காட்டாமணக்கு சாகுபடி மற்றும் உயிரி எரிபொருள் உற்பத்தி
ஒரு நாட்டின் பொருளாதாரம், அதன் ஆற்றல் வளத்தைச் சார்ந்துள்ளது என்பதை நாம் அனைவரும் அறிவோம். பெட்ரோலியம் சார்ந்த எரிபொருட்களைக் கொண்டுள்ள நாடுகள் தொழில் வளத்திலும், பொருளாதாரத்திலும் முன்னிற்பதற்கு இதுவே காரணமாகும். நமது நாட்டின் பெரும்பகுதியான அந்நியச் செலாவணி எரிபொருள் இறக்குமதிக்கே செலவிடப்படுகிறது.
தமிழ்நாட்டில் ஜெட்ரோஃபா சாகுபடி
- ஜெட்ரோஃபா தமிழ்நாட்டின் பல கிராமப் பகுதகளில் உயிர் வேலியாக பல ஆண்டுகளுக்கு முன்பே விவசாயிகள் பயிர் செய்து வருகின்றனர். இதனை கொட்டைச் செடி என்றும், காட்டுக் கொட்டை என்றும், காட்டாமணக்கு என்றும் அழைத்து வருகிறார்கள்
- ஜெட்ரோபா சாகுபடிக்கேற்ற தட்ப வெப்ப சூழ்நிலை தமிழகத்தில் இருப்பதாலும், கீழ்க்கண்ட பெருவாரியான நன்மைகள் இருப்பதாலும் ஜெட்ரோபா சாகுபடியை ஊக்குவிக்கலாம்
- வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய பல வருடப் பயிர் கிராமப்புறங்களில் வேலை வாய்ப்பினை அதிகப்படுத்துகிறது
- உழவர்களுக்கு அதிகப்படியான வருமானம்
- சுற்றுப்புறச் சூழல் பாதுகாக்கப்படுகிறது
- கால்நடைகளால் தாக்கப்படாத செடி
தமிழ்நாட்டில் எல்லா மாவட்டங்களிலும் ஜெட்ரோபா சாகுபடி செய்யலாம் மற்ற பணப்பயிர்களுக்கு தேவையான நீரைக்காட்டிலும் ஜெட்ரோபா சாகுபடிக்கு மிகக் குறைந்த அளவு நீரே போதுமானதாக இருப்பதால் குறைந்த நீர்பாசன வசதி உள்ள இடங்களில் மற்ற பயிர்களுக்குப் பதிலாக ஜெட்ரோஃபா பயிரிடலாம்.
வளர்ந்து வரும் நாடுகளின் முன்னேற்றத்திற்கும் அதன் வளர்ச்சிக்கும் பொிதும் உதவுவது நாட்டிலேயே கிடைக்கும் எரிபொருளாகும். எரிபொருள் இயற்கையாகவும், செயற்கையாகவும் கிடைக்கிறது. எரிபொருளின் முக்கியத்துவத்தை உணர்ந்து டீசல், பெட்ரோல் ஆகியவற்றிற்கு மாற்று எரிபொருள் கண்டுபிடிப்பதில் 1930ம் வருடம் முதல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. கரி, விறகு, சாண எரிவாயு, தாவர எண்ணெய்கள் என்று பல வகைகளிலும் மாற்று எரிபொருள் சக்தி பெற முயற்சிகள் செய்யப்பட்டன. நம் இந்தியாவில் எரிபொருள் இறக்குமதிக்காகவே ஆண்டுக்கு ரூபாய் 90,000 கோடி நாம் செலவழிக்க வேண்டியுள்ளது. (அட்டவணை 1).
இந்தியாவில் 380 லட்சம் டன் அளவு டீசல் உபயோகப்படுத்தப்படுகிறது. இதற்காக மத்திய அரசு 9130 கோடி ரூபாய் மானியமாக வழங்கி வருகிறது. (Economic Survey / 2001 - 2002) டீசல் பெட்ரோல் போன்ற எரிபொருள்கள் முக்கியமாக போக்குவரத்துத் துறைகளிலும், தொழிற்சாலைகளிலும் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. காட்டாமணக்கிலிருந்து கிடைக்கும் எண்ணெய்யை மாற்றாக உபயோகப்படுத்துவதாலும் அல்லது 20 சதவிகித அளவு கலந்து உபயோகிப்பதாலும் இறக்குமதிக்கு செலவிடப்படும் அந்நிய செலாவணியை (Foreign Exchange) குறைக்கவும், நாம் அயல்நாட்டை சார்ந்திருக்கும் தன்மையையும் தவிர்க்கலாம். மேலும், தாவர எண்ணணெய்களிலிருந்து, எடுக்கப்படும் பயோ டீசல், பெட்ரோல் போன்ற எரி பொருளைப் பயன்படுத்தும்போது அவற்றிலிருந்து வெளியேறும் கழிவுகள் இயற்கையை மாசுபடுத்துவதும் குறையும்
- 1980 ஆம் ஆண்டு முதன் முதலாக தாய்லாந்து நாட்டில் ஜெட்ரோஃபா எண்ணெய், டீசலுக்கு மாற்று எரிபொருளாகப் பயன்படுத்துவது பற்றி ஆய்வு நடத்தப்பட்டது.
- 1993- ல் ஜெர்மனியில் ஆய்வுகள் நடத்தப்பட்டு ஜெட்ரோஃபா எண்ணெய் மூலம் என்ஜின் இயக்குவதற்கும், தண்ணீர் பம்ப் மற்றும் மில்லில் அரவை இயந்திரம் இயக்குவதற்கும் பயன்படுத்தலாம் எனக் கண்டுபிடித்தனர்.
- ஜெட்ரோஃபாவை உயிர் வேலிப் பயிராக பயிரிடுவதால், காற்று மூலம் ஏற்படும் மண் அரிப்பை தடுக்க முடியும்
- ஜெர்மனி, ஜிம்பாப்வே, ஆஸ்திரியா, ஹங்ஹேரி, மெக்சிகோ, இஸ்ரேல், அர்ஜெண்டினா, மேற்கு ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் இது சாகுபடி செய்யப்படுகிறது.
- 1997 - ல் ஜிம்பாப்வேயில் சுமார் 2000 எக்டரிலும், நிக்கார்குவாவில் 1000 எக்டரிலும் சாகுபடி செய்யப்பட்டு பின்னர் விரிவு படுத்தப்பட்டது
பயோடீசலில் சிறப்பு அம்சங்கள் பல உள்ளன. இது உயிர் பொருளில் இருந்து உற்பத்தி செய்வதால், தொடர்ந்து கிடைக்கும். தன்மை கொண்டது என்பதே முதன்மையான சிறப்பு அம்சமாகும். இதன் குணங்கள் ஏறக்குறைய டீசலுக்கு சமமாக உள்ளன. எனவே பயன்படுத்தும்போது, வாகன எஞ்சினில் இருந்து அதிக அளவு மாசுக்காற்று வெளிவருவதில்லை.
அதாவது இதில் சிறிய அளவு கூட சல்பர் இல்லை. இப்போது பயன்பாட்டில் இருக்கும் டீசல் எஞ்சினில் எந்தவித மாற்றமும் செய்யாமல் அப்படியே இதனைப் பயன்படுத்தலாம். நாம் ஒரு டன் பயோ டீசலைப் பெற ஒரு எக்டேரில் காட்டாமணக்குச் செடியை பயிர் செய்ய வேண்டும். இது காற்று மண்டலத்தில் உள்ள கார்பன் - டை ஆக்ஸைடைக் குறைக்கிறது.
