1. நாற்றழுகல் நோய், பத்தியம் அஃபெனிடெர்மேட்டம்
2. பழ அழுகல் மற்றும் நுனி கருகல், கொல்லட்டோடிரைக்கம் கேம்ஸிசி
3. சாம்பல் நோய், லெவியூலெல்லா டாரிக்கா
4. பாக்டீரியா இலைப்புள்ளி நோய், சேந்தோமோனஸ் கம்பஸ்டிரிஸ் வகை
5. செர்கோஸ்போரா இலைப்புள்ளி நோய் வெளிக்கடோரியா செர்கோஸ்போரா கேப்ஸிசி
6. ப்யூசேரியம் வாடல் நோய் ப்யூசேரியம் அக்ஸிஸ்போராம் வகை கேப்ஸிசி
7. இலைசுருட்டு நச்சுயிரி
நோய்
1. மிளகாயின் நாற்றழுகல் நோய் (Damping off)
நோய்காரணி : பிதியம் அஃபானிடெர்மேட்டம் (Pythium Aphanidermatum)
நாற்றழுகல் நோய் :
- நாற்றங்காலில் நாற்றுக்கள் மடிந்து சொட்டை சொட்டையாக இருப்பதற்கு இந்த நோயே காரணமாகும்
- இப்பூசணத்தின் இழைகள் நிறமற்று குறுக்குச் சுவர்கள் இல்லாமலும் இருக்கும். பிரதான பூசண இழையின் விட்டம் 5 மைக்கிரான் ஆகும்.
- பூசண இழைகள் பெருத்து ஒழுங்கற்ற வடிமுடிடைய வித்துப்பைகளை தோற்றுவிக்கின்றன
அறிகுறிகள்
- மண்ணில் காணப்படும் இப்பூசணம் பாத்திகளில் விதையை விதைத்தவுடன் தாக்கத் தலைப்படுகின்றது.
- இப்பூசணம் விதைகளைத் தாக்கி அவற்றை முளைக்காமல் செய்கின்றன. இதனால் பாத்திகளில் நாற்றுக்கள் வெளிவராமல் திட்டு திட்டான இடங்கள் காணப்படும்.
- இப்பூசணம் மண்ணுடன் தொடர்பு கொண்டுள்ள இளம் நாற்றுகளின் தண்டுப் பகுதியைத் தாக்கி மடியச் செய்கின்றன.
- தண்டுப்பாகம் வலுவிழந்து விடுவதால் நாற்று சாய்ந்து விடுகின்றன.
- நோயுற்ற நாற்றுக்கள் பழுப்பு நிறமாகவோ, வெளுத்தோ காணப்படும்.
- தண்டின் அடிப்பகுதி அழுகி விடுகின்றன.
- இந்த நோய் பொதுவாக தாழ்வான வடிகால் வசதியில்லாத நிழற் பாங்கான பகுதிகளில் அமைக்கப்பட்ட பாத்திகளிலும், தேவைக்கு அதிகமான அளவு விதையை விதைத்து அதிக நெருக்கமாக நாற்றுக்கள் வளர்ந்துள்ள பாத்திகளிலும், நீர் அதிகம் தேங்கியுள்ள பாத்திகளிலும் தென்படுகிறது.
- விதை, மண் மூலமாக இது பரவுகிறது.
கட்டுப்பாடு
- நாற்றங்கால் நிலத்தை வடிகால் வசதியுள்ள நிழல் இல்லாத பகுதிகளில் மேட்டுப் பாத்தியாக அமைக்க வேண்டும்.
- போதிய அளவு விதையை மட்டும் கலக்கமாக விதைக்க வேண்டும்.
- தேவைக்கு ஏற்ப தண்ணீரைப் பாய்ச்சுதல் வேண்டும்.
- விதைகளை விதைப்பதற்கு முன்பு திராம் அல்லது கேப்டான் மருந்துடன் கிலோவிற்கு 4 கிராம் வீதம் மருந்திட்டு விதைக்க வேண்டும்.
- மண்ணிலிருந்து தாக்கும் பூசணங்களையும் சிறிது காலத்திற்கு தடுத்து விதைகளின் முளைப்புத் திறனை அதிகரிக்கும். இதனால் நாற்றுக்கள் நன்கு வளரமுடிகிறது.
