நோனி
சாறு உறிஞ்சும் பூச்சிகள்
அசுவினி
பெரும்பாலும் ஆண்டு முழுவதும் காணப்படும் இப்பூச்சி, மஞ்சள் கலந்த பச்சை நிறமாகக் காணப்படும். இளம் தாவரங்களில் இதன் தாக்குதல் அதிகமாக இருக்கும். இளம் மற்றும் முதிர்ந்த பூச்சிகள் இலையின் அடிப்பாகத்திலும் குருத்துப் பகுதிகளிலும் கூட்டம் கூட்டமாகக் காணப்படும். இவை இலைச் சாற்றை உறிஞ்சுவதால் தாக்கப்பட்ட இளங்குருத்து மற்றும் இலைகள் சிறுத்தும், சுருங்கியும், தடித்தும் வளைந்தும் காணப்படும். பயிர் வளர்ச்சி குன்றி காணப்படுவதோடு பூச்சிகளின் வயிற்றுப் பகுதியிலிருந்து சுரக்கும் தேன் போன்ற திரவத்தால் இலைகளின் மேல் பரப்பில் மேல் கரும்பூசண வளர்ச்சி தென்படும். இதனால் எறும்புகளின் நடமாட்டம் தாக்கப்பட்ட செடிகளில் அதிகமாகக் காணப்படும்.
|
|
அசுவினி, ஏபிஸ் காசிபி |
அசுவினி, ஏபிஸ் காசிபி |
செதில் பூச்சி
செதில் பூச்சி இலையின் அடிப்பகுதி இளம் தண்டுகளிலிருந்து சாறினை உறிஞ்சுவதால் தாக்கப்பட்ட செடிகள் சிறுத்தும், இலைகள் சுருங்கியும் காணப்படும். இவை வெளியேற்றும் தேன் போன்ற திரவத்தால் இலைகளின் மேல் கரும்பூசண வளர்ச்சி தென்படும்.
|
|
செதில்பூச்சி – காக்கஸ் விரிடிஸ் |
கரும்பூஞ்சான நோய் |
இலைப்பேன்
இலைப்பேன் மிகவும் சிறியதாகவும், இறக்கைகள் தென்னை மட்டை போன்ற பிளவுபட்ட ரோமங்களைக் கொண்டதாகவும் காணப்படும். பெண்பூச்சி தனது முட்டைகளை தளிர் இலையினுள் இடும். முட்டையிலிருந்து வெளிவரும் இளம் குஞ்சுகளும் தாய்பூச்சியை ஒத்ததாக இறக்கைகளற்று காணப்படும். இளம் குஞ்சுகளும் முதிர்ந்த பூச்சிகளும் இலைகளின் சாற்றினை உறிஞ்சுவதால் இலைகள் பழுத்து வெளிறிப் போய் பின் அடர் பழுப்பு நிறமாக மாறிவிடும். மேலும் இலைகளின் நுனி சுருண்டு வாடி விடுவதோடு, அதிகமான தாக்கத்திற்குள்ளான இளஞ்செடிகள் இறந்து விடும்.
|
இலைப்பேன், ஹிலியோதிரிப்ஸ்
ஹஜமோர்ஹோடாலிஸ் |
மாவுப்பூச்சி
இளம் மற்றும் முதிர்ந்த மாவுப்பூச்சிகள் இலையின் அடிப்பகுதியில் இருந்து கொண்டு சாற்றினை உறிஞ்சி உண்டு சேதம் பண்ணுகின்றன. இலைகள் மஞ்சள் நிறமாக மாறி சிறுத்துக் காய்ந்து விடும். மாவுப்பூச்சி வெளியேற்றும் தேன் போன்ற திரவம் இலைகளின் மேல் கரும்பூசணத்தை உருவாக்குகிறது. இப்பூச்சிகள் சிறிதாகவும் மென்மையான உடல் முழுவதும் வெள்ளை நிற மாவு போன்ற பூச்சினால் சூழப்பட்டிருக்கும்.