அட்டவணை 1. இந்தியாவில் கச்சா எண்ணெய் உற்பத்தியும் இயக்குமதியும்
வருடம் |
உற்பத்தி மி.டன் |
இறக்குமதி மி.டன் |
மொத்தம் மி.டன் |
மதிப்பு(ரூ.கோடியில்) |
1991 |
6.8 |
11.7 |
18 |
107 |
1981 |
10.5 |
16.2 |
26.7 |
3349 |
1991 |
33.0 |
20.7 |
53.7 |
6118 |
2001 |
32.0 |
57.9 |
89.9 |
30695 |
2002 |
32 |
73.5 |
105.00 |
90000 |
காட்டாமணக்கு செடியின் தாவர குணாதிசயங்கள்
காட்டாணமக்கு டிசடி யூபோர்பியேசியே (Euphobiaceccae) என்ற தாவர பயிர் குடும்பத்தை சார்ந்தது. ஜெட்ரோஃபா (Jatropha) என்ற பெரு இனத்தில் (Genus) 176க்கும் மேலான சிற்றினங்கள் (Species) உள்ளன.
- Jatropha curcas (ஜெட்ரோஃபா கர்க்கஸ்)
- J.Intergerrima (ஜெட்ரோஃபா இன்டர்ஜெரிமா)
- J.gospifolia (ஜெ.காஸிப்பிபோலியா)
- J.podagarica (ஜெ.போடாக்ரிகா)
- J.multifida (ஜெ.மல்டிபிடா)
- J.tanjorensis (ஜெ.தாஞ்சூரன்சிஸ்)
- J.glandulifera (ஜெ.கிாண்டிபிரா)
இவற்றுள் ஜெ.கர்க்கஸ் என்ற வகைதான் அதிக எண்ணெய் சதவீதம் (30-35%) கொண்டது. இதிலிருந்து கிடைக்கும் எண்ணெய் டீசலின் தன்மைகள் கொண்டு உள்ளது. இந்த பயோ டீசல் என்ற இயற்கை எரிபொருள், தொழிற்சாலைகளின் பாய்லர்களுக்கு எரிபொருளாகவும், விவசாயத்திற்கு தேவைப்படும். டீசல் என்ஜின்களை இயக்குவதற்கும் உபயோகப்படுத்தலாம்.
1.இதனை ஆடுகள் போன்ற கால்நடைகள் உண்ணுவதில்லை.
2.ஜெட்ரோஃபா எண்ணெ பிழிந்தெடுக்கப்ட்ட பின்னர் ஜெட்ரோபா புண்ணாக்கை இயற்கை உரமாகப் பயன்படுத்தலாம்.
ஜெ.கர்க்கஸ் சுமார் 5 மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய சிறிய மரம் எனலாம். இது வெப்ப மற்றும் மித வெப்ப மண்டல நாடுகளில் நன்றாக வளரக்கூடியது. தமிழ் நாட்டில் பெரும் பாலான கிராமங்களில் வேலிக்காக இது பயிர் செய்யப்படுகிறது. இது 30-40 வருடங்கள் வரை வளர்ந்து பயன்தரக் கூடியதாகும்.
ஜெ.கர்கஸ் என்ற காட்டமணக்கு தென் அமெரிக்காவை தாயகமாகக் கொண்டு, பின்னர் போர்துக்கீசியர்களால் ஆப்பிாிக்கா மறறும் ஆசிய நாடுகளுக்கு கொண்டு வரப்பட்டவை.
வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய பயிராக இருப்பதால் தரிசு நிலங்களில் பயிரிட ஏற்றது.
இலைகள் : காட்டாமணக்கின் இலைகள் நன்கு அகலமாக விரிந்து 3 முதல் 5 பிளவுகளை நுனியில் கொண்டதாகவும், நல்ல கரும்பச்சை நிறத்திலும் இருக்கும். சாதாரணமாக 8 செ.மீ. நீளமும், 10 செ.மி. அகலமும் உடையதாக இருக்கும்.
பூக்கள்: ஜெட்ரோஃபாவின் மலர்கள் கொத்தாக பூக்கும் தன்மையுடையது. இதன் தண்டு மிருதுவாக இருக்கும். பெண் பூக்கள் ஆண் பூக்களைக் காட்டிலும் சிறிது பெரியவையாக இருக்கும். பூக்கள் மஞ்சள் கலந்த பச்சை நிறத்தல் இருக்கும்.
காய்கள் : செடிகளில் காய்கள் கருநீல நிறத்தில் பெரியதாக இரண்டு அல்லது மூன்று அறைகள் கொண்டதாக இருக்கும். இவற்றில் கருநீல விதைகள் இருக்கும். மலர்கள் கருவுற்ற நாளிலிருந்து 2 மாதங்களில் முற்றும் காய்கள் பச்சை நிறத்திலிருந்து மஞ்சளாக மாறும்போது விதைகள் முற்றி அறுவடைககுத் தயாராகிறது.
காட்டாமணக்கு சாகுபடிக்கு உகந்த மண் வகைகள்: ஜெட்ரோஃபா ஏறக்குறைய எல்லா இடங்களிலும் வளரக்கூடியது. கரளை மற்றும் கற்கள் நிறைந்த மண், மணற்பாங்கான இடம், வளம் குன்றிய மண் பகுதிகளிலும் வளரும் தன்மையுடையது. பாறைகள் நிறைந்த பகுதிகளிலும், எந்த வித பாதிப்புமின்றி வளரக்கூடியது. நீர் தேங்கும் பகுதிகள் மற்றும் வடிகால் வசதி இல்லாத களிமண் பூமிகள் ஏற்றதல்ல.
சீதோஷ்ண நிலை: வெப்ப மண்டலம், மித வெப்ப மண்டல் சீதோஷ்ணப் பகுதிகள் செடி வளர்வதற்கு ஏற்றவையாகும். அதிக வெப்பமான பகுதியிலும் (50 டிகிரி செ.கி) குளிர்காலத்தில் மிகவும் குறைந்த வெப்ப அளவிலும் இச்செடி நன்கு வளரக் கூடியது. மண் அரிப்பைத் தடுக்கவும் இச்செடி உதவுகிறது.
காட்டாமணக்கு சாகுபடி தொழில்நுட்பங்கள்: காட்டாமணக்கு சாகுபடிக்கேற்ற தொழில் நுட்பங்கள் கீழே தரப்பட்டுள்ளன. நாற்றங்கால்களில் நாற்றுகளை வருடம் முழுவதும் தொடர்ந்து உருவாக்கலாம். வடகிழக்கு பருவமழை தொடங்கும் செப்டம்பர்-அக்டோபர் மாதங்கள் நடுவதற்கு ஏற்றது.
விதையளவு: காட்டாமண்ககு பயிரிட 30 சதவீதத்திற்கும் அதிகமாக எண்ணெய்ச் சத்து அளவு கொண்ட இரகங்களை உபயோகப்படுத்துவதே பொருளாதார ரீதியாக நன்மை பயக்கும். 3 X 2 மீட்டர் இடைவெளியில் ஒரு எக்டேருக்கு 1660 நாற்றுகளை நடவேண்டும். நல்ல தரமான விதைகளின் முளைப்புத் திறன் 50 முதல் 60 சதவீதமாகும். ஒரு எக்டேருக்கு 2 கிலோ விதை போதுமானதாகும். அறுவடை செய்த ஒரு மாதத்திலிருந்து மூன்று மாதத்திற்குள் உள்ள விதைகளையே விதைப்பதற்கு பயன்படுத்த வேண்டும். மூன்று மாதங்களுக்கு மேல் ஆகும்போது முளைப்புத்திறன் குறைந்து விடும்
விதை நேர்த்தி செய்தல்: விதைகளின் முளைப்புத்திறனை அதிகரிக்க, விதைகளை 12 மணி நெரம் நீரில் ஊற வைத்துப் பின் விதைக்க வேண்டும். பூஞ்சாண நோய்களை தடுக்க விதைகளை 1 சதம் போர்டே கலவை அல்லது 0.2 சதம் காப்பர் ஆக்ஸி குளோரைடு கலவையில் நனைக்க வேண்டும்
நாற்றங்கால் தயாரித்தல் 10 X 20 செ.மீ. அளவுள்ள பாலிதீன் பைகளில் செம்மண், மணல் மற்றும் தொழுஉரம் 3:1:1 என்ற அளவில் நிரப்ப வேண்டும். பாலித்தீின் பைகளில் அதிகப்படியான நீர் வெளியேறுவதற்காக அவற்றின் அடிப்பாகத்தில் 4 துவாரங்கள் ஏற்படுத்த வேண்டும். நேர்த்தி செய்யப்பட்ட முளைப்புக் கட்டிய விதைகளை 1 செ.மீ ஆழத்தில் படுக்கை வசமாக ஊன்ற வேண்டும். விதைகள் 3 நாட்களில் முளைக்கத் தொடங்கும். இந்த நாற்றுப்பைகளை மாதத்திற்கு ஒருமுறை இடம் மாற்றி, வேர் மண்ணில் இறங்குவதைத் தவிர்க்க வேண்டும். தொண்ணூறு நாட்களில் நாற்றுகள் நடவுக்குத் தயாராகிவிடும். மூன்று முதல் ஆறு மாதங்களுக்கு நாற்றுகளைப் பைகளில் வைத்திருக்கலாம்
நடவு வயல் தயார் செய்தல்: சட்டிக்கலப்பையால் இருமுறையும், கொத்துக்கலப்பபையால் ஒருமுறையும் உழவு செய்யவேண்டும். தோட்டத்தைக் களைகளின்றி சமன்படுத்த வேண்டும். பின்பு 3 X 2 மீட்டர் இடைவெளியில் 30 X 30 X 30 செ.மீ. என்ற அளவில் குழிகள் தயாரிக்க வேண்டும். அந்தக் குழிகளில், 2 கிலோ தொழுஉரம் அடி உரமாக இட்டு நாற்றுக்களை நடவேண்டும்.
