பயிர் பாதுகாப்பு :: தூதுவளை கொல்லிபயிரைத் தாக்கும் பூச்சிகள்

தூதுவளை

புள்ளி வண்டு
புழுக்களும், வண்டுகளும் இலையின் மேல்பாகத்திலிருந்து பச்சையத்தைச் சுரண்டி உண்பதால் இலைகள் வாடி செடிகள் காய்ந்து விடும். அரைவட்டவடிவ புள்ளி வண்டுகள் இளஞ்சிவப்பு நிறத்தில் கரும்புள்ளிகளுடன் காணப்படும். புழுக்கள் மஞ்சள் நிறத்தில் உடலில் ஒரு வித முள் போன்ற ரோமங்களுடன் காணப்படும்.
மேலாண்மை முறைகள்

  • தாக்கப்பட்ட  இலைகளுடன், புழுக்கள் மற்றும் வண்டுகளை சேகரித்து அழிப்பதன் மூலம் சேதத்தைக்  குறைக்கலாம்.
  • பூச்சிகளின் எண்ணிக்கையும் சேதமும் குறைவாக இருக்கும் பொழுது வேப்பெண்ணெய் 3 சதம் அல்லது வேப்பங்கொட்டைப் பருப்பு சாறு 5 சத கரைசலைத் தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.

சாம்பல் கூன் வண்டு
இந்த கூன் வண்டுகள் பெரும்பாலும் இலைகளில் சிறு துவாரங்கள் ஏற்படுத்தியும், ஓரங்களைக் கடித்தும் சேதம் உண்டாக்குகின்றன. சில சமயங்களில் அதிக அளவில் தோன்றி பெருத்த  சேதத்தை உண்டாக்கும். வண்டுகளின் புழுப்பருவம் செடிகளின்  வேர்ப்பாகத்தில் மண்ணிற்குள்  காணப்படும். புழுக்கள் வேர்களின் நுனிகளைக் கடித்துத் தின்பதால் தாக்கப்பட்ட செடிகள்  வாடி, நாளடைவில் காய்ந்து விடும்.
மேலாண்மை முறைகள்

  • சாம்பல் கூன் வண்டுகளைக் கட்டுப்படுத்த 3 சத வேப்பெண்ணெய் அல்லது 5 சத வேப்பங்கொட்டைப் பருப்பு சாறு தெளிக்க வேண்டும்.
  • மண்ணினுள் உள்ள புழுக்களைக் கட்டுப்படுத்த வேப்பம்புண்ணாக்கு எக்டருக்கு 250 கிலோ அல்லது கார்போப்யூரான் குருணை மருந்தினை ஒரு ஏக்கருக்கு 6 கிலோ என்ற அளவில் நாற்றுகள் நட்ட 15 நாட்களுக்குப் பின் மண்ணில் இடுதல்  வேண்டும்.

பச்சைக் கொம்புப்புழு
இப்புழுக்கள் இலைகள் அனைத்தையும் உண்டு அதிக சேதத்தை விளைவிக்கின்றன. தாய் அந்துப்பூச்சி, பச்சை நிறத்தில் மஞ்சள் நிறக்கோடுகள் மற்றும் மஞ்சள் நிறத்திட்டுகளுடன் பருமனாகக் காணப்படும்.
மேலாண்மை முறைகள்

  • தாக்கப்பட்ட  இலைகளையும்,  புழுக்களையும் சேகரித்து அழித்து விட வேண்டும்.
  • விளக்குப் பொறிகளை அமைத்து தாய் அந்துப் பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம்.
  • இப்புழுக்கள் அரளியை அதிக அளவில் தாக்குவதால், வரப்பில் அரளி செடிகளை நட்டு அதில் பூச்சிக் கொல்லிகளைத் தெளிப்பதன் மூலம்  இப்புழுக்களைக் கட்டுப்படுத்தலாம்.

மாவுப்பூச்சி
இளம் மற்றும்  முதிர்ந்த மாவுப்பூச்சிகள் இலையின் அடிப்பகுதியில் இருந்து கொண்டு சாற்றினை உறிஞ்சி உண்டு சேதம் பண்ணுகின்றன. இலைகள் மஞ்சள் நிறமாக மாறி சிறுத்துக் காய்ந்து விடும். மாவுப்பூச்சி வெளியேற்றும் தேன் போன்ற திரவம் இலைகளின் மேல் கரும்பூசணத்தை  உருவாக்குகிறது. இப்பூச்சிகள் சிறிதாகவும் மென்மையான உடலின் மேல் வெள்ளை நிற மாவு போன்ற பூச்சினால் சூழப்பட்டும் காணப்படும்.
மேலாண்மை முறைகள்

