இது ஒரு புழுப்பருவ வெளிப்புற ஒட்டுண்ணியாகும். மிருதுவான உடல் அமைப்புடன் தேன் அல்லது பழுப்பு நிறத்தில் இருக்கும். தாய் ஒட்டுண்ணிகளுக்கு நீண்ட முட்டையிடும் உறுப்பும், வயிற்று பகுதி ஆண் ஒட்டுண்ணிகளை விட பெரிதாக இருக்கும். முழு வளர்ச்சியடைந்த ஒட்டுண்ணிகள் 20-25 நரட்கள் உயிர் வாழும். ஒரு தாய் ஒட்டுண்ணி சுமார் 100 முதல் 125 முட்டைகள் இடும். புழுக்களின் உடலின் வெளிப்புறத்தில் முட்டைகளை வைக்கும். முட்டைகளின் எண்ணிக்கை புழுவின் உடல் நீள அளவிற்கும் பருமனுக்கும் தக்கவாறு வேறுபடும். பிரக்கோனிட் முட்டைப்பருவம் ஒரு நாள் ஆகும். புழுப்பருவத்தை 4-6 நாட்களிலும், கூட்டுப்புழு பருவத்தை 3-4 நாட்களிலும் முடிக்கின்றன. இதன் மொத்த வாழ்க்கைப்பருவம் 8-10 நாட்கள் ஆகும்.
ஆய்வுக்கூடங்களில் பிரக்கான் பிரிவிகார்னிஸ் ஒட்டுண்ணியை நெல் அந்துப்பூச்சியின் புழுப்பருவம் அல்லது தென்னை கருந்தலைப்புழு இவற்றைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யலாம்.
உற்பத்தி முறை
ஒரு சிறிய கண்ணாடி குழாயில் (6”x1”) 50 சதம் தேன் கலவியினை பஞ்சில் நனைத்து சோதனை குழாய் உட்புறம் ஒட்டி வைத்து முழு வளர்ச்சி அடைந்த பிரக்கோனிட் ஆண், பெண் ஒட்டுண்ணிகளை சம எண்ணிக்கையில் இருக்குமாறு விட்டு இரண்டு நாட்கள் இனச்சேர்க்கை நடைபெற அனுமதிக்க வேண்டும். இரண்டு நாட்கள் கழித்து ஆண் ஒட்டுண்ணிகளைத் தனியாகப் பிரித்து எடுத்து விட வேண்டும். |