- இளம் நாற்றுக்களில் நோய் தோன்றினால் தாமிரப் பூசணக் கொல்லி மருந்தை (2.5 கிராம்/ஒரு லிட்டர் தண்ணீர்) நாற்றங்கால் மண்ணில் ஊற்ற வேண்டும்.
மேலே
2.பழ அழுகல் மற்றும் நுனி கருகல், கொல்லட்டோடிரைக்கம் கேம்ஸிசி
அறிகுறிகள்
- இந்நோய் தாக்கிய செடியின் நுனிகள் கருகி விடும்.
- பழங்கள் அழுகிவிடுகின்றன.
- நாற்று நட்ட ஒரு மாதத்திற்குப் பின்பு நுனிக் கருகல் அறிகுறிகள் தோன்றும்.
- நோயுற்ற செடியில் கிளைநுனி, தளிர் இலைகள் கருகிக் காய்ந்து காணப்படும்.
- நோய் தீவிரமாகும் பொழுது நுனியிலிருந்து நோய் கீழ் நோக்கிப் பரவும் பூக்கள் அதிக அளவில் உதிர்ந்து விடுகின்றன.
- நோயினால் பாதிக்கப்பட்ட அதிக அளவில் உதிர்ந்து விடுகின்றன.
- நோயினால் பாதிக்கப்பட்ட சிம்பு அல்லது கிளைகளில் கறுப்புப் புள்ளிகள் தோன்றும். அவை யாவும் பூசணத்தின் வித்துத் திரள்களேயாகும். இவற்றிலிருந்து எண்ணற்ற பூசண வித்துக்கள் உற்பத்தியாகின்றன.
- இவை காற்றின் மூலம் பரவுகின்றன.
- இந்நோய் பழங்களையும் தாக்கி சேதம் உண்டாக்குகிறது.
- நோய் தாக்கிய பழங்களில் முதலில் சிறிய பழுப்பு நிறப் பகுதிகள் தென்படும்.
- நாளடைவில் நோய் முதிர்ச்சியடையும் பொழுது இப்பகுதிகள் பெரிதாகிப் பழத்தின் பெரும் பகுதிக்கு பரவுகிறது.
- பாதிக்கப்பட்ட மிளகாய்ப் பழங்களில் சிறு சிறு கறுப்பு நிறப் புள்ளிகளைக் காணலாம்.
- மகசூலில் குறைவு ஏற்படுகின்றது. வற்றலும் தரம் குறைந்து விடுகின்றது.
பரவுதல்
- பூசணம் நோய் தாக்கி எஞ்சிய தாவரப் பகுதிகளில் காணப்படுகிறது. இரண்டாம் நிலை தொற்று காற்றின் மூலமாக எடுத்துச் செல்லப்படும்.
- தூள் வித்துக்கள் மூலம் பரவுகிறது.
- நோயினால் பாதிக்கப்பட்ட பழங்களிலுள்ள விதைகள் மூலமாகவும் பூசணம் பரவுகிறது.
கட்டுப்பாடு
- நோயில்லாத பழங்களிலிருந்து விதைகளைச் சேகரிக்க வேண்டும்.
- நாற்று நட்ட 40வது நாளிலிருந்து ஏக்கருக்கு 1 கிலோ மேன்கோசெப் அல்லது சினெப் அல்லது 1.25 கிலோ தாமிர ஆக்சி குளோரைடு மருந்தை 20 நாட்களுக்கு ஒரு முறை தெளிக்க வேண்டும்.
மேலே
3.சாம்பல்நோய்: லெவியூலெல்லா டாரிக்கா
|
|
அறிகுறிகள்:
- இலைப்பரப்பு உதிர்தல்
- இலையின் அடிப்புறம் வெள்ளை நிறப் பொடி போன்ற வளர்ச்சி காணப்படும்
|
கட்டுப்பாடு:
- நனையும் கந்தகம் 0.25% (அ) டைனோகேப் (காரத்தேன்) 0.05% தெளிக்க வேண்டும்
மேலே
4.மிளகாயின் பேக்டீரிய இலைப்புள்ளி நோய் சேந்தோமோனஸ் கம்பஸ்டிரிஸ் வகை
- இந்த நோய் மிளகாய்ப் பயிராகும் பல இடங்களில் காணப்படுகிறது.