|
மாவுப்பூச்சி, பாராக்காக்கஸ் மார்ஜினேடஸ் |
வெள்ளை ஈ
இந்த சாறு உறிஞ்சும் பூச்சியானது சமீப காலத்தில் அதிகமாகத் தோன்றி சேதத்தை உண்டாக்கி வருகிறது. இது நோனி பயிரைத் தவிர 300க்கும் மேற்பட்ட பயிர் இனங்களிலும், தாவர வகைகளிலும் இனப் பெருக்கம் செய்து சேதம் ஏற்படுத்தக் கூடிய தன்மை கொண்டதாகும். இதன் முதிர் பெண் உயிரிகள் இலைகளின் மேல் வளைய வடிவில் முட்டை இடுகின்றன. இப்பூச்சிகளின் இளம் குஞ்சுகளும் முதிர்ந்த உயரிகளும் இலைகளின் அடிப்பாகங்களில் கூட்டம் கூட்டமாகக் காணப்படும். இவை இலைச்சாற்றை உறிஞ்சுவதால் இலைகள் மஞ்சள் நிறமாக மாறி பூ, மொக்கு, பிஞ்சுகள் உதிர்ந்து விடுகின்றன.
|
|
வெள்ளை ஈ –அலிரோடிக்கஸ் டிஸ்பெர்சஸ்
|
சாறு உறிஞ்சும் பூச்சிகளுக்கான மேலாண்மை முறைகள்
- இயற்கையில் பொறி வண்டு மற்றம் கிரைசோபா இரை விழுங்கிகள் இப்பூச்சிகளை உணவாக உட்கொள்வதால் இப்பூச்சிகளின் எண்ணிக்கை ஓரளவு குறைகிறது.
- எறும்புகளைக் கட்டுப்படுத்துவதன் மூலமும் இப்பூச்சிகள் பரவுவதைக் குறைக்கலாம்.
- அதிகம் பூச்சி தாக்கப்பட்ட இலைகளை அகற்றி அழிக்க வேண்டும்.
- இச்சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த வேப்பெண்ணெய் 3 சதம் அல்லது வேப்பங்கொட்டைப் பருப்பு சாறு 5 சதம் ஏக்கருக்கு என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.
- பூச்சிகளின் எண்ணிக்கை அதிக அளவில் இருக்கும் பொழுது ஏக்கருக்கு 400 மி.லி. மீத்தைல் டெமட்டான் அல்லது டைமெத்தோயேட் மருந்தைத் தெளிக்க வேண்டும்.
- மாவுப்பூச்சியினைக் கட்டுப்படுத்த ஒரு கிலோ மீன் எண்ணெய் சோப்பை 40 லிட்டர் நீரில் கரைத்துத் தெளிக்க வேண்டும்.
இலையை உண்ணும் புழுக்கள்
ஆமணக்கு காவடிப்புழு
இப்புழுக்கள் நோனி இளம் நாற்றுகளின் இலைகளை உண்டு அதிக சேதத்தை விளைவிக்கின்றன. இப்புழுவானது நோனி பயிரினை மட்டுமல்லாது ஆமணக்கு, குரோட்டன்ஸ் போன்ற தாவர இனங்களையும் சேதப்படுத்துகிறது.
சேதத்தின் அறிகுறிகள்
இப்புழுக்கள் செடியின் பெரும்பாலான இலைகளை உண்டுவிட்டு, வெறும் நரம்புகளையும் இலைக்காம்புகளையும் மட்டுமே விட்டு வைத்து அதிக சேதத்தை விளைவிக்கின்றன.
மேலாண்மை முறைகள்
நாற்றுகளை நாற்றங்காலில் இடைவெளி விட்டு நடுவதன் மூலம் சேதத்தைக் குறைக்கலாம். தாக்கப்பட்ட இலைகள் மற்றும் புழுக்களைக் கைகளால் அப்புறப்படுத்தி அழிக்க வேண்டும். இப்புழுவினை குளோர்பைரிபாஸ் 20 EC ஏக்கருக்கு 400 மி.லி. என்ற அளவில் தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.
|
காவடிப்புழு – அக்கேயே ஜனதா |
இலைத் துளைப்பான்
இப்பூச்சி நோனி பயிரின் இலைகளைத் துளைத்துச் சென்று சேதப்படுத்துகிறது. இலைகள் உதிர்வது அதிகமாவதுடன் இலையின் பச்சையத்தின் அளவு குறைந்து மகசூல் பாதிக்கப் படுகிறது.