நாற்றுக்களை நடுதல்: 90 நாட்கள் வயதுடைய நாற்றுக்களை பாலித்தீன் பைகளை எடுத்துவிட்டு, மண் உருண்டை களையாமல் நடவு செய்யவேண்டும். நடவு செய்த பின் செடியைச் சுற்றி நன்கு மிதித்து மண்ணை இறுகச் செய்யவேண்டும். பருவமழை தொடங்கும் காலத்தில் நடவு செய்தல் வேண்டும்.
உரமேலாண்மை: இரண்டாவது ஆண்டு முதல் இரசாயன உரமிடுவது அவசியம். ஒரு செடிக்கு 20:120:60 கிராம் என்ற விகிதத்தில் யூரியா, சூப்பர் பாஸ்பேட் மற்றும் பொட்டாஷ் உரங்களை இரண்டாகப்பிரித்து வருடத்தில் இரண்டு தவணைகளில் 6 மாதத்திற்கு ஒரு முறை மழைக் காலம் தொடங்கும்போது இட வேண்டும்.
நீர்ப்பாசனம் : காட்டாமணக்கு தன் இலைகளை உதிர்த்து மிக நீண்ட வறட்சியையும் தாங்கக் கூடியது. இருந்தாலும் நடும் போது உயிர் நீரும் அதன் பிறகு மழை இல்லாத காலங்களில், தேவைக்கேற்ப 15 முதல் 20 நாட்கள் இடைவெளியில் நீர்ப்பாசனம் செய்தல் வேண்டும். சொட்டு நீர்ப் பாசனம் மூலம் நான்கு நாட்களுக்கு ஒரு முறை 8 லிட்டர் நீர் விட வேண்டும்.
கவாத்து செய்தல் : காட்டாமணக்குச் செடியை கவாத்து செய்தல் இன்றியமையாதது. கவாத்து செய்வதால் பக்கக் கிளைகள் அதிகரிக்கும். பூக்கொத்துக்களின் எண்ணிக்கையும் மகசூலும் கூடும். முதல் கவாத்து நட்ட ஆறாவது மாதம் அல்லது பூக்கும் முன்னர் மேற்கொள்ளப்பட வேண்டும். செடிகளை தரையில் இருந்து 45 செ.மீ. உயரத்தில் வெட்ட வேண்டும். இரண்டாம் ஆண்டில், காட்டாமணக்கு செடி பூக்கும் முன்னர் 6 மாத இடைவெளியில் இரண்டு முறை கவாத்து செய்ய வேண்டும். மூன்றாம் ஆண்டிலிருந்து வருடத்துக்கு ஒரு முறை இலையுதிர் காலத்தில் (பிப்ரவரி - மார்ச்) ஒரே மட்டத்தில் கவாத்து செய்ய வேண்டும்.
ஊடுபயிர்கள்: நடவு செய்த முதல் இரண்டு வருடங்களில் செடிகளின் வரிசையினூடே நிலக்கடலை, எள், பாசிப்பயறு, உளுந்து, ஆகிய பயிர்களை ஊடுபயிராக சாகுபடி செய்யலாம். முதல் இரண்டு ஆண்டுகளில் காட்டாமணக்கில் ஊடுபயிர் சாகுபடி செய்வதன் மூலம் சுமார் ரூ.7,350 வருமானம் பெறலாம்.
பயிர் பாதுகாப்பு: இலை பிணைப்பான் என்ற பூச்சி வரும் இலைகளுடன் பின்னிப்பிணைந்து இலைகளை கூடாக மாற்றும். இது புதிய தளிர்களையும், தண்டுகளையும் சுரண்டி உண்ணும். இதைக் கட்டுப்படுத்த எண்டோசல்பர் 2மிலி. ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும். ஒரு எக்டேருக்கு ஒரு லிட்டர் மருந்து தேவைப்படும்
தண்டு அழுகல் நோய், செடிகளின் தண்டின் அடிப்பாகத்தில் மண்ணோடு சேருகின்ற இடத்தில் தோன்றும். இதனால் செடிகள் காய்ந்துவிடும். இதைக்கட்டுப்படுத்த ஒரு சதம் போர்டோ கரைசலை, செடியின் அடியில் தண்டினைச் சுற்றி மண்ணில் ஊற்றி நனைக்க வேண்டும்.
மகசூல் : பசும்காய்கள் முதிர்ந்தவுடன் மஞ்சள்நிறமாக மாறும். பின்பு காய்கள் காய்ந்து கருப்பு நிறமாக மாறிவிடும். ஒவ்வொரு காயிலும், மூன்று விதைகள் இருக்கும்.
அட்டவணை 1. காட்டாமண்ககு இறவை மகசூல்
வருடம் |
மகசூல் |
|
கிலோ செடி |
டன் எக்டேர் |
முதலாம் ஆண்டு |
மகசூல் இல்லை* |
இரண்டாம் ஆண்டு |
மகசூல் இல்லை* |
மூன்றாம் ஆண்டு |
1.5 |
2.5 |
நான்காம் ஆண்டு |
1.8 |
3.0 |
ஐந்தாம் ஆண்டு |
2.1 |
3.5 |
ஆறாம் ஆண்டு முதல் |
2.1 |
3.5 |
மூன்றாம் வருடத்தில் இருந்து தொடங்கும் மகசூலானது, ஐந்தாம் வருடம் முதல் நிலைக்கப்பெறும். மூன்றாம் ஆண்டில் இருந்து செடிக்கு 1.5 கிலோ விதை மகசூலும் ஐந்தாம் ஆண்டு முதல் 2.1 கிலோ விதை மகசூலும் கிடைக்கும். சிறந்த சாகுபடி முறைகளை பின்பற்றி நீர்ப்பாசனம் கொடுத்து வளர்த்தால் எக்டேருக்கு 2.5 முதல் 3.5 டன் விதைகள் கிடைக்கும்.