- இந்த நோய் ஏற்படத்தும் புள்ளிகளினால் இலைகள் பழுத்து உதிர்நது செடியின் வலு மற்றும் மகசூல் திறனைக் குறைக்கிறது.
அறிகுறிகள்
- நோய் தாக்கிய இலைகளின் மீது சிறுசிறு நீர் கசிந்து போன்ற பகுதிகள் கோண வடிவமாகவோ அல்லது வட்ட வடிவமாகவோ தோன்றும்.
- இப்புள்ளிகள் யாவும் நாளடைவில் கறுப்பாக மாறிவிடும்.
- அதிகமாகப் புள்ளிகள் தோன்றினால் இலைகள் பழுத்து பெருமளவில் உதிர்ந்து விடுகின்றன.
- நோய் தீவிரமாகத் தோன்றும்பொழுது பழங்களின் மீதும் சிறுசிறு கறுப்பு நிறப்புள்ளிகள் தோன்றும்.
- பாதிக்கப்பட்ட பழங்கள் உதிர்ந்து விடுகின்றன.
பரவுதல்
- விதையிலும், மண்ணிலும் பேக்டடீரியா தங்கியிருக்கும் இயல்புடையவை.
- நோய் கண்ட இலைகள், காய்கள் போன்ற பாகங்கள் விழுந்து கிடந்தால் அவற்றிலிருந்து அடுத்த பயிருக்கும் நோய் பரவுகின்றது.
- நோய் கண்ட இலைகளில் பேக்டீரியா 5 திங்கள் வரை அழியாமல் இருக்கின்றன.
- விதையிலை, இலை, தண்டு முதலான பாகங்களில் பாக்டீரியா உட்செல்கின்றன.
- இலைத்துளை வழியாகவும் காயங்களின் வழியாகவும் நுழைகின்றன.
- காற்றுடன் மழை பெய்யும் போது மழைத்துளிகள் நோயுற்ற பாகங்களில் விழுந்து சிதறும் போது பேக்டீரியாவும் பரவுவதால் இதன் மூலம் பிற செடிகளுக்கு நோய் தொற்றுகின்றது.
- இந்நோய் 240 செ. வெப்பநிலையில் மிகுதியாகத் தோன்றும்.
- இரவில் வெப்பநிலை 24-280 செ. இருப்பின் (பகல் வெப்பநிலை எவ்வாறு இருப்பினும்) நோயினை மிகுதியாக்கும்.
- தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல்சத்து மிகுதியாகப் போடப்பட்ட பயிரில் நோய் அதிகமாகத் தோன்றுவதில்லை.
கட்டுப்பாடு
- நோயில்லாத பழங்களிலிருந்து சேகரித்தல் வேண்டும்.
- விதைகள் திராம் அல்லது கேப்டான் மருந்து (4 கிராம்/கிலேர) கலந்து விதைக்க வேண்டும்.
- நட்ட பயிரில் நோயைக் கட்டுப்படுத்துவதற்கு எக்டருக்க அக்ரிமைசின் (175 கிராம்/500 லிட்டர் நீர்) என்னும் எதிர் உயரிப் பொருளைத் தெளிக்க வேண்டும்.
மேலே
5.செர்கோஸ்போரா இலைப்புள்ளி நோய் வெளிக்கடோரியா செர்கோஸ்போரா கேப்ஸிசி
- இலைகளில் செம்பழுப்பு நிறப் புள்ளிகள் காணப்படும்.
- இலைப்புள்ளி நோயைக் கட்டுப்படுத்த மேன்கோசெப் 25 கிலோ 500 லிட்டர் நீரிவ் கலந்த கைத்தெளிப்பான் மூலம் காலை அல்லது மாலையில் தெளிக்கவேண்டும்.
