பயிர் பாதுகாப்பு :: மணத்தக்காளி பயிரைத் தாக்கும் பூச்சிகள்

1.அசுவினி
தளிர் இலைகள் சிறிதாகத் தோன்றுவதும், இலைகள் கீழ்நோக்கிக் கிண்ணம் போல் குவிவதும், இலைகளின் மீது எறும்பு நடமாடுவதும் அப்பயிரில் அசுவினி தாக்கியுள்ளதைக் குறிக்கும். சிறிய கருவூதா நிற அசுவினியின் இறக்கைகள் அற்ற குஞ்சுகள், இறக்கைகள் கொண்ட முழு வளர்ச்சி பெற்ற அசுவினிகள் கூட்டமாக இலைகளின் அடியிலிருந்து கொண்டு பயிர் சாற்றினை உறிஞ்சி உண்டு வாழ்கின்றன. இலைகளின் கழிவுப்பொருள் இனிப்பாக, கருப்பட்டிப்பாகு போன்ற பிசுபிசுப்பாக, இலைகளின் மீது படரும்பொழுது எறும்புகள் அதை நாடி வருகின்றன. இந்த அசுவினியைக் கொன்று தின்னும் பொரி வண்டுகளும், அவைகளின் புழுக்களும் இலைகளின் மீது நடமாடுவதைப் பார்க்கலாம்.

அசுவினி-ஏபிஸ் க்ரேசிவோரா


2.கள்ளிப்பூச்சி அல்லது மாவுப்பூச்சி
இப்பூச்சிகள் இளந்தளிர் பகுதியில் அமர்ந்து கொண்டு சாற்றை உறிஞ்சி, செடியின் வளர்ச்சியை வெகுவாகக் குறைக்கின்றன. பயிர் சாற்றினை உறிஞ்சக்கூடிய கள்ளிப்பூச்சி இலைப்பேன், அசுவினி ஆகிய பூச்சிகள் பொருளாதார சேத நிலையை அடைந்தால் பயிர் சாற்றிலே ஊடுருவிப் பாயக்கூடிய மருந்துகளைத் தெளிக்க வேண்டும். அவை நன்மை பயக்கும் பொரி வண்டுகள் போன்ற பூச்சிகளுக்குத் தீங்கு விளைவிப்பதில்லை. அந்த அடிப்படையில் ஒரு எக்டருக்கு 1000 மி.லி. மிதைல் டெமட்டான் 25%  திரவ மருந்து அல்லது 1000 மி.லி. டைமிதோயேட் 30%  திரவமருந்தைத் தெளிக்க வேண்டும்.