காட்டாமணக்கில் முதல் இரண்டு ஆண்டுகளில் முழுவதும் கவாத்து செய்வதால் வருமானம் இருப்பதில்லை. மூன்றாம் ஆண்டில் நிகர வருமானம் ரூ.11,570 கிடைக்கும். நான்காம் ஆண்டில் ரூ.15,170 கிடைக்கும். ஐந்தாம் ஆண்டில் ரூ.20,128 கிடைக்கும். காட்டாமணக்குப் பயிரில் இருந்து கிடைக்கும் வருமானத்தை பிற பயிர்களில் இருந்து கிடைக்கும் நிகர வருமானத்துடன் நேரடியாக ஒப்பிட இயலாது. ஏனெனில் இது அந்நியச் செலாவானியை மிச்சப்படுத்த உதவுவதுடன், வளம் குறைவாக உள்ள நிலங்களிலும், மிகக் குறைந்த நீர்ப்பாசனத்தில் குறிப்பிடத்தக்க வருமானம்தரும் பயிராகும். நாற்றுகளுக்கும் சொட்டுநீர்ப்பாசனத்துக்கும் 50 சதவீதம் மானியம் கொடுத்தால், முதலீட்டை திரும்ப பெறும் காலம் நான்கு ஆண்டுகளாக குறைகிறது.
காட்டாமணக்கு சாகுபடியில் தள்ளுபடி செய்யப்பட்ட வருவாய் மற்றம் செலவை ஈடுகட்டும் வீதம் (IRR) 17.05 சதவீதம் எனவும், வருவாய், மற்றும் செலவு வீதம் 1.85 சதவீதம் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது. குறிப்பாக விதையின் விற்பனை விலையை கிலோவிற்கு ரூபாய் 8 என்ற அளவில் நிர்ணயித்தால், நிகர வருமானம் லாபகரமானதாக இருக்கும்.
பயோ டீசல்:
காட்டாமணக்கின் விதையினுள் 66-68 சதம் பருப்பும் 46-58 சதம் எண்ணையும் உள்ளது. எண்ணெய் பிழியும் இயந்திரத்தின் மூலம் இருமுறை பிழந்தெடுத்தால் பருப்பில் இருந்து 30-35 சதம் வரை எண்ணெய் எடுக்கலாம். இந்த எண்ணெய் திரவ எரிபொருளாக மாற்றும் தொழில் நுட்பத்தை எஸ்டிரிப்பிகேசன் என்று அழைக்கிறோம். அதாவது எண்ணெயிலிருந்து கிலிசராலைப்பிரித்தெடுக்கும் தொழில் நுட்பம் என்று கூறலாம். இந்த தொழில் நுட்பம் தான் தற்போது வேளாண் பல்கலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
விதையில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட எண்ணெயுடன் ஒரு குறிப்பிட்ட வெப்ப நிலையில் குறிப்பிட்ட சதவீதத்தில் மெத்தனால் எனப்படும் எரிசாரயமும் வேதியியில் கிரியாயூக்கியும் கலந்த திரவத்தையும் சேர்த்து கலக்கினால் இதில் இருக்கும் கிலிசரால் என்ற பொருள் தனியாக பிரிகிறது. அதன் பின் தெளியவைத்தால், கிலிசரால் கீழ் பகுதியில் தேங்கி நிற்கும். அதை தனியாக பிரித்து எடுக்க வேண்டும். அப்போது நமக்கு திரவ எரிபொருள் கிடைக்கிறது. இதனை பயோ டீசல் என்று கூறுகிறோம். இதனை நேரடியாக இன்ஜினை ஓட்ட பயன்படுத்தலாம்.
பயோ டீசல் தாவரத்திலிருந்து உற்பத்தி செய்வதால் தொடர்ந்து கிடைக்கும் தன்மையுடையது. டீசலுக்கு நிகரான குணமுடையது. இயற்கையான சுற்றுசூழலுக்கு நன்மை செய்யகூடியது. மிகக்குறைந்த சல்பர் அளவை கொண்டது. டீசல் என்ஜினில் எந்த மாற்றமும் செய்யாமல் பயன்படுத்தலாம். இதனை பயன்படுத்தும் போது வெளியேறும் புகை மிகவும் குறைவு. மூலப்பொருளுக்காக விளைவி்கப்டும் காட்டாமணக்கு செடி காற்று மண்டலத்தில் கார்பன்டை ஆக்சைடை குறைத்து ஆக்சிஜனை அதிகப்படுத்துகிறது.
ஜெட்ரோஃபா கர்கஸின் முதிர்ந்த விதைகளிலிருந்து கிடைக்கும் பயன்களில் முதன்மையானது. “பயோ டீசல்” எனப்படும். இயற்கை உயிரி எரிபொருளாகும். இந்த இயற்கை உயிரி எரிபொருள் (பயோ டீசல்) தொழிற்சாலைகளில், பாய்லர்கள் போன்றவற்றிற்கு எரிபொருளாகவும், வேளாண்மைக்குத் தேவையான டிசல் இன்ஜின்களை இயக்குவதற்கும் மிகவும் உபயோகப்படுகின்றது.
விதைகளிலிருந்து எண்ணெய்ப் பிழிவு இயந்திரம் மூலம் (Expeller) பிழிந்தெடுக்கலாம். ஜெட்ரோஃபாவின் விதைகளிலிருந்து எண்ணெய் பிழிந்தெடுக்கப்பட்ட பிறகு ஜெட்ரோஃபாவின் புண்ணாக்கும் உரமாக பயன்படக்கூடியது.
ஜெட்ரோஃபாவின் ஒரு டன் விதைகளிலிருந்து 300 கிலோ எண்ணெயும், 700 கிலோ புண்ணாக்கும் கிடைக்கும். புண்ணாக்கை நிலத்திற்கு அங்கக உரமாக இடலாம். இதில் அதிக அளவு தழை, மணி, சாம்பல் சத்து உள்ளது. நச்சு நீக்கப்பட்ட புண்ணாக்கு கால்நடை தீவனமாகவும் பயன்படுத்தலாம்.
ஜெட்ரோபா ப்யோடீசலின் சிறப்பு அம்சங்கள்
- பயோ டீசல் நச்சு தன்மை அற்றது. இவை எளிதில் உயிர்ம சிதைவு ஏற்படக் கூடியது
- பயோ டீசல் தீப்பிடிக்கத் தேவைப்படும் வெப்பநிலை சாதாரண டீசலை விட அதிகமாகும். எனவே, இதனைக் கையாளுவது, பிறஇடங்களுக்கு எடுத்துச் செல்வது, சேமிப்பது போன்றவை டீசலை விட பாதுகாப்பானது ஆகும்.
- கந்தகம் மற்றும் புற்று நோய் உண்டாக்கும் பென்சீன் (Benzene) போன்ற வேதிப் பொருட்கள் இதில் இலலை
- இப்போது பயன்படுத்தப்படும் சாதாரண டீசல் என்ஜின்களில் எவ்வித மாற்றமும் செய்யாமல் பயோ டீசலை நேரடியாகப் பயன்படுத்த முடியும்
- உருவமைப்பு செய்யும் பொருட்கள் செய்யவும்
- மின்மாற்றி எண்ணெய் (Transformer)
- நீண்ட தொடர் எரிசாராயம்(Long Chain Alcohol)
- தோல் பதனிடவும்
- பிசின் தயாரிக்கவும்
- நூற்பாலைகளில் பயன்படும் எண்ணெயாகவும்
- தீ தடுப்பு சாதனங்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது
- மேலும் ஜெட்ரோஃபா மரத்தின் பட்டையிலிருந்து எடுக்கப்படும் கருநீல வண்ணம் (Dye) துணிகளுக்கும், சாயம் அளிக்கவும் மீன் வலைகளுக்கும் நிறம் கொடுப்பதற்குப் பயன்படுகிறது.