  • பப்பாளி மாவுப்பூச்சி அதிக அளவில் தென்படும்போது அசிரோபேகஸ் பப்பாயே எனப்படும் ஒட்டுண்ணியை விட்டும் கட்டுப்படுத்தலாம்.
  • மாவுப்பூச்சியினைக் கட்டுப்படுத்த ஒரு கிலோ மீன் எண்ணெய் சோப்பை 40 லிட்டர் நீரில் கரைத்துத் தெளிக்க வேண்டும்.
  • இப்பூச்சிகளைக் கட்டுப்படுத்த வேப்பெண்ணெய் 3 சதம் அல்லது வேப்பங்கொட்டைப் பருப்பு சாறு 5 சதம் ஏக்கருக்கு  என்ற அளவில் கலந்து  தெளிக்க  வேண்டும்.
  • பூச்சிகளின் எண்ணிக்கை அதிக அளவில் இருக்கும் பொழுது ஏக்கருக்கு 400 மி.லி. மீத்தைல் டெமட்டான் அல்லது டைமெத்தோயேட் மருந்தைத் தெளிக்க வேண்டும்.

சுருள் வெள்ளை
இளம்  பூச்சிகளும்,  வளர்ந்த பூச்சிகளும் இலைகளின் அடிப்பரப்பில், ஏராளமான எண்ணிக்கையில்  ஒட்டிக் கொண்டிருந்து, சாற்றைத் தொடர்ந்து உறிஞ்சி சேதம் விளைவிக்கின்றன. தாக்குதல் அதிகமாகக் காணப்படும் போது இலைகள் மஞ்சள் நிறமாக மாறி கரிந்து விடும். பெண்பூச்சி இலைகளின் அடிப்பரப்பில் சுருள் வடிவத்தில் முட்டைகளை இடும். வளாந்த பூச்சிகள் வெண்மை நிற இறக்கைகளையும், அவற்றின் மேல்பரப்பில் வெண்மையான மெழுகு போன்ற பொடி படிந்ததைப் போன்ற தோற்றத்துடனும் காணப்படும்.
மேலாண்மை முறைகள்

  • செடியின் பாதிக்கப்பட்ட  பகுதிகளை சேகரித்து அழிக்கவும்.
  • மஞ்சள் நிற ஒட்டுப் பொறிகளை அமைத்து வெள்ளை ஈக்களைக் கவர்ந்து அழிக்கலாம்.
  • இதனைக் கட்டுப்படுத்த வேப்பெண்ணெய் 3 சதம் அல்லது வேப்பங்கொட்டைப் பருப்பு சாறு 5 சத  கரைசலை ஏக்கருக்கு 0.1 சத ஒட்டும் கரைசல் டீப்பாலுடன் கலந்து தெளிக்கவும்.

செதில்பூச்சி
இளம்  பூச்சிகளும்,  வளர்ந்த பூச்சிகளும் தளிர் இலைகளிலும் தண்டுப் பாகங்கள் போன்றவற்றில் நிரந்தரமாக ஒட்டிக் கொண்டிருந்து சாற்றை உறிஞ்சி  உண்டு சேதம் பண்ணுகின்றன. இதனால் இலைகள் மஞ்சள் நிறமாக மாறுவதுடன் செடியின் வளர்ச்சியும் குன்றி காணப்படும். மேலும் இவை  வெளியேற்றும் தேன் போன்ற திரவத்தால் இலைகளின் மேல் கரும்பூசண வளர்ச்சி தென்படும். முட்டைகளிலிருந்து வெளிவரும் இளம் பூச்சிகள் சற்று ஊர்ந்து திரிந்து பின்னர் ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து  அதே இடத்தில் நிரந்தரமாக இருந்து கொண்டு சாற்றினை உறிஞ்சி உண்டு வளரும். வளர்ந்த செதில்பூச்சிகள் நீள்வட்ட வடிவிலும் சற்று மேலெழும்பியும் தென்படும்.
மேலாண்மை முறைகள்

  • அதிகம் தாக்கப்பட்ட இலைகளை அகற்றி அழிக்க வேண்டும்.
  • இப்பூச்சிகளைக் கட்டுப்படுத்த வேப்பெண்ணெய் 3 சதம் அல்லது வேப்பங்கொட்டைப் பருப்பு சாறு 5 சதம் ஏக்கருக்கு  என்ற அளவில் கலந்து  தெளிக்க  வேண்டும்.
  • பூச்சிகளின் எண்ணிக்கை அதிக அளவில் இருக்கும் பொழுது ஏக்கருக்கு 400 மி.லி. மீத்தைல் டெமட்டான் அல்லது டைமெத்தோயேட் மருந்தைத் தெளிக்க வேண்டும்.

3 சத வேப்பெண்ணெய் அல்லது வேப்பங்கொட்டைப் பருப்பு சாறு 5 சதம் ஒரு ஏக்கருக்கு  என்ற அளவில் கலந்து  தெளித்து கட்டுப்படுத்த  வேண்டும்.

Updated on March, 2014


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2014