மாவுப்பூச்சி-பாராக்க்கஸ் மார்ஜினேட்டஸ்

3.புரோடீனியா புழு
மணத்தக்காளி இலைகளைப் புரட்டி அடிப்பக்கம் பார்த்தால் சிறிய புழுக்கள் கூட்டமாக இருக்கும். புழுக்கள் வளரும்பொழுது, தனித்தனியே பிரிந்து சென்று செடிகளின் இலைகளைக் கடித்து உண்டு சேதப்படுத்தும். இப்புழுக்களின் சேதம் இரவு நேரங்களிலேயே அதிகம். பகலில் வரப்புகளிலும், நிலத்தில் உதிர்ந்து கிடக்கும் சருகுகளுக்கு அடியிலும் மறைந்திருக்கும். புரோடீனியாவின் அந்துப்பூச்சிகள் விளக்குப் பொறியின் வெளிச்சத்தால் கவரப்படுகின்றன. புரோடீனியா புழுக்கள் ஒரு குறிப்பிட்ட வைரஸ் நோயால் பாதிக்கப்படுவதையும் அந்த வைரஸ்ஸை இப்புழுக்களில் ஆய்வுக் கூடத்தில் பெருக்கி 250 புழுக்களிலிருந்து கிடைத்த சாரத்தை ஒரு எக்டர் பருத்திப் பயிரில் மாலை வேளையில் தெளித்துக்கட்டுப்படுத்தும் முறை தமிழ்நாடு வேளாண்மைப்பல்கலைக் கழகத்தில் கண்டறியப்பட்டுள்ளது.
நூறு மீட்டர் நீளத்திலுள்ள செடிகளில் புரோடீனியாவின் எட்டு முட்டை குவியல்கள் காணப்பட்டால் அது பொருளாதார சேதத்திற்கான அறிகுறி. ஆண் இன அந்துப்பூச்சிகளைக் கவரும் பெராட்டின் இனக்கவர்ச்சிப் பொருள் கொண்ட பொறிகள் வைத்தும், விளக்குப் பொறிகளில் அந்திப்பூச்சியைக் கண்காணித்தும், பயிரைச் சுற்றி ஆமணக்கைப் பயரிட்டு முட்டைக் குவியல் களையும், கூட்டமாக இருக்கும் இளம்புழுக்களையும் சேகரித்து அழித்தும்,  புரோடீனியாவைக் கட்டுப்படுத்தலாம். தவிர 5 கிலோ பச்சரிசித் தவிட்டுடன் 1 கிலோ வெல்லம், ½ கிலோ கார்பரில், 3 லிட்டர் நீர் எனும் விகிதத்தில் கலந்து நச்சுத்தீனியை சிறுசிறு கோலி உருண்டைகள் போன்று உருட்டி மாலை வேளையில் நிலத்தில் இட்டு பசியுடன் இருக்கும் புழுக்களைக் கவர்ந்து அழிக்கலாம். மிகவும் வளர்ந்த புழுக்களைக் கட்டுப்படுத்த ஒரு எக்டருக்கு 1 லிட்டர் குளோர்பைரிபாஸ்  20% திரவ மருந்து அல்லது 1லிட்டர் டைகுளோர்வாஸ் 76%  திரவ மருந்தைத் தெளிக்கலாம்.

புரோடீனியா புழு-ஸ்போடாப்டிராலிட்ரா


4. கத்தரி பொரி வண்டு
கத்தரியைத் தாக்கும் பொரி வண்டின் புழுப்பருவம், மணத்தக்ககாளி இலைகளையும் தாக்கி சேதம் விளைவிக்கின்றன. மேற்கூறிய மருந்துகளில் ஏதேனும் ஒன்றைத் தெளித்து இவ்வண்டினைக் கட்டுப்படுத்தலாம்.

கத்தரிபொரிவண்டு-ஸ்போடாப்டிராலிட்ரா


5. சிவப்புப் பருத்தி நாவாய்ப்பூச்சி
தாய்ப் பூச்சிகள் மணத்தக்காளி காய்கள் மற்றும் பழங்களிலும்,  இளம் தண்டு பகுதியிலும் சாற்றினை உறிஞ்சுவதால் காய்கள், பழங்கள்  மற்றும் இளம் தண்டுகள் காய்ந்து விடுகின்றன. அசுவினியைக் கட்டுப்படுத்தத் தெளிக்கும் மருந்துகள் இப்பூச்சியினைக் கட்டுப்படுத்தும்.