மேலே
6.ப்யூசேரியம் வாடல் நோய், ப்யூசேரியம் ஆக்ஸிஸ் போரம் வகை கேப்ஸிசி
அறிகுறிகள் :
- செடிகள் வாட ஆரம்பிக்கும். இலைகள் மேல் நோக்கி உட்புறமாக வளைந்துக் காணப்படும். இலைகள் மஞ்சள் நிறமாக மாறி, பின் மடியும்
- அதிகளவிலான செடிகள் வாட ஆரம்பித்து மடிகிறதோஅங்கெல்லாம் எரிந்தது போல் தோன்றும்
- ஆரம்பத்தில் சிறிதளவு மஞ்சள் நிறமாக மாறும். மேலே உள்ள இலைகள் வாட ஆரம்பித்து. சில நாட்களில் நிரந்தமான வாடல்நோய் ஆரம்பித்து, இலைகள் இணைந்து இருக்கும்
- தரைக்கு மேலே உள்ள பகுதிகளில் அறிகுறிகள் தெளிவாகத் தெரியும் வாங்குபவர் திசுக்கள் நிறமாற்றமாகும். குறிப்பாக கீழேயுள்ள தண்டுகள் மற்றும் வேர்களில், தோன்றும்.
கட்டுப்பாடு:
- வாடல் நோய் எதிர்ப்பு சக்தியுள்ள இரகங்களை பயன்படுத்தவேண்டும்
- போர்டாக்ஸ் கலவை (அ) நலத் தாமிரம் (அ) பைட்டோலான் 0.25% மண்ணில் நனைக்க வேண்டும்
- டிரைக்கோடெர்மா விரிடி 4 கிராம் (அ) கார்பண்டசிம் 2 கிராம்/கிலோ விதை என்ற அளவில் விதை நேர்த்தி செய்ய வேண்டும்
- 2 கிராம் டிரைக்கோடெர்மா விரிடியை 50 கிலோ பண்ணை கருவுடன் கலந்து, நீர் தெளித்து, பாலித்தீன் கலர் போட்டு மூடவேண்டும். 15 நாட்கள் கழித்து, பூஞ்சாண் வளர்ச்சி தோன்றியவுடன், ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் மிளகாயின் வரிசையில் இந்தக் கலவையை இடவேண்டும்
மேலே
7.நச்சுயிரி நோய்கள் :
இலை சுருட்டு நோய்:
|
|
- இலையின் நடுநரம்பில் சுருண்டு, உருமாற ஆரம்பிக்கும்
- குட்டை வளர்ச்சி, சிறியளவு இடைக் கணுக்கள், இலைகள் மிகச் சிறியதாகும்
- பூ மொட்டுகள் பெரிய அளவை அடையும் முன் நின்று விடும். மகரந்த தூள் இருக்காது
- வெள்ளை ஈயின் மூலம் பரவும்
|
கட்டுப்பாடு:
- இரசாயனக் கட்டுப்பாடு முறைகள் என்று எதவுமில்லை
- ஆகவே, இயந்திர, உழவு முறைகள் பரிந்துரைக்கப்படுகிறது
- தாக்கப்பட்ட செடிகளை வேருடன் களைந்து புதைக்க வேண்டும் (அ) எரிக்க வேண்டும்
- ஒரே பயிரை திரும்ப திரும்ப பயிரிடக் கூடாது
- நோயற்ற விதைகளைத் தேர்ந்தெடுக்கவேண்டும்
- தகுந்த பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தெளிக்க வேண்டும்
- விதைகளை டிரைசோடியம் ஆரிதிரிபாஸ்பேட் 150 கிராமில் 30 நிமிடங்களுக்கு ஊற வைத்து பின் நன்றாக நீரில் அலசி, காய வைத்து, விதைக்க வேண்டும்
- நாற்றங்கால் படுக்கைகளின் மீது நைலான் வலை (அ) வைக்கோல் கொண்டு மூடவேண்டும்
- 2-3 வரிசை மக்காச்சோளம் (அ) சோளத்தை வரப்பு பயிராக பயிரிடவேண்டும்
- கார்போப்யூரான் 3 4-5 கிலோ/ஏக்கர் என்ற அளவில் மண்ணில் இடவேண்டும்
- இல்லையென்றால், மோனோகுரோட்டோபாஸ் 1.5 மிலி (அ) டைமெத்தோயேட் 2 மிலி (அ) அசிப்பேட் 1 கிராம் /லிட்டர் நீரில் கரைத்துத் தெளிக்க வேண்டும்
- தாக்கப்பட்ட நச்சுயிரி செடிகளை சேகரித்து, அழிக்க வேண்டும்
|