பயிர் பாதுகாப்பு :: நித்யகல்யாணி பயிரைத் தாக்கும் பூச்சிகள்
அசுவினி
பெரும்பாலும் ஆண்டு முழுவதும் காணப்படும் இப்பூச்சி,  மஞ்சள்  கலந்த பச்சை நிறமாகக் காணப்படும். இளம் மற்றும் முதிர்ந்த பூச்சிகள்  இலையின் அடிப்பாகத்திலும் குருத்துப் பகுதிகளிலும் கூட்டம் கூட்டமாகக் காணப்படும். இளம் தாவரங்களில் இதன் தாக்குதல் அதிகமாக இருக்கும். இவை இலைச் சாற்றை உறிஞ்சுவதால் தாக்கப்பட்ட இளங்குருத்து மற்றும் இலைகள்  சிறுத்தும், சுருங்கியும், தடித்தும் வளைந்தும்  காணப்படும். பூச்சிகளின் வயிற்றுப் பகுதியிலிருந்து சுரக்கும் தேன் போன்ற திரவத்தால் இலைகளின் மேல் பரப்பில்  மேல் கரும்பூசண வளர்ச்சி தென்படும். இதனால் எறும்புகளின் நடமாட்டம் தாக்கப்பட்ட செடிகளில்  அதிகமாகக் காணப்படும்.
மேலாண்மை முறைகள்
இயற்கையில் பொறி வண்டு மற்றும் கிரைசோபா இரை விழுங்கிகள் அசுவினியை உணவாக உட்கொள்வதால் அசுவினியின்  எண்ணிக்கை ஓரளவு குறைகிறது. மேலும்
எறும்புகளைக் கட்டுப்படுத்துவதன் மூலமும் இப்பூச்சிகள் பரவுவதைக் குறைக்கலாம்.அதிகமாக  தாக்கப்பட்ட இலைகளை அகற்றி அழிக்க வேண்டும். தாக்குதல் குறைவாக இருக்கும் போது வேப்பங்கொட்டைப் பருப்பு சாறு 5 சதம் ஏக்கருக்கு  என்ற அளவில் கலந்து  தெளிக்க  வேண்டும்.
அசுவினி – மைசஸ் பெர்சிகே

பச்சைக் கொம்புப் புழு
இப்புழுக்கள் இலை மற்றும் தண்டுகளை முற்றிலுமாக உண்டு அழிக்கின்றன. அந்துப்பூச்சி பருமனாகவும், வேகமாகப் பறக்கும் தன்மையுடையது. இறக்கைகள் பச்சை நிறத்தில் வெள்ளை   நிறப் பட்டைகளுடன் காணப்படும். புழுக்கள் பச்சை நிறத்தில் உருண்டையாகவும், பருத்த உடலின் பின்பகுதியில் கொம்பு போன்ற உறுப்புடனும் காணப்படும். அக்கொம்பில் சீரான இடைவெளியில் குட்டையான முட்கள் கொம்பின்  முழு நீளத்திற்கும்  காணப்படும்.
மேலாண்மை முறைகள்
புழுக்களை சேகரித்து அழித்தும், விளக்குப் பொறிகளை அமைத்து அந்துப் பூச்சிகளைக் கவர்ந்து அழித்தும் கட்டுப்படுத்தலாம்.புழுக்களின் எண்ணிக்கையும், சேதமும் பொருளாதார சேத நிலையைத் தாண்டும் பொழுது, வேப்பெண்ணெய் 3 சதம் அல்லது வேப்பங்கொட்டைப் பருப்பு சாறு 5 சதம் என்ற அளவில் கலந்து  தெளித்துக் கட்டுப்படுத்த வேண்டும்.
புழு   கூட்டுப்புழு அந்துப்பூச்சி

பச்சைக் காவடிப் புழு

இப்புழுக்கள் செடியின் பெரும்பாலான இலைகளை உண்டுவிட்டு வெறும் நரம்புகளையும் இலைக்காம்புகளையும் மட்டுமே விட்டு வைத்து அதிக சேதத்தை விளைவிக்கின்றன.
மேலாண்மை முறைகள்
தாக்கப்பட்ட இலைகள் மற்றும் புழுக்களை கைகளால் அப்புறப்படுத்தி அழிக்க வேண்டும். விளக்குப் பொறிகளை அமைத்து அந்துப் பூச்சிகளைக் கவர்ந்து அழித்தும் கட்டுப்படுத்தலாம். இப்புழுவினை  அசாடிராக்டின் ஒரு சத மருந்தினைத் தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.
பச்சைக்காவடிப்புழு  அந்துப்பூச்சி – அனோமிஸ் பிலேவா

வெட்டுக்கிளி

இப்பூச்சிகள் செடிகளின் இலைகளை வெட்டுவது போல் கடித்து உண்டு சேதப்படுத்துகின்றன. இலைகளின் மேல் துவாரங்களை ஏற்படுத்தியும் இளங்குருத்துகளையும் தண்டுகளையும்  வெட்டுவதன் மூலமும் பெரும் சேதத்தை உண்டாக்குகின்றன.
மேலாண்மை முறைகள்
பூச்சி தாக்குதலின் அளவைப் பொறுத்து வேப்பெண்ணெய் 3 சதம் அல்லது வேப்பங்கொட்டைப் பருப்பு சாறு 5 சதம் தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.
Updated on March, 2014

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2014