சிவப்புப் பருத்தி நாவாய்ப்பூச்சி  -டைஸ்டெர்கஸ் சிங்குலேட்டஸ்

மணத்தக்காளியில் ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு
உழவியல் முறை
ஆழ உழல், பயிர்சுழற்சி, வயல் துப்புரவு, அதிக விதையளவு உபயோகம், பட்டத்தில் விதைத்தல், ஒவ்வொரு பகுதியிலும் ஏக காலத்தில் விதைத்தல், சரியான நீர், உர நிர்வாகம், பூச்சி அதிகம் விரும்பும் கவர்ச்சிப் பயிரைப் பயிரிட்டு கவர்ந்தழித்தல், அறுவடை முடிந்ததும் பயிர் பாகங்களை நீக்குதல் போன்ற உழவியல் முறைகளால் பூச்சிகளை நிர்வகிக்கலாம்.
முழு நீக்கம் செய்தல்
முட்டைக் குவியல்கள், புழுக்கள், கூட்டுப்புழுக்கள், தாக்கப்பட்ட பயிர்பாகங்கள் ஆகியவற்றை முழுமையாக நீக்கி அழிக்கும் முறையால் பெருக இருக்கும் பூச்சிகளின் எண்ணிக்கை குறைக்கப்படுகிறது.
உயரினத்தால் உயரினத்தைக் கட்டுப்படுத்துதல்
இம்முறையில் ஒட்டுண்ணிகள், சிலந்திகள், நோய்களை உண்டாக்கும் பாக்டீரியாக்கள், வைரஸ்கள் போன்றவற்றைப் பயன்படுத்திப் பயிர்களைத் தாக்கி சேதமுண்டாக்கும் பூச்சிகள் கட்டுப்படுத்தப் படுகின்றன. இயற்கையில் பல பொறிவண்டுகள், அசுவினி போன்ற சாற்றை உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தி வருகின்றன.
மேற்கூறிய முறைகளினால் சுற்றுப்புற சூழல் மாசுபடுவதில்லை. இந்த முறைகளில் கூறப்பட்ட கோட்பாடுகளால் பின்விளைவுகளும் இல்லை. உழவர்களுக்கு நன்மை பயக்கும் உயரினங்களுக்குத் தீங்கு இல்லை. கூடுதல் முதலீடுகள் அதிகம் இல்லை.
பூச்சி மருந்துகளால் பூச்சிகளைக் கட்டுப்படுத்துதல்
எந்தெந்த சமயத்தில் எந்தெந்த முறைகளால் பூச்சிக் கொல்லி மருந்துகளைப் பயன்படுத்தினால் நன்மைகள் உண்டு என்பதை தெரிந்து பயன்படுத்த வேண்டும். பொதுவாக, பூச்சிகளை நிர்வகிப்பதில் வேறு எந்த முறையாலும் அவைகளைக் கட்டுப்படுத்த முடியாத நெருக்கடியான சூழ்நிலைகளில் பூச்சிக் கொல்லிகள் நமக்குப் பெரிதும் நன்மை பயக்கின்றன. விரைவாக செயல்பட்டு பூச்சிகளின் பெருக்கத்தை உடனுக்குடன் கட்டுப்படுத்துகின்றன. சில சமயங்களில் பூச்சிக்கொல்லிகளின் நச்சுத்தன்மை பல நாட்களுக்கு நீடித்து நின்று செயல்படுகின்றது. இதனால் பயிர் விளைச்சலும் பெருகி லாபம் கிடைக்கின்றது. இத்தகைய சிறப்புக் குணங்கள் இருந்தாலும் பூச்சிக்கொல்லிகளினால் ஏற்படும் பல தீங்குகள், பின் விளைவுகளை முன்னிட்டு தவிர்க்க முடியாத மிகத் தேவையான பொழுது மட்டுமே பயன்படுத்த வேண்டும். பூச்சிகளின்  எண்ணிக்கை ஒரு குறிப்பிட்ட எல்லையைத் தாண்டினால் பயிர் விளைச்சலில் இழப்பு ஏற்படும். அப்பொழுது காப்பு நடவடிக்கை எடுக்கப்படாவிடில் பொருளாதார சேதமும் ஏற்படும் என்ற சூழ்நிலை உருவாகும் போது மட்டும் பூச்சி மருந்துகளை பயன்படுத்த வேண்டும் என்பது ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாகத்தின் ஒரு முக்கியக் கோட்பாடு.
பூச்சிகளை அடியோடு ஒழித்துக்கட்டுவது என்பது இயற்கைக்கு ஒவ்வாத கொள்கை. தேவையற்றதும் ஆகும். எனவே, பூச்சிகளை நிர்வகிப்பது என்ற தத்துவத்தைப் புரிந்து கொண்டு ஒவ்வொரு பயிரிலும் ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்புகளை அனுசரிப்பதே சாலச்சிறந்தது.

Updated on March, 2014

 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2014