- ஜெட்ரோஃபா இலைகள் பட்டுப்பூச்சிகளுக்கு உணவாகப் பயன்படுகிறது
பயோ டீசல் தயாரிக்கும் முறை:
உலகின் எல்லா நாடுகளிலும், பெட்ரோலிய பொருள்களின் தட்டுப்பாடு இரண்டாம் உலகப் போர் காலம் தோட்டே தோடங்கிவிட்டது. அதுவே தொடர் கதையாகி பெட்ரோலுக்கு மாற்று எரிபொருள் கண்டுபிடிக்க உலகம் முழுவதும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
1980 ஆம் ஆண்டு முதன் முதலாக தாய்லாந்து நாட்டில் ஜெட்ரோஃபா மற்றும் கடலை எண்ணெய் ஆகியவற்றை டீசலுக்கு மாற்றுப் பொருளாக பயன்படுத்த தாய் தாய்லாந்து அறிவியல் மற்றும் தொழில் நுட்ப ஆராய்ச்சி நிலையம் ஆய்வினைத் தொடர்ந்து செய்தது. இந்த ஆய்வில் டீசல் எண்ணெயை விட தாவர எண்ணைகளின் வழவழப்பு தன்மை மிக அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் தாவர எண்ணெய் நேரடியாக டீசல் என்ஜினில் எரிபொருளாகப் பயன்படுத்துவது சற்று சிரமமாக இருந்தது. அதாவது தாவர எண்ணெய் இன்ஜின்களில் எளிதில் தீப்பற்றுவதில்லை.இவை இன்ஜனில் சரிவர எரிவதில்லை. இந்த எண்ணெய் நிலையற்ற தன்மை கொண்டது. இந்த குறைகள் ஆய்வு மூலம் வெற்றிகரமாக சரிசெய்யப்பட்டன. தாவர எண்ணெய்களில் வழவழப்பு தன்மை குறைந்தால்தான் அவை எளிதில் தீப்பற்றும்.
ஜெட்ரோஃபாவில் காணப்படும் வழவழப்புத் தன்மையை இன்னும் குறைத்தால் அவை எரிபொருளாக பயன்படுத்த மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த வழவழப்பு தன்மையைக் குறைக்க கையாளும் வேதியல் முறைக்கு டிரான்ஸ்எஸ்ட்ரிபிகேஷன் எனப்பெயர். இந்த வெதியியல் முறையில்தான் பயோ டீசல் தயாரிக்கப்படுகிறது.
பயோ டீசல் தயாரிக்கும் முறை
- பெஜட்ரோஃபா காட்டாமணக்கு விதைகள் பிழிந்தெடுத்தல்
- சுத்திகரிக்கப்படாத காட்டாமணக்கு எண்ணெய்
- சுத்திகரித்தல்
- சுத்திகரிக்கப்பட்ட காட்டமணக்கு எண்ணெய்
- சுத்தகரித்தல்
- சுத்திகரிக்கப்பட்ட காட்டாமணக்கு எண்ணெய்
- இருநிலை டிரான்ஸ் ஈஸ்டரிபிகேஷன்
- பயோ டீசல்
காட்டாமணக்குச் செடியின் மரப்பகுதியும், விதையும் பல்வேறு வகையில் பயன்படுகின்றன. இதில் ஆற்றல் உற்பத்தியும் அடங்கும். காட்டாமணக்கின் விதைகளில் இருந்து 30-40 விழுக்காடு வரை வழுவழுப்பான, அடர்த்தியான எண்ணெய் எடுக்கப்படுகிறது. இதை சொப்பு தயாரிக்கவும், மெழுகுவர்த்தி செய்யவும், எரிக்கவும், சமையல் அடுப்புக்கும் என பல்வேறு வகையில் வெவ்வேறு நாடுகளிலும், பகுதிகளிலும் பயன்படுத்தி வருகின்றனர்.
சமீப காலமாக இந்த எண்ணெயை நேரடியாகவும், சுத்தப்படுத்தியும், இயந்திரங்களை இயக்கும் எரிபொருளாகப் பயன்படுத்துகின்றனர், டீசலுடன் 20 விழுக்காடு வரை கலந்து பயன்படுத்தவது வழக்கத்தில் இருந்து வருகிறது. பிரேசில் நாட்டில் இதைப் பயிர் செய்கின்றனர். இதே போல கேப் வெர்டி தீவுகளிலும் இது பயிரிடப்படுகிறது. இந்தத் தீவில் பயிர் செய்யப்படும் இரகம் ஆண்டு முழுவதும் விளைச்சல் தரக் கூடியது என்று அறியப்பட்டுள்ளது.
இதே போல, கனடா நாட்டில் இதன் இலைகளைப் புகைத்து மூட்டைப்பூச்சிகளை விரட்டவும், அசாமில் ஈரிப் பட்டுப்புழு வளர்க்கவும் உபயோகப்படுத்துகின்றனர். இதன் பட்டையில் 37 விழுக்காடு டானின் உள்ளது. இதன் பட்டையில் இருந்து தயாரிக்கப்படும் சாயம், துணி, வலை ஆகியவற்றிற்கு சாயமேற்ற பயன்படுத்தப்படுகிறது. இவை அனைத்தும் இச்செடியின் மற்ற பாகங்களின் பயன்பாடாகும்.
காட்டாமணக்கு விதையில் நீர் 6.62 விழுக்காடும், புரதம் 18.20 விழுக்காடும், கொழுப்பு 38.00 விழுக்காடும், கார்போஹைட்ரேட் 17.98 விழுக்காடும் நார்ப்பொருள் 15.5 விழுக்காடும், உலோக உப்புகள் 4.5 விழுக்காடும் உள்ளன. இப்போது காட்டமணகின் முக்கிய பங்கு ஆற்றல் உற்பத்தி என்ற நோக்கில் தான் பார்க்கப்படுகிறது.
எண்ணெய் பிழியும் இயந்திரங்களின் மூலம் இதில் இருக்கும் எண்ணெயை எடுக்கலாம். இதை இரு முறை பிழிந்தெடுத்தால் பருப்பில் இருந்து 30 - 35 விழுக்காடு வரை எண்ணெய் எடுக்கலாம். இன்னும் மேம்படுத்தப்பட்ட சரியான தொழில் நுட்பத்தை பயன்படுத்தினால் கிடைக்கும் எண்ணெயின் அளவை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்த காட்டாமணக்கு எண்ணெயை டீசலில் கலந்து நேரடியாகவே எஞ்சின்களுக்குப் பயன்படுத்தலாம். அவ்வாறு பயன்படுத்தும் போது எண்ணெயின் அளவு 20 விழுக்காட்டிற்கு மேல் செல்லாமல் பயன்படுத்த வேண்டும். அதற்கு மேல் பயன்படுத்தும் போது நீண்ட கால அடிப்படையில் எஞ்சின்களின் பாகங்கள் பாதிக்கப்படும் வாய்ப்புகள் கூடுகின்றன. இவ்வாறு ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்க எரிபொருளாக மாற்றிப் பயன்படுத்தும் தொழில் நுட்பம் உள்ளது. இந்த எண்ணெயை திரவ எரிபொருளாக மாற்றும் தொழில் நுட்பத்தை எஸ்டிரிப்பிகேசன் என்று அழைக்கின்றோம். விதையில் இருந்த பிரித்தெடுக்கப்பட்ட எண்ணெயிலிருந்து இந்த பயோடீசல் எனப்படும் திரவ எரிபொருள் தயாரிக்கப்படுகிறது.
காட்டாமணக்கு எண்ணெயுடன் குறிப்பிட்ட விழுக்காட்டில் மெத்தனால் எனப்படும் எரிசாராயம், வேதியியல் கிரியாயூக்கியும் கலந்து வினையாற்ற விடுவதன் மூலம் இச்செயல் நடைப்பெறுகிறது. இச்செயல் நடைபெற காட்டாணக்கு எண்ணெயை ஒரு குறிப்பிட்ட வெப்பநிலைக்கு கொண்டு வந்த பின்னரே இந்த மெத்தனால் கலவையை சேர்க்க வேண்டும். சேர்த்த பின்னர் ஒரு குறிப்பிட்ட நேரம் இதை தொடர்ந்து கலக்கிக் கொண்டு கலக்கவேண்டும்.
அவ்வாறு கலக்கும் போது எண்ணெயில் உள்ள கிலிசிரால் பிரிகிறது. இதை ஒரு குறிப்பிட்ட நேரம் கலனில் வைத்திருந்தால், கிலிசிரால் தனியாக கலனின் அடிப்பாகத்தில் படிந்து விடும். அதன் பின்னர் கிலிசிராலைத் தனியாகப் பரித்து எடுத்து விட்டால் நமக்கு பயோடீசல் கிடைக்கிறது. இதை சுத்தமான நீர் கொண்டு இரு முறை கழுவினால், இதில் இருக்கும் வேதியியல் பொருட்கள் நீருடன் கலந்து வெளியேற்றப்படும்.
