பயிர் பாதுகாப்பு :: வணிகப் பயிர்களில் நூற்புழு

 

வணிகப் பயிர்களில் நூற்புழுப் பாதுகாப்பு:

நூற்புழுக்களால் தோட்டக்கலைப் பயிர்கள் மட்டுமல்லாமல் இதர பயிர்களும் பெருமளவில் பாதிக்கப்படுகின்றன. முக்கிய வணிகப்பயிர்களான பருத்தி, கரும்பு, மஞ்சள், நிலக்கடலை, ஆமணக்கு, மற்றும் சூரியகாந்தி ஆகியவற்றைத் தாக்கும் நூற்புழுக்கள், தாக்குதலின் அறிகுறிகள் மற்றும் அவற்றினைக் கட்டுப்படுத்தும் முறைகள் பற்றி இக்கட்டுரையில் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

பருத்தி:

தமிழ்நாட்டில் சாகுபடி செய்யப்படும் வணிகப் பயிர்களில் பருத்தி முதன்மையானதாகும். இப்பயிரைத் தாக்கும் நூற்புழுக்களில் மொச்சை வடிவ நூற்புழு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. பருத்தி சாகுபடி செய்யப்படும் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக அதிக அளவில் காணப்படும் இந்நூற்புழு தனித்தும், சில வகையான பூஞ்சாணத்துடன் இணைந்தும் பருத்தியைத் தாக்க வல்லதாகும். இந்நூற்புழுவினால் சுமார் 40 சதவீத விளைச்சல் இழப்பு ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

அறிகுறிகள்:

  • இலைகள் வெளிர்வடைதல்
  • கிளை மற்றும் சல்லி வேர்கள் குறைவாகக் காணப்படுதல்
  • வேர்களின் உரிய வளர்ச்சி இல்லாதிருத்தல்
  • பயிர் வளர்ச்சி குன்றுதல்
  • பயிர்கள் அழுகி வாடுதல்

கட்டுப்பாடு:

  • பருத்தி சாகுபடிக்கு முன்னர் நிலத்தை ஆழ உழுது சுமார் ஒரு மாதத்திற்கு கோடையில் தரிசாக விடவும்
  • சோளப் பயிருடன் சுழற்சி செய்யவும்
  • விதைத்த 15 நாட்களுக்குப் பின்னர் கார்போபியூரான் 3ஜி குருணை மருந்தினை எக்டர் ஒன்றுக்கு 33 கிலோ வீதம் வேரைச் சுற்றி இடவும்

கரும்பு:

தமிழ்நாட்டின் முக்கிய வணிகப் பயிரான கரும்பினைத் தாக்கும் 25 வகையான நூற்புழுக்களில் பரவலாக அதிக அளவில் காணப்படும் வேர்க்கருகல், கிரீட, குட்டை நோய் மற்றும் சுருள் வடிவ நூற்புழுக்கள் மிகவும் முக்கியமானதாகும். இந்நூற்புழுக்களால் சுமார் 15 சதவிகித விளைச்சல் குறைகிறது. இந்நூற்புழுக்கள் சில வகைகள் பூஞ்சாணத்துடன் இணைந்து வாடல் நோயினை ஏற்படுத்த வல்லதாகும்.

அறிகுறிகள்:

கரும்பினைத் தாக்கும் நூற்புழுக்களால் ஏற்படும் அறிகுறிகள் பொதுவாக ஊட்டச்சத்து மற்றும் நீர்ப்பற்றாக்குறையினால் ஏற்படும் அறிகுறிகளை ஒத்திருக்கும். இருப்பினும் கீழ்க்கண்ட அறிகுறிகள் மூலமாக நூற்புழுக்களின் பாதிப்பை எளிதாக கண்டறியலாம்.

  • வேர்களில் ஆங்காங்கே கருமை நிறத்தில் காணப்படும் திட்டுக்கள்
  • வேரழுகல்
  • வேர்முடிச்சு நூற்புழுக்களின் பாதிப்பினால் வேர்களில் ஏற்படும் சிறுசிறு உருண்டையான வேர்முடிச்சுகள்
  • இலை மஞ்சள் நிறமடைதல்
  • இலைகளின் நுனி மற்றும் விளிம்பு காய்தல்
  • பயிர்களின் வளர்ச்சி குன்றுதல்

கட்டுப்பாடு:

உழவியல் முறை:

அறுவடைக்குப் பின்பு தாள்களை அகற்றிவிட்டு வயலை சுமார் மூன்று மாதத்திற்கு தரிசாக விடவும்.
கோடையில் தரிசாக விடப்பட்ட வயலில் ஆழ உழவு செய்யவும். சோளம், நெல், போன்ற பயிர்களுடன் பயிர் சுழற்சி செய்யவும்.

அங்கக உரமிடுதல்:

எக்டர் ஒன்றுக்கு தொழுஉரம் 12.5 டன் (அ) கரும்பு ஆலைக்கழிவு 15 டன் (அ) வேப்பம் பிண்ணாக்கு 0.75 டன் என்ற விகிதத்தில் இடவும்.

எதிர்ப்புத் திறனுடைய இரகங்கள்:

அதிக ஆழமான வேர்விடும் இரகங்களான கோ 6304, கோ 290, கோ 527 போன்றவைகள் நூற்புழுக்களால் அதிக அளவில் பாதிப்பு அடைவதில்லை.

மஞ்சள்:

தமிழ்நாட்டில் சாகுபடி செய்யப்படும் வாசனைப் பயிர்களில் முக்கியமானதாக கருதப்படும் மஞ்சளை 35 வகையான நூற்புழுக்கள் தாக்குகின்றன. அவற்றுள் வேர்முடிச்சு, குடையும் மற்றும் வேரழுகல் நூற்புழுக்கள் முக்கியமானதாகும். இந்நூற்புழுக்களால் சுமார் 15 சதவீத மகசூல் இழப்பு ஏற்படுகிறது. பூஞ்சாணத்துடன் இணைந்து கிழங்கு அழுகல் கூட்டு நோய் உண்டாக்கும் போது பயிர் இழப்பு பன்மடங்காக இருக்கும்.

அறிகுறிகள்:

  • பயிர் வளர்ச்சி குன்றுதல்
  • இலைகள் மஞ்சள் நிறமடைதல்
  • இலைகளின் நுனி மற்றும் விளிம்பு காய்தல்
  • தூர்களின் எண்ணிக்கை குறைதல்
  • உரிய காலத்திற்கு முன்பாகவே பயிர்கள் முதிர்ச்சியடைந்து காய்ந்து பட்டுப்போதல்
  • வேரழுகல்

கட்டுப்பாடு:

  • விதைப்புக்கு உபயோகப்படுத்தப்படும் கிழங்குகளை சுடுநீரில் (550 செல்சியஸ்) 10 நிமிடம் வைத்திருத்தல்
  • நன்செய் நிலங்களில் நெல்லுடனும், தோட்டக்கால் நிலங்களில் தானியப் பயிருடனும் பயிர் சுழற்சி செய்தல்
  • கார்போபியூரான் 3ஜி குருணை மருந்தினை நட்ட 3ம், 5ம் மாதத்தில் எக்டர் ஒன்றுக்கு 33 கிலோ என்ற விகிதத்தில் இடுதல்.
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2013