இலை உண்ணும் புழுக்கள்
காவடிப்புழு
இப்புழுவானது ஆண்டு முழுவதும் புதினா உள்ளிட்ட கிட்டத்தட்ட 25 பயிர்களில் காணப்படுகின்றது. தாய் அந்துப்பூச்சி, இலைகளின் அடிப்பகுதியில் முட்டைகளைத் தனித்தனியாக இடுகின்றன. முதல் மற்றும் இரண்டாம் நிலை புழுக்கள் இலைகளின் அடிப்பகுதியைச் சுரண்டி சேதம் விளைவிக்கின்றன. மூன்றாம் மற்றும் நான்காம் நிலை புழுக்கள் இலைகளை உண்டு 60 சதத்திற்கும் அதிகமான சேதத்தினை உண்டு பண்ணுகின்றன.
மேலாண்மை முறைகள்
அதிக பாதிப்பு ஏற்படும் சமயங்களில் வேப்பெண்ணெய் 3 சதம் அல்லது வேப்பங்கொட்டைப் பருப்பு சாறு 5 சதம் தெளிக்க வேண்டும். முக்கியமான ஒட்டுண்ணிகளான அபான்டிலஸ் பயன்படுத்தி காவடிப்புழுக்களைக் கட்டுப்படுத்தலாம். என்.பி.வி. நச்சுயிரியை ஹெக்டேருக்கு 300 புழு சமன் என்ற அளவில் அல்லது பேசில்லஸ் வகை பாக்டீரியாவை ஹெக்டேருக்கு 500 மி.லி. என்ற அளவில் பயன்படுத்தலாம்.
|
|
இலை பிணைக்கும் குழு
இப்புழுவால் தாக்கப்பட்ட புதினா இலைகள் அரிக்கப்பட்டு வெறும் இலை நரம்புகளுடன் தோற்றமளிக்கும் இளம் இலைகளின் அடிப்பரப்பில் தனித்தனியாக முட்டைகள் இடப்பட்டு இளம் புழுக்கள் வெளிவருகின்றன. முதல் மற்றும் இரண்டாம் நிலை புழுக்கள் இலைகளின் அடிப்பகுதியை குறிப்பாக பாரன்கைமா திசுப்பகுதியை உண்கின்றன. மூன்றாம் நிலைப்புழு இலையின் மேல் மற்றும் கீழ்முனைகளைச் சேர்த்துப் பிணைத்து விடுகிறது. நான்காம் நிலைப் புழுவானது செடியை உண்டு சேதத்தை உண்டு பண்ணுகிறது.
மேலாண்மை முறைகள்
பிணைக்கப்பட்ட அல்லது பாதிக்கப்பட்ட இலைகளைப் பறித்து அழிக்க வேண்டும். விளக்குப் பொறிகளை அமைத்து இப்பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம். அதிக பாதிப்பு ஏற்படும் சமயங்களில் வேப்பெண்ணெய் 3 சதம் அல்லது வேப்பங்கொட்டைப் பருப்பு சாறு 5 சதம் தெளிக்க வேண்டும்.
துவரைக் காய்ப்புழு
தாய் அந்துப்பூச்சிகள் இளம் இலைகளின் மேல் முட்டைகளைத் தனித்தனியாக இடுகின்றன. இதன் புழுக்கள் இலைகளைக் கடித்து உண்டு செடியை சேதப்படுத்துகின்றன.
மேலாண்மை முறைகள்
டிரைக்கோகிரம்மா ஒட்டுண்ணிகளை அந்துப்பூச்சி முட்டையிடும் பருவத்தில் 15 நாட்களுக்கு ஒருமுறை வயலில் விடுவதன் மூலம் காய்ப்புழுக்களைக் கட்டுப்படுத்தலாம். புழுக்கள் வளரும் பருவத்தில் என்.பி.வி. நச்சுயிரியை ஹெக்டேருக்கு 250 புழு சமன் என்ற அளவில் பயன்படுத்தலாம். கிரைசோபா, பொறிவண்டுகள், சிலந்தி போன்ற இரைவிழுங்கிகளை ஊக்குவிப்பதன் மூலம் இப்பூச்சியின் முட்டை, புழு மற்றும் கூட்டுப்பழு பருவங்களைக் கட்டுப்படுத்தலாம்.
புகையிலைப் புழு
இப்புழுக்கள் இலைகளின் அடிப்பகுதியில் இருந்து கொண்டு இலைகளைக்கடித்து உண்டு சேதம் விளைவிக்கின்றன. இப்பூச்சியின் முட்டைகள் குவியலாகவும் மஞ்சள் நிற உரோமத்தால் மூடப்பட்டும் இருக்கும். பச்சை நிற இளம் புழுக்கள் குருத்தையும், இலைகளையும் உண்டு சேதம் விளைவிக்கும். தீவிரமாகத் தாக்கப்பட்ட பயிர் ஆடு, மாடுகள் மேய்ந்தது போல் காணப்படும்.
மேலாண்மை முறைகள்
முட்டைக்குவியல்களை சேகரித்து அழிக்க வேண்டும். எக்டேருக்கு 12 என்ற விகிதத்தில் இனக்கவர்ச்சிப் பொறிகளை வயலில் பொருத்தி ஆண் அந்துப்பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம்.