நீரில் கழுவிய பயோடீசல் பயன்பாட்டிற்கு நேரடியாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. எண்ணெயின் அடர்த்தியான 920 கிராம், லிட்டரில் இருந்து 0.865 ஆக குறைக்கப்படுகிறது. மேலும் எண்ணெயின் பாகுத்தன்மை மிகவும் அதிகம். அதாவது 32.5 ஆக உள்ளது. இதை எஸ்டிரிப்பை செய்யும் போது 5.2 ஆகக் குறைக்கப்படுகிறது. பயோடீசலாக மாற்றிபின், டீசலுடன் ஒப்பிடும் போது, இதன் அடர்த்தி 0.865 ஆகவும் டீசலின் அடர்த்தி 0.841 ஆகவும் உள்ளது.
இந்த சாதனத்தில் வெப்ப படுத்தும் இணைப்புடன் கூடிய வினைக்கலன், கலக்கும் சாதனம், மெத்தனாலையும் கிரியா ஊக்கியையும் கலக்கும் கலன், தெளிய வைக்கும் தொட்டி மற்றும் நீரில் கழுவும் தொட்டி ஆகியன உள்ளன. மேலும் இத்தொழில் நுட்பத்தைப் பன்படுத்தி நமது தேவைக்கு ஏற்ப சாதனத்தைப் பெரிய அளவிலும் வடிவமைத்துக் கொள்ளலாம்.
இந்நிலையில், நமது நாட்டிலேயே ஆற்றல், அதிலும் மாசு குறைந்த உயிர் ஆற்றலைத் தரும் இச்செடியும், இதில் இருந்து கிடைக்கும் பயோ டீசலும், வரும் காலங்களில் பெரிய மாற்றத்தை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை.
ஜெட்ரோபா எண்ணெயின் குணங்கள் டீசல் குணங்களுடன் - ஒப்பீடு செய்து பார்த்தால் ஜெட்ரோ கர்கஸ் பயோடீசல் மிக ஒத்த பண்புடையதாக கருதப்படுகிறது.
(அட்டவணை 2) ஜெட்ரோஃபா மற்றும் தாவர எண்ணெய்களின் அடர்த்தி, வழவழப்பு தன்மை
எண் |
தாவர எண்ணெய் |
அடர்த்தி கிராம், மி.லி. 21 செ.சி. வெப்ப நிலை |
வழவழப்பு தன்மை சென்டி பாய்ஸஸ் 21 செ.சீ.வெ.நிலை |
வெப்ப மதிப்பு சி.ஜீல், கி.கி. |
1. |
டீசல் |
0.845 |
3.8 |
46.800 |
2. |
ஜெட்ரோஃபா கர்கஸ் எண்ணெய் |
0.915 |
36.9 |
39.000 |
3. |
கடலை எண்ணெய் |
0.914 |
67.1 |
39.470 |
4. |
எண்ணெய் பனை |
0.898 |
88.6 |
39.550 |
5. |
தேங்காய் எண்ணெய் |
0.915 |
51.9 |
37.540 |
6. |
சூரியகாந்தி எண்ணெய் |
0.918 |
60.0 |
39.490 |
7. |
சோயா எண்ணெய் |
0.918 |
57.2 |
39.35 |
அட்டவணை 3. ஜெட்ரோஃபா புண்ணாக்கிலும் மற்ற இயற்கை உரங்களிலும் உள்ள சத்துக்கள் – ஒப்பீடு
எண் |
உரங்களின் பெயர் |
ஈரத்தன்மை |
தழைச்சத்து |
மணிச்சத்து |
சாம்பல் சத்து |
1. |
ஜெட்ரோபா புண்ணாக்கு |
4.58 |
4.44 |
2.09 |
1.68 |
2. |
பசுஞ் சாண உரம் |
9.70 |
0.97 |
0.69 |
1.66 |
3. |
கோழி கழிவு உரம் |
10.19 |
3.04 |
6.27 |
2.08 |
4. |
வாத்து கழிவு உரம் |
17.57 |
2.37 |
2.10 |
1.09 |
5. |
வைக்கோல் கம்போஸட் |
- |
0.81 |
0.18 |
0.68 |
6. |
நீர்த்தாமரை (Water hyacinth) |
- |
1.43 |
0.46 |
0.48 |
7. |
முனிசிபல் கம்போஸ்ட் |
- |
1.25 |
0.25 |
0.65 |
மற்ற இயற்கை உரங்களை ஒப்பிடும்போது, ஜெட்ரோ கர்கசின் புண்ணக்கில் தழைச்சத்து அதிகமாக உள்ளது. (அட்டவணை -3) ஜெ.கர்கஸ் எண்ணெயின் இரசாயன குணங்கள் டீசலுக்கு ஒப்பாக கருதப்படுகிறது (அட்டவணை 4)
ட்ரான்ஸ் ஈஸ்டரிகேஷன் முறையில் காட்டாமணக்கு தாவர எண்ணெயில் வழவழப்பு தன்மையை குறைப்பது மட்டுமல்லாமல் அதிக நிலைத்தன்மை கொண்ட எரிபொருளாக ஜெட்ரோஃபா மூலம் தயாரிக்கப்படும் பயோ டீசலில் சாதாரண டீசலை விட அதிக சீட்டேன் எண் கொண்டதாக இருக்கிறது. இது எரிபபொருளில் மிகவும் அனுகூலமான பண்பு ஆகும் (அட்டவணை -5).
மத்திய திட்டக் குழு பயோடீசல் உற்பத்திக்கென ரூ.1500 கோடி ஒதுக்கியுள்ளது. இந்திய எண்ணெய் வித்து மற்றும் தாவர எண்ணெய் உற்பத்தி குழு (NOVOD Board) புங்கன் மற்றும் ஜெட்ரோபாவை விவசாய நிலங்களில் மாதிரி பண்ணைகள் அமைக்கவும், வேளாண் குடிமக்களுக்கு பயிற்சி நடத்தி சிறிய அளவில் ஆய்வுகள் நடத்த திட்டம் தொடங்கியுள்ளது.
இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் (ICAR), ஜெட்ரோபா உள்பட 8 வகை எண்ணெய் வித்து மரவகைகளில் மர இன மேம்பாடு, சாகுபடி முறைகள், நாற்று உற்பத்தி, விதை தரக்கட்டுப்பாடு முதலான துறைகளில் ஆய்வு மேற்கொள்ள நிதியுதவி அளிக்கிறது.
அட்டவணை 4. ஜெட்ரோபா கர்கஸ் எண்ணயின இரசாயன குணங்கள்
|
விபரங்கள் |
மதிப்பு |
1. |
அமில மதிப்பு |
38.2 |
2. |
சப்போனிஃபிகேஷன் மதிப்பு |
195.0 |
3. |
அயோடின் மதிப்பு |
101.7 |
4. |
வழவழப்பு தன்மை (%) |
40.4 |
5. |
பால்மிட்டிக் அமிலம்(%) |
4.2 |
6. |
ஒலீயிக் அமிலம்(%) |
43.1 |
7. |
வினோ லியிக் அமிலம்(%) |
34.3 |
8. |
இதர அமிலங்கள்(%) |
1.4 |
அட்டவணை 5. ஜெட்ரோ எண்ணெய், டீசல் எண்ணெய்யின் குணாதிசியங்கள்
எண் |
அளவுகோல் |
நிரந்தர அளவுகோல்கள் |
ஜெட்ரோ எண்ணெய் |
டீசல் |
|
ஸ்பெஸிஃபிக் கிராவிட்டி (Specific gravity) |
0.9186 |
0.82,084 |
|
ஃபிளாஷ் பாயிண்ட் (Flash Point) |
240, 110 சி. |
50 சி |
|
கரிம படிவுங்கள் (Carbon rediue) |
0.64 |
0.15 - க்கும் குறைவு |
|
சீட்டேன் அளவு |
51.0 |
47.8 |
|
டிஸ்டிலேசன் பாயிண்ட் |
95 சி |
350 சி |
|
கந்தக அளவு (%) |
0.13% |
1.2% க்குறைவு |
|
கலோரி மதிப்பு |
9470 கீ. கலோரி |
10170 கீ. கலோரி |
இந்தியாவில் ஜெட்ரோபாவின் நிலை
- நமது இந்திய இரஙில்வே துறை தன்னிடம் உள்ள இரயில் பாதைகளின் இருபுறங்களிலும் சுமார் 2500 கி.மீ.க்கு தரிசாக உள்ள நிலங்களில் ஜெட்ரோபாவை பயிரிட்டு இரயில்வேக்கு தேவைப்படும் பெட்ரோல், மற்றும் டீசல் தேவையினை இச்சாகுபடியின் மூலம் 10 தேவை குறிப்பதற்கான திட்டத்தை செயல்படுத்தி திட்டமிட்டுள்ளது
- இந்திய ஆயில் கார்ப்பரேஷனும், இரயில்வே துறையும் பெட்ரோல் டீசலுடன் 10 ஜெட்ரோ ஆயில் கலந்த உபயோகிக்க ஒருங்கிணைந்த செயல்பட் உள்ளனர்.
