிருந்து இறங்கி ஏறுவதை இத்திருப்பு வடிவமைப்பு தவர்க்கிறது.
ஓட்டுனரின் கைகளுக்கு எளிதாக எட்டக்கூடிய வகையில் கட்டுப்படுத்தும் அமைப்புகள் பொருத்தப்பட்டுள்ளது.
வளைவு ஆரம் குறைக்கப்பட்டதால், மிக குறைந்த இடத்திலும் திருப்பலாம்.
பக்கவாட்டிலும், மேலும் கீழுமாகவும் பவர் டில்லரின் கைப்பிடி அசைவதால் ஏற்படும் அசௌகரியம் தவிர்க்கப்படுகிறது.
இத்திருப்பு வடிவமைப்பினால் பவர்டில்லர் டிரெயிலரை திருப்புவது எளிதாகவும் பாதுகாப்பாகவும் உள்ளது.