அசுவினி
இளம் மற்றும் முதிர்ந்த பூச்சிகள் இலையின் அடிப்பாகத்திலும் குருத்துப் பகுதிகளிலும் கூட்டம் கூட்டமாகக் காணப்படும். இவை இலைச் சாற்றை உறிஞ்சவதால் தாக்கப்பட்ட இளங்குருத்து மற்றும் இலைகள் சிறுத்தும், சுருங்கியும், தடித்தும் வளைந்தும் காணப்படும். பாதிக்கப்பட்ட இலைகள் மஞ்சள் நிறமாகி காய்ந்து உதிர்ந்து விடும். பயிர் வளர்ச்சி குன்றி காணப்படுவதோடு பூச்சிகளின் வயிற்றுப் பகுதியிலிருந்து சுரக்கும் தேன் போன்ற திரவத்தால் இலைகளின் மேல் பரப்பில் மேல் கரும்பூசண வளர்ச்சி தென்படும். இதனால் எறும்புகளின் நடமாட்டம் தாக்கப்பட்ட செடிகளில் அதிகமாகக் காணப்படும்.
மேலாண்மை முறைகள்
இயற்கையில் புள்ளிப் பொறிவண்டு அசுவினியை உணவாக உட்கொள்வதால் அசுவினியின் எண்ணிக்கை ஓரளவு குறைகிறது. மேலும் எறும்புகளைக் கட்டுப்படுத்துவதன் மூலம் அசுவினி எண்ணிக்கையைக் குறைக்கலாம். தாக்குதல் அதிகமாகக் காணப்படும் போது வேப்பெண்ணெய் 3 சதம் அல்லது வேப்பங்கொட்டைப் பருப்பு சாறு 5 சதம் ஏக்கருக்கு என்ற அளவில் கலந்து தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.
வெட்டுக் கிளி
பூச்சிகள் செடிகளின் இலைகளை வெட்டுவது போல் கடித்து உண்டு சேதப்படுத்துகின்றன. இலைகளின் மேல் துவாரங்களை ஏற்படுத்தியும் இளங்குருத்துகளை வெட்டுவதன் மூலமும் பெரும் சேதத்தை உண்டாக்குகின்றன.
மேலாண்மை முறைகள்
இப்பூச்சிகளைக் கைவலை கொண்டு சேகரித்து அழிக்கவும். தாக்குதல் அதிகமாகக் காணப்பட்டால் வேப்பெண்ணெய் 3 சதம் அல்லது வேப்பங்கொட்டைப் பருப்பு சாறு 5 சதம் ஏக்கருக்கு என்ற அளவில் கலந்து தெளித்தும் கட்டுப்படுத்தலாம்.
|