சமூக பொருளாதார நன்மைகள் : ஜெட்ரோ சாகுபடி செய்யப்படுவதால் சுற்றுப்புற சூழ்நிலைபாதுகாக்கப்படுவதுடன், கிராமப்புறங்களில் வசிக்கும் பெரும்பான்மையான மக்கள் தொகை விவசாயத்தை நம்பியேஇருப்பதால், இவர்களுக்கு வருடம் முழுவதும் வேலைவாய்ப்பு கொடுத்து அவர்களின் வருமானத்தை அதிகரிக்கச் செய்வதன் மூலமே நாட்டின் பொருளதாரத்தை முன்னேற்றுவிக்க முடியும்
அதிக வருமானத்திற்கு வாய்ப்பு : ஜெட்ரோ சாகுபடி 3 ம் வருடத்திற்கு மேல் ஒரு ஏக்கருக்கு ரூபாய் 15000 வரை கிடைப்பதுடன் வருடம் முழுவதும் வேலை வாய்ப்பினைத் தருகிறது.
சுற்றுப்புற சூழல் நன்மை : ஜெட்ரோபாவை நிரந்தரமாக பயிரிடுவதால் மண் அரிப்பு தடுக்கப்படுவதுடன் நிலத்தடி நீர் சேமிக்கப்படுகிறது. பயோ டீசல் உபயோகப்படுவதால் கார்பன், சல்பர் டை ஆக்ஸைடு சுற்றுப்புறத்தில் குறைக்கப்படுவதால் காற்றின் நச்சுத்தன்மை குறைகிறது.
பரிந்துரைக்கப்பட்ட சாகுபடி தொழில் நுட்பங்கள் காட்டாமணக்கு சாகுபடி ஏன்?
- காட்டாமணக்க விதையிலிருந்து பயோடீசல் எனப்படும் திரவ எரிபொருள் கிடைக்கிறது
- விலைவீழ்ச்சி இல்லாத நிரந்தர வருமானத்தைக் கொடுக்கக்கூடியது
- நாட்டின் பொருளாதார தற்சார்பை ஏற்படுத்தும்
- கிராமப்புறங்களில் வேலை வாய்ப்பை உருவாக்கும்
- குறைந்த நீர் கொண்டு வளரக்கூடியது
- இதிலிருந்து தயாரிக்கப்படும் திரவ எரிபொருள் சுற்றுப்புறச் சூழலை மாசுபடுத்தாது
காட்டாமணக்கு பயிர் எத்தகையது?
காட்டாமணக்கு ஒரு புதர் செடி. இதை ஆங்கிலத்தில் “ஜட்ரோபா” என்று அழைப்பார்கள். இதை ஒருமுறை நடவுசெய்தால் 30 ஆண்டுகள் வரை தொடர்ந்து மகசூல் கொடுக்கக்கூடியது. இது சுமார் 5 மீட்டர் உயரம் வளரக்கூடியது. இதை கால்நடைகள் உண்பதில்லை. இதன் இலைகள் அகலமாகவும், கரும்பச்சை நிறத்திலும் இருக்கும். இதன் விதைகளை பறவைகளும் உண்பதில்லை. ஒரளவு வறட்சியைத் தாக்குப்பிடித்து வளரக்கூடியது.
காட்டாமணக்கு எண்ணணெயின் பயன்கள் என்ன?
காட்டாமணக்கு விதையிலிருந்து 30 சதம் திரவ எரிபொருளளும் மீதி 70 சதம் புண்ணாக்கும் கிடைக்கிறது
இந்தத் திரவ எரிபொருளை சுத்தப்டுத்தி டீசலுக்கு மாற்றாக இயந்திரங்களில் பயன்படுத்தலாம்
இதன் புண்ணாக்கை இயற்கை உரமாக வேளாண்மைக்குப் பயன்படுத்தலாம்
எண்ணெயை சுத்தப்படுத்தும்போது கிடைக்கும் கிளிசரால் என்ற உபபொருளை மருந்துகள் மற்று அழகுச் சாதனப்பொருள்கள் தயாரிக்கப் பயன்படுத்தலாம்.
தமிழகத்தில் எந்தவகை காட்டாமணக்கைப் பயிர் செய்யலாம்?
உலகளவில் காட்டாமணக்கில் 176 வகைகள் உள்ளன. இந்தியாவில் 12 வகைகள் உள்ளன. இவற்றுள் ஜட்ரோ கர்கஸ் என்னும் வகைதான் உலகளவில் எண்ணெய்க்காக சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், உயிரி எரிபொருள் சிறப்பு மையத்தில் தேர்வு செய்யப்பட்ட ஜட்ரோபா கர்கஸ் என்ற உயர்விளைச்சல் விதைகளைப் பயன்படுத்தலாம். இந்த ஜட்ரோபா கர்கஸின் விதைகளை மடகாஸ்க்கர், ஜிம்பாவே, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்தும் பயன்படுத்தலாம்.
சாகுபடிக்கேற்ற பருவங்கள் யாவை?
காட்டாமணக்கை பருவமழைத் தொடக்கத்தில் (ஜீன்-ஜீலை மற்றும் செப்டம்பர் - அக்டோபர்) நடவு செய்யலாம்.
சாகுபடிக்கேற்ற மண்வகைகள் யாவை?
களர், உவர் இல்லாத அனைத்து வகை மண்ணிலும் நன்கு வளரக்கூடியது. தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தைத் தவிர அனைத்து மாவட்டங்களும் இப்பயிர் சாகுபடிக்கு உகந்தது.
விதையளவு என்ன ?
ஒரு ஏக்கரில் 3 X 2 மீட்டர் இடைவெளியில் 666 செடிகள் நடவு செய்யலாம். ஒரு கிலோ விதையில் சுமார் 1500-2000 விதைகள் இருக்கும். விதை முளைப்புத்திற் 50 முதல் 60 சதம் இருக்கும். விதை முளைப்புத்திறன் 50 முதல் 60 சதம் இருக்கும். எனவேஒரு ஏக்கருக்கு ஒரு கிலோ விதை போதுமானதாகும். விதைகளை அறுவடை செய்த ஒரு மாதத்திலிருந்து மூன்று மாதத்திற்குள் நாற்று உற்பத்திக்குப் பயன்படுத்த வேண்டும். மூன்று மாதங்களுக்கு மேல் ஆகும்போது முளைப்புத்திறன் வெகுவாகக் குறைந்து விடும்.
விதை நேர்த்தி எப்படிச் செய்யவேண்டும்?