மேலாண்மை முறைகள்
தாக்கப்பட்ட இலைகளை சேகரித்து அழிப்பதன் மூலம் சேதத்தைக் குறைக்கலாம். மஞ்சள் ஒட்டும் பொறியை வைத்து தாய் அந்துப் பூச்சியைக் கவர்ந்து அழிக்கலாம். மேலும் இதனைக் கட்டுப்படுத்த 3 சத வேப்பெண்ணெய் அல்லது வேப்பங்கொட்டைப் பருப்பு சாறு 5 சதம் ஏக்கருக்கு என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.
|
இலைத்துளைப்பான் |
பச்சைக் கொம்புப்புழு
அந்துப்பூச்சி பருமனாகவும் வேகமாகப் பறக்கும் தன்மையுடையது. இறக்கைகள் பழுப்பு நிற வண்ணத்துடன் இருக்கும். முன் இறக்கைகளின் முன்பகுதியில் அடர் நிறத்தில் ‘எல்’ வடிவத்தில் ஒரு அமைப்பு காணப்படும். ஆண் மற்றும் பெண் பூச்சிகளின் வயிற்றுப் பகுதியின் இறுதியில் ரோமங்களுடன் கூடிய வால் போன்ற அமைப்பு காணப்படும். புழுக்கள் நீலம் கலந்த பச்சை நிறத்தில், பெரிய நெருக்கமான மஞ்சள் நிறப் புள்ளிகளுடன் காணப்படும். புழுக்கள் உருண்டையாகவும் பருத்த உடலின் பின்பகுதியில் கொம்பு போன்ற உறுப்புடனும் காணப்படும். அக்கொம்பில் சீரான இடைவெளியில் குட்டையான முட்கள் கொம்பின் முழு நீளத்திற்கும் காணப்படும். புழுக்களின் உடலின் பக்கவாட்டில் அமைந்துள்ள காற்றறைகள் பழுப்பு கலந்த ஆரஞ்சு நிறத்தில் காணப்படும்.
மேலாண்மை முறைகள்
புழுக்களை சேகரித்து அழித்தும், விளக்குப் பொறிகளை அமைத்து தாய் அந்துப் பூச்சிகளைக் கவர்ந்து அழித்தும் கட்டுப்படுத்தலாம். புழுக்களின் எண்ணிக்கையும், சேதமும் பொருளாதார சேத நிலையைத் தாண்டும் பொழுது, குளோர்பைரிபாஸ் 20 EC ஏக்கருக்கு 400 மி.லி. என்ற அளவில் தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.
|
|
புழு |
அந்துப்பூச்சி |
இலைச்சுருட்டுப் புழு
இப்புழுக்கள் இலைகளைத் தாக்கி சேதப்படுத்துகின்றன. இப்புழுக்கள் இலைகளின் இரு ஓரங்களையும், மெல்லிய நூலிழை கொண்டு பிணைத்து, இலை மடிப்பின் உள்ளே இருந்து கொண்டு பச்சையத்தைச் சுரண்டி உண்ணும். எனவே இலைகள் காய்ந்து விடுகின்றன.
மேலாண்மை முறைகள்
தாக்கப்பட்ட இலைகளை சேகரித்து அழிப்பதன் மூலம் சேதத்தைக் குறைக்கலாம். பூச்சிகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் போதே 3 சத வேப்பெண்ணெய் அல்லது வேப்பங்கொட்டைப் பருப்பு சாறு 5 சதம் ஒரு ஏக்கருக்கு என்ற அளவில் கலந்து தெளித்து கட்டுப்படுத்த வேண்டும்.
|