நச்சத் தீனி உருண்டை – அரிசித்தவிடு 12.5 கிலோ, வெல்லம் 2.5 கிலோ, கார்பரில் 50 சதம் 1.25 கிலோ இம்மூன்றையும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சிறுசிறு உருண்டைகளாக உருட்ட வேண்டும். உருண்டைகளை மாலை வேளைகளில் ஆங்காங்கே பல்வேறு இடங்களில் இட வேண்டும். மறுநாள் காலை உருண்டைகளை சேகரித்து அப்புறப்படுத்த வேண்டும். இந்த நச்சத் தீனி உருண்டைகளால் புகையிலைப் புழுக்களைக் கவர்ந்து அழிக்கலாம்.
புரோட்டீனியா என்.பி.வி. வைரஸ் நச்சுயிரியை ஹெக்டேருக்கு 250 புழு சமன் என்ற அளவில் 2.5 கிலோ வெல்லப்பாகுடன் மாலை வேளைகளில் கைத்தெளிப்பானால் தெளிப்பதன் மூலம் இளம்புழுக்களைக் கட்டுப்படுத்தலாம்.
இப்புழுக்களைக் கட்டுப்படுத்த கார்பரில் 10 சதத்தூள் 25 கிலோ அல்லது குளோர்பைரிபாஸ் 20 இ.சி. 750 மி.லி. என்ற அளவில் தெளித்தும் கட்டுப்படுத்தலாம்.
சாம்பல் வண்டு
இந்த வண்டுகள் பெரும்பாலும் இலைகளில் சிறு துவாரங்கள் ஏற்படுத்தியும், ஓரங்களைக் கடித்தும் சேதம் உண்டாக்குகின்றன. சில சமயங்களில் அதிக அளவில் தோன்றி பெருத்த சேதத்தை உண்டாக்கும். வண்டுகளின் புழுப்பருவம் செடிகளின் வேர்ப்பாகத்தில் மண்ணிற்குள் காணப்படும். புழுக்கள் வேர்களின் நுனிகளைக் கடித்துத் தின்பதால் தாக்கப்பட்ட செடிகள் வாடி, நாளடைவில் காய்ந்து விடும்.
மேலாண்மை முறைகள்
சாம்பல் வண்டுகளைக் கட்டுப்படுத்த ஒரு ஏக்கருக்கு கார்பரில் (50 சதம் நனையும் தூள்) 400 கிராம் என்ற அளவில் தெளிக்க வேண்டும். மண்ணினுள் உள்ள புழுக்களைக் கட்டுப்படுத்த வேப்பம்புண்ணாக்கு கார்போப்யூரான் குருணை மருந்தினை ஒரு ஏக்கருக்கு 6 கிலோ என்ற அளவில் நாற்றுகள் நட்ட 15 நாட்களுக்குப் பின் மண்ணில் இடுதல் வேண்டும்.
வெட்டுக்கிளி
இப்பூச்சிகள் பயிரின் இலைகளை வெட்டுவது போல் கடித்து உண்டு சேதப்படுத்துகின்றன. இதன் இளம் மற்றும் முதிர் பூச்சிகள் இலைகளின் மேல் துவாரங்களை ஏற்படுத்தியும் இளங்குருத்துகளையும் தண்டுகளையும் வெட்டுவதன் மூலமும் பெரும் சேதத்தை உண்டாக்குகின்றன.
மேலாண்மை முறைகள்
பூச்சி தாக்குதலின் அளவைப் பொறுத்து வேப்பெண்ணெய் 3 சதம் அல்லது வேப்பங்கொட்டைப் பருப்பு சாறு 5 சதம் தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.
சாறு உறிஞ்சும் பூச்சிகள்
அசுவினி
பெரும்பாலும் ஆண்டு முழுவதும் காணப்படும் இப்பூச்சி, மஞ்சள் கலந்த பச்சை நிறமாகக் காணப்படும். இளம் மற்றும் முதிர்ந்த பூச்சிகள் இலையின் அடிப்பாகத்திலும் குருத்துப் பகுதிகளிலும் கூட்டம் கூட்டமாகக் காணப்படும். இளம் தாவரங்களில் இதன் தாக்குதல் அதிகமாக இருக்கும். இவை இலைச் சாற்றை உறிஞ்சுவதால் தாக்கப்பட்ட இளங்குருத்து மற்றும் இலைகள் சிறுத்தும், சுருங்கியும், தடித்தும் வளைந்தும் காணப்படும். பூச்சிகளின் வயிற்றுப் பகுதியிலிருந்து சுரக்கும் தேன் போன்ற திரவத்தால் இலைகளின் மேல் பரப்பில் மேல் கரும்பூசண வளர்ச்சி தென்படும். இதனால் எறும்புகளின் நடமாட்டம் தாக்கப்பட்ட செடிகளில் அதிகமாகக் காணப்படும்.
மேலாண்மை முறைகள்
இயற்கையில் புள்ளிப்பொறி வண்டு அசுவினியை உணவாக உட்கொள்வதால் அசுவினியின் எண்ணிக்கை ஓரளவு குறைகிறது. மேலும் எறும்புகளைக் கட்டுப்படுத்துவதன் மூலமும் இப்பூச்சிகள் பரவுவதைக் குறைக்கலாம். தாக்குதல் அதிகமாக இருக்கும் போது வேப்பங்கொட்டைப் பருப்பு சாறு 5 சதம் ஏக்கருக்கு என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.
|
|
|