விதைகளைப் பசும்சாணம் கலந்த நீரில் 12 மணிநேரம் ஊறவைக்க வேண்டும். பின்னர் ஈரக்கோணிப்பையில் 12 மணிநேரம் மூடி வைக்கவேண்டும். முளை வெளிவந்த விதைகளைப் பாலித்தீன் பைகளில் விதைப்பதற்குப் பயன்படுத்தலாம்.
நாற்றுக்களை எவ்வாறு தயாரிக்க வேண்டும்?
விதைகளை 10 X 20 செமீ பாலித்தீன் பைகளில் செம்மண், மணல் எரு ஆகியவற்றை 3: 1: 1: விகிதத்தில் கலந்து நிரப்பி நடவுக்குப் பயன்படுத்தலாம். பாலித்தீன் பைகளில் வடிகாலுக்காக அடிப்பாகத்தில் 4 துவாரங்கள் ஏற்படுத்த வேண்டும். முளைப்புக்கட்டிய விதைகளை 1 செமீ ஆழத்தில் படுக்கை வசமாக ஊன்ற வேண்டும். விதைகளை 10 நாட்களில் முளைக்கத் தொடங்கும். பூஞ்சாண நோய்கள் வராமல் இருக்க விதைப்பதற்கு முன்பு ஒரு சத போர்டோ கரைசல் அல்லது 0.2 சத காப்பர் ஆக்ஸிகுளோரைடு கரைசலை விதைப்பதற்கு முன்பு பைகளில் ஊற்ற வேண்டும். இந்த நாற்றுப்பைகளை மாதத்திற்கு ஒருமுறை இடம்மாற்றி வேர் மண்ணில் இறங்குவதைத் தவிர்க்க வேண்டும். 60 நாட்களில் நாற்றுக்கள் நடவுக்குத் தயாராகிவிடும். ஆறு முதல் எட்டு மாதங்களுக்கு நாற்றுகளைப் பைகளில் வைத்திருக்கலாம்.
நடவு வயல் எவ்வாறு தயார் செய்யவேண்டும்?
தோட்டத்தைக் களைகளின்றி சமன்படுத்த வேண்டும். சட்டிக்கலப்பையால் ஒருமுறையும் கொத்துக்கலப்பையால் ஒருமுறையும் உழவு செய்யவேண்டும். பின்பு 3 X 2 மீட்டர் இடைவெளியில் 1 X 1 X1 அடி என்ற அளவில் குழிகள் எடுக்க வேண்டும். அந்தக் குழிகளில் 500 கிராம் தொழுஉரம், 100 கிராம் சூப்பர் பாஸ்பேட், 100 கிராம் வேப்பம்புண்ணாக்கை கலந்து இட்டு நாற்றுக்களை நடவேண்டும்.
நாற்றுக்களை எவ்வாறு நடவேண்டும்?
60-90 நாட்கள் வயதுடைய ஒரு அடி உயரமுள்ள நாற்றுக்களை நடவுக்குப் பயன்படுத்தலாம். பாலித்தீன் பைகளை எடுத்துவிட்டு அந்த மண் உருண்டை களையாமல் நடவு செய்யவேண்டும். ஒரு குழிக்கு சூடோமோனஸ் 20 கிராம் இட வேண்டும். நடவு செய்த பின் செடியைச் சுற்றி நன்கு மிதித்து மண்ணை இறுகச் செய்யவேண்டும்.
உரமேலாண்மை எவ்வாறு செய்வது?
இரண்டாவது ஆண்டு முதல் இதற்கு உரமிடுவது அவசியம். ஒரு செடிக்கு 20 : 120 : 60 கிராம் என்ற விகிதத்தில் தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்துகளை இரண்டாகப்பிரித்து வருடத்தில் இரண்டு தவணைகளில் இடவேண்டும். நான்காவது ஆண்டிலிருந்து இதோடு சேர்த்து மணிச்சத்தை மட்டும் 150 கிராம் அதிகப்படுத்திக்கொள்ளலாம்.
காட்டாமணக்குச் செடிகளைக் கவாத்து செய்வது எப்படி?
நட்ட செடிகள் ஒரு மீட்டர் உயரம் வளர்ந்தவுடன் வளரும் நுனியைக் கிள்ளிவிட வேண்டும். பக்கவாட்டில் வரும் கிளைகளின் நுனிகளையும் இரண்டாம் வருடம் இறுதிவரை கிள்ளிவிட வேண்டும். மூன்றாம் வருடம் தொடக்கத்தில் குறைந்தபட்சம் 25 பக்கக் கிளைகள் உள்ளவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
செடிகள் ஆறுமாதத்தில் பூக்க ஆரம்பித்து விடும். பூக்கள் இருப்பினும் தளிர்களின் நுனிகளைக் கிள்ளி பக்கக் கிளைகளை ஊக்குவிப்பது அவசியம்.
செடியின் வளர்ச்சி அதிகமாகி கிளைகள் கீழ்நோக்கி வளைந்து வரத்தொடங்கும் தருணத்தில் (சுமார் 5 வருடங்களுக்குப் பிறகு) தரைமட்டத்திலிருந்து ஒரு அடி உயரம்விட்டு செடியை வெட்டிவிட வேண்டும்.
வளர்ச்சி ஊக்கி தெளிப்பது தேவையா?
செடியில் பூக்கள் அபரிமதிதமாக மலர ஜிப்ரலிக் அமிலத்தை 100 மில்லி கிராமை ஒரு லிட்டர் நீரில் கரைத்து (100 பிபிஎம்) வருடத்திற்கு இருமுறை தெளிக்கலாம்.
ஊடுபயிர் சாத்தியமா?
முதல் இரண்டு வருடங்களில் செடிகளின் வரிசையினூடே தக்காளி, உளுந்து, பாகல், சாம்பல் பூசணி, பூசணி, வெள்ளரி ஆகிய பயிர்களை ஊடுபயிராக சாகுபடி செய்யலாம்.
பூச்சி மற்றும் பூஞ்சாண் கட்டுப்பாடு எவ்வாறு செய்வது?
பட்டை திண்ணி புதிய தளிர்களின் பட்டையை சுரண்டி உண்ணும். இதைக் கட்டுப்படுத்த எண்டோசல்பான் 3 மில்லி, லிட்டரில் கலந்து தெளிக்க வேண்டும்.
இலை பிணைப்பான் என்ற பூச்சி வளரும் இலைகளைப் பின்னிப்பிணைந்து கூடாக மாற்றும். இதைக் கட்டுப்படுத்த எண்டோசல்பான் 2 மில்லியை ஒரு லிட்டரில் கலந்து தெளிக்க வேண்டும்.
தண்டு அழுகல் நோய் தாக்கப்பட்ட செடிகளின் தண்டின் அடிப்பாகத்தில் மண்ணோடு சேருகின்ற இடத்தில் அழுகல் தோன்றும். தொடர்ந்து செடிகள் காய்ந்துவிடும். இதைக்கட்டுப்படுத்த ஒரு சதம் போர்டோகரைசலை, செடியின் அடியில் தண்டினைச் சுற்றி மண்ணில் ஊற்றி நனைக்க வேண்டும்.
மகசூல் என்ன கிடைக்கும்?
பசும்காய்கள் முதிர்ந்தவுடன் மஞ்சள்நிறமாக மாறும், பின்பு காய்கள் கருப்பு நிறமாக மாறிவிடும், ஒவ்வொரு காயிலும், மூன்று விதைகள் இருக்கும். அறுவடை செய்யப்பட்ட காய்களை நன்கு உலரவைத்து காய்தெளிப்பான் மூலம் விதைகளைப் பிரித்தெடுக்கலாம். பிரித்தெடுத்த விதைகளை உலரவைத்து கோணிப்பைகளில் சேமித்து வைக்கலாம்.
மூன்றாம் வருட இறுதியிலிருந்து ஒரு செடிக்கு சுமார் 3 கிலோ விதைகள் கிடைக்கும். ஒரு ஏக்கருக்கு 2000 - 2500 கிலோ விதை உற்பத்தி செய்யலாம்.
மகசூலின் தன்மை, மண், தட்பவெப்ப நிலை மற்றும் உழவியல் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப மாறும்.